Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2023
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Feb    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



பிரதிபலிப்பு2

இவ் இணையத் தளமானது முற்று முழுதாக மக்களின் தேவை, நலன் கருதியே அறிமுகப்படுத்தப்படுகிறது. மக்களே இது உங்களுக்கானது இதில் பிரசுரிக்கப்படும் மருத்துவம் சம்பந்தமான பிரசுரங்களை வாசித்து உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துப் பயனடையுங்கள். இந்த இணையத் தளத்துடன் அங்கத்துவராக இணைய விரும்புவோர் ‘உறுப்புரிமை’ என்ற உள்நுழைவினூடாகச் சென்று இணையலாம். மேலும் உங்கள் மனதில் எழும் சந்தேகங்களை கீழே உள்ள கட்டத்தில் எழுதி அனுப்புங்கள். பலருக்குப் பயன் தரும் வினாக்களுக்கான பதில்கள் இப் பகுதியில் தரப்படும்.

பதில்கள்

கேள்வி – எனது வயது30 ஆகும். திருமண பந்தத்தில் இணைந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. கர்ப்பம் தரிப்பது தாமதமாகி வருகின்றது. அண்மையில் மேற்கொண்ட தைரொயிட் ஹோர்மோன் பரிசோதனையின் படி தைரொயிட் ஹோர்மோன் சுரப்பு குறைவடைந்துள்ளதாக குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார் இது பற்றி விளக்கிக் கூறவும்?

பதில் – கர்ப்பம் தரித்தல் தாமதமாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெண்ணொருவரின் தைரொயிட் ஹோர்மோன் சுரப்பானது குறைவாக இருக்கும் போது கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும். தைரொயிட் சுரப்பானது குறைவாக இருக்கும் போது உடற்பருமன் அதிகரித்தல், சோம்பல், அதிக தூக்கம், மலச்சிக்கல், குளிரைத் தாங்கமுடியாத தன்மை மற்றும் மாதவிடாயின் போது அதிகளவு குருதி வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இவ்வாறான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கர்ப்பம்தரிப்பதில் பிரச்சினைகளை உடையவர்களும் தைரொயிட் ஹோர்மோன் சுரப்பை பரிசோதிக்க வேண்டும். குருதிப் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். இந்தப் பரிசோதனையை மேற்கொள்வதற்கு உணவு அருந்தாமல் இருக்க வேண்டும் என்பது அவசியமற்ற அறிவுறுத்தல்.

தைரொயிட் சுரப்பு குறைவாக உள்ளோர் தைரொக்ஸின் மாத்திரையை உள்ளெடுக்க வேண்டும். உங்களைப் போன்றே கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினைகள் உள்ள பெண்கள் தைரொக்ஸின் மாத்திரையை மருத்துவர் கூறிய அளவு பரிமாணத்தில் உள்ளெடுக்கும்போது கர்ப்பம் தரிக்கின்ற வாய்ப்பு அதிகரிக்கின்றது. கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்ணொருவர் ரி.எஸ்.எஜ் எனப்படுகின்ற தைரொயிட் ஹோர்மோனின் அளவை சாதாரணமான ஒருவரை விடவும் குறைந்த நிலையில் பேணிக்கொள்ள வேண்டும். தைரொக்ஸின் மாத்திரையை மருத்துவர் பரிந்துரை செய்த அளவில் காலை வேளையில் வெறும் வயிற்றில் உள்ளெடுக்க வேண்டும். அதன் பின்பு 30 நிமிடங்களுக்கு தேநீர் போன்ற ஆகாரங்களையோ, உணவையோ உள்ளெடுக்கக்கூடாது.

கர்ப்பவதியானதை உறுதிப்படுத்திய பின்னர் ( சிறுநீரில் எஜ்.சி.ஜி பரிசோதனையை மேற்கொள்ளல்) உடனடியாகவே தைரொக்ஸின் மாத்திரையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். உதாரணமாக 25 மில்லி கிராம் அளவால் குளிசையின் அளவை அதிகரிக்க வேண்டும் 50 மில்லி கிராம் தைரொக்ஸின் மாத்திரை எடுப்பவர்கள் அதனை 75 மில்லி கிராமாக அதிகரிக்க வேண்டும். இயன்றளவு விரைவாக மருத்துவரை நாடி ஆலோசனை பெறுதல் நன்று

கர்ப்பத்தில் உள்ள சிசுவின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியில் முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியமான கால கட்டமாகும். சிசுவின் வளர்ச்சி தாயின் தைரொக்ஸின் அளவிலேயே தங்கியிருக்கின்றது. எனவே கர்ப்பதியொருவர் குறிப்பிட்ட அளவில் தைரொக்ஸினை உள்ளெடுக்காத விடத்து குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிப்படையும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

கர்ப்பகாலத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஒரு முறை தைரொயிட் ஹோர்மோனின் அளவைப் பரிசோதிக்க வேண்டும் தேவையேற்படின் தைரொக்ஸின் மாத்திரையின் அளவை மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றலாம்.

கர்ப்பம் தரிக்க விருப்பமுடைய மற்றும் கர்ப்பிணியான பெண்கள் அவர்களுக்குத் தைரொயிட் சுரப்புக்குறைபாடு இருக்குமிடத்து மேற்குறிப்பிட்ட விதமாக நோய் தொடர்பில் கவனமதான இருக்க வேண்டும். இதன் ஊடே தாயும் பிறக்கப்போகும் குழந்தையும் பாதிப்புக்கள் ஏதுமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.

கேள்வி – தைரொயிட் பிரச்சினையுள்ள நோயாளருக்கு குறிப்பாக கர்ப்பவதிகளுக்குச் சுருக்கமாக (summary) என்ன ஆலோசனைகளைக் கூற விரும்புகின்ரீர்கள்?

பதில் – அவர்கள் தெரிந்திருக்கவேண்டிய நடை முறைகள் முதன்மையாக நோக்கப்பட வேண்டியவை.அவை வருமாறு.
* தைரொயிட் நோயின் தன்மை, அதற்கான குளிசைமருந்துகளின் அளவு மற்றும் குருதிப் பரிசோதனை (தைரொ யிட்ஓமோன்) செய்யும் காலஇடைவெளி போன்றன கர்ப்பக் காலத்தில் சாதாரண நோயாளரைப்போன்றல்லாது வேறுபடுகின்றன.
*மருத்துவர் பரிந்துரைசெய்து வழங்குகின்ற மருந்தைக் சரியான முறையில் கிரமமாக உள்ளெடுத்தல் வேண்டும்.
*கர்ப்பகாலத்தில் முதல் 12வரங்கள மிக முக்கியமான கால கட்டம் இந்தக் காலப்பகுதியின் போதே பிறக்கப்போகும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சி என்பன அதிகம் ஏற்படுகின்றன. எனவே கர்ப்ப காலம் முழுமையும் குறிப்பாக, முதல் 12வரங்களும்தேவையான அளவு மருந்தை வைத்திய ஆலோசனைப்படி உள்ளெடுக்கவேண்டும்.இதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
* சில நோயாளர்களுக்கு கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி (Goitre Nodule) இருந்தால் கர்ப்பம் தரிக்க முன்னரோ அல்லது பின்னரோ வேறு பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.குறிப்பாக, ஸ்கான் பரிசோ தனை இழையப் பரிசோதனை (FNAC) போன்ற வற்றைக் குறிப்பிடலாம். தைரொயிட் சுரப்பியில் அரிதாகப் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு.
*இறுதியாகக் கர்ப்பிணியொருவர் கர்ப்ப காலத்தின்போது மிகவும் சிரத்தையுடன் தனது தைரொயிட் பிரச்சினையைக் கவனித்துக் கொள்ளுதல் அவசியம். இதனால் கர்ப்பிணிக்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் ஏற்படக்கூடிய தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும், வடமாகாணத்துக்குரிய ஒரேயொரு அகஞ்சுரக்கும் தொகுதி (ஒமோன்) சிகிச்சை நிலையம் யாழ் போதனா மருத்துவமனையில் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.எனவே தேவையேற்படுகின்ற கர்ப்பவதிகள் நிபுணத்துவமான சிறப்பான சிகிச்சையைப் பெற்றுக்கெரள்ளலாம். இதுவே நோயளர்களுக்கு இன்றியமையாததேவைப்பாடுமருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.

கேள்வி – தைரொயிட் சுரப்பு அதிகமாகவுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரித்த பின்னர் அவருக்கான ஆலோசனைகள் என்ன?

பதில் – இவ்வாறான நோயாளருக்குப் பொதுவாக “Carbimazole” என்ற மருந்தே வழங்கப்படுகிறது. இந்த மருந்தைக் கர்ப்பம் தரித்து முதல் 12 வாரங்களுக்கு உள்ளெடுத்தல் கூடாது. இதற்குப் பதிலாக Propylthiouarcil என்ற மருந்தை உள்ளெடுத்தல் வேண்டும். கர்ப்ப காலத்தின் 12 வாரங்கள் கழிந்தபின்னர் மேற்படி “Carbimazole” மருந்தை உள்ளெடுக்க முடியும். கர்ப்ப காலத்தில் உள்ளெடுக்க வேண்டிய மருந்தின் அளவானது மாறுபட நேரிடுகின்றது. எனவே குறித்த காலத்துக்கொருமுறை குருதிப் பரிசோதனையை மேற்கொண்டு வைத்திய ஆலோசனைப்படி மருந்தின் அளவைத் தேவையேற்படின் மாற்றி உள்ளெடுத்தல் அவசியம். தைரொயிட் சுரப்பு அதிகமாக உள்ளோருக்கான மருத்துவ சிகிச்சையை நோக்கின் பொதுவாக, 18 தொடக்கம் 24 மாதங்களுக்கே குளிசை வழங்கப்படுகிறது. குணமடையாதவர்களுக்கு மேலதிக சிகிச்சை வழிமுறைகள் கிடைக்கப்பெறுகின்றன. மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.

கேள்வி – தைரொயிட் சுரப்பு குறைவாகவுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரித்த பின்னர் அவருக்கான ஆலோசனைகள் என்ன?

பதில் – தைரொயிட் சுரப்புக் குறைவாகவுள்ள பெண்னொருவர் தான் கர்ப்பமாகவுள்ளேன் என உறுதி செய்தவுடனேயே (சிறுநீரில் HCG பரிசோதனை மூலம்) வைத்திய ஆலோசனையைப் பெற்று தைரொக்ஸின் மருந்தின் அளவை 25கே.ஜி(KG) இனால் அதிகரித்து உள்ளெடுத்தல் அவசியம். கர்ப்பகாலத்தில் முதல் 12 வாரங்களும் சிசுவின் வளர்ச்சியில் முதன்மையான பங்கை வகிக்கின்றன. இந்தக் காலத்திலேயே குழந்தையின் மூளை மற்றும் உடல் உறுப்புக்களின் வளர்ச்சியானது முதன்மை பெற்றிருக்கும். எனவே இந்தக்காலகட்டத்தில் தேவையான அளவு தைரொக்ஸின் குளிசையை வைத்திய ஆலோசனைப்படி உள்ளெடுத்தல் அவசியம். ஏனெனில் கர்ப்ப காலத்தில் தைரொயிட் ஓமோனின் அளவுகளில் பலவிதமானமாற்றங்கள் ஏற்படுகின்றன. குருதியிலுள்ள தைரொயிட்ஓமோனின் அளவைக் குறித்த காலத்துக்கொரு முறை பரிசோதித்துக்குளிசையின் அளவைத்தேவையேற்படின் மாற்றி உள்ளெடுத்தல் வேண்டும். தைரொயிட் மருந்தை சரியான அளவில் உள்ளெடுக்காதவிடத்து பிறக்கப்போகும் குழந்தைக்கும் தாய்க்கும் பலவகையான பிரச்சினைகள் ஏற்படலாம்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.

கேள்வி – தைரொயிட் பிரச்சினையுள்ள பெண்ணொருவர் கர்ப்பம்தரிக்க விரும்பினால் அவருக்கு எவ்வாறான ஆலோசனைகளை வழங்க விரும்புகிறீர்கள்.

பதில் – பெண்ணொருவருக்குள்ள தைரொயிட் பிரச்சினை என்பது தைரோயிட் சுரப்புக் குறைவாக இருக்கும் நிலையாகவோ அல்லது தைரொயிட் சுரப்பு அதிகளவில் சுரப்பதால் ஏற்படும் பிரச்சினையாகவோ இருக்கலாம். தைரொயிட் சுரப்புக் குறைவாகவுள்ளோர் சோம்பல், அதிக நித்திரை, உடற்பருமன் அதிகரித்தல், மலச்சிக்கல், மாதவிடாயின் போது அதிகளவு குருதி வெளியேறுதல் மற்றும் குளிர்தாங்க முடியாதிருத்தல் போன்ற அறிகுறிகளைக்கொண்டிருப்பர். இவர்களுக்கு கழுத்துப் பகுதியில் கழலையோ, வீக்கமோ இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம். இவ்வாறான அறிகுறிகளைக் கொண்டிருப்போர் தங்களது குருதியில் உள்ள தைரொக்ஸின் ஓமோனின் அளவைப் பரிசோதித்துப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். தைரொயிட்ஓமோனின் அளவு குறைவாக இருக்கும் போது தைரொக்ஸின் மருந்தை உள்ளெடுத்தல் மிக அவசியம் மருத்துவர் ஆலோசனைப்படி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம். தைரொயிட் சுரப்புக் குறைவான நோயுள்ள (Hypothyroidism) பெண்கள் கர்ப்பம் தரிக்க முன்னரே தங்களது நோயைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருத்தல் மிக அவசியம். இவ்வாறு இல்லாமல் கர்ப்பம் தரிக்கும்போது பலவகையான பிரச்சினைகள் ஏற்படலாம். இதே போல தைரொயிட்சுரப்பு அதிகமாகச்சுரக்கும்போது படபடப்பு, அதிகளவு வியர்த்தல், உடற்பருமன் குறைதல், அடிக்கடி மலம் கழித்தல் (வயிற்றோட்டம் போல).மாதவிடாயின் போது குருதி வெளியேற்றம் குறைவடைதல் அல்லது மாதவிடாய் தாமதமாதல் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாமை போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவ்வாறான குணங்குறிகள் இருக்கும்போதும் தமது குருதியில் உள்ள தைரொயிட் ஓமோனின் அளவை வைத்திய ஆலோசனைப்படி பரிசோதித்துச் சிகிச்சையை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறான பிரச்சினையுடையோர் கழுத்தில் வீக்கத்துடனோ அல்லது கண்ணகள் வெளித்தள்ளி பல வகையான கண் தொடர்பான பிரச்சினைகளுடனோ இருக்கலாம். தைரொயிட் சுரப்பு அதிகமாகச் சுரப்பதைக் கட்டுப்படுத்துவதற்கும் சிறப்பான மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. இவ்வாறான நோயாளர்களும் கர்ப்பம் தரிக்கும் முன்னர் தமது நோயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல் வேண்டும். மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.

கேள்வி: எனது வயது 28 ஆகும். எனது கழுத்துப் பகுதியில் சில மாதங்களாக விக்கமொன்று காணப்படுகிறது எனது நிறையானது அதிகரித்துச்செல்வதோடு உடற்சோர்வும் தென்படுகிறது. இது தைரொயிட்தொடர்பான பிரச்சினையாக இருக்குமா???

பதில்: உங்களுக்கு இருக்கும்குனங்குறிகளைப் பார்க்கும்போது தைரொயிட்சுரப்பியின் செயற்படு விகிதம் குறைவாக இருக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றது. தைரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்யும் போது தூக்கம், சோம்பல் உடற்பருமன் அதிகரித்தல் மலச்சிக்கல் குளிரைத்தாங்க முடியாதநிலை, தலை முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இது போலவே பெண்களில் மாதவிடாயின்போது அதிக குருதி வெளியேற்றம் இருக்கும். எனவே நீங்கள் வைத்தியரின் ஆலோசனையை விரைவாகப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். குருதிப் பரிசோதனை மூலம் தைரொயிட் ஹார்மோனின் அளவைப் பரிசோதித்து இதனை அறிந்து கொள்ள முடியும் தைரொயிட் ஹார்மோனின் அளவானது குறைவாக இருக்கும் பட்சத்தில் தைரொக்ஸின் சுரப்பி குறைவாகத் தொழிற்படும் நிலைமையை உறுதி செய்துகொள்ள முடியும். தைரொயிட் சுரப்பியானது வீங்கிக் காணப்படுமானால் ஸ்கான் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று தேவையேற்படின் எவ்என்ஏசி(FNAC) எனப்படுகின்ற இழையப்பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். தைரொயிட் சுரப்பி குறைவாகச் செயற்படும் போது தைரொக்ஸின் மருந்தினைக் காலம் தவறாது கிரமமாக உள்ளெடுக்க வேண்டும். இதன் மூலம் நோயின் குணங்குறியிலிருந்து விரைவாக விடுபட முடியும். தைரொக்ஸின்மாத்திரைகளை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் உள்ளெடுக்க வேண்டும்.இதன் பின்னர் அரை மணித்தியாலத்திற்கு உணவு உள்ளெடுப்பதையோ தேநீர் அருந்துவதையோ தவிர்த்தல் வேண்டும். இந்த நோய் பற்றிய மேலதிக விவரங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும்மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.

கேள்வி : எனது வயது 25. எனது மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதல் (License Medical Certificate ) பரீட்சையின் போது குருதியிலுள்ள குளுக்கோசின் அளவுப 250 Mg/idl ஆகவும் FBS 160 Mg/idl ஆகவும் காணப்பட்டது. இதன் பின்னர் HbAIC என்ற குருதிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் அளவானது 8.5 ஆக காணப்பட்டது. எனது எடை 90Kg எனது குடும்பத்தில் எவருக்கும் நீரிழிவு நோய் இருக்கவில்லை. என்னிடமும் இந்த நோய்க்கான அறிகுறிகள் எவையும் காணப்படவில்லை. உணவுக்கட்டுப்பாட்டினால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியுமா? தயவு செய்து ஆலோசனை தரவும்.


பதில் :
உங்களுடைய குருதிப்பரிசோதனை முடிவுகள் அனைத்துமே உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்ப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. உங்களுடைய உடற்பருமனும் அதிகமாக இருக்கின்றது. உங்களுடைய உயரத்தை குறிப்பிட்டிருந்தால் உடற் திணிவுச் சுட்டெண்ணினை் (BMI) கணிக்கக் கூடியதாக இருந்திருக்கும்.
நீரிழிவு நோயானது அதிக தண்ணீர்த்தாகம், அதிகளவு சிறுநீர் வெளியேறுதல், அதிகளவு பசி மற்றும் உடல் நிறை குறைவடைதல் போன்ற அறிகுறிகளுடக் வெளிப்படலாம். நீரிழிவு நோயானது இவ்வாறான அறிகுறிகள் எதுவும்மின்றியும் ஏற்படலாம் என்பது மிக முக்கியமாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். நீரிழிவு நோயானது குறிப்பாக வகை2 ஏற்படுவதற்கு பரம்பரைக்காரணிகள் மாத்திரமல்லாது சூழல் காரணிகளும் ( வாழ்க்கை முறை) காரணமாக அமைகின்றன.
நீரிழி நோயினைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது மிகவும் இன்றியமையாததாகும். சீனிச் சத்துள்ள மற்றும் அதிக மாப்பொருள் அடங்கியுள்ள உணவுப்பதார்த்தங்களை நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை அவசியமாக பயண்படுத்த வேண்டும்.
எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுவது அவசியம். உங்களுக்கு மெற்போமின் என்ற குளிசை மருந்தையே மருத்துவர் பொதுவாக பரிந்துரை செய்வார்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தாதவிடத்து நீண்ட காலத்தில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
குறிப்பாக பார்வை மங்கலடைதல், சிறுநீரகப் பாதிப்பு, நரம்புத்தொகுதி பாதிப்பு, இருதய நோய் போன்றன ஏற்படலாம்.
நீங்கள் வைத்திய ஆலோசனையைப் பெற்று ஒழுங்காக மருந்துகளை உள்ளெடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீண்டகால பாதிப்புக்களைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ முடியும்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.

கேள்வி : எனது வயது 32 ஆகும். எனக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு 5 வருடங்கள் ஆகின்றன. நான் மெற்போமின் குளிசையை இந்த நோய்க்காகப் பயன்படுத்தி வருகின்றேன். எனது குருதிப் பரிசோதனை முடிவுகளின் படி நீரிழிவுவானது கட்டுப்பாட்டில் இல்லாது இருப்பதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். எனக்கு சில காலமாக பாலியல் உறவில் நாட்டம் குறைந்து காணப்படுவதுடன் எனது ஆணுறுப்பானது உடலுறவின் போது விறைப்படைவதிலும் பிரச்சினையுள்ளது. இந்தப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக மருத்துவ ஆலோசனை வழங்கவும்.

பதில் : நீரிழிவு நோயானது நீண்ட காலமாகக் கட்டுப்பாட்டில் இல்லாது விடும் போது நீங்கள் குறிப்பிட்டதைப் போன்றே பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. நீரிழிவு கட்டுப்பாட்டினுள் இல்லாமல் இருக்கும் போது நரம்புத் தொகுதி மற்றும் குருதிச்சுற்றோட்தம்தொகுதி என்பன பாதிப்படைவதனால் ஆண்குறி விறைப்படையாத்தன்மை (Electiledy sfunction) ஏற்ப்டுகின்றது. எனவே முதலாவதாக ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் மருந்துகளைப் கிரமமாக உள்ளெடுத்தல் என்பனவற்றின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
சிலமருந்து வகைகள் மற்றும் தவறான பழக்க வழக்கங்களும் (புகைப்பிடித்தல், மதுபானப்பாவனை, மற்றும் போதைப்பொருள் பாவனை) இதற்குக் காரணமாக அமையலாம். இதேபோல் வேறுசில உடலியல் நோய்களும், ஹோர்மோன் பிரச்சினைகளும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். உளரீதியான தாக்கங்கள் குறிப்பாக அதிக மன அழுத்தம் (Stress) மற்றும் வேலைப்பழு போன்றனவும் இந்த பிரச்சினை ஏற்படக் காரணமாக அமையலாம்.
எனவே நீங்கள் வைத்திய ஆலோசனைப்படி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும். உங்களது நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருத்தலே எல்லாவற்றிலும் மிக இன்றியமையாததாகும். உங்கள் பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிந்த பின்னர் வைத்திய ஆலோசனைப்படி தேவையான மருந்துகளை உள்ளெடுப்பதன் மூலம் (தேவையேற்படின்) உங்களது பிரச்சினையில் இருந்து குணமடைய முடியும்.

கேள்வி : எனது வயது 25 ஆகும். எனது உயரம் 5 அடி 6 அங்குலமாகும். எனது உடல் நிறையானது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. எனது தற்போதைய நிறை 95Kg ஆகும். எனது கழுத்துப் பகுதியானது கறுப்பு நிறமாக மாறிவருவதுடன் மாதச் சுகவீனமும் 2 தொடக்கம் 3 மாதங்களுக்கு ஒருமுறையே ஏற்படுகின்றது இது தொடர்பாக ஆலோசனை வழங்கவும்?

பதில்: உங்களுடைய உடற் பருமனானது இவ்வாறு அதிகரித்து செல்லும் போது பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உங்களுடைய உயரத்திற்கேற்ப இருக்ககூடிய உடல் நிறையானது 65Kg ஆகும். அதாவது உங்களுடைய தற்போதைய உடல் நிறையானது இருக்கவேண்டியதை விடவும் 30Kg அதிகரித்துள்ளது.
உங்களுடைய கழுத்துப் பகுதியில் கருமை நிறம் படர்வதை Acanthosis nigricans என்று கூறுவார்கள். உடல் நிறையானது அதிகரிக்கும் போது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை (inculin resitance) என்ற நிலமை உடலில் ஏற்படுகின்றது. உடல் நிறையை குறைக்காத விடத்தில் உங்களுக்கு அனுசேபப் பாதிப்பு நோய் (Metabolic Syndrome) ஏற்படும் சாத்தியக்கூறு மிகவும் அதிகமாகும். நீரிழிவு நோய், உயர் குருதி அமுக்கம் அபாயமான கொழுப்புக்கள் (கொலஸ்ரோல்) அதிகரித்தல் என்பன இந்த நோயின் வெளிப்பாடுகள் ஆகும்.

உங்களைப்போன்ற பெண்களுக்கு உடற்பருமனானது அதிகரித்துச் செல்லும் போது மாதவிடாய்ச் சக்கரத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு சூலகத்தில் சிறு சிறு கட்டிகள் ஏற்படும். (Polycystic obarian syndrome) வாய்ப்புக்கள் அதிகமாகும். இந்த பிரச்சினையைக் கவனிக்காமல் விடும் போது கர்ப்பம் தரித்தலிலும் பாதிப்புக்கள் ஏற்பட நேரிடுகிறது.

எனவே நீங்கள் இன்று முதல் உணவுக்கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்தல் மிகவும் அவசியமாகும். சீனி சேர்த்த பதார்த்தங்கள், மாச்சத்துள்ள உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளைக் குறைத்துக்கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் ( 30 தொடக்கம் 60 நிமிடங்கள்) உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமாகும்.

உங்களுக்குத் தேவையான குருதி, ஹோர்மோன் பரிசோதனைகள் மற்றும் ஸ்கான் பரிசோதனைகள் என்பவற்றை மேற்கொள்வது இன்றியமையாததாகும். நீங்கள் வைத்திய ஆலோசனைக்கேற்ப ஆரோக்கியமான வாழக்கை முறையுடன் சில மருந்து வகைகளையும் (பரிசோதனைகளின் பெறுபேறுகளுக்கேற்ப) உள்ளெடுக்க வேண்டியிருக்கும் எனவே உங்கள் உடல்நிறையைக் குறைத்துப் பலவிதமான பிரச்சினைகளில் இருந்து விடுபட்டுக்கொள்ள இன்று முதல் நீங்கள் முயற்சி செய்வது அவசியமாகும்.

முன்னைய கேள்வி பதில்களை பார்வையிட

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com