சங்க இலக்கியங்கள் முதல் நவயுகப் படைப்புகள் வரை முதுமை என்னும் கருப்பொருளை விட்டுவைக்காத கவிஞர்களே இல்லை எனலாம்.
“தொந்திசரிய, வயிறே அசைய, நிரைதந்தம் உதிர ஒருகைதடிமேல் வா, இருமல் கிண்கிணென துஞ்சு கிழவன் இவனாரென மகளிர் நகையாடி”
என முதுமையின் கோலத்தைச் சந்தத் தமிழில் எடுத்தியம்புகிறார் அருணகிரியார். இந்தப் பாடலில் திருப்புகழார் சொல்லாமற் சொல்லும் உண்மை என்னவெனில் முதுமையை நெருங்கும் போது ஒருவருக்குப் பல உடல் நலசீர்கேடுகள் தானாவே வந்து சேர்ந்து விடுகின்றன என்பதே ஆகும். அதை விட ஒருபடிமேல் சென்று முதுமையை ஏளனம் செய்யும் இளமையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளார். நோயில்லாத முதுமை ஒரு கொடை என்றாலும் முதியவர் வாழ்க்கையில் பொதுவாக நோயும் மருந்தும் பின்னிப் பிணைந்தே உள்ளன.
நோய் அல்லது ஆரோக்கியமின்மை என்றவுடன் எவர் மனதிலும் உடனே தோன்றுவதெல்லாம் ஔடதம் (மருந்து) ஒன்றேதான். நோயாளி மருத்துவரை நாடி நோய்க்குணங்குறிகளை வெளிப்படுத்தும் போது வைத்தியர் அதற்குப் பரிகாரமாக மருந்தையே பரிந்துரைக்க முனைவர்.
ஒவ்வொரு முறையும் அந்தநோயாளி மேலதிக நோய் குணங்குறிகளை வெளிப்படுத்தும் போது வைத்தியரின் மருந்தின் அளவைக் கூட்டவோ அன்றி வேறு மருந்துகளைப் பரிந்துரைக்கவோ தலைப்படுவார். இது எந்த அளவுக்கு முதியவர்களுக்குப் பொருத்தமானது என்ற கேள்வியே முக்கிய மானது.
“உற்றான் அளவும், பிணியளவும், காலமும் கற்றான் கருதிச்செயல்”
என்பது வள்ளுவரின் பொய்யாமொழி மருத்துவன் (கற்றான்) நோயாளியின் அளவையும் நோயின் அளவையும் காலத்தையும் எண்ணிப் பார்த்துப் பொருந்தச் செய்க என்பது இந்தக் குறளின் பொருள்.
ஒரு குழந்தையின் உடற்றொழிற்பாடு எவ்வாறு வயது வந்தவர்களின் உடற்றொழிற் பாட்டிலிருந்து வேறுபடுகின்றதோ அதே போன்று முதியவர்களிலும் வேறுபடுகின்றது. எனவேதான் முதியோர் மருத்துவம் (Geriatrics) என்னும் தனி மருத்துவத்துறை ஒன்று இன்று முக்கிய வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்த மருத்துவத்துறைசார் ஆராய்ச்சிகள் முதியவர்களுக்கு அல்லது வயோதிபருக்கு மருந்து பரிந்துரைக்கும் போது பின்பற்ற வேண்டிய சில முக்கிய அம்சங்களை நோயாளிகளுக்கும் மருத்துவருக்கும் கோடிட்டுக் காட்டியுள்ளன. அவற்றில் சில முக்கியமான கருத்துக்களை இங்கு உற்று நோக்குவோம்.
ஒரு முதியவருக்கு எந்த மருந்து பரிந்துரைக்கப்படாலும், அந்த மருந்து அந்த நோயாளிக்கு ஏன் வழங்கப்படுகின்றது என்பது தெட்டத்தெளிவாக வைத்தியக் குறிப்பேட்டில் எழுதப்பட்டிருக்கு வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த மருந்து ஏன் வழங்கப்படுகின்றது. அதன் விளைவுகள், பக்கவிளைவுகள் உபயோகிக்கும் முறை என்பன நோயாளிக்கும் அவரைப் பராமரிப்பவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
பொதுவாக முதியவர்களுக்கு மருந்து பரிந்துரைக்கப்படும் போது அது மிகக் குறைந்த அளவிலேயே ஆரம்பிக்கப்படுகின்றது. பின்னர் அந்த மருந்தின் அளவு மிகவும் கவனமாகவும் படிப்படியாகவுமே அதிகரிக்கப்படுகின்றது. இதே போன்று தான் ஒரு மருந்தை தன்னிச்சையாக திடீரேன நிறுத்திக்கொள்ளவும் முடியாது. அதை நிறுத்தும்போது கூட அது படிப்படியாகவே குறைத்துக்கொள்ளப்படுகின்றது. ஒரு மருந்து அதிகரிக்கப்படும் முன்னர் அந்த மருந்து நோயாளியாவ் சரியாக உட்கொள்ளப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை வைத்தியருக்கு உண்டு.
புதிதாக ஒரு மருந்து பரிந்துரைக்கப்பட முன்னர் வைத்தியர் ஏற்கனவே நோயாளி உட்கொள்ளும் மருந்துடன் ஏதாவது தாக்கம் ஏற்படுமா என்பதை அறிந்து பரிந்துரைப்பார்.
எப்போதும் நோயாளி, குறிப்பாக முதியவர்கள் புதிதாக ஒரு நோய் அறிகுறியை வெளிக்கொணரும் போது அது ஏற்கனவே உபயோகிக்கும் மருந்தின் பக்கவிளைவா? என்பதை முதலில் பரிசீலிக்கவேண்டும்.
ஒரு மருந்தினால் பயன் ஏதும் ஏற்படாத விடத்திலும் அல்லது பக்கவிளைவுகள் ஏற்படுமிடத்திலும் அந்த மருந்து நீக்கப்படவேண்டும். எப்போதும் மருத்துவ குறிப்புக்களை நோயாளியோ அல்லது அவரைப் பராமரிப்பவரோ கவனமாக மருத்துவ உதவியை நாடும்போது எடுத்துவர வேண்டும். அந்தக் குறிப்பை ஒவ்வொரு முறையும் நோயாளியின் நோயின் நிலையுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது வைத்தியரின் கடமையாகும்.
சில முதியவர்கள் வைத்திய பரிந்துரைக்கு மேலதிகமாக மாத்திரைகளைத் தன்னிச்சையாக உட்கொள்வதுமுண்டு. அப்படியாயின் அது குடும்பத்தவராலோ அல்லது பராமரிக்கப்படுபவர்களாலோ வைத்தியரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக தூக்க மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகள், மலச்சிக்கலைத் தீர்க்கும் மாதிரைகள், போன்றவற்றை முதியோர் துஷ்பிரயோகம் செய்வதுண்டு.
எனவேதான் சரியான வைத்தியப் பரிந்துரையின் மூலம் உரிய பயனை அடைய முதியவர்களுக்கும் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருநத்துவருக்கும் இடையே ஒரு அன்னியோன்னியமான உறவு இருக்க வேண்டும்.
ஆகக்குறைந்தது மருந்துகளின் மூலம் சுகம் கிடைக்காவிட்டாலும் பக்கவிளைவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டாலே போதுமானது.
வைத்திய கலாநிதி. தி. குமணன்.
பொது வைதித்திய நிபுணரும், சிரேஷ்ட விரிவுரையாளரும்
யாழ் போதனா வைத்தியசாலை