உங்கள் முகப் பராமரிப்பில் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்களோ அதைவிட உங்கள் பாதங்களை பராமரிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு உண்டு. ஏனெனில் இடத்துக்கு இடம் நகர்ந்து எமது தேவைகளை இயல்பாக பூர்த்திசெய்வதற்கு இறைவனால் அளிக்கப்பட்ட இயற்கையான கொடை பாதங்களாகும்.
எனவே செல்வத்தை நாம் கவனமின்றி விடுவது நியாயமாகுமா?
உங்கள் ஆரோக்கியமான பாதக் கவனிப்புக்காக…..
- உங்கள் பாதங்களைத் தினமும் கூர்ந்து அவதானித்தல் வேண்டும் அத்துடன் பாதங்களைச் சுத்தமாக பேணுதல் வேண்டும்.
- குறைந்தது பாதங்களை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கழுவுதல் வேண்டும்.
- பாதங்களை நன்றாக உலர்ந்ததாக வைத்திருத்தல் வேண்டும்.
- ஈரலிப்பாக வைத்திருக்ககூடிய பூச்சுக்களை (Cream) பயன்படுத்த வேண்டும்.
- உங்களுடைய கால்விரல் நகங்களைக் குறுக்காக, தட்டையாக, நேராக வெட்டுதல் வேண்டும்.
- கால்களில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டும்.
- கால்களில் உணர்ச்சி குறைவாக இருந்தால் அதைப்பற்றிக் கவனமெடுத்தல் வேண்டும்.
- புகைத்தலைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் பாதங்களுக்கான குருதி விநியோகத்தை இது தடைசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- கால்களை ஒன்றன்மேல் ஒன்றாக குறுக்கே போடுதலைத் தவிர்க்க வேண்டும்.
- சூடான பொருள்களுடன் காலினது தொடர்பைத் தடுத்தல் வேண்டும்.
- குளித்தலுக்கு சூடான நீர் பயன்படுத்தலாகாது.
- மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் உட்கார்ந்து செல்லும்போது புகை போக்கியில் (Silencer) பாதங்களை வைக்காது தவிர்த்தல் வேண்டும்.
- பாதங்களுக்கான உடற்பயிற்சிகளை ஒழுங்காகவும் கிரமமாகவும் செய்தல் வேண்டும்.
- காயங்கள் ஏற்படின் அவற்றுக்கு சிறந்த முறையில் மருந்து கட்ட வேண்டும்.
- பாதணிகள் அற்று நடத்தலாகாது
- உங்களுடைய பாதங்களைத் தீயிலிருந்தும், குளிரிலிருந்தும் கூர்மையான பொருள்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.
- குளிரான, சூடான மேற்பரப்புகளில் பாதணிகளற்று நடக்கக்கூடாது.
உங்கள் பாதத்தின் ஆரோக்கியத்தைப் பேணச் சிறந்த பாதணிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
- மென்மையான சௌகரியத்தைத் தரக்கூடிய சப்பாத்துக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- கூரான முனையுடைய திறந்த சப்பாத்துக்களை அணிவதைத் தவிர்க்கவும்.
- பெட்டிவகை (box type) பாதத்திற்கேற்ற இடமுள்ளதான ( well rooming ) சப்பாத்துக்களை பயன்படுத்தல்
- உயரமான குதியுள்ள பாதணிகளைப் பயன்படுத்தலாகாது.
- வீட்டில் தட்டையான சப்பாத்துக்களைப் பயன்படுத்த வேண்டும்.
- பாதங்களில் ஏதாவது சிக்கல்கள் அவதானிப்பின் நீரிழிவு நோயாளர் பாதணிகளை (Diabetic Shoes) பயன்படுத்த வேண்டும்.
- உடற்பயிற்சி செய்யும் போது உடற்பயிற்சி வீரர்கள் அணியும் பாதணிகளை பயன்படுத்தவேண்டும்.
- எப்பொழுதும் இறுக்கமான பருத்தி, பொலியஸ்ரர் கலந்த காலுறைகளை அணிதல் வேண்டும்.
நீரிழிவு நோயாளர்களுக்கான பாதக் கவனிப்பு ஏன் முக்கியமானது?
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நீரிழிவு நோயாளர்களிடையே 20 வீதமானோர் பாதப்பிரச்சினைகளினாலேயே பாதிக்கப்பட்டவர்கள். நீரிழிவு உள்ளவர்களின் பாதங்களில் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுப்பதற்கு பாதணிகள் மிக முக்கிய பங்களிப்பைச் செய்கின்றன. நீரிழிவு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது என அறியும் பொழுதே அவருக்கு ஏற்ற பாதணிகளைப் பாவிப்பது பற்றியும், மேலும் அந்தப் பாதணிகளை நன்கு பரிசோதனை செய்து காலத்துக்காலம் தேவை ஏற்படின் தகுந்த மாற்றங்கள் செய்யவேண்டியது பற்றிய அறிவுரைகள் கூறுவதும் மிக முக்கியமானதாகும்.
நீரிழிவு நோயினால் பாதங்களில் ஏற்படும் புண்கள் காரணமாக உலகில் குறிப்பாக இலங்கையிலும் பாதங்கள் வெட்டி அகற்றுவதற்கு இது முக்கிய காரணமாக அமைகின்றது.
நீரிழிவு நோய் இல்லாதவர்களிலும் பார்க்க நீரிழிவு நோய் உள்ளவர்களில் இந்தப் பாதப் பிரச்சினை ஏற்படுகிறது. மற்றவர்களை விட நீரிழிவு நோய் உள்ளவர்களில் ஏன் பாதப்பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன என நோக்கிவோமாயின் பின்வருவன காரணிகளாக அமையலாம்.
- நரம்புகள் பாதிக்ப்படல் இதனால் உணர்ச்சி குறைவடைந்து காயங்கள் ஏற்படும் தன்மை அதிகரிக்கும்.
- சுற்றயல் குருதிக்குழாய்களில் ஏற்படும் நோய்நிலை
- இரண்டாம் தர தொற்று அடிக்கடி ஏற்படுதல்
நீரிழிவு உள்ளவர்கள் பாதுகாப்பு பாதணிகள் பாவிப்பதன் நோக்கங்களான
- காயம் ஏற்பட்டிருக்கும் இடங்களில் உள்ள மேலதிக அழுத்தங்களை ஒரே இடம்துக்குச் செல்லவிடாமல் மற்ற இடங்களுக்கும் சரிசமமாகப் பிரிப்பதன் மூலம் நோய்த் தாக்கத்தைத் குறைக்கலாம்.
- கால்களில் ஏற்படும் திடீர் தாக்கத்தைப் பாதணிகள் மூலம் தாங்கிக் கொள்ளலாம்.
- காயங்களிலிருந்தும், உராய்வுகளிலிருந்தும் ஏற்படும் நோவைக் குறைத்தல்.
- மூட்டுகளில் அசைவுகளை மட்டுப்படுத்தல்.
- குறைபாடுகளைத் தாங்கிக்கொள்ளல்
நீரிழிவு உள்ளவர்களின் பாதங்கள் எவ்வளவு பாதிப்படைந்துள்ளன என்பது பற்றிய விவரங்கள் பாத பரிசோதனை நிலையத்தில் நரம்பு, இரத்தநாளம் சம்பந்தமான தீவிர ஆய்வுக்குப் பின் தீர்மானிக்கப்படும். புண்கள் ஏற்படும் ஆபத்து நிலையை அடையாத நீரிழிவு உள்ளவர்களுக்கு விசேட பாதணிகள் அணிய வேண்டிய அவசியம் ஏற்படமாட்டாது. அவர்கள் எவ்வாறு தங்கள் பாதங்களைப் பராமரிப்பது மற்றும் தகுந்த சாதாரண பாதணிகளை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்பன போன்ற போதனைகள் மூலம் பயனடைவார்கள்.
குறைபாடுகள் இல்லாத அதேவேளை பாதுகாப்பு உணர்ச்சிகள் அற்ற நீரிழிவு உள்ளவர்கள் மென்மையான இடவசதியுள்ள தளத்தையுடைய பாதணிகளை அணியவேண்டும். பாதணிகள் அவர்களுடைய சுய நினைவு இல்லாமல் கழன்று விழுவதைத் தடுப்பதற்கு பாதணிகளில் மேலதிக துணைப்பிடிப்பு தேவைப்படுகின்றது. இது அவர்களது கால்விரல் நுணிக்கு பாரத்தை ஏற்படுத்தி சிக்கல்லை உருவாக்கும். இவ்வாறு பாதுகாப்பு உணர்ச்சி அற்ற குறைபாடுகள் உள்ள நீரிழிவு உடையவர்கள் பாதங்களில் புண்கள் ஏற்படும் பெரிய அபாயத்தை உடையவர்களவார்கள். அவர்களுக்கு நோய்த்தாக்கத்தைத் தாங்கக்கூடிய விசேட பாதணிகள் அவசியம்.
இந்தப் பாதணிகள் அதிக ஆழமுடையனவாகவும் உயரமான முன் பக்கத்தைக் கொண்டனவாகவும் மென்மையான உட்பாதத் தோலைக் கொண்டனவாகவும் கால் பருமனுக்கேற்ற இலகுவாகக் கட்டக்கூடிய நாடாக்களைக் கொண்டனவாகவும் இருத்தல் வேண்டும்.
கால் பாதங்களில் பாதி துண்டிக்கப்பட்ட அல்லது புண் ஏற்படும் தாக்கத்தையுடைய நீரிழிவு உடையவர்கள் அடிக்கடி பரிசோதனைகளைச் செய்து தங்கள் பாதங்களை நன்கு பராமரிக்காவிடின் மீண்டும் பாதம் துண்டிக்கப்படும் ஆபத்து அதிகமாக உண்டு.
இவ்வாறுள்ளவர்கள் அவர்களுக்கென்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட மென்மையான உட்தோலையும் கடினமான வெளித்தோலையும் கொண்ட பாதணிகளை அணிதல் வேண்டும்.
பாத சிக்கல்கள் காணப்படும்போது தென்படும் அறிகுறிகள்
- நிறமாற்றம்
- பாதம் வீக்கமடைந்திருத்தல்
- வெப்பநிலைமாற்றம்
- பாதங்களில் விறைப்புத்தன்மை
- ஆணிக்கூடு போன்ற கடுமையான திண்மப்பகுதி
- கொப்பளங்கள் ஏற்படல்
- வெடிப்புக்கள், வெட்டுக்காயங்கள் போன்றன ஏற்படல்
- காய்ந்து தடித்து இருத்தல்
- விரல்கள் நெருக்கமாக இருத்தல்
- உள்வளர்ச்சியுள்ள விரல் நகங்கள்
- பாதத்தில் புண் ஏற்படல்
- விரல்களுக்கிடையே பங்கசு தொற்றுக்கள் ஏற்படல்
- என்பு அழற்சி
நிரிழிவு நோயாளர்களுக்காக…..
- உங்கள் முகத்தை விட உங்கள் பாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
- ஒவ்வொரு தடவையும் வைத்தியரிடம் உங்கள் பாதங்களைக் காட்டும் போதும் காலுறைகளைக் கழற்றிக் காட்டுங்கள்.
- உங்களுக்குரிய பாதணிகள் வாங்கும்போது பாதங்கள் மாலையில் சற்று வீங்கியிருப்பதால் மாலையில் வாங்குவதே சிறந்தது.
- ஒவ்வொரு முறையும் உங்கள் பாதணிகளைக் கழற்றிய பின்பும் பாதங்கள் சிவந்திருக்கின்றனவா புண்கள் ஏதாவது தோன்றுகின்றனவா அல்லது நீர் வடிகின்றதா என்பதை அவதானிக்கவும்.
- புதுப்பாதணிகளின் தோல்கள் மிருதுவாகவும் வரைக்கும் அவற்றை நீண்ட நேரத்துக்கு அணியாமல் சொற்பநேரத்துக்கு அணிய வேண்டும்.