இடம் – குழந்தை மருத்துவ விடுதி
வைத்தியர் – இந்தப்பிரச்சினை கனநாளாய், கிட்டத்தட்ட ஒருவயதில் இருந்து இந்தப் பிள்ளைக்கு இருந்திருக்குது. வளர்ச்சிப் பதிவேட்டிலயும் குறிப்பிடடிருக்கினம். இப்பவரைக்கும் அஞ்சு வயது வரைக்கும் ஏன் அம்மா எந்த வைத்திய ஆலோசனையும் பெற்றுக் கொள்ளவில்லை…?
தாய் – ஊர்கிளினிக்கில மிஸ்ஸி சொன்னவா தான்… கொஞ்ச நாள் போகத் தானாகச் சரிவரும் என்று பார்த்துக் கொண்டிருந்தன்… இவனின்ர கிரகமும் மாற வேணும் எண்டுதான்….?
பெற்றோர்களின் செயற்பாடுகள், குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் சார்ந்தே இருக்கின்றன. குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலான அல்லது வெளிப்படையான நோயறிகுறிகள் உள்ள நோய் நிலமைகள் உளநெருக்கீட்டையும் பதற்றத்தையும் கொடுத்து உடனடியாக வைத்திய ஆலோசனையைத் தேடவைக்கின்றன.
மேற்குறிப்பிட்ட வகையான தற்காலிக அல்லது குறுங்கால நோய்நிலைமைகளைவிட, ஆபத்தானதும் பின்விளைவுகளைக் கொண்டதுமான ஆனால் தினசரி வாழ்வில் சீரிய அறிகுறிகளை வெளிப்படுத்தாத பல நோய்நிலமைகள் சிறுவர்களிடையே காணப்படுகின்றன. காலப்போக்கில் நன்கு தீவிரமடைந்த நிலையிலேயே இவை வைத்திய கவனத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன.
இவ்வாறான நிலமைகள் பெற்றோரால் ”பிரச்சினை” யாக அடையாளம் காணப்படுகின்றனவா? குடும்ப மருத்துவ தாதி போன்றோரால் சுட்டிக்காட்டப்படும் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடும்மனப்பாங்கு பெற்றோரில் திருப்திகரமானதாக இருக்கின்றதா? அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்குக் குறுகியகாலத்துள் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளப் படுகிறதா? பொருத்தமான வைத்திய ஆலோசனைகள் உரிய முறையில் பின்பற்றப் படுகின்றனவா?
இந்தக் கேள்விகளுக்கு “இல்லை” என்றபதிலே பெரும்பாலும் பெறப்படுகின்றது. குறிப்பாக போரின் பின்னரான மீள்கட்டமைப்புக் காலம். இந்த எதிர்மறை விளைவில் அதிக தாக்கம் செலுத்துகின்றது.
மேற்குறிப்பிட்ட வகையான நோய் நிலமைகளை அடையாளம் காண்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. ஒரு குழந்தையில் ஏற்படும் சிறிய மாற்றத்தையும் அறிவதில் தாயைவிடத் தந்தையைவிட வேறு எவரும் சிறப்பாக பங்காற்ற முடியாது.
செயற்பாட்டில் ஆர்வமிக்மை, பசியின்மை, நீண்டகால நிறைகுறைவு, நடத்தையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள், மூச்செடுப்பதில் சிரமம், உடற்பகுதிகள் வீங்குதல், ஆசாதாரணமான உடலசைவுகள், பாடசாலை பெறுபேறுகளில் திடீர் வீழ்ச்சி போன்ற பலவகையான அறிகுறிகள் மேற்குறிப்பிட்ட வகையான பெற்றோரால் இனங் காணப்படக்கூடிய அலட்சியப்படுத்த முடியாத அறிகுறிகள் ஆகும்.
சில சந்தர்ப்பங்களில் குடும்ப மருத்துவத் தாதியால் பாடசாலை மருத்துவப் பரிசோதகரால் இவை இனங்காணப்படுகின்றன. குறிப்பேடுகளில் பதியப்படுகின்றன. பெற்றோருக்கும் அறிவுறுத்தப்படுகின்றன. செயற்பாட்டுச் சங்கிலி அத்துடன் அறுந்து விடுகிறது. பின்னொரு நாளில் பிள்ளை தீவிரமான நோயறிகளுடன் வைத்திய ஆலோசனைக்காகக் காத்திருக்கும் துயர் மிகுந்த வேளையில்தான் குறிப்பேடுகள் பற்றிய ஞாபங்கள் பெற்றோரால் மீட்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட வகையான அறிகுறிகள் சில நேரங்களில் மிக இலேசாக எடுக்கப்படு விடுகின்றன. “கொஞ்சக் காலத்தில் சரிவரும் எண்டு நம்பிட்டம்”, “கிரகம் மாறச் சரிவரும்”, “பக்கத்து வீட்டுப் பிள்ளைக்கும் இப்படித்தான் இருந்து தாக மாறினது” எண்டு சொன்னவை. பிள்ளை வளர்ந்து உடம்பிலை பலம்வர மாறிடும் எண்டுதான்.. இப்படி நூற்றுக்கணக்கான நியாயங்கள் நோயறிகுறிகளின் முக்கியத்துவத்தை காலப்பெறுதியை அடித்துச் சென்ற கதைகள்.
பெரியவர்களைப் போலல்லாது குழந்தைகளின் தேவைகள் வயதுக்கேற்ப மிகப் பெரிய அளவில் மாறுபடுகின்றக. ஒரு காலப்பகுதியின் தேவைகளை அடுத்த காலப்பகுதிக்குத் தள்ளிப்போட்டு நிறை வேற்றும் போது அது பூரண பலனைத் தருவதில்லை.
“குழந்தை என்பது இன்றாகும்…” புகழ்பெற்ற குழந்தை மருத்துவரின் கருத்து இது. தினமும் விடியும் பொழுதுக்குப் பிள்ளையின் தேவைகளும் அவசியங்களும் புதிதாய் எழுகின்றன. பிற்போடல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
நீண்ட நெடுஞ்சாலை பாதை அமைப்பிற்கேற்ப மாறுபடும். பல வித வீதிச் சமிக்ஞைகள் வேகமாக விரையும் ஊர்திகள், சாரதிகள், சமிக்ஞைகளைக் கவனிக்காது போகலாம். கவனித்தும் அலட்சியமாக இருக்கலாம். கவனித்த சமிக்ஞைக்கான மாற்றத்தை காலந்தாழ்த்திச் செயற்படுத்தலாம். ஆனால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்க முடியாது.
குழந்தைகளின் தேவைகளும் அவசியங்களும் இத்தகையவையே. இவை கவனித்து கருதப்பட வேண்டியவை. காலம் தாழ்த்தப்பட முடியாதவை. காலத்தைத் தள்ளிப் போடலாம். ஆனால் அந்தக் காலதாமதத்தை எந்த விலை கொடுத்தும் ஈடுசெய்ய முடியாமற் போகலாம் ஏனேனில் குழந்தைகள் இன்றுக்குரியவர்கள்.
மருத்துவர் குமுதினி கலையழகன்.
குழந்தைநல வைத்தியர்.
விரிவுரையாளர்
யாழ். போதனா வைத்தியசாலை