சிசேரியன் சத்திரசிகிச்சையின் மூலமான பிள்ளைப் பேற்றின் பின்னர் எனக்கு முன்னுள்ள பிரசவத் தெரிவுகள் எவை?
இலங்கையில் 20 -30 வீதமான கர்ப்பிணிப் பெண்கள் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் சிசுவைப் பெற்றெடுக்கின்றனர். சில பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்டசிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்படுகின்றனனர்.
சிசேரியன் சத்திர சிகிச்சைக்குட்பட்ட நீங்கள் சாதாரண யோனிவழிப் பிரசவம் அல்லது சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் மீண்டும் சிசுவைப் பெற்றெடுக்கலாம். இது பின்வரும் காரணிகளில் தங்கியுள்ளது.
- சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொண்டமைக்கான காரணம்
- உடனடியாக அல்லது அவசரமாக மேற்கொள்ளப்பட்டதா?
- கர்ப்பப்பை மீதான சத்திரசிகிச்சை வெட்டின் வகை.
- தற்போதைய கர்ப்பம் அசாதாரண பிரச்சினைகளைக் கொண்டுள்ளமை.
சிசோரியன் சத்திர சிகிச்சையின் பின்னான யோனிவழிப் பிறப்பு என்றால் என்ன?
ஒரு பெண் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் ஒரு பிள்ளையைப் பெற்றபின் யோனிவழியூடாக அடுத்த பிள்ளையைப் பெறுதல். இப்பிரசவம் சாதாரணமாக அல்லது கருவிகளின் உதவியுடன் நிகழ்த்தப்படலாம்.
சிசேரியன் சத்திர சிகிச்சையின் பின்னரான யோனி வழிப்பிறப்பின் நன்மைகள் எவை?
- சிக்கலற்ற சாதாரணமான பிறப்பு
- குறுகியகால மீளுகையும், குறுகியகால வைத்தியசாலைத் தங்குதலும்.
- குறைந்தளவு வயிற்று நோ.
- சத்திரசிகிச்சை மூலமான சிக்கல் நிலைகள் இல்லாமை.
சிசேரியனுக்கு பின்னரான யோனி வழிப்பிறப்பு வெற்றிகரமானதா?
ஏறத்தாழ 75வீதமான சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்பட்ட பெண்கள் அடுத்த சிசுவை யோனி வழியூடாகப் பிரசவிப்பதில் வெற்றி கண்டுள்ளனர்.
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்பட்டவர்கள் சிசேரியன் மூலமே பிள்ளையைப் பிரசவித்தல் நலம்.
சிசேரியனின் பின்பான யோனிவழிப் பிறப்பை பாதிக்கும் காரணிகள் எவை?
- சிசேரியன் மூலம் மட்டுமே சிசுவை பெற்றெடுத்திருத்தல்
- ஊக்கிகளைப் பயன்படுத்தல்
- பிரசவத்தில் முன்னேற்றமின்மை
- அதிகரித்த உடற்பருமன்
சிசேரியனின் பின்பான யோனிவழிப் பிறப்பில் உள்ள குறைபாடுகளை் எவை?
- அவசரமான சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படலாம். இது 20 வீதமான பெண்களில் நிகழலாம்.
- இரத்தப் பரிமாற்றமும் கிருமித்தொற்றும் அதிகளவில் நிகழலாம்.
- சத்திரசிகிச்சை வடு பலவீனமாதலும் வெடித்தலும். இது 0.5 வீதமான பெண்களில் நிகழலாம்.
- சிசுவின் மூளைப் பாதிப்பு. இது 0.2 வீதமான பெண்களில் நிகழலாம்.
சிசேரியனின் பின்னரான யோனிவழிப்பிறப்பு எச்சந்தர்ப்பங்களில் பொருத்தமற்றது.
- இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட் பட்டிருத்தல்.
- கருப்பை வெடித்திருத்தல்.
- கருப்பை நெடுங்கோடாக வெட்டிற்கு உட்பட்டிருத்தல்
- பிரசவ காலச் சிக்கல் நிலைகள்
மீண்டும் சிசேரியன் சத்திரசிகிச்சை வெய்வதிலுள்ள அனுகூலங்கள் எவை?
- இது ஒரு நீண்ட சிக்கலான சத்திரசிகிச்சையாகும் இதன்போது குடல், சிறுநீர்ப்பை பாதிக்கப்படலாம். சிசுவும் வெட்டுக்காயங்களுக்கு உட்படலாம்.
- குருதிக் கலன்களினுள் குருதி கட்டியாகும் வாய்ப்பு அதிகம். இது உயிராபத்தை ஏற்படுத்தும். ஆயிரம் பெண்களில் ஒருவருக்கு நிகழலாம்.
- மீளுகைக்கு கூடிய காலம் தேவைப்படும்.
- சிசுவுக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்படலாம். சத்திரசிகிச்சை மூலம் பிறந்த சிசுக்களில் 3 தொடக்கும் 4 வீதமான சிசுக்களே பாதிக்கப்படுகையில் யோனி வழிப் பிறப்பில் பிறந்த சிசுக்களில் 2 தொடக்கும் 3 வீதமான சிசுக்களே பாதிக்கப்படுகின்றன.
- எதிர்காலத்திலும் சிசேரியன் மூலமே பிள்ளை பெற வழிவகுக்கலாம்.
சிசேரியனின் பின்னரான யோனிவழிப் பிரசவத்திற்கு திட்டமிட்டுள்ள எனக்குப் பிரசவவலி தோன்றினால் நான் என்ன செய்யவேண்டும்.
- உணவு நீர் உள்ளெடுப்பதைத் தவிர்த்தல்.
- உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய ஆலோசனையைப் பெறுதல், உங்களின் பிரசவம் மகப்பேற்று நிபுணர் உள்ள தை்தியசாலையிலே நடைபெற வேண்டும்.
சிசேரியனின் பின்பான யோனிவழிப் பிறப்புக்குத் திட்டமிட்டுள்ள எனக்கு பிரசவவலி பிரசவத் திகதி முடிந்த பின்பும் தோன்றாவிடின் என்ன செய்யலாம்?
- காத்திருத்தல் (பிரசவவலி தோன்றுமட்டும்)
- பிரசவ வலியைத் தூண்டுதல் ஆபத்தானது
- சிசேரியன் சத்திர சிகிச்சைக்குட்படுதல்
சிசேரியன் சத்திர சிகிச்சைக்குத் திட்டமிட்டுள்ள எனக்குப் பிரசவ வலி தோன்றினால் என்ன செய்ய வேண்டும்.
- உணவு, நீர் உள்ளெடுப்பதைத் தவிர்த்தல்
- மகப்பேற்று வைத்திய நிபுணர் உள்ள வைத்தியசாலையை உடனடியாக நாடவேண்டும். ( அவசரகால அம்புலன்ஸ் வண்டி மூலம்)
Dr.யோ.சிவாகரன்
யாழ் போதனா வைத்தியசாலை