இவ் இணையத் தளமானது முற்று முழுதாக மக்களின் தேவை, நலன் கருதியே அறிமுகப்படுத்தப்படுகிறது. மக்களே இது உங்களுக்கானது இதில் பிரசுரிக்கப்படும் மருத்துவம் சம்பந்தமான பிரசுரங்களை வாசித்து உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துப் பயனடையுங்கள். இந்த இணையத் தளத்துடன் அங்கத்துவராக இணைய விரும்புவோர் ‘உறுப்புரிமை’ என்ற உள்நுழைவினூடாகச் சென்று இணையலாம். மேலும் உங்கள் மனதில் எழும் சந்தேகங்களை கீழே உள்ள கட்டத்தில் எழுதி அனுப்புங்கள். பலருக்குப் பயன் தரும் வினாக்களுக்கான பதில்கள் இப் பகுதியில் தரப்படும்.
பதில்கள்
கேள்வி: எனது வயது 28 ஆகும் எனக்கு தைரொயிட் பிரச்சினை இருப்பதால் தைரொக்ஸின் குளிசையை (75 மில்லிகிராம்)கடந்த 3 வருடங்களாகப்பாவித்து வருகின்றேன். நான் இப்பொழுது கர்ப்பமாக இருப்பதை(Urine) பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக்கொண்டேன். நான் தைரொக்ஸின் குளிசையைக் கர்ப்பகாலத்திலும் உட் கொள்ளவேண்டுமா? இது பற்றி விளக்கிக் கூறவும்?
பதில்: உங்களுக்கு தைரொக்ஸின் குறைவாகச் சுரக்கின்ற பிரச்சினை (Hypothyroidism) இருக்கின்றது. கர்ப்பம் தரித்த பெண்ணொருவர் தைரொக்ஸின் குளிசையினை நிறுத்தாமல் தொடர்ந்து பயன்டுத்துதல் அவசியமாகும். கருப்பையில் வளரும் சிசுவின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி என்பன தாயானவர் உள்ளெடுக்கும் தைரொக்ஸினிலேயே தங்கியிருக்கிறது. கர்ப்பம்தரித்த பெண்ணொருவர் உண்மையில் தான் வழமையாக உள்ளெடுக்கும் அளவினை விடக்கூடுதலான அளவு தைரொக்ஸினை கர்ப்பகாலத்தில் எடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் தற்போது கர்ப்பமாக இருப்பதால் தற்போது எடுக்கும் அளவை விட (75 mg) 25 mg அதிகமாக எடுக்கவேண்டியிருக்கும் (1OOmg) இதற்கு முன்னர் உடனடியாக வைத்திய ஆலோசனைப்படி தைரொயிட் ஹோர்மோன் அளவைப் (Free T4TSH) பரிசோதித்துப் பார்ப்பது அவசியமாகும். கர்ப்பகாலத்தில் தைரொக்ஸின் குளிசையினைத் தேவையான அளவில் எடுக்காதவிடத்து சிசுவின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி என்பன பாதிக்கபட நேரிடலாம். எனவே குறிப்பிட்ட காலத்துக்கொருமுறைதைரொயிட்ஹோர்மோனைப் பரிசோதித்து வைத்திய ஆலோசனைப்படி குளிசையின் அளவை (Dose) மாற்றுவது அவசியமாகும். எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுத்தேவையான அளவுதைரொக்ஸினை உள்ளெடுப்பது இன்றியமையாததாகும்.
கேள்வி – எனது வயது 25 ஆகும். எனக்கு சிலமாதங்களாகக் கழுத்துப்பகுதியில் வீக்கமொன்று காணப்படுகின்றது. நான் சோம்பல்தன்மை க இருப்பதாக உணர்வதோடு எனது உடல் நிறை அதிகரித்துச் செல்வதையும் அவதானிக்கிறேன். என்து மாதவிடாய் வெளியேற்றமும் அதிகமாக உள்ளது. இது தைரொயிட் தொடர்பான பிரச்சினையாக இருக்கக்கூடுமா? இதற்குத் தேவையான சிகிச்சை முறைகளைப்பற்றி விளக்கிக்கூறவும்.
பதில்- உங்களுக்கு இருக்கின்ற குணங்குறிகளைப் பார்க்கும் போது தைரொயிட் சுரப்பி குறைவாகச்சுரக்கின்ற நோய் இருப்பதற்கான சாத்தியக் கூறு அதிகமாக உள்ளது. தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரக்கும் போது சோம்பல் தன்மை நித்திரைத் தூக்கம் உடல்நிறை அதிகரித்தல், மலச்சிக்கல் தலைமுடிஉதிருதல் குளிர்தாங்க முடியாத தன்மை குரல் மாற்றமேற்படுதல் மற்றும் பெண்களில் மாதவிடாய் வெளியேற்றம் அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும். தைரொயிட் ஹோர்மோனின் அளவை குருதிப்பரிசோதனை மூலம் அளவிட்டுக் கொள்ள முடியும் இந்தப் பெறுபேற்றின் அடிப்படையில் தைரொக்ஸின் மருந்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். தைரொக்சின் மருந்தானது (குளிசை) காலை வேளையில் வெறும் வயிற்றில் உள்ளெடுக்கப்படவேண்டும். இதன் பின்னர் 30 நிமிடங்களுக்குப் பின்னரே தேநீர் போன்ற பானங்களை அல்லது காலை உணவை உள்ளெடுக்க வேண்டும். தைரொக்ஸின் குளிசையுடன் வேறு மருந்துகளை ஒரே நேரத்தில் உள்ளெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் அவ்வாறான மருந்துகளைக் காலை உணவின்பின்னர் உள்ளெடுத்தல் சிறந்தது தைரொயிட்ட ஹோர்மோனின் அளவைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பரிசோதித்து தைரொக்ஸின் குளிசையின் அளவை மாற்ற வேண்டியிருக்கும் உங்களுக்கு கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்படுவதால் ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும் காப்பம் தரிக்க விரும்பும் பெண்களில் தைரொக்ஸின் ஹோர்மோனின் அளவானது குறிப்பிடத்தக்க அளவில் பேணப்படுவது அவசியமாகும். கர்ப்பம் தரித்தபின்னர் குறிப்பிடத்தக்க அளவில் தைரெக்ஸின் மருந்தை உள்ளெடுக்காதுவிடின் கர்ப்பத்திலுள்ளா சிசுவின் உடல்,மூளை வளர்ச்சி போன்ற பாதிப்படைய நேரிடுவதோடு கருச்சிதைவு ஏற்படும் சாத்தியக் கூறும் அதிகமாகும். எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகும்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.
கேள்வி – எனது வயது20 ஆகும். எனது முகப்பகுதியில் சில வருடங்களாக ஆண்களைப் போன்று உரோம வளர்ச்சி காணப்படுகின்றது. எனது உடல் நிறையும் சிறிது சிறிதாக அதிகரித்து வருகின்றது. 2, 3 மாதங்களுக்கு ஒரு முறையே மாத சுகவீனமும் ஏற்படுகின்றது. இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு ஏதாவது ஹோர்மோன் குறைபாடுகள் காரணமாக இருக்குமாஎன விளக்கிக்கூறமுடியுமா?.
பதில்- உங்களைப்போன்ற பல பெண்களுக்கு இவ்வாறான பிரச்சினை இருக்கின்றது. உங்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளைப்பார்க்கும் போது உங்களின் சூலகங்களில் சிறு சிறு நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன. நோய் (polycysticovariansyndrome) இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. இவ்வாறான நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் உடல்நிறை அதிகரிப்பதோடு மாதவிடாய்ச்சக்கரத்திலும் மாற்றம் ஏற்படுகிறது. இவர்களுக்குப்பருக்கள் (acne) ஏற்படுவது அதிகரிப்பதோடு உரோமவளர்ச்சியும் குறிப்பாக முகத்தில் அதிகமாக ஏற்படுகின்றது. இந்நோயுள்ளவர்களில் பெண்களுக்கான ஹோர்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு (Testosterme) எனப்படுகின்ற ஆண்களுக்குரிய ஹேர்மோனானது அதிகளவில்சுரக்கப்படுவதனாலேயே இவ்வாறானநிலை ஏற்படுகின்றது. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களும் அப்பியாச மற்ற தேகஉழைப்பற்றவாழ்க்கைமுறையும் (sedentary life style) இவ்வாறான நோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும். நீங்கள் குறிப்பிட்டதைப்போன்று அதிகளவு உரோம வளர்ச்சி ஏற்படுவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. சூலகங்களில் அல்லது அதிரினல்சுரப்பியில் ஏற்படுகின்ற கட்டிகளும் காரணமாக இருக்கலாம். இதே போல வேறு சில நோய்களும் இதற்குக்காரணமாக அமைந்துவிடுகின்றது. எனவே நீங்கள் வைத்திய ஆலோசனைப்படி தேவையான குருதி மற்றும் ஸ்கான் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும். குருதி ஹோர்மோன் மற்றும் ஸ்கான் பரிசோதனைகளின்படி உங்கள் நோயைக் கண்டறிந்து கொள்ளமுடியும். உடற்பருமனைக் குறைத்துக்கொள்வதே மிகவும பிரதானமான சிகிச்சை முறையாகும். உங்களால் முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்ளவேண்டும். சீனி சேர்க்கப்பட்ட உணவுகளையும் பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதிகளவு மாச்சத்துள்ள கொழுப்புள்ள உணவுகளைத்தவிர்த்துக்கொள்ளவேண்டும் நாளொன்றுக்கு ஆகக் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமாகும். உங்கள் முகத்தில் அதிகளவு முடி வளர்வதற்கும் இவ்வாறான ஹோர்மோன் மாற்றங்களே காரணமாகும். உடல்நிறையைக் குறைக்கும் போது இவ்வாறான உரோம வளர்ச்சியும் சிறிது சிறிதாகக்குறைவடையும். இவ்வாறான உரோம வளர்ச்சியைக் குறைப்பதற்கும் பலவிதமான மருந்துகள் உள்ளன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி பெற்றுக்கொள்ளமுடியும். உங்கள் உடல்நிறையைக் குறைத்துக்கொள்வதன் மூலம் உங்களின் மாதவிடாய் சக்கரத்தையும் ஒழுங்காக்கிக்கொள்ள முடியும். உங்களின் உடல்நிறையைக் குறைத்து கலகங்களிலிருந்து முட்டைவெளி வருவதை தூண்டுவதற்கு மெற்போமின் என்ற மருந்தை வைத்தியர்கள் பரிந்துரை செய்வது வழக்க மாகும். இதே போலமாத விடாய்ச்சக்கரத்தை ஓழுங்காக்குவதற்கும் ஹோர்மோன் குளிசைகளை வைத்திய ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு உடற்பருமன் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் போது நீரிழிவு உயர்குருதிஅமுக்கம் அதிகளவு கொலஸ்திரோல் உடலில் சேருதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. சூலகத்தில் நீர்க்கட்டிகள் உள்ள நோயுள்ளவர்களுக்கு திருமணத்தின் பின்னர் கர்ப்பம் தரிப்பதிலும்பி ரச்சினைகள் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே நீங்கள் வைத்திய ஆலோசனைப்படிதேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வது மிக மிக அவசியமாகும்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.
கேள்வி – எனது வயது 62 ஆகும். எனக்கு கடந்த 16 வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளது. எனது நீரிழிவு நோய்க்கு மெற்போமின், கிளிக்கிளசயிட் மற்றும் சிற்றகிளிப்ரின் ஆகிய மருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றேன். எனது குளுக்கோஸின் அளவு குருதியில் அதிகமாக இருப்பதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இன்சுலினை ஆரம்பிப்பதே சிறந்தது அவர் கூறுகின்றார். இது பற்றி விளக்கிக் கூறவும்?
பதில் – நீரிழிவு ( சலரோக) நோயைக் கட்டுப்பாடட்டினுள் வைத்திருப்பதற்கு சிறந்த உணவுக் கட்டுப்பாடும் மருந்துகளைக் கிரமமான முறையில் உள்ளேடுத்தலும் அவசியமாகும். உங்களைப் போன்ற நீண்டகாலமாக நீரிழிவுநோயுள்ளவர்களுக்கு காலப்போக்கில் குளிசை மருந்துகள் செயற்படாத நிலை ( Oral Hypogly caemic drugs failure) ஏற்பட நேரிடுகின்றது.. எனவே அவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்சுலின் மருந்தையே பயன்படுத்த வேண்டியேற்படுகின்றது. எனவே உங்களின் குடும்ப வைத்தியரின் ஆலோசனைப் படி இன்சுலின் மருந்தை ஆரம்பிப்பதே சிறந்ததாகும். இவ்வாறு இன்சுலின் மருந்தை ஆரம்பிக்கும்போது நாளொன்றுக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துகின்ற இன்சுலினனை உங்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி பயன்படுத்த முடியும். இன்சுலின் மருந்தை பயன்படுத்துகின்ற மஐற பற்றிய விளக்கங்களையும் இது தொடர்பான மேலதிக விளக்கங்களையும் அறிவுரைகளையும் உங்கள் வைத்தியரிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.
கேள்வி : எனது மகனின் வயது 9ஆகும். எனது மகனின் உயரமானது இவரது வகுப்பில் உள்ள மாணவர்களுடன் ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. இதுபற்றிஆலோசனை வழங்கவும்?
பதில் : ஒருவரின் உயரமானது பெற்றோரின் உயரம், உள்ளெடுக்கும் போசணையின் அளவு போன்ற பல காரணங்களில் தங்கியுள்ளது. நீண்ட காலமாக சிறுபிள்ளையொருவர் உள்ளெடுக்கும் உணவு குறைவா இருக்கும் போது Chronic Malnutrition அவரது உயரமும்உடல்நிறையும் சாதாரண அளவை விடக் குறைவாக இருக்கநேரிடுகிறது.
இவ்வாறு உயரம் தொடர்பான பிரச்சினையுள்ள சிறுவர்கள் வைத்திய ஆலோனையை விரைவாகப் பெற்றுக் கொள்வது அவசிய மாகும்.நோய்கள் தொடர்பான வினாக்கள் மற்றும் உடற்பரிசோதனை History taking and Examination மூலம் உயரக் குறைவான காரணத்தை மருத்துவரினால் ஊகித்துக்கொள்ளமுடியும்.
பெற்றோருடைய உயரத்தை அளவிட்டு அதன் மூலம் சராசரியான பெற்றோரின் உயரக் கணிப்பின் மூலம் Mid Parental Height குறித்த சிறுவன் அல்லது சிறுமியின் உயரத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா எனக் கண்டறிய முடியும்.
இவ்வாறு உயரம் குறைவாக இருப்பதற்கு நீண்டகாலமாக உடலிலுள்ள நோய்கள் தைரொக்ஸின் உயர வளர்ச்சி ஹோர்மோன் போன்றவற்றின் குறைபாடும் காரணமாக இருக்கலாம் எனவே உயர வளர்ச்சி குறைவுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு சில வகையான குருதிப்பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும். இதேபோல Xray பரிசோதனை மூலம் எலும்பு வயதை (Bone age) அறிந்து கொள்வது அவசியமாகும்.
இவ்வாறு உயரக்குறைபாடு இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து கொண்டால் அதற்கான சிகிச்சையை வழங்குவதன் மூலம் குறைபாடு உள்ள சிறுவர்கள் சாதாரண உயரத்தை அடையக் கூடியதாக இருக்கும் உயர வளர்ச்சி ஹோர்மோன் (Growth Hormone) குறைபாடு இருப்பதாக உறுதிப் படுத்தப்பட்டால் அதனை நிவர்த்தி செய்யும் விதத்தில் உயர வளர்ச்சி ஹோர்மோனை வழங்குவதன் மூலம் குறைபாடுள்ள சிறுவர்கள் எதிர்காலத்தில் சாதாரணமான உயரத்தை அடையக் கூடியதாக இருக்கும். இவ்வாறான குறைபாட்டை எவ்வளவு சிறுவயதில் இனங்காணுகின்றோமோ அதற்கேற்ப தரமான சிகிச்சையை வழங்கக்கூடியதாக இருக்கும்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களிலேயே முதற்தடவையாக உயர வளர்ச்சி ஹோர்மோன் (Growth Hormone) சிகிச்சை வசதியானது யாழ். போதனா வைத்திய சாலையில் மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமது மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.
கேள்வி : எனது வயது 65 ஆகும். எனக்கு 10 வருடங்களுக்குமேலாக நீரிழிவுநோய் உள்ளது. எனது கால்களில் விறைப்புத்தன்மை இருப்பதோடு எரிவது போன்ற உணர்வும் இருக்கின்றது. இது பற்றி ஆலோசனை வழங்கவும்?
பதில் : நீரிழிவு நோயாளர்களுக்கு ஏற்படுகின்ற முக்கியமான தொருநீண்டகாலப்பிரச்சினை Complication நரம்புத் தொகுதியில் ஏற்படுகின்ற பாதிப்புக்களாகும் பாதங்களில் விறைப்பு ஏற்படுதல், ஊசிகுத்துவதுபோன்ற அல்லது எரிவதுபோன்ற உணர்வு ஏற்படுதல் மற்றும் கால்களிலுள்ள தசையினைவு குறைவடைதல் என்பன இதற்கு உதாரணங்களாகும்.
நீண்டகாலமாக நீரிழிவுநோய் இருக்கும் போது குறிப்பாக கட்டுப்பாடற்ற விதத்தில் இருக்கும்போது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோயினைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதைக் குறைத்துக் கொள்ளமுடியும். இவ்வாறு கால்களில் விறைப்புத் தன்மை அல்லது எரியும் உணர்வு ஏற்படுவதைக்குறைப்பதற்கு பலவகையான மருந்துகள் கிடைக்கப் பெறுகின்றன.
உங்களது பாதிப்புக்கேற்ற விதத்தில் வைத்திய ஆலோசனைப்படி மருந்தினைப் பெறுவதன்மூலம் இப்பிரச்சினையிலிருந்து ஓரளவுக்கு விடுபடக் கூடியதாக இருக்கும். பாதங்களில் இவ்வாறானவிறைப்புத்தன்மை உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருத்தல் அவசியமாகும். இவர்கள் பாதணியின்றி வெளியில் நடக்கும் போது பாதங்களில் காயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகும்.
எனவே பாதங்களை முற்றாக மூடக்கூடிய வகையிலான பாதணிகளை உபயோகப்படுத்துவதன் மூலம் தேவையற்ற விதத்தில் ஏற்படுகின்ற காயங்கள் மற்றும் புண்களைத் தவிர்த்துக் கொள்ளமுடியும். நீரிழிவுநோயாளர்களுக்கு இவ்வாறு கால்களில் காயங்கள் ஏற்பட்டால் அவை குணமடையக் காலம் எடுக்க நேரிடுகிறது. சிலவேளைகளில் கிருமித்தொற்றுக்கு ஆளாகி விரல்கள் மற்றும் பாதப்பகுதி பழுதடைய(அழுக) நேரிட்டுவிரல்களை அல்லது காலினை இழக்க வேண்டியேற்படலாம். இன்று உலகளாவியரீதியில் அவயவ இழப்புக்கு மிகமுக்கிய காரணமாக அமைவது நீரிழிவேயாகும். எனவே நீரிழிவுநோயாளர்கள் தமது முகத்தை எவ்வாறு கவனமாக பராமரிக்கிறார்களே அதேபோல அவர்களது பாதங்களையும்கவனமாகப் பராமரிப்பது இன்றியமையாததாகும் .மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.
கேள்வி: எனது வயது 56 ஆகும். நான் மெற்போமின் (Metformin) 500 மில்லி கிராமம் மருந்தை கடந்த 5 வருடங்களாக நாளொன்றுக்கு 3 தட வைகள் பயன்படுத்திவருகிறேன். அண்மையில் மேற்கொள்ளப்படகுருதிப் பரிசோதனைகளின் படி எனது நீரிழிவுநோயானது கட்டுப்பாடில் இருப்பதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். எனது உறவினர்கள் சிலர் மெற்போமின்மருந்தைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுமெனக்கூறு கின்றனர். இது பற்றி விளக்கிக் கூறவும்.
பதில் : இது மிகவும் அவசியமானதொரு வினாவாகும். எமது மக்களிடையே நீரிழிவு நோய் தொடர்பாகவுள்ள பிழையான எண்ணக் கருக்களில் இது பிரதானமானதாகும். உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதற்தர மருந்து மெற்போமின் ஆகும். இந்த மருந்தானது நீரிழிவு நோயைச்சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதோடு அதனால் ஏற்படுகின்ற நீண்டகாலப் பிரச்சினைகளையும் குறைக்கிறது.
இம்மருந்தானது நீரிழிவு நோய்கட்டுப்பாடின்றிப்போகும்போது ஏற்படுகின்ற சிறுநீரகப் பாதிப்பை உண்மையில் குறைக்கின்றது. நீரிழிவு நோயாளியொருவருக்கு குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை குருதிப் பரிசோதனை மேற்கொண்டு சிறுநீரகப் பாதிப்பு உள்ளதா இல்லையா எனக் கண்டறியப்படுவது வழமையாகும். இவ்வாறு சிறுநீரகப் பாதிப்பானது குறிப்பிட்ட அளவுக்கு மேலிருக்கும்போதுமாத்திரமே மருத்துவரானவர் மெற்போமின் மருந்தைக் குறைக்கவோ, நிறுத்தவோ வேண்டியேற்படுகிறது. எனவே மெற்போமின் பற்றிய தப்பபிப்பிராயத்தை கைவிடுவது மிகவும் அவசியமானதாகும்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.
கேள்வி: எனது மகனின் வயது 6 ஆகும். அவரது உடல் நிறையானது கூடுதலாக இருப்பதோடு கழுத்துப்பகுதியிலும் கறுப்புநிறமான படை போன்று இருக்கிறது எனக்கும் கணவருக்கும் நீரிழிவு நோய் இருக்கிறது எனது மகனின் நிலை தொடர்பாக ஆலோசனை வழங்கவும்?
பதில்: கழுத்துப் பகுதியில் கறுப்பு நிறமான படையானது காணப்படுவதை Acanthosis nigricans என்று கூறுவார்கள். இது உடலில் இன்சுலினுக்கு எதிர்ப்பு நிலை (nsulin resistance) ஏற்படுவதன் அறிகுறியாகும் தவறான உணவு மற்றும் அப்பியாசமற்ற வாழ்க்கைமுறை என்பவற்றால் உடற்பருமன் அதிகரித்துச் செல்லும்போது இவ்வாறான நிலமை ஏற்படுகிறது. இவ்வாறானவர்களுக்கு நீரிழிவுநோய் மற்றும்மெட்டாபோலிக்சின்ட்ரோம் (Metabolic Syndrome) எனப்படுகின்ற நோய்நிலமையும் ஏற்பட நேரிடுகிறது. பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்கும்போது அவர்களின் குழந்தைக்கு அந்தநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். எனவே, உங்கள் மகனானவர் இன்று முதல் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பவற்றை மேற் கொண்டு உடற்பருமனைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதைவிடவைத்திய ஆலோசனையைப்பெற்று மேலதிக பரிசோதனைகளை(குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவு குருதி அமுக்கம் கொழுப்பின் அளவு ஹோர்மோன்கள்) மேற்கொள்வதும் அவசியமானதாகும். மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.
கேள்வி: எனது வயது 20. எனது கழுத்துப் பகுதி சில மாதங்களாக வீங்கியிருக்கிறது. எனது உடல் நிறை அதிகரிப்பதோடு மாதவிடாயும் அதிகமாக இருக்கிறது. இது பற்றி ஆலோசனை தரவும்.
பதில்: உங்களுக்கு தைரொயிட் சுரப்பியில் பிரச்சினையிருப்பதற்கான சாத்தியக் கூறு அதிகமாகும். தைரொயிட்சுரப்பியின் சுரப்பு குறைவாக இருக்கும்போது நீங்கள் குறிப்பிட்டது போன்ற குணங்குறிகள் ஏற்பட நேரிடுகின்றது. தைரொயிட்சுரப்பு குறைவான நிலையின்(HYPOTHYROIDISM) போது உடற் பருமன் அதிகரித்துச் செல்லுதல், சோம்பல், நித்திரைத் தூக்கம், மலச் சிக்கல், அதிக குளிரைத்தாங்கமுடியாதநிலை மற்றும் மாதவிடாயின்போது அதிக குருதி வெளியேறுதல் போன்றன ஏற்படுகின்றன. நீங்கள் உடனடியாக வைத்தியரொருவரை சந்திப்பது அவசியமாகும். உங்களுக்கு குருதியிலுள்ள தைரொயிட்ஹோர்மோன் அளவைப்பரிசோதித்துப் பார்ப்பது அவசியமாகும். உங்களின் தைரொயிட் ஹோர்மோனின் அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தைரொக்ஸின் மாத்திரையை வைத்திய ஆலோசனைப்படி உள்ளெடுக்க வேண்டியிருக்கும். தைரொக்ஸின்மாத்திரையை வெறுவயிற்றில் காலை நேரத்தில் உள்ளெடுத்தல் அவசியமாகும். இதன்பின்னர் 30 தொடக்கம் 40 நிமிடங்களுக்கு தேநீர் மற்றும் உணவு போன்றவற்றை உள்ளெடுக்கக்கூடாது. அதேபோல சில மருந்து வகைகளையும் (உ+ம் இரும்புச்சத்துகுளிசை கல்சியம் போன்றன) தைரொக்ஸினுடன் சேர்த்து உள்ளெடுக்கக் கூடாது. எனவே நீங்கள் வைத்தியரொருவரை நாடித்தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.
கேள்வி: எனது வயது 58 ஆகும். சில வருடங்களாக எலும்பு நோ இருந்துவருகின்றது. எனது முள்ளந்தண்டு எலும்பு தேய்ந்திருப்பதாக (X-ray இல்) குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். இதற்கு என்ன செய்யமுடியம் என்பது பற்றி விளக்கிக் கூறுங்கள்?
பதில்: உங்களைப் போன்ற பெண்களுக்கு மாதவிடாய் நின்றதன் பின்னர் இவ்வாறான எலும்புதேயும் நோய் ஒஸ்ரியோ பொறோஸிஸ் ஏற்படும் சாத்தியம் இருக்கின்றது. இதற்கு பலகாரணங்கள் இருந்த போதிலும் மாதவிடாய் நின்ற பின்னர் உடலில் ஏற்படுகின்ற ஹோர்மோன் மாற்றங்களே பிரதான காரணமாகும். இவ்வாறு எலும்பு தேய்வடையும்போது எலும்புகள் உடைவதற்கான அல்லது முறிவதற்கான சாத்தியக்கூறானது அதிகரித்து செல்கின்றது. உங்களுக்கு எலும்பு நோவிருப்பதாகவும் கூறியிருந்தீர்கள். இதற்குப் பிரதான காரணமாக அமைவது விற்றமின் D குறைபாடாகும். எமது நாட்டில்போதியளவு சூரியஒளி கிடைக்கின்ற போதும் அது உடலில் அகத்துறிஞ்சப்படும் அளவானது குறைவாக இருக்கின்றது. இதற்கு எமது தோலின்தன்மை மற்றும் நிறம் (Pigmentation) காரணமாகும். உங்களுக்கு எலும்பு தேயும் பிரச்சினை (Osteoporosis) ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவதற்குச் சில வகையான குருதிப்பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குருதிப் பரிசோதனை மூலம் விற்றமின் D அளவைப் பரிசோதிப் பதும் அவசியமாகவிருக்கும்.
உங்களுடைய குருதிப்பரிசோதனை முடிவுகளுக்கேற்ப சிகிச்சை முறைகளை வழங்கக்கூடியதாக இருக்கும். பொதுவாக கல்சியம் அதிகமுள்ள பாலுணவுகளை உள்ளெடுப்பதால் எலும்பானது உறுதியடைகின்றது. குருதிப் பரிசோதனை (கல்சியம் விற்றமின் D) முடிவுகளுக்கேற்ப தேவையான அளவு கல்சியம் மற்றும் விற்றமின் D மருந்துகளை வைத்திய ஆலோசனைப்படி உள்ளெடுக்க வேண்டியது அவசியமாகும். விற்றமின் Dயின் அளவு மிகவும் குறைவாக இருக்கும்போது Mega Dose எனப்படுகின்ற அதிக செறிவான விற்றமின் D மருந்தை வைத்தியரின் பரிந்துரையின்படி எடுக்க வேண்டியிருக்கும். அதேபோல எலும்பு முறிவைத் தவிர்க்கும் விதத்தில் விழுவதைத் தவிர்த்து நடத்தலும் அவசியமாகும். எலும்பு தேயும் நோயை (Osteoporosis) கண்டறிவதற்கான மிகச் சிறந்த பரிசோதனையாக அமைவது (DEXA Scan) ஆகும். இந்தப் பரிசோதனை மூலம் துல்லியமாக எலும்பு தேய்ந்திருப்பதை கணித்துக் கொள்ள முடியும். இந்த (DEXASca) பரிசோதனையை இன்று யாழ்போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. வடக்கு-கிழக்கு மாகாணங்களிலேயே முதன்முறையாக இந்தப் பரிசோதனை வசதி இங்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. இவ் வசதியுள்ள மூன்றாவது அரச வைத்தியசாலை யாழ் போதனா வைத்தியசாலையாகும். இது எமதுமக்களுக்கு கிடைத்த ஒருவரப் பிரசாதமாகும். எலும்பு தேய்ந்திருக்கும் நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொண்டு தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதன்மூலம் எலும்பு உடைதல் மற்றும் முறிவடைதலைத் தவிர்த்துக் கொள்ள முடியும். மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.
கேள்வி: 25 வயதான எனது மகளின் உடல்நிறையானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. தற்போதைய நிறை 90 கிலோ கிராம் ஆகும். இவர் இன்னமும் 6 மாதகாலத்தில் திருமணம் செய்யவிருக்கின்றார். அவரது மாத சுகவீனமும் ஒழுங்கற்று இருக்கிறது. குடும்ப வைத்தியரின் ஆலோசனைப்படி சில குருதிப்பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம்.(FBS 120 Mg/dl HbA1C 6. வீதம்) ஆகும். இவரது நோய் பற்றிய ஆலோசனைகளை வழங்கவும்?
பதில் : உங்களுடைய மகளின் உடல் நிறையானது மிகவும் அதிகமாக இருக்கின்றது. ஒருவரின் உயரத்துக்கேற்ப உடல்நிறை இருப்பது மிகவும் அவசியுமாகும். இதனை உடற் திணிவுச் சுட்டெண் (Body Mass Index – BMI) மூலம் கணித்துக் கொள்ளலாம்.
சாதாரணமாக ஒருவரின் (BM) ஆனது 185-23 இனுள் இருத் தல் அவசியமாகும் ஒருவரின் உடற்பருமன் அதிகரித்துச்செல்லும்போது பலவகையான பிரச்சினைகளும் நோய்களும் ஏற்படுகின்றன. உங்கள் மகளைப் போன்ற இளவயதுப் பெண்களின் உடல்நிறை அதிகரிக்கும் போது பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்டதைப்போன்றுமாதவிடாய் ஒழுங்கீனம் ஏற்படுவது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். சூலகங்களில் (OVaries) சிறு கட்டிகள் ஏற்படுகின்ற (Poly Cystic Ovarian Syndrome) நோய் காணப்படும் பெண்களில் இவ்வாறு உடற்பருமன் அதிகரித்து மாதவிடாய் ஒழுங்கீனம் ஏற்படுகின்றது. இவர்களின் முகங்களில் பருக்கள் ஏற்படுவதோடு தேவையற்ற விதத்தில் உரோம வளர்ச்சியும் ஏற்படலாம். தவறான உணவுப் பழக்க வழக்கங்களும் அப்பியாசமற்ற வாழ்க்கை முறையும் (Sedentary life Style) இவ்வாறான உடற்பருமன் அதிகரிப்புக்கு முக்கியமான காரணங்களாகும்.
இதேபோல தைரொயிட் சுரப்பு குறைபாடு போன்ற சில ஹோர் மோன் பிரச்சினைகளின் போதும் உடற்பருமனானது அதிகரிக்க நேரிடுகின்றது. உங்களுடைய மகள் போன்ற திருமணம் செய்யவிருக்கின்ற இளம் பெண்கள் உடற்பருமனாக இருக்கும் போது பல வகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடற்பருமன் அதிகரித்து மாதவிடாய் ஒழுங்கீனமற்றுச் செல்லும் போது கர்ப்பம் தரிப்பதற்கான சாத்தியக் கூறுகுறைவடைகின்றது.
உங்களுடைய மகளின் குருதிப்பரிசோதனை முடிவுகளின்படி அவர்நீரிழிவுக்கு முந்தியநிலையில்(Pre Diabetessage) இருக்கின்றார். இவருடைய உடல்நிறையைக் குறைக்காதுவிடுமிடத்து இன்னமும் சில வருடங்களில் முற்று முழுதான நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு மிக அதிகமாகும்.
இவருக்கு குருதியில் கொலஸ்திரோல் அளவு அதிகரித்தல் மற்றும் உயர்குருதி அமுக்கம் (High blood pressure) என்பனவும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். எனவே இவர் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும்.
1. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தல் இன்றியமை யாததாகும் இனிப்பான சீனி சேர்த்த உணவுகளைத்தவிர்த்தல் வேண்டும். அதேபோல மாச்சத்து அதிகமுள்ள உணவுகளையும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளையும் குறைவாக உள்ளெடுத்தல் வேண்டும். இவரது உடற்பருமனைக்குறைப்பதற்கு ஏற்ற விதத்தில்நாளொன்றுக்கு எடுக்கவேண்டிய கலோரிப்பெறுமானத்தைக்கணித்துஉணவை உள்ளெடுக்கவேண்டும். இதனை வைத்திய ஆலோசனைப்படி அறிந்து கொள்ள முடியும்.
2.ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது 45 நிமிடங்களாவது வைத்தியரின் ஆலோசனைப்படி உடல் வியர்க்கும் வரையில் உடற்பயிற்சிசெய்வது அவசியமாகும் வேகமாக ஓடுதல், சைக்கிளோட்டுதல் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் அப்பியாசம் செய்தல் என்பன இதற்கு உதாரணங்களாகும்.
3.இவரது நீரிழிவுக்கு முந்திய நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு வைத்தியரின் பரிந்துரையின் படி மெற்போமின் மருந்தைப் பயன்படுத்தவேண்டும். இதனால் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு கட்டுப்படுவதோடு பசியின் அளவும் குறைவடைந்து உடற்பருமன் குறைவடைகின்றது.
4.இவரது உடல் நிலை பற்றிய முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமாகும்.
5.இவரது மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதற்கும் உடற்பருமனைக் குறைப்பது அவசியமாகும் வைத்திய ஆலோசனைப்படி குருதி ஹோர்மோன் மற்றும் ஸ்கான் (கர்ப்பப்பை, சூலகங்கள்) பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப் பிரச்சினைக்குத் தேவையான மருந்துகளையும் நிபுணத்துவமான வைத்தியரின் ஆலோசனைப்படி பெற்றுக் கொள்ள முடியும்.
6. இறுதியாக உங்கள் மகளானவர் இன்று முதல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதற்கு உறுதி பூணுதல் வேண்டும். அவ்வாறு வாழ்ந்து உடற் பருமனைக்குறைத்துக்கொள்ளும்போது அவருக்கு இருக்கின்றபலவகையான பிரச்சினைகளில் இருந்து விடுபடக் கூடியதாக இருக்கும்.
இன்னமும் 6மாத காலத்தில்திருமணம்செய்யவிருப்பதால்துரிதமாகவைத்திய ஆலோசனையைக் பெற்று உடல் நிறையைக் குறைத்து குருதியிலுள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்திமாதவிடாய்சக்கரத்தை ஒழுங்காக்கிக்கொள்வது இன்றியமையாததாகும். இதன் மூலம் பல நீண்ட காலப் பிரச்சினைகளைக் குறிப்பாக கர்ப்பம் தரித்தல் தாமதமாகும் நிலைமையை (Subfertility) அல்லது கர்ப்பம் தரிக்க முடியாத நிலைமையைத் (Infertility) தவிர்த்துக் கொள்ள முடியும். மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர், யாழ்போதனா வைத்தியசாலை.
கேள்வி எனது வயது 22 ஆகும். எனது உடற்பருமனானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. எனக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மாத விடாய் ஏற்படுகின்றது. இது தொடர்பாக ஆலோசனை வழங்கவும்.
பதில் உங்களைப் போன்ற இளம் பெண்களுக்கு உடற்பருமன் அதிகரித்தலானது இன்றைய கால கட்டத்தில் ஒருபெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பிழையான உணவுப் பழக்க வழக்கங்களும் தேக அப்பியாசமற்ற வாழ்க்கை முறையுமே இதற்குக் காரணங்களாகும். உடற்பருமனானது அதிகரித்து மாதவிடாய் ஒழுங்கற்ற நிலை ஏற்படுவதற்குப்பிரதானமான காரணமாக அமைவது சூலகத்தில் சிறுகட்டிகள் ஏற்படுகின்ற நிலை (Poly cystic ovarian syndro me) என அழைக்கப்படுகின்றது. இந்நோய் உள்ள பெண்களுக்கு முகம் மற்றும் உடல் பகுதிகளில் ஆண்களைப் போன்று அதிக உரோம வளர்ச்சியும் ஏற்படலாம். இதேபோல நீரிழிவு ஏற்படுகின்ற சாத்தியக் கூறு மற்றும் அதிகளவு கொலஸ்திரோல் உடலில் சேருதல் என்பனவும் ஏற்பட வாய்ப்புண்டு. இதேபோன்று மணம் முடித்த பெண் களில் கர்ப்பம் தரித்தலும் தாமதமடைய நேரிடலாம்
உடற்பருமன் அதிகரிக்கும்போது மேலே குறிப்பிட்ட பலவிதமான தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரிக்கநேரிடுகிறது. உங்களுக்கு பல விதமான இரத்த தைரொயிட் போன்றஹோர்மோன் பரிசோதனைகள், வயிற்று ஸ்கான் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே, இன்று முதல் ஆரோக்கிய உணவுகளை உள்ளெடுத்து மாச்சத்து சீனி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து போதியளவு தேக அப்பியாசத்தை மேற்கொண்டு உங்கள் உடற்பருமனைக் குறைத்தல் அவசியமாகும். நீங்கள் காலம் தாழ்த்தாது வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகும். உங்களின் பரிசோதனை முடிவுகளின்படி வைத்தியரானவர் தேவைப்பட்ட சிகிச்சை முறைகளை ஆரம்பிப்பார். இது பற்றிய மேலதிக விவரங்களை யாழ்.போதனா வைத்தியசாலை அகஞ்சுரக்கும் தொகுதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். மருத்துவர் எம்.அரவிந்தன் -நீரிழிவு அகம்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர் (ஹோர்மோன்) யாழ்.போதனா வைத்தியசாலை,
எனது வயது 45 ஆகும். எனக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு 4 வருடங்கள் ஆகின்றன. நான் மேற்போமின், கிளிக்கிளசயிட் ஆகிய மருந்துகளைப் பாவித்துவருகின்றேன். எனது கொலஸ்திரோல் அளவு அதிகமாக இருப்பதாக வைத்தியர் கூறுகிறார். இதனைக்கட்டுப்படுத்த குளிசையைப் பயன்படுத்துவது அவசியமானதா?
நீரிழிவுநோயானது உடலின் பல அங்கங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஒருநோயாகும். நீரிழிவு நோயாளருக்கு இருதயம்மற்றும் குருதிக்குழாய்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்ற சாத்தி பக்கூறு மிக அதிகமாகும் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி நாற்பது வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நீரிழிவு நோயாளியும் STAIN எனப்படுகின்ற கொரலஸ்திரோலை கட்டுப்படுத்தும் மருந்தை உள்ளெடுத்தல் அவசிய கொலஸ்திரோலின் அளவு சாதாரணமாக இருந்தாலும் அவர் சிறிய அளவில் STAIN வகை மருந்தை உள்ளெடுப்பது அவசியமாகும்.
உங்களுடைய கொலஸ்திரேலின் வகை அளவுக் கேற்ப வைத்தியரானவர் தேவையான மருந்தின் அளவை(dose) தீர்மானிப்பார். உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்றனவும் கொலஸ்தரோலைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் அவசியமானவையாகும்.
இதுபற்றிய மேலதிக விவரங்களை உங்கள் குடும் மருத்துவரிடமோ மருத்துவநிபுணரிடமோ நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
–மருத்துவர்.M.அரவிந்தன். நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல், சிறப்பு வைத்திய நிபுணர். யாழ் போதனா வைத்தியசாலை
எனது வயது 25 ஆகும். நான் இன்னமும் திருமணம் செய்யவில்லை. எனது மார்பகக்காம்புகளிலிருந்து சில மாதகாலமாக பால் போன்ற திரவம் வெளியேறுகின்றது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? இது தொடர்பான ஆலோசனை வழங்கவும்.
நீங்கள் குறிப்பிட்டதைப் போன்ற பிரச்சினை சில திருமணம் செய்யாத பெண்களிலும் காணப்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்களில் (Prolacti) என்ற ஹோர்மோன்சுரப்பு அதிகரித்து மகப்பேற்றின்பின்னர் அவர்களின்மார்பகங்களிலிருந்து பால் சுரப்பதானது. அவர்களின் குழந்தையின்போசாக்கிற்கு மிகவும் இன்றியமையாததாகும். எனினும் திருமணம் செய்யாத பெண்களுக்கும் அவர்களின் முலைக்காம்புகளிலிருந்து சிலவேளைகளில் பால் போன்ற அல்லது வேறு நிறமான திரவம் வெளியேறலாம்.
இவ்வாறான பிரச்சினை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பல விதமான குளிசைகள் இதற்குக் காரணமாக அமைகின்றன. வயிற்றுப்புண் (அல்ஸர்) நோய்க்குப் பயன்படுத்துகின்ற (Omeprazole) போன்ற குளிசைகள் மற்றும் மனநோய் சிகிச்சைக்கு வழங்கப்படும் சில மருந்துகள் போன்றன இதற்கு உதாரணமாகும். கர்ப்பம் தரித்தல், பாலியல் உறவு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிலும் இது ஏற்படலாம்.
பலவகையான ஹோர்மோன் பிரச்சினைகளும் இதற்குக் காரணமாக அமைகின்றன. தைரொயிட்ஹோர்மோன் குறைவாககரத்தல், மாதவிடாய் பிரச்சினை மற்றும் உடற்பருமனாதலுடன் தொடர்பான சூலகத்தில் சிறு கட்டிகள் ஏற்படுகின்ற நோய் (Poly cystic varian Syndrome) போன்றவை இதற்கு உதாரணங்களாகும். இதேபோல மார்பகத்திலிருந்துபால் சுரப்பதற்கு காரணமான Prolactin ஹோர்மோன் சுரப்பு அதிகமாவதற்கு கபச்சுரப்பியில் இந்த ஹோர்மோன் அதிகம் சுரப்பதும் காரணமாக அமையலாம். கபச்சுரப்பியில் ஏற்படுகின்ற கட்டிகள் (Prolactinoma) இதற்கு உதாரணமாகும். சில வேளைகளில் இக் கட்டிகள் பெரிதாக இருக்கும்போது தலையிடி, பார்வைப் பிரச்சினைகள் போன்றவையும் ஏற்படலாம். இதேபோல வேறு பல வகையான நோய்களும் இப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம்.
எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும் வைத்தியரானவர் தேவைப்படுகின்ற வினாக்களை வினவுவதன் மூலமும் உங்களைப் பரிசோதிப்பதன் மூலமும் இரத்த மற்றும் ஹோர்மோன் பரிசோதனைகள் மூலமும் இதற்கான காரணத்தைக் கண்டறிந்து கொள்ளமுடியும்.
இதன் பின்னர் தேவைக்கேற்ப மேலதிக பரிசோதனைகளையும் மேற்கொண்டு சிகிச்சை வழங்க முடியும் இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு யாழ்போதனா வைத்தியசாலையின் அகஞ்சுரக்கும் தொகுதி ஹோர்மோன் சிகிச்சை நிலையத்தை தொடர்பு கொள்ளமுடியும்.
–மருத்துவர்.M.அரவிந்தன். நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல், சிறப்பு வைத்திய நிபுணர். யாழ் போதனா வைத்தியசாலை
எனது வயது 32ஆகும். ஆண்குறி விறைப்படைவது குறைவாக இருப்பதனால் எனது திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுகின்றது. இது தொடர்பாக ஆலோசனை வழங்கவும்?
ஆண்குறி விறைப்படையாமல் இருப்பது அல்லது குறைவாக விறைப்படைதல் என்பது சில ஆண்களுக்கு இருக்கின்ற ஒரு பிரச்சினையாகும். இவ்வாறு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உளவியல் சார்ந்த காரணங்கள். நரம்புகள் தொடர்பான பிரச்சினைகள், குருதிக் குழாய்களில் ஏற்படுகின்ற பிரச்சினைககள். நீரிழிவு போன்ற நோய்கள் மற்றும் ஆண்குறியில் உள்ள பிரச்சினைகள் போன்றன காரணமாக இருக்கலாம். இதேபோல பலவிதமான ஹோர்மோன் பிரச்சினைகளும் இதற்குக் காரணமாகவிருக்கலாம். இவ்வாறான பிரச்சினையுள்ளவர்கள் வைத்திய ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும். தேவையான தரவுகளைப் பெற்றுக் கொள்வதன் மூலமும் உடற் பரிசோதனையை மேற்கொள்வதன் மூலமும் இதற்கான காரணத்தை மருத்துவரால் ஊகித்துக் கொள்ள முடியும்.
ஒருவருக்கு திடீரெனவோ இடைக்கிடையோ இந்தப் பிரச்சினை காணப்படுமிடத்து, அது உளவியல் சார்ந்த காரணத்தைக் கொண்டிருக்கும் சாத்தியம் அதிகமாகும்.சிறிது சிறிதாக ஏற்பட்டு இந்தப் பிரச்சினையானது நிலைத்து நிற்கும் போது அது உடலியல் சார்ந்த காரன மாக (organic cause) இருக்கும் சாத்தியம் அதிகமாகும். சிலருக்கு மனப்பிரச்சினைகள், வேலை மற்றும் பிற காரணங்களால் ஏற்படுகின்ற மன அழுத்தம் (Stress) இதற்குக் காரணமாக அமைகின்றது. அதேபோல பல விதமான மருந்துகளின் பக்க விளைவாகவும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம். மதுபானம், புகைத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையாளர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். நரம்பு. குருதிக் குழாய்கள் தொடர்பான நோய்களும் இதற்குக் காரணமாக அமையலாம்.
நீரிழிவு, தைரொயிட்குறைபாடு. சனணித் தொகுதிக் குறைபாடு (Hypogonadism) போன்ற ஹோர்மோன் பிரச்சினைகளும் இதற்குக் காரணங்களாக இருக்கலாம். எனவே இந்தப் பிரச்சினை இருப்பவர்கள் பல விதமான இரத்த ஹோர்மோன் பரிசோதனைகளுக்கும் தேவையேற்படின் மேலதிக பரிசோதனைகளுக்கும் உட்பட வேண்டியிருக்கும்.
இந்தப் பிரச்சினையிலிருந்து தீர்வு பெறுவதற்குப் பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. இந்தச் சிகிச்சை
முறைகள் பிரச்சினைக்கான காரணத்துக்கேற்பவேறுபட நேரிடும். உளவியல், மன அழுத்தப் பிரச்சினையுள்ளோருக்கு உளவளத் துணை (Councelling) போன்றவை தேவைப்படும்.
உடலியல்சார்ந்த நோய்கள் காரணமாக இருக்கும்போது அவற்றுக்குத் தேவையான சிகிச்சையை வழங்குவது அவசியமாகும். நீரிழிவு போன்ற நோய்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும் போதும் இந்தப் பிரச்சினை இருக்கும்.
உடல், உள நோய்களுக்கு உள்ளெடுக்கும் சில மருந்துகள் குளிசைகளும் இதற்குக் காரணமாகவிருக்கலாம். எனவே மருத்துவரானவர் தேவைக்கேற்ப பக்க விளைவு குறைந்த மருந்தை மாற்றி வழங்க முடியும். மதுபானம். புகைத்தல் மற்றும்போதைப்பொருள் பாவனையுள்ளவர் கள் அதனைக் கைவிடுதல் மிக அவசியமாகும்.
தைரொயிட் சனணித் தொகுதிஹோர்மோன் தொடர்பான பிரச்சினையுள்ளோருக்கு அதற்கேற்ற விதத்தில் சிகிச்சை வழங்குவது அவசியமாகும்.
ஆண்குறி விறைப்படைவதை துண்டுவதற்கு பல வகையான குளிசைகள் உள்ளன. இதனை மருத்துவரின் சிபாரிசின் பேரிலேயே பயன்படுத்தவேண்டும். ஏனெனில் இந்த மருந்துகளினால் சில பக்க விளைவுகள் ஏற்படக் கூடும்.
இதேபோல சில மருந்துகளைப் பாவிப்போர் (உதாரணம் இருதய நோய்க்கான ISMN போன்ற நைத்திரேற் குளி கைகள்) இந்த மருந்துகளைப் பயன்படுத்துக் கூடாது. இது போன்று பல விதமான ஊசிமருந்துகளும் (injections) செயற்கை உபகரணங்களும் (vacuum.device) உள்ளன தேவையேற்படின் சத்திர சிகிச்சைக்கும் உட்படவேண்டியிருக்கும்.
எனவே இறுதியாக உங்களைப் போன்ற ஆண்குறி விறைப்படையாத தன்மை அல்லது குறைவாக விறைப் படையும் பிரச்சினை உள்ளவர்கள் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகும்.
இப்பிரச்சினைக்கு பல விதமான சிகிச்சை வழிமுறைகள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் பல வகையான போலியான விஞ்ஞான ஆர்வமான அணுகுமுறையற்ற சிகிச்சை வழங்குபவர்கள் பெருகியுள்ளனர். எனவே போலியான தகுதியற்ற சிகிச்சை முறைகளை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.
தகுதியான வைத்தியரொருவரின் ஆலோசனைப்படி இப் பிரச்சினைக்கான மூலகாரணத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வைக்காணலாம்.–மருத்துவர்.M.அரவிந்தன். நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல், சிறப்பு வைத்திய நிபுணர். யாழ் போதனா வைத்தியசாலை
எனது வயது 30 ஆகும். நான் திருமணம் செய்து 2 வருடங்களாகின்ற போதிலும் கர்ப்பம் தரிப்பது தாமதமாகி வருகின்றது. அண்மையில் மேற்கொண்ட தைரொயிட்ஹோர்மோன் பரிசோதனையின் படி எனது தைரொயிட் ஹோர்மோன் சுரப்பானது குறைவாகவுள்ளதாக குடும்ப வைத்தியர் கூறியிருந்தார். இது பற்றி விளக்கிக் கூறவும்.
கர்ப்பம் தரித்தல் தாமதமாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெண்ணெருவரின் தைரொயிட் ஹோர்மோன் சுரப்பானது குறைவாக இருக்கும் போது கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட நேரிடுகின்றது. தைரொயிட்சுரப்பானது குறைவாக இருக்கும் போது உடற்பருமன் அதிகரித்தல், சோம்பல், நித்திரைத்தூக்கம், மலச்சிக்கல், குளிரைத் தாங்கமுடியாமை மற்றும் மாதவிடாயின் போது அதிகளவு குருதி வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறான குணங்குறிகள் இருப்பவர் மற்றும் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினைகளுடையவர்கள் தங்களது தைரொயிட் ஹோர்மோன் சுரப்பை பரிசோதிப்பது மிகவும் அவசியமாகும். இரத்தப் பரிசோதனையின் மூலம் இலகுவாக இதனை அறிந்து கொள்ளமுடியும்.
இப்பரிசோதனையை மேற்கொள்வதற்கு உணவு அருந்தாமல் இருக்க வேண்டியது அவசியமற்றதாகும்.
தைரொயிட் சுரப்பானது குறைவாக இருப்பவர்கள் தைரொக்ஸின் மருந்தை உள்ளெடுப்பது மிகவும் அவசியமாகும். உங்களை போன்ற கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினைகள் உள்ள பெண்கள் தைரொக்ஸின் குளிசையை மருத்துவர் கூறிய அளவில் உள்ளெடுக்கும்போது கர்ப்பம் தரிக்கின்ற வாய்ப்பு அதிகரிக்கின்றது. கர்ப்பம் தரிக்க விரும்புகின்ற பெண்ணொருவரில் TSH எனப்படுகின்ற தைரொயிட் ஹோர்மோனின் அளவை சாதாரணமான ஒருவரை விடக் குறைந்த நிலையில் பேணுவது மிக அவசியமாகும். தைரொக்ஸின் குளிசையை ( மருத்துவர் பரிந்துரை செய்த அளவில்) காலை வேளையில் வெறும் வயிற்றில் உள்ளெடுத்தல் வேண்டும் அதன் பின்னர் 30 நிமிடங்களுக்கு தேநீர் போன்ற ஆகாரங்களையோ, உணவையோ உள்ளெடுக்கலாகாது இருத்தல் அவசியம்.
நீங்கள் கர்ப்பவதியாகுவதை உறுதிப்படுத்திய பின்னர் ( சிறுநீரில் HCG பரிசோதனை மூலம்) உடனடியாகவே தைரொக்ஸின் குளிசையின் அளவை அதிகரித்துக் கொளவது மிக அவசியம் ( உதாரணம் 25Mg அளவால் அதிகரிக்க வேண்டும். 50Mg தைரொக்ஸின் மாத்திரை எடுப்பவர் அதனை 75Mg ஆக அதிகரிக்க வேண்டும்) நீங்கள் முடிந்தளவு விரைவாக மருத்துவரை சந்திப்பது அவசியமாகும்.
கர்ப்பத்திலுள்ள சிசுவின் உடல் மற்றும் மூளைவளர்ச்சியில் முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியமான கால கட்டமாகும். இச்சிசுவின் வளர்ச்சியானது தாயின் தைரொக்ஸின் அளவிலேயே தங்கியிருக்கின்றது. எனவே குறிப்பிட்ட அளவில் கர்ப்பவதியொருவர் தைரொக்ஸினை உள்ளெடுக்காது விடத்து குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சியானது பாதிப்படைய நேரிடலாம்.
கர்ப்பகாலத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தைரொயிட் ஹேர்மோனின் அளவைப் பரிசோதித்து தைரொக்ஸின் குளிசையின் அளவைத் தேவையேற்படின் மாற்றுவது அவசியமாகும்.
கர்ப்பம் தரிக்க விரும்புகின்ற மற்றும் கர்ப்பிணியான பெண்கள் அவர்களுக்கு தைரொயிட் சுரப்புக் குறைபாடு இருக்குமிடத்து மேற்குறிப்பிட்ட விதத்தில் தங்கள்நோயின் மீது சிரத்தையாக இருத்தல் மிகவும் அவசியமாகும். இதன் மூலம் தங்களுக்கும் குறிப்பாக பிறக்கப் போகும் பிள்ளைக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும் – மருத்துவர்.M.அரவிந்தன். நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல், சிறப்பு வைத்திய நிபுணர். யாழ் போதனா வைத்தியசாலை
எனது மகளின் வயது 17 ஆகும். இவர் மிகவும்உடற்பருமனாக உள்ளார் இது சம்பந்தமாக ஆலோசனை வழங்கவும்.
ஒருவரின் உடல் நிறையானது அவரது உயரத்துக்கேற்ற வகையில் இருத்தல்அவசியமாகும். இதை உடற் திணிவுச் சுட்டென்ணைக் (Body mass Indes – B.M.I)கணிப்பிடவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மகளைப் பொறுத்தவரையில் (BMI) ஆனது 23 க்கு மேலாக இருக்கும் போது அதிகரித்த உடற்பருமன் (Over weight) என்றும் 27 க்கு மேலாக இருக்கும்போதுமிக அதிகரித்த உடற்பருமன் ( Obesity) என்றும்
அழைக்கப்படுகின்றது.
உடற்பருமன் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தவறான உணவு பழக்கவழக்கங்களும் தேக அப்பியாசமற்ற வாழ்க்கை முறையும் ( SedentaryLifestyle) இதற்குப் பிரதானமான காரணங்களாகும். மேலைத்தேய, துரித (FastFood) உணவுகளை உண்ணும் பழக்கம் அதிகரித்துச்செல்வதும் இதற்கு முக்கிய காரணமாககும்.
இதனைவிட சில அகஞ்சுரக்கும் தொகுதி சம்பந்தமான ( ஹோர்மோன்) பிரச்சினைகளும்உடற்பருமனாவதற்கு காரணமாக அமையலாம். தைரொயிட் சுரப்பு குறைவாக இருக்கும் நிலை ( Hypothyroidism) இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இந்த நோயாளிகள் சோம்பல் அதிக நித்திரை தூக்கம், மலச்சிக்கல் மற்றும்
பெண்களெனில் அதிகளவு மாதவிடாய் வெளியேற்றம் போன்றவற்றைக் கொண்டிருப்பார்கள். உடற்பருமனை இளம் பெண்களில் ஏற்படும் பிரமானமான ஹோர்மோன் பிரச்சினை முட்டை வெளியேறும் சூழகத்தில ஏற்படுகின்ற சிறுகட்டிகள் தொடர்பான நோயாகும். இதை Pcos ( Polycystic Ovarian Syndrome) என அழைப்பார்கள் இவர்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்று இருத்தல், முகம் மற்றும் வேறு பகுதிகளில் உரோம வளர்ச்சி அதிகரித்தல் போன்றவை இருக்கலாம்.
இவை போன்று வேறு ஹேர்மோன் பிரச்சினைகளும் உதாரணம் கோட்டிஸோல் ஹோர்மோன் அதிகளவு சுரத்தல் ( Ushing Syndrome) உடற்பருமனாவதற்கு அரிதான காரணமாக அமையலாம்.
எனவே உங்கள் மகளைப் போன்ற உடற்பருமனானவர்கள் வைத்திய ஆலோசனையைப் பெறுவது மிக அவசியமாகும். உடற்பருமனானவர்களுக்கு நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் (BP) மற்றும் கொலஸ்ரோல் அளவு அதிகரித்தல் போன்றன ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகும்.
தேவையான வினாக்களை வினவுதன் மூலம் உடற் பரிசோதனை மூலம் ( Historuy& Examination) மருத்துவர் ஒருவரினால் உடற்பருமனாவதற்கான காரணத்தை ஊகித்துக் கொள்ள முடியும். அதன் பின்னர் தேவையான குருதி மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டு காரணத்தைக் கண்டறிந்து கொள்ள
முடியும்.
உடற்பருமனாவதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் சிகிச்சையை வழங்குவதன் மூலம் அதனை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ள முடியும். உடற் பருமனைக் குறைத்துக் கொள்வதற்கான மிகவும் முக்கியமான சிகிச்சையானது ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து முடிந்த வரையில்
உடற்பயிற்சி செய்வதேயாகும். சில நோயாளர்களுக்கு தேவையேற்படின் வைத்தியரின் பரிந்துரையின் பேரில் உடற்நிறையைக் குறைப்பதற்கான குளிசைகள் வழங்கப்படுகின்றன. இதே போல மிகவும் உடற்பருமனானவர்களுக்கு இறுதித் தீர்வாக பல வகையான அறுவைச் சிகிச்சைகளும் ( Bariatric Surgery)
மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே உங்கள் மகளுக்கு அவருடைய உடற்பருமன் அதிகரிப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சைமுறைகளை ஆரம்பிப்பது மிகவும் அவசியமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ( Healthu Life Style) கடைப்பிடிப்பது இன்றியமையாததாகும். – மருத்துவர். M.அரவித்தன். நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல் சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ் போதனாவைத்தியசாலை.
எனது 8 வயது மகனின் உயரமானது அவரது வகுப்புமானவர்களுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. எனினும் அவரது உடல் நிறையானது வயதுக்கு ஏற்ற அளவில் போதுமானதாக இருப்பதாக குடும்ப வைத்தியர் அண்மையில் கூறியிருந்தார். இதற்கு எவ்வாறான சிகிச்சை முறைகள் உள்ளன என விளக்கிக் கூறவும்?
உங்கள் மகனைப்போன்று பல சிறுவர்கள் உயரம் குறைந்தநிலை(Shortsialu) பாதிப்புக்கு ஆளாகி இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. நீண்ட காலமாக சத்தான உணவை உட்கொள்ளாத விடத்து சிறுவர்களின் உயரமும், உடல்நிறையும் குறிப்பிட்ட அளவில் அதிகரிக்காது செல்கின்றது. இதனால் அவர்கள் உயரம் மற்றும் உடல்நிறை
குறைந்தவர்களாக் இருப்பார்கள். (hronic mal nutrition) உயரம் மாத்திரம் குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிறுநீரக நோய், இருதய வால்வில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலமாக உடலில் இருக்கின்ற நோய்கள் போன்றவற்றாலும் இந்தப்பிரச்சினை ஏற்பட்நேரிடலாம் பலவகையான ஹோர்மோன் குறைபாடுகளும் இதற்குக் காரணமாக அமையலாம்.
அரிதாக வளர்ச்சி ஓமோனின் (Growth hormmone) அளவு உடலில் குறைவாகச்சுரக்கப்படும்போது சிறுவர்கள் சாதாரணமாக வளரமுடியாமல் போகின்றது. எனவே உங்கள் மகனைப் போன்ற உயர வளர்ச்சி குன்றியவர்களுக்கு வளர்ச்சி ஹோர்மோனின் அளவை பரிசோதிப்பது மிக அவசியமாகும். ஏனெனில் வளர்ச்சி ஹோர்மோனின் அளவு குறைவாக இருக்கும் போது அதனை வழங்குவதன் மூலம் உயரங்குறைந்த சிறுவர்களின் உயரத்தை சாதாரண அளவுக்கு படிப்படியாக அதிகரிக்க முடியும். உயர வளர்ச்சி குறைவாக இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து
சிகிச்சை வழங்கும்போது குறிப்பிட்ட உயர இலக்கை அடைவது சாத்தியமாகின்றது.
எனவே உங்கள் மகனை மிக விரைவாகப் பரிசோதிப்பது அவசியமாகும். உங்களதும் உங்கள் கணவரினதும் உயரத்தை மதிப்பிடுவதன்மூலம் மகனின் உயர வளர்ச்சி தொடர்பாக அறிந்து கொள்ள முடியும். அவருக்கு தேவையான இரத்த ஹோர்மோன் பரிசோதனைகளையும் எலும்புவயதை அறிந்து கொள்ளும் (Boneage)Xray
பரிசோதனையையும் மேற்கொள்வது அவசியமாகும்.
உங்கள் மகனுடைய உடற் சோதனை Clinical examination) Xray மறறும் இதர பரிசோதனைகளின் முடிவுக்கேற்ப தேவையான சிகிச்சைமுறையை தன் மூலம் உயரம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வைக் கண்டு கொள்ள முடியும்.
மருத்துவர். M. அரவிந்தன். நீரிழிவு, அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு
வைத்திய நிபுணர். யாழ் போதனா வைத்தியசாலை
எனது வயது 20.நான் உடற்பருமனாக இருப்பதோடு வேலைகள் செய்ய முடியாது சோம்பலாகவும் உள்ளேன். எனக்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறையே மாதவிடாய் ஏற்படுகின்றது. எனது முகத்திலும் உரோம வளர்ச்சி அதிகமாக குறிப்பாக, உதட்டின் மேலாக உள்ளது. இதற்கு எவ்வாறான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளமுடியும்?
உங்களுடைய நோய் அறிகுறிகளைப் பார்க்கும்போது உங்களுக்கு Poly cystic ovarian syndrome (PCOS) எனப்படுகின்ற சூலகத்தில் சிறுகட்டிகள் போன்று ஏற்பட்டு உருவாகும் நோய் இருப்பதற்கான சாத்தியக்கூறு தென்படுகிறது. உடற்பருமன் அதிகரித்துள்ள பெண்களுக்கு ஏற்படுகின்ற பொதுவானதொரு பிரச்சினை இதுவாகும். இந்த நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் பெண் ஹோர் மோன்களில் குழப்பநிலை ஏற்படுவதோடு Testosterone எனப்படுகின்ற ஆண் ஹோர்மோனானது கூடுதலாகக் காணப்படுகின்றது. நீங்கள் குறிப்பிட்டதுபோன்று முகத்தில் ஆண்களைப் போன்று உரோம வளர்ச்சி காணப்படுவதும் இதனா லேயாகும். உங்களுக்குக் காணப்படுகின்ற நோயை உறுதிப்படுத்துவது மிக அவசியமான தாகும். சிலவேளைகளில் வேறு ஹோர்மோன் நோய்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். உங்களுக்கு தைரொயிட் சுரப்பிக் குறைபாடு இருக்கின்றதா என்றும் பரிசோதிப்பது அவசியமானதாகும். இதேபோல தேவையான ஹோர்மோன் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்வதும் அவசியமாகும். உங்களைப் போன்ற பிரச்சினையுள்ள பெண்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ் ரோல் அளவு அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகும். இந்த நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறாதுவிடின் எதிர் காலத்தில் குழந்தைப் பேறு அடைவதில் பிரச்சினைகள் ஏற்படவும் கூடும். எனவே நீங்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுத் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு (ஸ்கான் பரீட்சை உட்பட) சிகிச்சையை ஆரம்பிப்பதே மிகச் சிறந்த வழிமுறையாகும். உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் நிறையைக் குறைப்பது மிகமிக அவசியமாகும். இன்றைய நவீன மருத்துவத்தில் உங்களின் பிரச்சினைகளுக்குப்பலவகையான சிகிச்சைமுறைகள் இருப்பதால் எந்தவித தயக்கமுமின்றி வைத்திய ஆலோசனையை மிகவிரைவாகப் பெற்றுக் கொள்வதே சிறந்தது. – மருத்துவர் எம்.அரவிந்தன், நீரிழிவு, அகஞ்சுரக்கும் தொகுதியியல் சிறப்பு வைத்திய நிபுணர். யாழ்.போதனா வைத்தியசாலை
எனக்கு 10 வருடங்களாக நீரிழிவு உள்ளது. இப்பொழுது மூன்று மாதகாலமாக இரண்டு பாதங்களும் விறைப்புத் தன்மையைாக உள்ளன. ஏன் இப்படி உள்ளது இதற்கு என்ன செய்யலாம் ? – வ.இராமு, உரும்பிராய்
இந்த நிலைமை நீரிழிவால் ஏற்படும் நரம்புப் பாதிப்பின் அறிகுறியாகும். குருதியில் குளுக்கோசின் அளவுகட்டுப்பாடற்று அதி களவில் இருப்பதால் சிலவகையான வெல்லங்கள் உருவாக்கப்பட்டு அவை நரம்பு நார்களைச் சுற்றி இருக்கும் கலங்களில் படிகின்றன. இதனால் அந்தநரம்புகளின்கடத்தல்செயற்பாடுபாதிக்கப்படுகின்றது. இதனை Diabetic Neuropathy என்றுகூறுவர்.
இது கைகளைவிடக் கால்களையே அதிகம் பாதிக்கின்றது. இதன்போது அதிர்வு நோ, வெப்ப உணர்ச்சி ஆகியன உணரப்படுவது பாதிக்கப்படுகின்றது. முதலில் இந்தப் பாதிப்பு பாதத்தில் மட்டும் தொடங்கும். உங்கள் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு தொடர்ந்து கட்டுப்பாடில்லாமல் இருக்குமானால், இந்த விறைப்புத் தன்மை மேல்நோக்கி அதிகரித்துச் சென்று உங்கள் கால்கள் இரண்டும் முழுமையாக விறைப்புத் தன்மை அடைந்து உணர்ச்சி யற்றுப் போகும்.
பாதிப்பு அதிகரிக்கும்போது உங்களுக்கு காலின் கீழே ஏதோ ஒட்டிஇருப்பது போன்ற உணர்ச்சி, கண்ணை மூடி அல லது இருட்டிலே நடக்கும்போது நிதானம் போன்றன ஏற்படலாம். இவ்வாறு உங்களுக்கு காலில் உணர்ச்சி குறைவாக இருப்பதால் காயங்கள் மற்றும் தீப்புண்கள் ஏற்படுவதை நீங்கள் அறியாமல் அல்லது கவனிக்காமல் விடவாய்ப்புள்ளது.
நீரிழிவுஉள்ளவர்களுக்கு காயங்கள் குணமாகும் தன்மையும் குறைவாக இருப்பதனால், உங்களுக்கு ஏற்படும் காயங்கள் மேலும் பெரிதாகி, சத்திரசிகிச்சை செய்து காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த விறைப்புத் தன்மையை முற்றாகக் குணப்படுத்துவது என்பது சிரமமானது. நீங்கள் உங்கள் குருதிக் குளுக்கோசைச் சரியான அளவுக்குள் கட்டுப்பாடாக வைத்திருப்பதன்மூலம் காலில் விறைப்புத் தன்மை ஏற்படுவதைத் தடுக்க முடிவதுடன், இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மேலும் விறைப்புத் தன்மை மோசமடையாமற் தடுக்கலாம்.
உங்களது கால்களை நீங்கள் காயங்கள் ஏற்படாது கவனமாகப் பாதுகாக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் செருப்பு அணிய வேண்டும். பாதணிகள் உங்களது பாதங்களை விடப்பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது இறுக்க மாகவோ இல்லாமல் சரியான அளவுடையவையாக இருக்கவேண்டும்.
ஒவ்வொரு நாளும் இரவிலே படுக்கைக்குச் செல்லுமுன் உங்கள் பாதங்களை நன்றாகக் கழுவி ஏதாவது காயங்கள் உள்ளதா என்று கவனிக்க வேண்டும். அவ்வாறு காயங்கள் இருந்தால் தாமதம் செய்யாது மருத்துவ உதவியை நாடவேண்டும். நகம் வெட்டும்போது காயம் ஏற்படாதவாறு உங்களது விரல் மட்டத்துடன் வெட்டவேண்டும்.
இவ்வாறு உங்கள் கால்களைப் பேணிப் பாதுகாப்பதுடன் நீரிழிவை யும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் உங்கள் விரல்களையோ அல்லது கால்களையோ இழக்க வேண்டிய ஆபத்திலிருந்து நீங்கள் தப்பிக் கொள்ளமுடியும். – டாக்டர் எஸ்.உமைபாலன் நீரிழிவு சிகிச்சைநிலையம் – யாழ்.போதனா வைத்தியசாலை.
எனக்கு 21 வயது ஆகின்றது. நான் கர்ப்பமாக இருக்கின்றேன். எனக்கு மலச்சிக்கல் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வு என்ன??
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவாக பிரச்சினைகளில் ஒன்று மலச்சிக்கல் இதற்கு ஓமோன்களில் ஏற்படும் மாற்றங்களினால் குடற்றொழிற்பாட்டில் ஏற்படும் மாற்றம், கர்ப்பப்பையின் அளவு, திணி அதிகரித்தல், இக்காலத்தில் பாவிக்கப்படும் இரும்புச்சத்துக் குளிசைகள், உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் ( நார்ச்சத்துக் குறைவான உணவுகளை உட்கொள்ளல், நீர் அருந்துதல் போதாமை) ஒழுங்கற்ற முறையில் மலங்கழிக்கச் செல்லுதல், போதியளவு உடற்பயிற்சியின்மை என்பன காரணமாக அமைகின்றன. சில அரிதான சந்தர்ப்பங்களிலேயே மருத்துவக் காரணங்களினால் இது ஏற்படலாம்
எனவே நீங்கள் இதை எண்ணிக் கவலைப்படத் தேவையில்லை. தகுந்த முறையில் உங்கள் வாழ்க்கை முறைகளைமாற்றி அமைப்பதன் மூலம் இதன் பாதிப்பைக் குறைத்துக் கொள்ளலாம்.
இதற்காக தேவையான அளவில் நீரை நாளந்தம் எடுத்துக்கொள்ளல், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை (பழங்கள், மரக்கறிகள்) அதிக அளவில் உட்கொள்ளல், ஒழுங்கான முறையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ளல், தினமும் குறித்த ஒரே நேரத்தில் மலங்கழிக்கப் பழக்கிக் கொள்ளல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக மருந்துகளைப் பாவிப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஆனாலும் இவற்றிற்கு உங்கள் மலச்சிக்கல் குறையவில்லை எனின் தகுந்த முறையில் வைத்தியரை அணுகி சிகிச்சை பெறுவது சிறந்தது
-Dr.சி.கருணதீபா – நீரிழிவு சிகிச்சை நிலையம் . யாழ் போதனா வைத்தியசாலை
எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. எனினும் தற்போது நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. எனது உடல் முன்னரை விட தற்போது மெலிந்துள்ளது. எனது உயரம் 170cm தற்போதைய நிறை 61Kg வேலைக்கு செல்வதால் சரியாக சாப்பிட முடியவில்லை. எனது உடல் பருமனாக ஏதாவது ஆலோசனை கூறமுடியுமா??
வயது வந்தவர்களின் உடல்நிறை சரியானதாக என்பதை அறிய உடற்திணிவுச்சுட்டி (BMI) பயன்படுத்தப்படுகின்றது.
இங்கு உயரம் உடல் நிறை Kg இலும் உயரம் மீற்றரிலும் (m) பிரதியிடப்பட வேண்டும். அதன்படி
சாதாரணமாக BMI 18.5 – 22. 5 ற்குள் காணப்படல் வேண்டும். எனவே தாங்கள் முன்னரை விட மெலிந்து இருப்பினும் தங்கள் நிறையானது தங்கள் உயரத்திற்கு ஏற்ப காணப்படுவதால் உடல் மெலிவை எண்ணி கவலையடைய தேவையில்லை.
எனினும் தங்கள் நிறை தொடர்ந்து குறைவடைந்து செல்லுமாயின் அதை அதிகரித்தல் பற்றி சிந்திக்க வேண்டும்.
மேலும் தங்கள் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் உள்ளமை சிறந்த விடயமாகும். எனினும் சலரோக நோயாளியின் உணவை விடுத்தும், பசித்திருந்தே தங்கள் நோயை கட்டுப்படுத்த வேண்டும். என எண்ணுவது தவறாகும்.தங்கள் உடல் நிறை தொடர்ந்து குறைவடைந்து செல்லுமாயின் குருதியில் குளுக்கோஸ் அவை கூட்டாத கலோரிப் பெறுமானம் கூடிய, ஆரோக்கியமான உணவுகளை உள்ளெடுத்தல் மூலம் உடல்நிறையை கூட்டலாம். உதாரணமாக பால், முட்டை, இறால், மீன், மற்றும் கடலை, பயறு, கௌபி போன்ற தானியங்களை உள்ளெடுக்கலாம்.
அத்துடன் ஆரோக்கியமாக கொழுப்புள்ள நல்லெண்ணெய், ஒலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்க்கலாம். மேலும் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவை அதிகரிக்கலாம்.
மூன்று வேளையும் பிரதான உணவுகளை தவறாது உட்கொள்ள வேண்டும். தாங்கள் வேலைக்கு செல்பர் எனின் அதற்கேற்ப உணவு நேரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக காலை உணவை சரியாக சாப்பிடமுடியவில்லை எனின் காலையில் சிறிது நேரத்துடன் எழும்பி காலை உணவை உண்டபின் வேலைக்குச் செல்லலாம். அத்துடன் பிரதான உணவு வேளைக்கு இடையில் சிறியளவு ஆரோக்கியமான உணவுகளை உண்ண முடியும்.
மேற்குறிப்பிட்ட உணவு முறைகளை கடைப்பிடித்தும் உடல்நிறை தொடர்ந்து குறையுமாக இருப்பின் அதற்குரிய வேறு மருத்துவ காரணங்கள் உண்டா என கண்டறிய வேண்டியது அவசியமாகும். எனவே தாங்கள் மருத்துவரை அணுகி வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
-Dr.வி.காருண்யா – நீரிழிவு சிகிச்சை நிலையம் . யாழ் போதனா வைத்தியசாலை
எனக்கு வயது 20. திருமணம் முடித்து 10 மாதங்கள் ஆகின்றது. திருமணமான ஒரு மாத்திலேயே கருத்தரித்துவிட்டேன். உடல் நலக் குறைவால் கர்ப்பத்தை வைத்திய ஆலோசனைப்படி கலைத்துவிட்டேன். அதன் பின்னர் கர்ப்பத்தடை ஊசி பாவிக்கிறேன். இவ் ஊசி போட்ட பின்னர் மாதவிடாய் பிந்துகின்றது. இதனால் கர்ப்பம் தங்க வாய்ப்பு உள்ளதா??
கர்ப்பத்தடைக்காக வழமையாக பயன்படுத்தப்படும் ஊசியானது Depo Provera ஆகும். இவ் ஊசிமருந்தானது 12 வாரங்களிற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும். இவ் ஊசி மருந்தை பயன்படுத்தும் போது ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் வருவது சாதாரணம். சிலருக்கு ஊசிமருந்து பாவிக்கும் காலப்பகுதியில் மாதவிடாய் வருவதில்லை. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இவ் ஊசிமருந்து பயன்படுத்தும் போது கர்ப்பந்தரிப்பதற்குரிய அளவு மிகக் குறைவு. ஆய்வுகளின் அடிப்படையில் கர்ப்பந்தரிப்பதற்குரிய சந்தர்ப்பம் 0.1 தொடக்கம் 2 வீதம் ஆகும். இது ஒழுங்கான முறையில் 12 வாரங்களிற்கு ஒரு முறை ஊசிபோடுவதால் மேலும் குறைவடையும்.
நீங்கள் உடல் நலக்குறைவால் கர்ப்பத்தை கலைத்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் நோய் என்ன? எவ்வாறான சிகீச்சை பெறுகின்றீர்கள் போன்ற தகவல்கள் எதும் குறிப்பிடப்படவில்லை. ஒருவரது கர்ப்பமானது தாயின் உயிருக்கு ஆபத்து என கருதும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே கலைக்கப்படும். எனவே நீங்கள் உங்கள் அடிப்படை நோய்நிலைமை தொடர்பாக வைத்தியரின் ஆலோசனைப்படி சிகீச்சை பெற்று குறித்த நோய் நிலையானது கட்டுப்பாட்டில் உள்ள போது வைத்தியரின் ஆலோசனைப்படி அவர்கள் நீங்கள் கர்ப்பம் தரிப்பது பாதுகாப்பானது எனக் கருதும் சந்தர்ப்பத்தில் நீங்கள் கர்ப்பம்தரிக்கமுடியும்.
-Dr.பா.மேனகா – நீரிழிவு சிகிச்சை நிலையம் . யாழ் போதனா வைத்தியசாலை
எனது நிறை அதிகம் என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள். உணவைக்குறைத்து சாப்பிடாமல் இருந்தால் தலை சுற்றுகிறது. உணவைக் கடுமையாகக் குறைத்தால் உடல் பலவீனப்பட்டுவிடும் என்று பயமாக இருக்கிறது. உடற் களைப்பை போக்குவதற்கு எந்த வகையான சத்துமா வகைகளைச் சாப்பிடலாம். உப்புச்சோடா குடித்தால் நிறை அதிகரிக்குமா? பரம்பரையாக இருக்கும் அதிகரித்த நிறும் ஆபத்தானதா, அதிகரித்த நிறையுடன் பலர் நீண்ட காலம் வாழ்கிறார்களே? உடல் மெலிந்து விட்டால் நோய்க் கிருமிகள் தாக்கும் ஆபத்து ஏற்படாதா?
உங்கள் களைப்புக்கு முக்கிய காரணியாக இருப்பது உங்களது அதிகரித்த உடல் நிறையே. உங்கள் அதிகரித்த உடல் நிறையைச் சமாளிக்கும் வல்லமை உங்கள் உடல் உறுப்புகளுக்குப் போதாமல் இருக்கும் பொழுது களைப்பு ஏற்படுகிறது. உங்கள் களைப்புக்கு வேறு ஏதாவது காரணிகளும் இருக்கிறதா என்று உங்கள் வைத்தியர் உங்களைச் சோதித்து பார்த்திருப்பார். உணவைக் கடுமையாகக் குறைத்து பட்டினிகிடந்துதான் உடல் நிறையைக் குறைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவ்வாறு செய்தால் உங்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் தலைச்சுற்றும் களைப்பும் ஏற்படுவதுடன் உடலும் பலவீனமாகும். உடல் நிறையைக் குறைப்பதற்குச் சாப்பாட்டு வகையிலேயே மாற்றம் செய்யவேண்டும் என்பதே முக்கியமானதாகும். நீங்கள் நிறையைக் குறைப்பதற்கு மாப்பொருள் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்த்து நல்ல ஊட்டச்சத்துள்ள, புரதம் நிறைந்த கனியுப்புகள் நிறைந்த, விட்டமின்கள்
நிறைந்த உணவுகளைப் போதியளவில் உண்ணமுடியும். நீங்கள் போதியளவில் உண்ணக்கூடிய உணவுகளாவன – ஆடை நீக்கிய பால், மரக்கறி வகைகள், கௌப்பி, முட்டை, மீன், இறால், பயறு, பருப்பு வகைகள், பழவகைகள், கோழி இறைச்சி,சுறா, சோயா, அவரை, இலை வகைகள், கொண்டல் கடலை போண்றவையாகும். இவற்றைப் போதியளவில் உண்டு நிறை குறைந்து வரும் போது உங்கள் உடல் பலவீனப்படமாட்டாது. நோய்க் கிருமிகள் தாக்கும் ஆபத்தும் ஏற்படாது. மேலதிக சத்துமாக்களும் தேவைப்படாது. சோடா வகைகள் உடலுக்குப் பாதுகாப்பானது அல்ல. அவற்றைத் தவிர்ப்பது நல்லது. அதிகரித்த நிறையுள்ளவர்கள் அது எந்தக் காரணத்திற்காகவும் ஏற்பட்டிருந்தாலும் பரம்பரை காரணமாக ஏற்பட்டிருந்தாலும் கூட நிறையைக் குறைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். நிறையைக் குறைத்துக் கொள்வதன் மூலம் வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. நிறையைக் குறைப்பது கடினமல்ல முயற்சி எடுங்கள்
எனது மகளுக்குப் 15 வயது ஆகிவிட்டது அவள் இன்னமும் பூப்படையவில்லை இதற்கு என்ன செய்யலாம்?
இவ்வாறான நிலைமை பிந்திய பூப்படைதல் (Delayed Menarchae) என்று கூறப்படும். துணைப் பாலியல்புகள் விருத்தியடையாத ஒரு பெண்ணில் 14வயது வரையும் அல்லது துணைப்பாலியல்புகள் விருத்தியடைந்த ஒரு பெண்ணில் 16 வயது வரையும் முதலாவது மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும் நிலைமையை நாம் இவ்வாறு கூறலாம்.
இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றில் சில முழுமையாகத் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளாகவும், சில தீர்வு காணமுடியாத பிரச் சினைகளாகவும் இருக்கும். முதலாவது மாதவிடாய் ஏற்படும் வயது பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவான காரணிகள் பின்வருமாறு,
01. குடும்பத்தில் ஏனைய பெண்கள் பிந்திய வயதில் பூப்படைதல்.
இங்கு உடல் ரீதியாக எந்தவிதமான பாதிப்போ அல்லது நோயோ இருப்பதில்லை. இவர்கள் உயரம் குறைந்தவர்களாக இருக்கலாம். குடும்பத்தில் மற்றப் பெண்கள் எந்த வயதில் பூப்படைவார்களோ அந்த வயதில் இவர்களும் பூப்பெய்துவார்கள். ஆகவே நீங்கள் அதுவரை காத்திருக்கலாம். இவர்களுக்கு அநேகமாக எந்தவித சிகிச்சைகளும் தேவைப்படுவதில்லை.
02. சத்துள்ள உணவு வகைகளை உள்ளெடுத்தல் சத்துள்ள உணவு வகைகளை உள்ளெடுக்காமல் இருக்கும் மற்றும் உடல்நிறை குறைவாக இருக்கும் பெண்கள் பூப்படைவதற்குப் பிந்தலாம். இவ்வாறானவர்கள் சத்துள்ள உணவு களை உள்ளெடுத்து உடல் நிறையை அதிகரிக்கச் செய்வதன்மூலம் பயனடைய முடியும்.
03. உடல்நலப் பிரச்சினைகள்
வேறு ஏதாவது நீண்டகால நோய்கள் உள்ளவர்கள் (உதாரணம் சிறுவயதில் நீரிழிவு, சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய்) மற்றும் சிலவகை ஓமோன் குறைபாடு உடையவர்கள் (உதாரணம் தைரொயிட் கபச் சுரப்பி, பருவகக் கீழ் சுரப்பி பிரச்சினைகள்) இவர்களில் உரிய வயதில் பூப்பெய்வது பாதிக்கப்படலாம்.
இவர்கள் வைத்திய ஆலோசனையைப் பெற்று ஓமோன் சிகிச்சையோ அல்லது அவர்களின் நோய்க்கான சரியான சிகிச்சையையோ பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்டவையே அநேகமான பெண் களின் முதலாவது மாதவிடாய் உரிய காலத்தில் ஏற்படாமைக்கான காரணங்களாக அமைகின்றன.
ஆரம்பத்தில் கூறப்பட்ட வயதெல்லையைத் தாண்டியும் உங்கள் மகள் பூப்படையாவிட்டால் நீங்கள் ஒரு பெண் நோயியல் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது நல்லது. மருத்துவர் உங்கள் மகளைப் பரிசோதித்து உங்கள் பிரச்சினைக்குரிய சரியான காரணத்தைக் கண்டறிந்து அது குணப்படுத்தக்கூடியதாயின் அதற்கான சிகிச்சை வழங்குவார்.
அவ்வாறான சிகிச்சையளிக்கக்கூடிய சில காரணங்கள் வருமாறு,
1. பிறப்பு வாயிலில் உள்ள சவ்வு அடைப்பை ஏற்படுத்துதல்.
இதனால் மாதவிடாயின்போது வரும் குருதி வெளியேறமுடியாத நிலை ஏற்படும். இவ்வாறானவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் மாதவிடாய் ஏற்படும் காலத்தில் அடிவயிற்றில் நோவு ஏற்படும். சத்திசிகிச்சைசெய்து அடைப்பை ஏற்படுத்தும் சவ்வை அகற்றுவதன் மூலம் இந்த நிலை குணமாக்கப்படும்.
2. பிறப்பிலே ஏற்படும் சில குரோமோசம் குறைபாடுகள்.
உதாரணம் -Turners syndrome
இவர்கள் அகன்ற தோள்களைக் கொண்டவர்களாகவும், உயரம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கும் சூலகத்திலே குறைபாடு உள்ளவர்களுக்கும் சில ஓமோன்களை வழங்குவதன் மூலம் துணைப் பாலியல்புகளையும் மாதவிடாயையும் ஏற்படுத்த முடியும். ஆனால் இவர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது..
3. பரிவகக்கீழ் சுரப்பியின் குறைபாடு இவர்களுக்கு CnRH – ஓமோனை வழங்குவதன் மூலம் இந்த நிலையைக் குணப்படுத்தலாம் ஆனால் இது மிகவும் செலவு கூடிய ஒருமுறையாகும். மேலும் பல பிறப்புக் குறைபாடுகளும் மாதவிடாய் ஏற்படாமைக்கான காரணமாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணிகள் மிகக் குறைவாகும்.
எனவே நீங்கள் ஒரு பெண் நோயியல் வைத்தியரைச் சந்தித்து பரிசோதித்துக்கொள்வதன் மூலம் உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்
எனது வயது 38 கடந்த சில மாதங்களாக நான் ஏப்பம், வாயுத் தொல்லையால் அவதிப்படுகின்றேன். எனவே இந்த நிலைமையை தவிர்க்க மேற்கொள்ளக்கூடிய ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன்?
உணவை உண்ண வேண்டியது ஒவ்வொரு மனிதனினதும் தவிர்க்க முடியா பழக்கமும் கடமையுமாக இருக்கின்றது.
இயற்கையுடன் இணைந்து வாழும் மனித சமூகத்தில் உணவு உண்ட பின்பு ஏப்பமிடுதலும், வாயு வெளியேறுதலும் இயற்கையான சாதாரண விடயமாகும். இது ஒரு நோய் அல்ல. இது ஒரு வகைத் தொல்லை. சிலருக்கு மிதமிஞ்சிய ஏப்பமிடுதலும். வயிறு ஊதுதல் மற்றும் வாயுத்தொல்லை, மலவாசலின் ஊடாக வாயு வெளியேறுதல் ஆகிய அசௌகரியத்தையும் மற்றவர்கள் உள்ள வேளைகளில் தடுமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.
ஏப்பமிடுதல் என்பது எமது வயிற்றில் உள்ள மேலதிகமான காற்றை வெளியேற்றுவதற்கு எமது உடல் செய்கின்ற செயற்பாடு ஆகும்.
நாம் அவசரமாக உண்ணும் போதும் , பருகும்போதும் காற்றையும் சேர்த்து விழுங்கி விடுறோம். இவற்றின் பெரும் பகுதி ஏப்பமாக வெளிவருகிறது. மிகுதி எமது உணவுக் கால்வாயின் ஊடு பயணம் செய்யும் போது ஒரளவு உறிஞ்சப்பட மிகுதி மலவாசலின் ஊடாக வாயுவாக வெளியேறுகிறது. அத்துடன் எளிதில் சமிபாடு அடையாத சிக்கலான புரதங்களையும் உடைய அவரை இன உணவுகள் பயறு, பருப்பு வகை போன்றவை சமிபாடு அடையும் போது வெளியிடப்படும் நைதரசன் போன்ற வாயுக்களும் எமது குடலால் உறிஞ்சப்படுவதில்லை. இவையும் மலவாசலின் ஊடாக வாயுவாக வெளியேறும். மற்றும் நாம் உண்ணும் உணவில் சமிபாடு அடையாத உணவுப் பகுதிகளுடன் பக்ரீறியா கிருமிகள் தாக்கத்துக்கு ஆளாகும் போது வாயு உற்பத்தியாகிறது. இதுவும் மலவாசலின் ஊடு வாயுவாக வெளியேறுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் அதிகநேரம் சமிபாடு அடையாத உணவுப் பகுதிகள் குடலில் தங்கியிருக்கும்போது அவ்வளவு நேரத்துக்கு உணவுப் பகுதிகள் நொதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. இதனால் வெளியேற்றப்படும் வாயுவும் நொதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. இதனால் வெளியேற்றப்படும் வாயுவும் வயிற்றுப் பொருமல் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்துகிறது.
சிலருக்கு இரைப்பையில் இருந்து அமிலம் வெளிவருவது Acid Reflex அல்லது இரைப்பையில் இருந்து உணவுக் குழாய்க்குள் உணவு மேல் வருவது போன்ற கோளாறுகள். Gastroeso Phagal Reflex disease இதன்போதும் இருக்கும். இதை இல்லாமல் செய்வதற்காக மீண்டும் மீண்டும் விழுங்கவேண்டி ஏற்படும் போதும் கூடுதலான காற்றையும் விழுங்க வேண்டி ஏற்படுகின்றது. இதனாலும் வாயுத் தொல்லை ஏற்படுகின்றது. மற்றும் இரைப்பை அழற்சி போன்ற பல காரணங்களால் வயிற்றுப் பொருமல், வாயுத் தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே இவற்றைக் குறைப்பதற்கு சில ஆலோசனைகள்
– மெதுவாக உண்ணுதல், பருகுதல் போதிய நேரம் எடுத்து ஆறுதலாக உண்பதால், பருகுவதால் காற்று உள்ளெடுப்பதை மிகவும் குறைத்துக் கொள்ள முடியும்.
-காபனேற் ஏற்றப்பட்ட பானங்கள் சோடா, பியர் போன்றவற்றை பருகுவதைத் தவிர்த்தல்.
-புகைத்தலைத் தவிருங்கள், புகையை உள்ளெடுக்கும் போது நீங்கள் காற்றையும் விழுங்கி விடுகிறீர்கள்.
-குறைந்த கொழுப்புள்ள உணவுகளை எடுங்கள். கொழுப்பு சமிபாடு அடைவதை தாமதப்படுத்துவதால் அதிக நேரம் உணவு குடலில் தங்கியிருக்கும் நிலை ஏற்படும். இதனால் உணவு நொதிப்படைந்து வாயுக்களை உண்டாக்கும்.
-உணவு உண்டபின் நடவுங்கள். இது வாயுத் தொல்லைகளின் பாதிப்பைக் குறைக்கும்.
-உங்களுக்கும் அதிகம் பிரச்சினை கொடுக்கும் உணவுவகைகளைத் தவிருங்கள்.
-பயறு உழுந்து போன்ற அவரையின உணவு வகைகளைச் சமைக்கும் போது அவற்றை நீரில் நனைத்து அல்லது ஈரத்துணியில் மூடி வைத்து முளைக்க வைத்த பின் சமைப்பதால் இலகுவில் சமிபாடு அடைவதுடன் வாயுத்தொல்லையும் குறைவாக இருக்கும். நன்றாக வேகவைத்து உண்பது நல்லது.
எனது 3½வயது மகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் கூடும்போது பனடோல் கொடுக்கிறேன். எனது அயல் வீட்டுக்காரரோ “காய்ச்சல் தானாக மாறும் பனடோல் உடலுக்குக்கூடாது” என்கின்றார். இது பற்றி சற்று விளக்குங்கள்.
குழந்தைகளுக்கு பனடோல் எடுப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பு மோசமானதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை கூடும்போது ”காய்ச்சலினால் உண்டாகும் வலிப்பு” ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படும். ( 5வயதுக்குட்பட்டவர்களில் இது ஏற்படுவது சாதாரணம்) எனவே காய்ச்சலின் போது உடல் வெப்பநிலையைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவையாவன.
வைத்தியரின் ஆலோசனைக்கேற்ப குழந்தையின் நிறையை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ற அளவில் பனடோல் கொடுத்தல் வேண்டும்.
பனடோல் 6 மணித்தியாலத்துக்கு ஒரு தடவை கொடுத்தல் வேண்டும். 6 மணித்தியாலத்துக்குள் உடல் வெப்பநிலை அதிகரித்தாலும் பனடோல் கொடுத்தல் கூடாது. உடல் வெப்பநிலைகை் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈரமான துணியால் குழந்தையின் நெற்றி, கழுத்து, அக்குள், அரைப்பகுதி (Genital Area) துடைத்தல் வேண்டும். காற்றோட்டமான இடத்தில் அல்லது மின்விசிறியின் கீழ் குழந்தையைப் படுக்கவைத்தல் வேண்டும்.
மெல்லிய பருத்தி ஆடைகளை அணிவித்தல் வேண்டும் 3 நாள்களுக்குள் காய்ச்சல் மாறாதுவிடின் வைத்தியசாலைக்கு குழந்தையைக் கொண்டு சென்று உரிய சிகிச்சையைப் பெறுதல் வேண்டும்.
எனக்கு 40 வயது ஆகிறது. எனக்கு மலச்சிக்கல் உள்ளது இதனால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு சரியான தீர்வு சொல்லுங்கள்.
மலச்சிக்கல் எனப்படுவது ஒரு வாரத்தில் 03 தடவைகளுக்கு குறைவாக மலம்களித்தல் அல்லது மலத்தின் கடினத்தன்மை அல்லது மலம் கழித்தலிலுள்ள கடினத்தன்மை அல்லது பூரணமாக மலம் கழிக்கவில்லை என்ற உணர்வு என வரையறை செய்யலாம்.
பொதுவாக மலச்சிக்கலானது முறையற்ற உணவுப் பழக்கங்கள், நீர் அருந்துதல் போதாமை, ஒழுங்கற்ற முறையில் மலங்கழிக்க செல்லுதல் போன்றவற்றினால் ஏற்படலாம். இவற்றை விட சில மருத்துவ காரணங்களாலும் மலச்சிக்கல் ஏற்படலாம். உதாரணமாக தைரொக்சின் குறைபாடு, வேறு சில மாத்திரைகள் பயன்படுத்துதல் வேறு குடல் சம்பந்தமான நோய்கள் போன்றவையாகும்.
எனவே நீங்கள் மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 லீற்றர் நீராவது அருந்த வேண்டும். உங்கள் உணவில் அதிகளவு நார்ப்பொருள்ள உணவுகளை, பழங்கள், மரக்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை விட நீங்கள் தினமும் குறித்த ஒரே நேரத்தில் மலங்கழிக்க செல்ல உங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்துவர உங்கள் மலச்சிக்கல் நீங்கும். இவற்றை விட நீங்கள் வேறு ஏதாவது மலச்சிக்கலை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகளை பயன்படுத்தினால் அவைபற்றி உங்கள் வைத்தியரிடம் கேட்டு அவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இவற்றுக்கு உங்கள் மலச்சிக்கல் குணமடையாது விடின் வைத்தியரை நாடி உங்களிற்கு மேற்குறிப்பிட்டது போன்று வேறு ஏதாவது காரணங்கள் உண்டா என்று அறிந்து அவற்றிற்கு உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. என குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அவை என்ன என குறிப்பிடப்படவில்லை உங்களிற்கு மலச்சிக்கலுடன் நிறை அதிகரித்தல், பசியின்மை, குளிரை தாங்கமுடியாமை, தோல் உலர்வடைந்து காணப்படல், பகலில் நித்திரை தூக்கம், தலைமுடி உதிர்த்தல், போன்றன காணப்படின் இவை தெரொயிட் குறைபாட்டிற்குரிய அறிகுறிகளாகும். எனவே நீங்கள் வைத்தியரை நாடி அதற்கு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்தது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முன்னோர் வாக்கு, ஒருவர் இவ்வுலக வாழ்வை அனுபவிப்பதற்கு நோயற்ற உடல் அவசியம். நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை. தினமும் குறிப்பிட்ட தூரம் நடப்பது நல்லதொரு தேகப் பயிற்சி. பத்திரமானது. செலவே இல்லாதது. எமது அன்றாட அலுவல்களுடன் எளிதாக இதனையும் மேற்கொள்ளலாம். இது எமது வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடிய இன்பமான பயிற்சியாகும். எனினும் ஒரே தடவையில் நீண்ட தூரத்தை இலக்காக வைத்து நடக்க வேண்டாம். ஆரம்பத்தில் 5 -10 நிமிடங்களுக்கு நடக்கவும். பின்பு மெதுவாக நேரத்தைக் கூட்டவும். மெதுவாக நடக்கும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொண்டு போனால் இயற்கையாகவே செல்லும் தூரம் அதிகமாகும். ஆரம்பத்தில் ஒருவர் 30 நிமிடங்களில் 1 மைல் நடப்பார் என்றால் ஒர் அனுபவஸ்தர் அதையே 10 – 12 நிமிடங்களில் நடந்து முடித்துவிடுவார். உங்களால் முடிந்த வரையில் உடல் சௌக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கக் கூடிய வேகத்தில் நடக்கவும். இந்தப் பயிற்சியில் ஈடுபாடு உடைய நண்பர் ஒருவர் உங்களுக்கு கிடைப்பாரானால் அது உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களுக்கு அலுப்பு சோர்வு ஏற்படும் போது அவருடைய ஈடுபாடு உதவியாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் 40 நிமிடங்களுக்கு வேகமாக நடைப்பயிற்சி செய்வது நல்லது. நடக்கும் போது கைகளை வீசி நடவுங்கள். இறுக்கமான ஆடை அணிவதை தவிருங்கள். உடல் வியர்வையை வெளியேற்றும் தளர்வான ஆடைகளை அணியுங்கள். தரமான எடை குறைவான செருப்பு, சப்பாத்துக்களை உங்கள் வயது விருப்பத்துக்கு ஏற்ற காலணிகளை அணியுங்கள். அத்துடன் நடக்கும் போது முழங்காலில் இருந்து அடி எடுத்து வைக்காமல் உங்கள் இடுப்பில் இருந்தே அடி எடுத்து வையுங்கள், நடக்கும் போது உங்கள் தலையை நிமிர்த்தி வைத்துக் கொண்டு நடவுங்கள்.
இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிக்கு (Type II Diabetic) இன்சுலின் சரியான அளவில் சுரந்தாலும், அது முழுமையான அளவில் வேலை செய்யாது. இவர்களின் உடலில் இன்சுலின் இயங்காமல் இருப்பதற்கு இன்சுலின் எதிர்ப்பு நிலை இருப்பதே காரணம். அதாவது நமது உடலில் உள்ள கலங்களில் காணப்படும் இன்சுலின் வாங்கிகள் insulin Receptors என்ற பூட்டுக்கள் திறக்கப்பட வேண்டும். இதற்கு இன்சுலின் என்ற சாவி தேவை. நடைப்பயிற்சியின் போது மேற்படி இன்சுலின் வாங்கிகள் எல்லாம் தூண்டப்படுவதால் கலங்களில் காணப்படும் குளுக்கோஸ் நுழைவாசல்கள் திறக்கப்படுகின்றன. இதனால் குருதியில் உள்ள வெல்லமானது கலங்களுக்குள் நுழைகின்றது. அத்துடன் சக்தியாக மாறுகின்றது. இது தசை திசுக்களின் செயற்பாட்டுக்கு உதவுகின்றது. இதன் மூலம் குருதியின் வெல்ல மட்டம் குறைகின்றது. எனவே நடைப்பயிற்சி நீரிழிவு நோயாளிக்கு நல்ல மருந்து.
அத்துடன் பெரும்பாலான நீரிழிவு நோயாளிக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கும். கொலஸ்ரோல் அதிகம் இருக்கும். இரத்த நாளங்களின் மீளும் திறனை நடைப்பயிற்சியானது அதிகப்படுத்துவதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது தவிர எமது இருதயத்துக்கு தீமை செய்யும் எல்.டி.எல் (LDL) கொலஸ்ரோல் மற்றும் டிரைகிளிரைட்ஸ் அளவையும் குறைக்கின்றது. அத்துடன் உடலுக்கு நன்மை செய்யும் எச். டி. எல் (HDL) கொலஸ்ரோலையும் அதிகப்படுத்துகிறது. இதன் காரணமாக மாரடைப்பு வரும் வாய்ப்புக்கள் நடைப்பயிற்சி செய்வோருக்கு குறைவடைகின்றது. மேலும் சாதாரண வேளைகளில் தசைகளுக்குள் சோம்பிக்கிடக்கும் மெல்லிய இரத்த நாளங்கள் கூட நடைப்பயிற்சியின் போது விரிவடைகின்றன. இதனால் பல புதிய நாளங்கள் தோன்றுகின்றன.
இதனால் தசைகள் இரத்த ஒட்டம் அதிகரிக்கப்படுகின்றது. இதன்போது இரத்தத்தில் மிகுந்து இருக்கும் வெல்லத்தை பயன்படுத்த இப்பொழுது அதிக இடம் கிடைக்கின்றது. இதன்மூலம் குருதியில் வெல்ல அளவு குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
உடல் எடை அதிகரிப்பானது எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாகும். நடைப்பயிற்சியின் போது பெரும்பாலான தசைகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து வேலை செய்வதால் அதிகளவில் சக்தி வெளியேறுகின்றது. இதற்கு கொழுப்பு பயன்படுத்தப்படுகின்றது இதன் பலனாக உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்பு குறைவதால் உடல் எடை குறைகின்றது. உடல் எடையைக் குறைப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் ஒர் இலகுவான வழிநடைப்பயிற்சியாகும். அத்துடன் எடை அதிகரிப்பால் உருவாகும் நீரிழிவை நடைப்பயிற்சியால் தவிர்க்க முடியும். நடக்கும் போது எவ்வாறு சுவாசிக்கின்றோம் என்பதை உணருங்கள் முதலாவது ஆழ்ந்த மூச்சை வெளியே விடுங்கள். பின்னர் உங்களைச் சுற்றி இருக்கும் வளியை ஆகாயத்தை முகர்வது போன்று முயற்சி செய்யுங்கள் அதிகாலை வேளையில் திறந்த வெளிகளில் மலைகள் மீதான பாதைகளில் வேகமாக நடக்கும்போது அமைதியான சுற்றுச்சூழலுடன் தூய்மையான வளிமண்டலக்காற்றை நுகர முடியும். இதன் மூலம் உங்கள் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகின்றன. அத்துடன் எமது மூளையில் எண்டார்பின் (Endorphin) எனப்படும் ஹோர்மோன் தூண்டப்படுவதால் மன அழுத்தம் குறைகின்றது. மன அமைதிக்கு வழி செய்தால் நாள் முழுவதும் உற்சாகமாக உழைப்பது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் உருவாகும் நீரிழிவு நோயை தவிர்க்கலாம் எனவே ஒருவர் நடக்காவிட்டால் அவர் நீரிழிவை நோக்கி நடக்கின்றார் என்பதை உணருங்கள்.
குருதியிலே கொலஸ்ரோல் அதிகம் உள்ள நிலையை ஒரு நோய் என்று கருதவேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு வேறு நோய்கள் வருவதை தடுப்பதற்காக உங்களின் கொலஸரோலை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. இதற்கு நீங்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை அதிகம் உண்ண வேண்டும்.
ஆரோக்கியமான உணவுவகைகளாவன மீன், கோழி இறைச்சி, இறால், சுறா, பருப்பு, பயறு, உழுந்து, மரக்கறிவகைகள், பழவகைகள், ஆடை நீக்கிய பால், முட்டை வெள்ளைக்கரு, கௌப்பி, சோயா அவரை, மோர், முட்டுத் தேங்காய் போன்றவை ஆகும். இவற்றை எல்லாம் அதிகம் உண்பதை கடுமையான உணவுக் கட்டுப்பாடு என்று நீங்கள் கருதத்தேவையில்லை உணவில் சீனி, எண்ணெய் அல்லது கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது அனைவருக்குமே நல்லது.
மேலும் தினந்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தல் சிறந்தது, உதாரணமாக வேகமாக நடத்தல், மெதுவாக ஒடுதல், சைக்கிள் ஓடுதல், நீந்துதல், விளையாடுதல், போன்றவற்றில் ஈடுபடலாம்.
இவற்றை சரியாக கடைப்பிடித்தும் கொலஸ்ரோல் கட்டுப்பாட்டில் இல்லாவிடில் நீங்கள் தற்போது Atorvastation 20mg பயன்படுத்தினால் மேலும் அதன் அளவை கூட்டி பயன்படுத்தலாம். அல்லது Kosuvastation 20mg மருந்தை அதற்கு பதிலாக பயன்படுத்தலாம். எதுவாக இருப்பினும் உங்களுடைய மருத்துவரை அணுகி மேற்குறிப்பிட்ட இருமுறைகளில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் கேட்ட வினாவிற்கான பதில் எமது இணையத்தளத்தில் கட்டுரைகள் எனும் பகுதியில் மலச்சிக்கல் எனும் தலையங்கத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதனை வாசித்து உங்கள் வினாவிற்கான தெளிவினை பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் கேட்கும் இக்கேள்வி தொடர்பான விடயங்கள் எமது இணையத்தளத்திலே கட்டுரைகள் எனும் பகுதியில் உள்ளங்கை, பாதக் கசிவு (hyper hidrosis) எனும் தலையங்கத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது அதனை வாசித்து உங்கள் வினாக்கான தெளிவினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
சிலருக்கு பால்குடிக்கும் போது சளிபிடிப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுகிறது. இதற்கு காரணம் பசுப்பாலிற்கு அவர்களில் ஏற்படும் ஒரு ஒவ்வாமை வகையான வெளிப்பாடாகும். பால்குடிக்கும்போது சளிபிடிக்கும் தோற்றப்பாடு ஒரு பிரச்சினையாக அமைந்தால் பசுப்பால் குடிப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. எனவே நீங்கள் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு பால்மா வகைகள் அல்லது ஆட்டுப்பாலைப் பாவித்து பாருங்கள் அதனால் உங்களிற்கு ஒரு பிரச்சினையும் ஏற்படாவிடின் தொடர்ந்து பாவிக்கலாம். உங்களிற்கு எல்லா வகையான பால், பால்மா, பால் சேர்த்த உணவுவகைகள் அனைத்திற்கும் ஒவ்வாமை வகையான தாக்கம் ஏற்படின் பால் உற்பத்தி பொருட்களைப் பாவனையை முற்றிலும் நிறுத்திவிட்டு வேறுவகையான புரதங்களை, சோயா, பால், முட்டை, மீன், என்பவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
கல்சியமானது உடலுக்கு மிகவும் அதியாவசியமான கனியுப்பாகும். இது என்புகளின் உருவாக்கம். தசைச்சுருக்கம், நரம்பு கணத்தாக்கம், ஓமோன் சுரப்பு, நரம்பு, மூளை போன்றவற்றின் தொழிற்பாடுகளுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.
யாழ்ப்பாணத்தை பொறுத்த மட்டில் நீரில் அதிகளவு கல்சியம் காணப்படுகின்றது. எனவே அன்றாடம் உள்ளெடுக்கும் நீரின்மூலமாகவும், உணவின் மூலமாகவும் உடலுக்குப் போதுமான கல்சியம் கிடைக்கின்றது.
பால், பால் உற்பத்திப் பொருள்களானயோக்கட், சீஸ், மீன், முட்டை, மரக்கறிவகை, தானியவகை, பழச்சாறு என்பவற்றிற் போதியளவு கல்சியம் காணப்படுகின்றது. எனவே கல்சியம் கூடிய அளவுகளில் உள்ள பால்மா வகைகளையும், மாத்திரைகளையும் பாவிக்கவேண்டிய அவசியம் பொதுவாக இல்லை.
நாளொன்றுக்கு உடலுக்குச் சராசரியாகத் தேவையான கல்சியத்தின் அளவு 1000 – 1300mg ஆகும். சாதாரணமாகக் குருதியில் உள்ள கல்சியத்தின் அளவு 8.5 – 10.2mg/dl ஆகும். கல்சியம் அதிகளவு உள்ள பால்மா வகைகளையோ அல்லது மாத்திரைகளையோ உள்ளெடுக்கும்போது கல்சியமானது இரத்தக்குழாய்கள், மென் இழையங்கள் போன்றவற்றிற் படிவடைகின்ற தன்மை அதிகரிக்கின்றது.
இருதயக் குருதிக் குழாய்களிற் படிவதன் மூலம் மாரடைப்புப் போன்ற ஆபத்தான நிலைகளும், சிறுநீரகங்களில் தொடர்ந்து படிவதன் மூலம் சிறுநீரகக் கற்கள் உருவாகின்ற நிலையும் ஏற்படுகின்றது.
கல்சியம் மாத்திரைகள் வேறு சில மருந்துகளுடன் இடைத்தாக்கத்தில் ஈடுபடுவதன் மூலம் அவற்றின் செயற்றிறனைப் பாதிக்கின்றது. அதுபோல் சிலவகை மருந்துகளின் அகத்துறுஞ்சலையும் பாதிக்கின்றது.
சில நோய்களைப் பொறுத்தமட்டில் ( உதாரணம் – Osteoporosis) மேலதிகக் கல்சியமானது தேவைப்படுகின்றது. எனவே கல்சியம் மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனையின்றிப் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்வது நன்று.
உங்களிற்கு நீங்கள் ஆரோக்கியமான நிறையை அடைவதற்கு இன்னும் 2Kg குறைத்துக் கொள்ளல் வேண்டும். குறிப்பாக முன்பு நீரிழிவுநோயின் தன்மை இருந்திருப்பதும், முன்பு நீங்கள் அதிகரித்தநிறையுடன் இருந்திருப்பதும் உங்கள் உடற்திணிவுச்சுட்டி 23 இற்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற தேவையை வலியுறுத்தி உள்ளது. தற்போது உங்களின் நிறைப்படி உடற்திணிவுச்சுட்டி 23 இலும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் உங்களது வயது, நிறை, உயரம் உங்களுக்குள்ள பிற நோய்கள் மற்றும் நீங்கள் உட்கொள்ளும் மருந்துவகைகள் என்பவற்றை குறிப்பிட்டு அனுப்புங்கள், உங்களுக்கான பதிலைத் தருகின்றோம்.
நீங்கள் உங்களிடமுள்ள மருத்துவ ஆவணங்களுடன் நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு 7–7-2014 மதியம் 2 மணிக்கு வாருங்கள் உங்களை நேரில் பார்த்து தகுந்த சிகிச்சைளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இது சாதாரண ஒரு விடயம். இதையிட்டுக் கவலை கொள்ளத் தேவையில்லை.
குழந்தைகளுக்கான உணவூட்டல் முறை பற்றிய விடயங்கள் ஏற்கனவே எமது இணையத்தளத்தில் “கட்டுரை” என்ற பகுதியின் கீழ்
1. உங்கள் குழந்தையின் உணவு திருப்திகரமானதா?
2. குழந்தைக்கு மேலதிக உணவூட்டல் ஒரு பொறுப்பு மிக்க செயற்பாடாகும்.
என்ற தலைப்புகளின் கீழ் வெளியாகியுள்ளன. அத்துடன் தொடர்ந்தும் நிறை குறைவடைந்து கொண்டிருப்பின் நேரடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று குழந்தையைப் பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும்.
நீரிழிவு நோயாளர்களின் குருதிக்குளுக்கோசின் அளவு உணவருந்த முன்னும், உணவருந்திய பின்னும் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் அவர்களுடைய சராசரி குருதிக் குளுக்கோசின் அளவும் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அவர்களுடைய நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக கருதப்படுகின்றது. HbA1C எனும் குருதிச் சோதனை செய்வதன் மூலம் 3 மாத காலப்பகுதியில் அவரது சராசரி குருதிக் குளுக்கோஸ் மட்டம் எவ்வாறு இருந்தது என்பதை அறிய முடியும். HbA1C பெறுமானம் 6.5 தொடக்கம் 7.0 இற்கு இடைப்பட்டதாக இருப்பின் அவர்களில் பூரணமாகக் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று கொள்ளப்படும்
இந் நிலைமையானது ஒவ்வாமை காரணமாக ஏற்படுகின்றது. இவ் ஒவ்வாமை நிலைமையானது சில வகை உணவுகள், சுற்றாடலில் காணப்படுகின்ற ஒவ்வாமையை ஏற்படுத்துகின்ற சில பதார்த்தங்களைத் தொடுவதன் மூலமும், சுவாசிப்பதன் மூலமும் இந்நிலைமை ஏற்படலாம். எனவே இந் நிலைமையைத் தோற்றுவிக்கும் காரணிளைக் கண்டறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சிலரில் இந்நிலைமையானது எந்த விதமான காரணங்களும் கண்டறியப்படாமலும் ஏற்படலாம். இதனை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வாமையைத் தடுக்கும் சில மாத்திரைகள் பாவிக்க வேண்டி ஏற்படலாம். சில வேளைகளில் சில நோய்களின் அறிகுறிகளாகக் கூட மேற்கூறிய நிலைமை காணப்படலாம். உங்களுக்கு இந்த நிலைமையானது 6 மாதங்களுக்கு மேலாக நீடிப்பதால் வைத்தியர் ஒருவரை நாடி சில சோதனைகளும், அறிவுரைகளும் சிகிச்சை முறைகளும் பெற்றுக் கொள்வது நல்லது.
உங்களுக்கு தேவைப்படும் உணவின் அளவு பல விடயங்களில் தங்கியிருக்கும். உங்களது வயது, உயரம், நிறை, தினமும் நீங்கள் செய்யும் வேலைகள், உங்களுக்கு பிடித்தமான உணவு வகைகள், உங்களுக்கு ஒத்துக்கொள்ளதா உணவு வகைகள், உங்களுடைய ஏனைய மருத்துவப் பிரச்சினைகள் போன்ற பல விடயங்களில் தங்கியிருக்கும் எனவே நிறை குறைப்பும், இது சம்பந்தமான பரந்துபட்ட அறிவும் அதிகம் பயனுடையதாக இருக்கும். ஆகவே இது சம்பந்தமாக எமது இணையத்தளத்தில் ஏற்கனவே வெளியான “உடல் நிறை குறைப்பு ஒரு இலகுவான கலை” பாகம் 1 தொடக்கும் 10 வரையான கட்டுரைகளை வாசியுங்கள். இதன் பின் உங்களுக்கு எழும் சந்தேகங்களை முழு விபரங்களுடன் எழுதினால பொருத்தமான அறிவுரைகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.
முதலில் உங்களுடைய நிலை சலரோக நிலையா அல்லது சலரோகத்திற்கு முந்திய நிலையா எனப் பார்ப்போம். சலரோகத்திற்கு முந்திய நிலையின் போது சாப்பாட்டிற்கு முன்னராக குருதிக் குளுக்கோசின் அளவு 100mg/dl -125mg/dl இற்கும் இடையிலும் HbA1C ஆனது 5.7 – 6.4 இற்கும் இடையிலும் இருக்கும் HbA1c ஆனது 6.5 இற்கு மேற்பட்டிருப்பின் அது சலரோக நோய் உள்ளதாக கொள்ளப்படும். உங்களுடைய குருதிக்குளுக்கோசின் அளவு சலரோகத்திற்கு முன்னைய நிலைமைக்குரியதாக இருப்பினும் HbA1c ஆனது அதிகரித்துக் காணப்படுகின்றது. HbA1c ஆனது ஆய்வுகூடநியமங்களிற்கேற்ப மாறுபடலாம். எனவே உங்கள் HbA1c ஆனது தரமான ஆய்வுகூடத்தில் செய்யப்பட்டது என்பதினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே நீங்கள் மீண்டும் ஒரு முறை FBS, PPBS. HbA1c என்பவற்றைச் சோதித்த பின் உங்களுடைய வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய நெருங்கிய உறவினருக்கு நீரிழிவு நோய் இருப்பின் அல்லது இரத்தக் குழாயில் கொலஸ்திரோல் படிவு ஏற்படுவதற்கான வேறு ஆபத்து நிலைகள் ஏதாவது இருப்பின் உங்களிற்கு Metformin என்ற மாத்திரை தொடங்கவேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுடைய தற்போதைய உடற்திணிவுச் சுட்டியானது 22.49kgm-2 ஆக உள்ளது. ஒருவருடைய உடற்திணிவுச்சுட்டியானது 18-23 49kgm-2 எனும் அளவினுள் இருக்கலாம். எனவே உங்களுடைய நிறை சாதாரண அளவிலேயே உள்ளது.எனவே நீங்கள் வேகமான நடை, ஒடுதல், மிதிவண்டி செலுத்துதல், நீந்துதல் போன்ற காற்றுப் பயிற்சியினை நாளொன்றிற்கு 30 நிமிடங்கள் செய்வது சிறந்தது. அத்துடன் உணவுக்கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்களின் ஆரோக்கியத்தைப் பேண முடியும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களிற்கு தேனோ, பேரிச்சம்பழமோ ஒரு நல்ல உணவாகாது. இவை குருதியில் வெல்லத்தின் அளவை கூட்டவல்லன. எனவே இவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. உங்கள் உடல்நிறையை அதிகரிப்பதற்கு நீங்கள் இயற்கையான ஆரோக்கியமான உணவு வகைகளான பால் / ஆடை நீக்கிய பால், முட்டை, பருப்புவகை, தீட்டாத அரிசி, அரிசி மா, உழுந்து போன்ற உணவுவகைகள், மீன், கோழி இறைச்சி,இறால் போன்ற இயற்கையான ஆரோக்கிய உணவுவகைகளயும் கூடியளவு எடுப்பதன் மூலம் உங்கள் நிறையை அதிகரித்து ஆரோக்கியமாக வாழமுடியும்.
உயர வித்தியாசம் என்பது இயற்கையானது. இது நோயின் அறிகுறி அல்ல. உங்களுடைய விதைப்பையில் ஒரு விதை மாத்திரமே இருந்து மற்றையதை அடையாளப்படுத்த முடியாமல் இருந்தால் உடனடியாக நீங்கள் வைத்திய ஆலோசனையைப் பெறவேண்டும். விதையானது விதைப்பையினுள் இறங்காது வயிற்றினுள்ளேயே காணப்படின் பல பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் உங்கள் விதையானது விதைப்பையினுள் இறங்கியிருப்பதால் இது பற்றிக் கவலை கொள்ளத்தேவையில்லை.
நிறையைக்குறைத்துக் கொள்வது எப்படி என்பது சம்பந்தமான விடயங்கள் எமது இவ் இணையத்தளத்தில் “நிறைகுறைப்பு ஒரு இலகுவான கலை” என்ற தலைப்பின் கீழ் 10 பாகங்கள் “சிந்தனைக்கு” என்ற பகுதியில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதனை பூரணமாக வாசிப்பீர்களேயானால் போதுமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வேலைக்குச் செல்லும் பெண் சாதாரண வீட்டு வேலைகளைச் செய்பவர் பத்து மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய், முதலில் உங்களுடைய உயரத்திற்கு எடை சரியாக உள்ளதா எனப்பார்ப்போம். உயரம் 157Cm நிறை 80Kg உங்களுடைய உடற்திணிவுச் சுட்டி (BMI) 32.45Kgcm2 ஆக உள்ளது. ஆனால் உங்களுடைய உயரத்திற்கு நீங்கள் (56.69Kg) 57Kg ஆக இருக்க வேண்டும். இப்போது நீங்கள் இருக்கும் நிறையில் இருந்து 23Kg குறைக்க வேண்டும். சாதாரண வேலைகளைச் செய்யும் பெண் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2225kcal போதுமானது. ஆனால் நீங்கள் பத்து மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய் ஆகையால் 400 kcal கூடுதலாக உட்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு நாளைக்கு 2265 kcal உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டிய சத்துக்களின் அளவுகள்
சாதாரண வேலை செய்யும் பெண் | 10 மா குழந்தைக்கு பாலூட்டும் தாய் | |
சக்தி (கலோரி) | 2225 kcal + | 400 kcal |
புரதம் | 500g + | 18g |
கொழுப்பு | 20g + | 25g |
கல்சியம் | 100mg | |
இரும்பு | 30mg | |
போலிக் அமிலம் | 80mg |
சில வகை தோல் நோய்களுக்கு Mythylprednlsolone போன்ற மருந்துகள் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. குறிப்பாக இந்தக் காலங்களில் உங்கள் பசி அதிகரிப்பதால் நிறை அதிகரிக்கும் சாத்தியக்கூறு உள்ளது. எனவே இவ் வகையாக சிகிச்சை முறையில் இருக்கும் ஒவ்வொருவரும் நிறை அதிகரிக்காமல் இருப்பதற்கு மேலதிக நடவக்கைகள் எடுக்க வேண்டும். உணவில் காபோவைதரேற்றின் அளவைக் குறைத்தல், ஆலோசனையின் படி உடற்பயிற்சியில் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலமாக உடல் நிறை அதிகரிப்பினையும் சலரோக நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தினையும் குறைத்துக் கொள்ளலாம். Prednisolone வையான மாத்திரைகளை பாவிக்கும் போது இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால் இவ் வகையான மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு அமைய குறிப்பிட்ட காலம் வரையே பாவிக்க வேண்டும்.
இந்த சேவைப்பகுதியானது பல நோயாளிகளுக்கு பயனளிக்க கூடிய வினாவை ஒருவர் வினவும் போது அதன் பதில் பல பொது மக்களிற்கு பயன்பட முடியும் என்ற நோக்கத்துடனேயே வைத்தியர்களால் நாடாத்தப்பட்டு வருகின்றது. எனவே தயவு செய்து இந்த நோக்கத்திற்கு அப்பாற்பட்ட வினாக்களை இந்தப் பகுதி மூலம் கேட்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இது பொதுமக்குளுக்கான தளம், இந்த வினாவின் மூலம் எந்த பொதுமகனுக்கும் பலனெதுவும் ஏற்படப்போவதில்லை. மன்னிக்கவும்.
பொதுவாகப் பல தாய்மார் தமது பாற்சுரப்புக் குறைவாக உள்ளது என்றெண்ணிக் கவலைப்படுகின்றனர். ஆனால் உண்மை அப்படி அல்ல. உங்களின் குழந்தையின் விகிதாசாரமான நிறை அதிகரிப்பு, போதுமானளவு சிறுநீர் கழித்தல் அடிக்கடி பாலுட்டப்படல் ஆகியன உரிய அளவு பாற்சுரப்பை எடுத்துக்காட்டும் சான்றுகளாகும். பாற்சுரப்புக் குறைவை ஏற்படுத்தும் காரணிகளாக மாப்பால், பழச்சாறு, தண்ணீர் போன்றவற்றால் பாலுட்டல் பிரதியீடு செய்யப்படுதல், பாலுட்டப் பயக்படுத்தப்படும் சூப்பிகளால் தாயின் முலைக்காம்புகள் மீதான சிசுவின் நாட்டமின்மை. முலைக் காம்புக் கவசம், சீரான கால இடை வெளியிலான திட்டமிடப்பட்ட பாலூட்டல், உறங்கும் குழந்தை சிசு பாலுறிஞ்சலை நிறுத்தமுன் பாலூட்டலை நிறுத்தல் அதிகரித்த பாற்கொழுப்பு, ஒரு மார்பகத்தை மட்டும் பாலூட்டலுக்குப் பயன்படுத்தல் போன்றவவை அடையாளப்படுத்தப்படுகின்றன. இனி பாற்சுரப்பை அதிகரிக்கும் வழி வகைகள் பற்றிப் பார்ப்போம். பாற்சுரப்பானது தேவைக்கேற்றவாறே நிர்ணயிக்கப்படுகின்றது. உங்களுக்கு அதிகரித்த பால் தேவைப்படுகையில் பாற்சுரப்பு அதிகரிக்கும். உங்கள் சிசுவிற்கு மிகத்திறனுடன் பாலூட்டுவதை உறுதிப்படுத்தவும். சிசுவால் அதிகளவு பால் உறிஞ்சலின்மூலம் அகற்றப்படுமிடத்து மேலும் மேலும் பாற்சுரப்பு அதிகரிக்கும். பாலுட்டலின்போது குழந்தையின் தலையும் உடலும் ஒரே நேர்தளத்திலிருத்தல், குழந்தையின் முகம் தாய் மார்பத்துக்கும் முலைக்காம்புக்கும் எதிராக இருத்தல், குழந்தையின் மேலுதடு அல்லது மூக்கு தாயின் முலைக்காம்புக்கு எதிராக இருத்தல் ஆகியன பாற்சுரப்பைக் கூட்டும். அடிக்கடி குழந்தைக்குத் தாய்பால் ஊட்டவும். பகலில் 1.5 – 2 மணித்தியாலத்துக்கு ஒரு முறையும் இரவில் மூன்று மணித்தியாலத்திக்கொரு தடவையும் பாலூட்டல் சிறந்தது. பாலூட்டும் ஒரு தடவை ஒரு பக்க மார்பகத்தை முழுமையாக பயன்படுத்தவும். மறுமுறை மறுபக்க மார்பகத்தைப் பயன்படுத்தவும். பாலூட்டலுக்குச் சூப்பிகளையும் போத்தலையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டும் கொடுக்கவும். திண்ம திர உணவுகளைத் தவிர்க்கவும். போதுமான ஓய்வும் உறக்கமும் பாலூட்டும் தாய்க்கு மிக அவசியம். மன அமைதியும் திருப்தியும் பாலூட்டலை அதிகரிக்கும். போதுமாகளவு சுத்தமான நீரையும் சமச்சீரான போசணையுடைய உணவையும் உள்ளெடுக்கவும். ( புரதம், கல்சியம்) பாலூட்டலுக்கு இடையிலான நேரத்தில் பம்பிகளைப் பயன்படுத்தி மேலதிகமாக மார்பங்களில் தேங்கியுள்ள பாலை அகற்றல் அதிகளவு பாலுற்பத்தியைத் தூண்டும். குழந்தைக்குப் பசியெடுக்கும்போது பாலூட்டவும். மார்பங்கள் பாலினால் நிரம்பும்வரை காத்திருக்க வேண்டாம். குழந்தையுடனான நேரடித் தொடுகையானது நீண்டதும் அடிக்கடி நிகழும் பாலூட்டலைத் தோற்றுவிக்கும். பாலூட்டும் நேரத்தை உங்கள் சிசுவே தீர்மானிக்கட்டும். ஒரு பக்க மார்பின் பாலினளவு குறையும்போது மறுபக்க மார்பில் பாலூட்டலைத் தொடரவும். இரவில் குழந்தையை அருகில் பேணுவதுடன் அடிக்கடி பாலூட்டலை மேற்கொள்ளவும். பகலிலும் நேரடித் தொடுகையைப் பேணவும். இளஞ் சூடான துணியை மார்பங்களின் மேல் இறுக்கமாகக் கட்டவும், விரல் நுனிகளால் மேலிருந்து கீழாக மார்பங்களை வருடி விடவும். முலைக்காம்பைச் சுற்றி வட்ட வடிவமாக மார்பங்களை அழுத்திவிடவும். இறுக்கமாக மூடியுள்ள கையை மார்பின் மேல் வைத்து முலைக்காம்பை நோக்கிய வண்ணமாக உருட்டுதல் வேண்டும். பாலூட்டும் தாய் நாற்காலியில் அமர்ந்து முன்புறம் குனிந்து தனக்கு முன்னுள்ள மேசையின்மேல் தலையை வைத்து ஓய்வாக இருக்க வேண்டும். மார்பகங்கள் தளர்வாகத் தொங்கியபடியிருக்க வேண்டும். பின்கழுத்திலிருந்து தோன்ப்பட்டைகளுக்கீழான பகுதிவரை முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலும் பெருவிரல்களால் அழுத்திவிடல் ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்த முறைகள் பயன்தராதவிடத்து வைத்திய ஆலோசனையை நாடி மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயன் பெறலாம்.
உங்கள் பிள்ளைக்கு வந்திருப்பது ஒரு நீண்டகால நோய் நிலமையாகும். ஆனால் மருந்துப்பாவனை மூலம் இதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அனாலும் மீளத் தோன்றக்கூடிய நோய்யாகும். சலப்பரிசோதனை மிக முக்கியமானது. நோய்நிலமைகளில் தினமும் செய்ய வேண்டும். சாதாரண நிலமையில் ஒரு கிழமையில் இருண்டு மூன்று தடவை செய்தால் போதுமானது. சலப்பரிசோதனை காலையில் செய்ய வேண்டும். பரிசோதனைக் குழாயின் 8ல் 2 பங்கு (2/8) பங்கிற்கு சிறுநீரினை எடுக்க வேண்டும். பின்னர் சரிவாகப் பிடித்து குழாயின் கீழ் அரைவாசிப்பகுதியினை நன்கு குமிழ்கள் உருவாகும் வரை சூடாக்க வேண்டும். மிகவும் கலங்கல் தன்மையாக இருப்பின் 2 துளிகள் 10 வீதம் அசற்றிக் அமிலத்தினை இட்டு பின்னர் எழுத்துக்கள் கொண்ட வெள்ளத்தாளின் முன்பாக குழாயினை வைத்து எழுத்துக்களை வாசிக்க வேண்டும்.
புரதம் இல்லை | – | கலங்கல் தன்மை இல்லை |
---|---|---|
குறைவான அளவில் | – | குறைந்த கலங்கல் தன்மை உண்டு வாசிப்பதில் எவ்வித சிரமமும் இல்லை |
+1 | – | கலங்கல் தன்மை உண்டு எனினும் எழுத்துக்கள் தெரிகின்றது. |
+2 | – | எழுத்துக்கள் வாசிக்க முடியாது, கறுப்பாகத் தெரிகின்றது. |
+3 | – | எழுத்துக்கள் தெரியவில்லை |
+4 | – | எழுத்துக்கள் தெரியவில்லை, முற்றாக வீழ்படிவடைந்துள்ளது. |
தினமும் செய்யப்படுகின்ற பரிசோதனைகள் தினக்குறிப்பேடு ஒன்றில் பதிந்து பேணப்படல் வேண்டும். அத்துடன் வைத்தியசாலைக்கு வரும்போது அதனை எடுத்து வருதல் வேண்டும். இன்னோரு முறை உள்ளது.சலபாசலிசிலிக்கமில பரிசோதனை. பரிசோதனைக்குழாயினுள் 5ml சலத்தினை எடுத்து 30 வீதம் சல்பாசலிசிலிக் அமிலத்தினை 2 துளைகளை இட்டு பின்னர் கலங்கள் தன்மையினைப் பார்த்து வாசித்தல். பின்வரும் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படல் வேண்டும்.
- சலப்பரிசோதனையின் போது 2+ இற்கும் அதிகமாக மூன்று தொடர்ச்சியான வாசிப்புக்கள் பெறப்படும் போது.
- உடல் வீக்கம், கண்களைச் சுற்றி வீக்கம் காணப்படும் போது.
அத்துடன் மருந்துப்பாவனையில் இருக்கின்ற போது கிருமித்தொற்றுக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே மிகவும் நெருக்கமான சூழ்நிலையைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். ( உதாரணமாக சனக்கூட்டம் நிறைந்த கோவில்) கிருமித் தொற்று ஏற்படின் ஆரம்பநிலையிலேயே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறல் வேண்டும். தொற்றுக்கள் மூலம் பிள்ளைக்கு உயிர் ஆபத்தான நிலமையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பிள்ளை மற்றைய குழந்தைகள் போண்று விளையாட்டுக்களிலும், ஏனைய பாடசாலைச் செயற்பாட்டுகளிலும் ஈடுபட முடியும். சலத்துடன் புரதம் வெளியேறுவதனால் உணவுடன் புரதத்தினைக குறைக்க வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் பெற்றோர்களிடம் உண்டு. போதுமான சமநிலைப்படுத்தப்பட்ட உணவு ( புரதமும், கலோரியும்) உள்ளெடுக்கப்படல் வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட நாளாந்த புரத உணவு 1.5 -2.0g/Kg தினம் சமைத்தல் வேண்டும். சிக்கலான காபோவைதரேற்று உணவுகள் தெரிவுசெய்யப்படல் வேண்டும். உடல் வீக்கம் காணப்படும் நிலையில் மட்டும் உப்பினை மிகக்குறைந்த அளவில் அல்லது தவிர்க்கப்படல் வேண்டும். உப்பு சேர்க்கப்பட்ட பொதி செய்யப்பட்ட உணவுகள் தவிர்க்கப்படல் வேண்டும். பழங்களும் பழச்சாறுகளும் வழங்குவதில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. மருந்துப்பாவனை காரணமாக நிறையை அளவாக வைத்துக்கொள்ளல் வேண்டும்.
நீரிழிவு நோயை தகுந்த முறையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் ஏனைய சுகாதரப் பிரச்சினைகள் ஏற்படுவதைக் குறைக்க முடிவதைப்போலவே, பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளையும் பெருமளவில் தவிர்த்துக் கொள்ள முடியும். எனவே குழந்தைகள் பெற்றுக் கொள்வதிலும் பிரச்சினைகள் இருக்க போவதில்லை. நீங்கள் இது சம்பந்தமாக மனக்குழப்பம் அடையத் தேவையில்லை. நீரிழிவை மருத்துவ ஆலோசனைகளுக்கமைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் அநாவசிய பிரச்சினைகளைத் தவித்துக் கொள்ளலாம்.
நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. வலிப்பு என்பது மாத்திரைகளினாலும், சரியான பழக்க வழக்கங்களினாலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். வைத்தியர்கள் ஏற்கனவே இது சம்பந்தமான பரிசோதனைகளைச் செய்து உறுதிப்படுத்திய பின்னரே வலிப்புக்கான மருந்துகளை ஆரம்பித்து இருப்பர். எனவே தினமும் வைத்தியரின் ஆலோசனைப்படி மருந்துகளை உள்ளெடுக்க வேண்டும். அத்துடன் இவர் சரியான முறையில் மருந்துகளை பாவித்தாலும் சில காரணிகள் வலிப்பு வருகின்ற சந்தர்ப்பத்தினை அதிகரிக்கின்றதன. உதாரணமாக தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்த்தல், சரியான நேரத்திற்கு உணவு உண்ணாது விடல், மன அழுத்தம், என்பனவற்றைக் கூறலாம். எனவே இவ்வாறான நிலைமைகளை தவிர்த்துக் கொள்ளல் அவசியம். அத்துடன் சில ஆபத்தினை ஏற்படுத்தக் கூடிய வாழ்க்கை நடைமுறைகளையும் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். அவையாவன
- தனியாக நீண்ட தூரப் பயணம் செய்வதையோ (துவிச்சக்கர வண்டி ஓட்டுதல், நடத்தல்) அல்லது தனியாக இருக்கின்ற சூழ்நிலைமையையும் இயன்றவரையில் தவிர்த்துக் கெள்ளல் வேண்டும்.
- நீந்துதல், உயரமான இடங்களில் ஏறுதல், கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளுதல் என்பவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
- நெருப்புக்கு அருகில் நிற்பதையும், கூரிய ஆயுதங்களை கையாள்வதையும் தவிர்க்க வேண்டும்.
- நீண்ட நேரம் இரவில் நித்திரை கொள்ளாது விழித்திருத்தல், நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தல், நேரத்திற்கு சாப்பிடாமையையும் தவிர்த்தல் வேண்டும்.
அத்துடன் வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நீங்கள் அறிந்திருத்தல் அவசியம்.
- உடனடி யாக அவரை இடது பக்கப்புறமாக படுக்க வைத்தல் வேண்டும்.
- அவரைச்சுற்றியுள்ள ஆபத்தான பொருட்களை அகற்றல் வேண்டும்.
- வாயினுள் திறப்பு போன்றவற்றை வைத்தலை தவிர்க்க வேண்டும். அத்துடன் நாக்கு கடிபடாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- வலிப்பு முற்றாக நிற்கும் வரை ஒருவராவது பக்கத்தில் நிற்க வேண்டும்.
- தொடர்ச்சியாக வலிப்பு இருக்குமாயின் (15 நிமிடங்களுக்கு அதிகமாக) உடனடியாக அவரை வைத்திய சாலைக்கு கொண்டு போக வேண்டும்.
இது பற்றி வகுப்பு ஆசிரியருக்கும் தெரியப்படுத்தல் நல்லது. மேலும் இவரின் படிப்பில் கூடிய அக்கறை எடுத்து முன்நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் இவர்கள் கூலி வேலைகள் செய்வதற்கு பொருத்தமானவர்கள் அல்ல. அத்துடன் தவறாது கிளினிக் செல்லுதல் வேண்டும். பாவிக்கும் மருந்துகளினால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகள் பற்றியும் உங்கள் வைத்தியரிடம் இருந்து தெரிந்து கொள்ளல் அவசியம். நீங்களாக வைத்திய ஆலோசனை இன்றி மருந்தினை பாவிக்காது விடக் கூடாது. புதிதாக மருந்துகளையும் பாவிக்கக் கூடாது. அத்துடன் ஒவ்வொரு தடவை வலிப்பு ஏற்படும் போதும். ஏற்பட்ட திகதி, எவ்வளவு நேரம் நீடித்தது, எப்படிப்பட்ட அசைவுகள் உடலில் காணப்பட்டது. எப்படிப்பட்ட சூழ்நிலையில் உருவானது என்பவற்றை ஞாபகத்தில் வைத்து (எழுதி வைத்து) கிளினிக் செல்லும் போது வைத்தியரிடம் கூறி ஆலோசனை பெற்றுக் கொள்ளல் அவசியம்.
இந்த அறிகுறிகளுக்கு ஒவ்வாமையால் சுவாசப்பாதையில் ஏற்படும் அழற்சியே காரணமாகும். இதை ஆங்கிலத்தில் Allergic Rhinitis என்பர். இது கிருமித் தொற்றினால் ஏற்படும் நோய் அல்ல. கிருமித் தொற்றினால் ஏற்படும் நோய்களுக்கே அன்ரிபயோட்டிக் ( Antibiotics) தேவைப்படும். தூசு மற்றும் காற்றில் கலந்துள்ள மகரந்த மணி என்பன சுவாசப் பாதையைத் தூண்டி சில இரசாயனப் பதார்த்தங்களை உற்பத்தி செய்வதால் Allergic Rhinitis ஏற்படுகின்றது. இதனால் அரிப்பு, வீக்கம், மூக்கிலிருந்து நீர் வடிதல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு என்பன ஏற்படுகின்றன. குறித்த ஒரு நபருக்கு சில பொருள்களை ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவற்றைக் கண்டறிந்து தவிர்ப்பதே இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்கும் வழியாகும். சிலருக்கு காலநிலை மாறுபாட்டின் போதும் இவ்வாறு ஏற்படலாம். இதனைத் தவிர்க்க முடியாதவர்கள் மருந்துகளைக் குளிகைகளாகவோ அல்லது நாசியினுள் விசிறியோ (Nasal spray) உள்ளெடுக்கலாம். உதாரணமாக Diphenhydramine, Cetriazine மற்றும் Loratidine என்பனவாகும். இதில் முதலில் கூறியது நித்திரையைக் கூட்டும் என்பதால் பின்னைய இரு மருந்துகளைப் பகல் வேளையில் பாவிக்க முடியும். அவ்வாறு பாவிக்க வேண்டியவர்கள் வைத்திய ஆலோசனையின் பின்னரே எடுக்க வேண்டும்.
உங்கள் நீரிழிவு நிலை கட்டுப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சியான விடயம். நீங்கள் திட்டமிட்ட உணவு முறை மூலம் உங்களின் நிறையை அதிகரிக்க முடியும். காலை உணவை நேரகாலத்துடன் ( 7 மணி) உண்ண வேண்டும். பால், தேநீர் போன்றவற்றை உணவு உண்ட பின் அருந்தவும். உணவின் முன் அருந்துவீர்களாயின் அது உங்கள் பசியைக் குறைக்கும். முழு ஆடைப்பால் நாளொன்றுக்கு 2 கப் வரை அருந்த முடியும். உணவுண்ணும் அளவையும், தடவைகளையும் அதிகரித்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு இலகுவில் ஜீரணிக்கக் கூடியதாக உணவுப் பொருட்களைத் தெரிவு செய்து உண்ணவும். சீனி, சர்க்கரை சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும். உங்களது உடல்நிறை தொடர்ந்து குறைந்து வருமாயின் அது பற்றி உங்கள் வைத்தியரிடம் தெரிவித்து உடல்நிறை இழப்பு வேறு நோய் நிலைமைகளால் ஏற்பட்டதா என அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஒரு தடவை சிறுநீரகக் கல் தோன்றி இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்டது எவ் வகையான கல் என்றும், ஏன் தோன்றியது என்பதும் இன்மும் உங்கள் சிறுநீர்த் தொகுதியில் கற்கள் உள்ளனவா என்பதும், உங்களின் சிறுநீரகத் தொழிற்பாட்டு வீதம் எவ்வளவு என்பதும் சோதிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தொடர்ந்து வரும் உங்கள் கவனிப்பு முறையைத் தீர்மானிக்க உங்களின் தற்போதைய நிலை துல்லியமாக அவதானிக்ப்பட வேண்டும். வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய உதவியை நாடுதல் நன்று. யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் சிறுநீர் சனனித் தொகுதி சம்பந்தமான விஷேட வைத்திய பிரிவு உள்ளது. தேவையேற்படின் வைத்தியர்கள் ஆலோசனைக்கு இப் பிரிவுக்கு உங்களை அனுப்பிவைப்பர்.
நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்பதற்காக மனமுடைந்து போக வேண்டிய அவசியமில்லை. இளவயதில் நீரிழிவு ஏற்படுவது தற்போது பொதுவான ஒரு விடயமே. இதனைப் பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், இதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் பல விதமான நல்ல மருத்துவ முறைகள் கண்டறிப்பட்டுள்ளன. சரியான மருத்துவ ஆலோசனையைக் கடைப்பிடித்து இளவயதில் கண்டறியப்பட்ட பல நோயாளர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார்கள். எனவே நீங்களும் மன ஊக்கத்துடன், உங்களின் வைத்திய ஆலோசனைகளுக்கமைய நடந்து கொண்டால் பாரதூரமான தாக்கங்கள் ஏதுமின்றி நீண்டகாலம் சாதாரண வாழ்க்கை வாழமுடியும்.
மாதவிடாய் சக்கரத்தில் ஒழுங்கான மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் பெண் ஒருவரில் 14ம் நாள் சூலிடல் நடைபெறுகின்றது. அதாவது சூலகத்திலிருந்து சூல் (முட்டை) வயிற்றறைக்குழியை அடைகின்றது. சில பெண்களில் இக் காலவேளையில் யோனியூடான குருதிக் கசிவு ஏற்படும். இது வழமையான மாதவிடாயின் குருதிப்போக்கிலும் குறைந்தளவாகவும் குறைந்த நாட்களாகவும் காணப்படும். சூலிடலைத் தொடர்ந்து முட்டை விந்துடன் கருக்கட்டாதவிடத்து மாதவிடாய் 28ம் நாளளவில் ஏற்படுகின்றது. மேற்கூறியது போல சிலரில் ஏற்படும் 2 மாதவிடாய்களுக்கிடையிலான குருதிக் கசிவு சாதாரணமானதே. நீங்கள் ஸ்கானின் மூலம் ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு, பிரச்சினைகள் ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ளீர்கள். உங்களுக்கு மேலதிக சந்தேகங்கள் இருப்பின் பெண்நோயியல், மகப்பேற்றியல் வைத்திய நிபுணர் ஒருவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.
புரோலக்ரின் (Prolactin) எனப்படும் ஓமோன் முற்பகச் சுரப்பியாற் சுரக்கப்பட்டு மார்பகங்களில் பாற்தொகுப்பிலே செல்வாக்குச் செலுத்துவதுடன் சூலகத்தின் தொழிற்பாடுகளையும் தடுக்கின்றது. உடற்றொழிலியல் ரீதியில், கருத்தரித்துள்ள போதிலும், பாலூட்டும் தாய்மாரிலும், அதிக மன அழுத்தம் உள்ள போதிலும், நித்திரை, உடலுறவின் போதும் prolactin அதிகரித்த நிலையில் காணப்படும். சாதாரண Prolactin level 2-29 ng/ml ஆகும் 400 – 600 mU/L வரை சிறிது அதிகரித்த நிலை எனக் கருதப்பட்டாலும். இதற்கு மேற்பட்ட நிலை பரீட்சிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 5000 mU/L இலும் கூடிய நிலை Prolactin சுரக்கவல்ல கட்டிகளால் ஏற்படுத்தப்படுகின்றது. புரோலக்ரின் அதிகரிப்பு நிலை (Hyper Prolactinaemia) பல காரணங்களால் ஏற்படலாம். Prolactinoma, கபச்சுரப்பி பரிவகக்கீழ் சுரப்பி போன்றவற்றில் ஏற்படும் நோய் நிலைமைகள், Polycystic Ovarian Syndrome (PCOS), முதலான தைரொய்ட் சுரப்பிக் குறை சுரப்பு (Primary hypothyroidism) என்பவற்றாலும், கருத்தடை மாத்திரை பாவனை, சிறுநீரகம் மற்றும் ஈரல் செயலிழப்பு, வலிப்பின் பின்னராக, நெஞ்சறைக்கூட்டுச் சுவர்ப் பாதிப்பின் பின்னராகவும் சில வகை மருந்துகளின் பாவனையாலும் புரோலகரின் அளவு கூடுகின்றது. புரோலக்ரின் அதிகரிப்பு நிலை உள்ளவர்களில் தன்னிச்சையான அல்லது வெளிப்படுத்தப்படக்கூடியதான expressible (60%) பாற்சுரப்பு நிலை காணப்படுகின்றது (Galactorrhoea). அவர்களில் குறைந்தளவு மாதவிடாய் அல்லது மாதவிடாய் அற்ற நிலை காணப்படலாம். உடலுறவின் மீதான ஆர்வமின்மை, கருத்தரிக்க முடியாத நிலை எனவும் ஏற்படலாம். சிலரில் தலையிடி, பார்வைக்களப் பிரச்சினை( Visual field defect) என்பனவும் ஏற்படலாம். எனினும் சாதாரண புரோலக்ரின் உள்ள ஒருவரிலும் பாற்சுரப்பு நிலை காணப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி நோயறிகுறிகளும் காரணிகளும் உங்களுக்கு உண்டா என்பது தெரியவில்லை. தைரொய்ட் சுரப்பியின் குறை சுரப்பு நிலை உடையவர்களிலும் பாற்சுரப்பு அவதானிக்கப்படலாம். நீங்கள் Thyroxine பாவிக்க முன்னரா அல்லது ஒரு மாதகாலம் Thyroxine பாவித்த பின்னரா உங்களது TSH அளவு மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடப்படவில்லை. எனவே நீங்கள் வைத்தியர் ஒருவரை நேரடியாக அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். தேவையேற்படின் மேலதிக பரிசோதனைகளை வைத்தியரின் பரிந்துரையுடன் மேற்கொள்ளுங்கள்.
கலோரி என்பது சக்தியை அளவிட உதவும் ஒரு அலகாகும். ஒருவருடைய சக்தித் தேவையும் கலோரி அலகில் அளவிடப்படுகின்றது. சுகதேகி ஒருவருக்கு நாளாந்தம் தேவைப்படுகின்ற கலோரியானது பின்வருமாறு வளர்ந்த சுகதேகி ஆண் ஒருவருக்கு –2500kcal வளர்ந்த சுகதேகி பெண் ஒருவருக்கு -1900kcal இதை விட இக் கலோரிப் பெறுமானமானது அவரது உடற்திணிவு, உயரம், நாளாந்த தொழிற்பாடு போன்றவற்றிலும் தங்கியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கலோரிப் பெறுமானம் பற்றிய மேலதிக தகவல்களை ”உடல் நிறைக் குறைப்பு ஒரு இலகுவான கலை – பகுதி 8” இனை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களது உடற்திணிவு சுட்டி 30.42 Kgm-2 . சாதாரணமான உடற்திணிவு சுட்டி 18-23Kgm-2) என்பதால் உங்களது உடல்நிறையை நியம மட்டத்தில் பேணுவது அவசியமானதாகும். இரு வைத்தியர்களும் சரியாகத்தான் கூறியிருக்கிறார்கள் Prediabetic முன்நிலை என்பது FBS பெறுமானம் 100 -126 mg/dl இருக்கும் நிலையாகும். நீங்கள் உங்களது உடல்நிறையை நியமமட்டத்தில் பேணுவதனூடாக அதாவது உணவுக்கட்டுப்பாடு போதிய உடற்பயிற்சி என்பவற்றின் மூலம் உங்களுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதையும் நீரிழிவினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தாமதிக்க முடியும். நீங்கள் பேண வேண்டிய உடல் நிறை 56Kg களிலும் குறைவாக ஆகும்.
உங்களுக்கு நீண்டகாலமாக நித்திரைக் குழப்பம் இருப்பதால் நீங்கள் அதற்கான காரணிகளைக் கண்டறிந்து நீக்குவதுடன், நித்திரைச் சுகாதாரத்தையும் பேண வேண்டும். இவற்றிற்கும் மேலதிகமாக உங்களுக்கு நித்திரைக் குழப்பம் ஏற்படின் உளநல வைத்தியர் ஒருவரை நேரடியாக அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
- உங்கள் குருதிக்குளுக்கோஸ் மட்டமும் குருதியமுக்கமும் நியம மட்டத்தில் பேணப்படுகின்றது என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
- நித்திரை சுகாதாரத்தைப் பேணுங்கள் (Sleep hygiene)
- உங்கள் இரவுணவை வேளையுடன் உண்ணுங்கள்.
- தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். ( 20 நிமிடம். 4 -5 மணிநேரம் அல்லது நித்திரைக்கு முன்னதாக)
- சுடுநீர்க் குளியலின் பின் தூங்கச் செல்லுங்கள்
- நித்திரையைத் திணித்து மேற்கொள்ளாதீர்கள். தூக்கம் வரும் போதே படுக்கைக்குச் செல்லுங்கள்.
- வயதிற்கேற்ற வகையிலேயே தூங்கும் நேரம் காணப்படும் என்பதால் தினமும் நித்திரைக்குச் செல்லுகின்ற, நித்திரையால் எழுகின்ற நேரங்களை ஒழுங்காக வகுத்து கடைப்பிடியுங்கள்.
- நித்திரைக்குச் செல்ல முன் அதிக நீர் அருந்துவதைத் தவிருங்கள், இதன் மூலம் இரவில் சிறுநீர் கழிப்பதற்க்காக நித்திரையில் ஏழுவதை தவிர்க்க முடியும்.
- கபீன் உடைய பானங்களை (caffeinated beverages) கோப்பி, தேநீர், மென்பானங்கள் என்பவற்றை பின்னேரத்தின் பின்னர் (6PM) அருந்தாதீர்கள்.
- பசியுடன் நித்திரைக்குச் செல்லாதீர்கள்.
- நித்திரைக்குச் செல்ல முன் இயன்றளவு உங்கள் கவலைகளைத் தீர்க்க முயலுங்கள். அன்றைய நாள் சம்பவங்களை தினக்குறிப்பேட்டில் எழுதுங்கள்.
- மதுபானம் அருந்துதல், புகைப்பிடித்தலைத் தவிருங்கள்.
- பகலில் அதிகம் தூங்குவதைத் தவிருங்கள்.
- உங்கள் படுக்கையசை் சூழலை உங்களுக்கு ஏற்றதாக மாற்றியடையுங்கள் (தேவையான அளவு காற்றோட்டம், ஏற்ற அறை வெப்பநிலை, மென்வெளிச்சம், சத்தமற்ற / உங்களுக்கு விரும்பிய மெல்லிசை, உங்களுக்கு ஏற்ற அறை நிறம், உங்களுக்கு ஏற்ற போர்வை, உங்களுக்கு ஏற்ற மெத்தை … போன்றன)
- படுக்கையை நித்திரைக்காகா மட்டும் பயன்படுத்துங்கள். (படுக்கையிலிருந்து தொலைக்காட்சி பார்த்தல் உணவுண்ணல் போன்றவற்றைத் தவிருங்கள்)
- படுக்கையறையைத் தூய்மையாக வைத்திருங்கள்.
- உங்களுக்கு பிடித்த கதைப்புத்தகம், மன அமைதி தரவல்ல நூல்களை நித்திரைக்கு செல்ல முன் படிக்கலாம்.
- மன அமைதியை ஏற்படுத்துங்கள்
- தியானம் செய்தல்
- தசைப்பயிற்சியில்