இன்றைய மனித சமூகமோ கோபத்தினால் குடும்பத்தையும் குலைத்து சமூகத்தையும் சீர்குலைத்து எங்கும் வன்முறையும், அடாவடியுமாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மனிதன் என்பவன் பலவகை உணர்வுகளால் அளப்படுகிறான். அவன் ஆசை, கோபம், மகிழ்ச்சி, பயம், காமம், கவலை, ஏக்கம், இரக்கம் போன்றவற்றால் இயக்கப்படுகின்றான். இவற்றுள் எது கூடினும் எது குறையினும் அது நோய் நிலையாகத்தான் கருதப்படும். ஆகவே மனிதன் எல்லாவற்றுக்கும் அளவோடு இருப்பானாயின் அவன் இந்த பூமியில் குழப்பமில்லாமல் வாழலாம். இதை வள்ளுவர் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்.
“எது மிகினும் குறைவினும் நோய் செய்யும்” என்னவாயிருந்தாலும்
அளவோடு இருந்தால் அது நலமாக இருக்கும்.
உணர்வுகளுள் மிக மோசமானதும் கொடியதும் கோபமே ஆகும். இந்த கோபத்தினால் ஆத்திரப்படுகிறோம், அவசரப்படுகின்றோம், நிதானம் இழக்கின்றோம். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் என்ன என்ன வெல்லாமோ செய்கிறோம். இதனால் நண்பனை இழக்கின்றோம், மனைவியை பிரிகின்றோம், குடும்பத்தை குலைக்கின்றோம். நிம்மதி இழக்கின்றோம். எமது செயல்பாடுகள், சிந்தனைகள் சிதறடிக்கப்படுகின்றன. இதனால் குடும்பத்தில் சமூகத்தில் எவ்வளவோ சீரழிவுகள் ஏற்படுகின்றன. இந்த கோபமானது எத்தனையோ நோய்களை உண்டாக்குகின்றது. இருதய நோய்கள் பலவற்றுக்கும் உளநோய்கள், உயர்குருதி அமுக்கம் போன்றவற்றுக்கும் ஆளாகின்றோம். இந்த கோபத்தினால் மனித சமூகத்துக்கு நட்டமே அன்றி இலாபம் கிடையாது எனவே கோபத்தை ஒழித்து நல்ல மனிதனாக வாழ முயற்சிப்போம்.
மனிதம் என்பது ஒருவருக்கொருவர் உதவி செய்து அன்பு பாராட்டி தானும் வாழ்ந்து, மற்றவரையும் வாழவைத்து சமூகத்தை உயர்த்துவதே தவிர சமூகத்தை சீரழிப்பது அல்ல.
கோபத்தை குறைக்க சில வழிகள்
- எது கோபத்தை உண்டாக்கின்றதோ அந்த காரணியை கூடுமானவரை தவிர்க்கப்பாருங்கள்.
- கூடுமானவரை வெறுப்பையும், சினத்தையும் குறையுங்கள்.
- எதிலும் அவசரப்படாதீர்கள், கொஞ்சம் ஆறுதலாக சிந்தியுங்கள்.
- எப்போதும் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்
- கோபம் வரும் போது மௌனமாக இருக்கப்பழகுங்கள்
- சூழ்நிலையை மாற்றுங்கள், அந்த இடத்திலிருந்து விலகியோ அல்லது வேறு எங்காவது செல்லுங்கள்.
- ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள், அந்த நேரம் கோவிலுக்கோ அல்லது அமைதியான இடத்துக்கோ செல்லுங்கள்
- செய்யும் காரியங்களை எப்போதும் செம்மையாகவும் நேர்மையாகவும் செய்யப் பழகுங்கள்.
- கோபம் வரும் போது முடிந்தால் ஒரு கோப்பை தண்ணீர் அருந்துங்கள், அல்லது குளிர் நீரில் குளியல் போடுங்கள்.
- நாம் நன்றாகவும் மேன்மையாகவும், பேரும் புகழுடன் வாழ வேண்டும் மானால் நிச்சயம் கோபத்தை குறைத்தே ஆகவேண்டும்.
செ.தவச்செல்வம்
தாதிய உத்தியோகத்தர்
யாழ் போதனா வைத்தியசாலை