சிக்கனத்துக்க பெயர் எடுத்தவர்கள் நாம். சேமிக்கும் பழக்கம் எம்பலத்துக்கு பக்கபலமாக இருந்தது. நாம் சிறுகச் சிறுகச் சேமித்த சேமிப்புகள் சத்துமா பேணிகளுக்கும், டொனிக்குகளுக்கும், பலத்துக்கு என்று சொல்லிவரும் மாத்திரைகளுக்கும், அநாவசிய மருத்துவச் செலவுகளுக்கும், இரசாயன உணவுகளுக்கும் இரையாசிக் கொண்டிருப்பது ஒரு வேதனையான விடயமாகும்.
சமூகம் ஆரோக்கியம் கிடைக்குமென்று நம்பி, ஆபத்தான பலவற்றை வாங்கி உட்கொள்வது நோயை விலைகொடுத்து வாங்குவதுக்கு ஒப்பானது. இயற்கைதான் எமது இனிய வைத்தியன். தடிமன் குறுகியகால வயிற்றோட்டம், தசைப்பிடிப்பு, சாதாரண கை, கால் உளைவு, வயிற்றுக்குழப்பம் போன்ற இயற்கையாக குணப்படக்கூடிய சிறிய நோய்களுக்குக்கூட, வைத்தியம் செய்யவேண்டும் என்று எண்ணி அநாவசியமாக செலவு செய்வதுடன் பல அவசியமாற்ற மருந்துகளையும் பாவிக்கத் தலைப்படுகிறோம். நோய்த்தடுப்பு முறைகளில் ஆர்வமற்றவர்களாகவும், நோய் வந்த பின்பு அதிகம் சிரமப்படுவர்களாகவும் இருக்கிறோம்.
நான்கு திட்டமிடப்படாத எமது நடவடிக்கைகளாலும், வாழ்க்கை முறையாலும் மருத்துவ செலவினங்கள் மலைபோல உயர்ந்து எம்மைப் பயமுறுத்தும் அளவுக்கு விசுவரூபம் எடுத்து நிற்கின்றன. இதன் காரணமாக எம்மில் பலர் உரிய மருத்துவ கவனிப்புகளை அஞ்சி பல்வேறு பாதிப்புகளுக்க உள்ளாகி வருகின்றனர்.
மருத்துவ செலவுகளை நல்லமுறையில் திட்டமிடுவோமாயின் அநாவசியமாக செலவிடப்படும் பணத்தை எமது சுகாதார முன்னேற்றத்துக்கு பயன்படுத்தி நாமும் எம்மைச் சார்ந்தவர்களும் சுகமாக வாழ முடியும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பின்வரும் தகவல்களை நினைவில் நிறுத்துவோம்.
- இயற்கையாக மாறக்கூடிய நோய்களுக்கு மருந்தெடுப்பதைத் தவிர்ப்போம்
- “சத்து நிறைந்தது” என்ற விளம்பரங்களுடன் செயற்கையாக தயாரிக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு அதிக விலையில் விற்பனையாகும் பொருள்களைத் தவிர்த்து, இயற்கையான மலிவான உணவுப் பொருள்களான முட்டை, பால், மீன், இலைவகை, மரக்கறி, பழங்கள், உழுந்து, பயறு, பருப்பு போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வோம்.
- நோய்த்தடுப்பு முறைகளில் அதிக ஆர்வம் காட்டுவோம்.
- சிறிய நோய்களுக்கு மருத்துவ நிபுணர்களைத் தேடிச்செல்வதைத் தவிர்த்து, அருகிலுள்ள உங்கள் குடும்ப வைத்தியரின் ஆலோசனையையோ, அல்லது அண்மையில் உள்ள அரசாங்க வைத்திய சாலையிலுள்ள வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்களின் ஆலோசனையையோ பெற்றுக்கொள்வோம்
- விற்றமின் மாத்திரைகளையும், டொனிக்குகளையும் தேவையற்ற முறையில் தொடர்ந்து பாவிப்பதை தவிர்த்துக் கொள்வோம்.
- குடிப்பதையும், புகைப்பதையும் நிறுத்தி அந்தப் பணத்தை சுகாதாரமேம் பாட்டுக்கு பாவிப்போம்.
- மருத்துவர்களின் ஆலோசனை இன்றி அநாவசியமான சோதனைகளை திரும்பத் திரும்பச் செய்வதைத் தவிர்த்துக்கொள்வோம்.
- முன்னைய மருத்துவ குறிப்புகளையும் மட்டைகளையும் தொலைக்காது பாதுகாப்பதுடன் மருத்துவரை சந்திக்கச் செல்லும்போது அவற்றை எடுத்துச் செல்வதன் மூலம் அநாவசியமான சோதனைகள் செய்யப்படுவதைத் தவிர்க்க முடியும்.
- அரச வைத்தியசாலை கிளினிக்குகளில் சேருவதற்கு அல்லது நோய் கடுமையாக இருந்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு வைத்தியர்களை தனியார் வைத்திய நிலையங்களில் சந்தித்து அவர்களின் சிபார்சுக் கடிதம் பெறப்பட வேண்டும் என்ற ஒரு தப்பபிப்பிராயம் நிலவுகிறது. எந்த நோயாளர்களும் அரச வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்குச் சென்று தாமாகவே இவற்றை ஒழுங்குசெய்து கொள்ளமுடியும்.
- பிறரை நோயாளியாக்கும் பாவச் செயல்களான கன்டோஸ், இனிப்பு வகைகளை பரிசாகக் கொடுத்தல், வீட்டிற்கும், திருமண வைபவங்களுக்கும் வருபவர்களுக்கு சோடா கொடுத்தல் போன்றவற்றை நிறுத்திக்கொள்ளவோம். இவை மற்றவர்களின் மருத்துவ செலவுகளை அதிகரிக்கும் தீயசெயல்களாகும்.
- தினமும் உடற்பயிற்சி செய்து உடல் நிறையை சரியான அளவில் பேணிவருவோமாயின் மருத்துவச் செலவுகள் பெருமளவு குறைவடையும்.
- உங்களுக்கு சாதாரணமாக ஏற்படும் கை,கால் உளைவுகள், நோக்கள், வயிற்றுக் குழப்பம், தடிமன், சாதாரண வைரஸ் காய்ச்சல், தசைப்பிடிப்பு, குறுகியகால இருமல், தும்மல் போன்ற நோய்களை இயற்கையாக மாறிவிடுவது நல்லது.
மருத்துவ செலவுகளிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து நோயுற்ற போதும் குறைவற்று வாழ்வோம். நோய்த்தடுப்பு முறைகளில் கூடிய கவனம் செலுத்தி நோயற்று வாழ முயலுவோம்.
வி.சுகன்யா
தாதியக் கல்லூரி
யாழ்ப்பாணம்