அதீத தொழில்நுட்பங்களும் நவீன வாழ்க்கை முறைகளும் எம் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்திருக்கின்ற போதிலும் எம்மிடையே காணப்பட்ட நாம் அன்றாட வாழ்வில் செய்து வந்த பல இலகுவான உடல் அப்பியாசங்களை இல்லாதொழிக்க காரணமாகியுள்ளன. இதுவே நாம் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டதற்கான அடிப்படைக் காரணியாகும்.
உடற்பயிற்சியில் ஈடுபடுகயைில் உடற்தசை இழையங்கள் குளுக்கோசின் முழு வினைத்திறனுடன் பயன்படுத்த வாய்ப்பளிக்கப்படுகிறது. அத்தோடு இவ்வினைவானது 1 – 2 நாள்கள்வரை நீடிக்கிறது. எனவே நாளாந்தம் உடற் பயிற்சியில் ஈடுபடுவதானது குருதியில் குளுக்கோசின் அளவினை சரியான மட்டத்தில் பேணுவதற்கு இன்றியமையாததாகும்.
உடற்பயிற்சியானது பல வடிவங்களில் எம்மத்தியில் காணப்படுகின்றது.
- வீட்டுத்தோட்டத்தில் வேலை செய்தல்
- பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுதல்.
- தோட்டத்தில் அல்லது சுற்றுப்புறத்தில் புற்புதர்களைக் கொத்தி துப்பரவாக்கல்.
- மேல்மாடிகளில் ஏறும்பொழுது மின் உயர்த்தி (Lift) களில் செல்வதை தவிர்த்து படிகளில் ஏறிச் செல்லுதல்.
- இந்து சமயத்தவராயின் கோயிலை 3, 5, 7, 9 தடவை வலம் வருதல்
- வாரம் ஒருமுறை பாத யாத்திரை செய்பவர் எனின் வாரத்திற்கு 2 அல்லது 3 தடவையாக அதிகரித்தல்.
- சைக்கிள்லோடுதல், நீந்துதல்
இவை போன்ற எளிய திட்டங்களை வகுத்துக்கொள்வதன் மூலம் ஆத்ம திருப்தி கிடைப்பதோடு, உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். தினசரி உடற்பயிற்சியில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக இருப்பதே நீரிழிவினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கும் எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் அமைப்பான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அந்த உடற்பயிற்சியை சரியான விதத்தில் ஆரம்பித்து அதனைத் தொடர்வதற்கு பல காரணிகள் முட்டுக்கட்டைகளாக அமைந்து விடுகின்றன.
எம்மில் பலர் எப்பொழுதும் சொகுசாக இருப்பதற்கே ஆசைப்படுகின்றோம். இன்றும் சிலர் உடலுக்கு வேலை கொடுப்பதற்கு முயற்சிப்பதும் இல்லை. தயாராகவும் இல்லை. இன்னும் என்னைத் தொந்தரவு செய்யாதீர் என சொல்பவரும் எம்மிடை பலர் உண்டு.
நாம் உடற்பயிற்சியின் தாற்பரியத்தை புரிந்துகொள்ள வேணடிய கட்டாயத்தில் உள்ளோம். நாம் நாளாந்தம் போதுமான உடற்பயிற்சி செய்யாதவிடத்து
- நீரிழிவின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு செல்கிறது.
- கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கவழக்க முறைகளாலும், போதிய தேக அப்பியாசம் இல்லாததாலும் உடல் நிறையானது மேலும் அதிகரித்து செல்கிறது.
- நீரிழிவினால் உண்டாக்ககூடிய கண், சிறு நீரகம், நரம்புப் பிரச்சினைகள் மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்துக்களும் அதிகரிக்கின்றது.
- எமது வாழ்க்கை திறனும் குறைவடைகின்றது.
உடற்பயிற்சிகளுக்கு போதுமான நேரத்தை ஓதுக்க முடியாத நிலை, உடற்பயிற்சியை செய்வதற்கு உடல் இடம் கொடுக்காமை மற்றும் உடற் பயிற்சியானது சில வேளைகளில் அதிகுறைந்த குருதியமுக்கத்தை தோற்றுவிக்கலாம் என்ற அச்சமும் உங்களின் உடற்பயிற்சி மீதான நாட்டத்தை குறைத்து நிற்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் உடற்பயிற்சிகளில் ஈடுபடும் பொழுது
- குருதியில் குளுக்கோசின் அளவை கட்டுப்பாட்டுக்கள் பேண முடியும்.
- ஆரோக்கியமான உடல் எடையை பேண முடியும்
- மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களையும் குறைத்துக்கொள்ள முடியும்.
- அதீத உடல் ஆற்றலை பெறமுடியும்.
- எமது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்கொள்ளமுடியும்.
முதற்படி எடுத்து வைப்போம்
உடற்பயிற்சியாது எமது உடல் ஆரோக்கியமாக இருக்க நாளாந்தம் செய்ய வேண்டிய ஒன்றாகும். நாளாந்தம் உண்ணுதல், உறங்குதல் போன்ற சாதாரண செயற்பாடுகளை போல உடற் பயிற்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஏற்கனவே வீட்டுத்தோட்டம், நடத்தல் போன்ற சில உடல் அப்பியாசங்களை செய்பவராயின் அதன் அளவை சற்று அதிகரித்து மேலும் சிறந்ததோர் பயனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் நீரிழிவு நோய் உடையவராயின் மிதமான அல்லது ஒரளவு தீவிரமான உடற்பயிற்சி வகைகளே பாதுகாப்பான முறைகளாகும். மேலும், நடக்கும் போது உங்கள் கால்களையும் பாதங்களையும் நன்றாக கவனிததுக் கொள்வதோடு குருதியின் குளுக்கோசின் மட்டத்தையும் அவ்வவ்போது சரி பார்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்பொழுது உங்கள் இதயத்துடிப்பு வீதம் அதிகரித்தல், சுவாசித்தல் சிறிய சிரமங்கள் ஏற்படல், அதிக வியர்வை, தசைப்பிடிப்பு, சிறுமூட்டு நோவுகள் என்பன ஏற்படலாம். இவை அனைத்தும் சாதாரணமாக நடக்கக்கூடியவையே.
உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்துவரும் பொழுது காலத்துடன் உடல் உறுதி பெறுவதோடு உங்கள் வாழ்க்கை இலகுவானதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். உடற்பயிற்சியை திட்டமிடும் பொழுது எவ்வளவு காலத்துக்கு செய்யப்போகின்றேன். எவ்வகையான உடற்பயிற்சிகளை செய்யப்போகின்றேன் என சரியாக திட்மிட்டுக்கொள்வது அவசியமாகும்.
உடற்பயிற்சியானது அதன் தீவிரத்தை பொறுத்து 10 பிரதான அடக்கப்படுகிறது.
O – ஓய்வு
1 – மிகவும் மிதமானது
2 – மிதமானது
3 – இடைப்பட்ட மட்டம்
4 – ஓரளவு கடினமானது
5 – 6 – கடினமானது (ஆழமான சுவாசம்)
7 – 9 – மிகக்கடினம்
10 – உச்சம்
மிதமான (1 – 2) உடற்பயிற்சிகள்
சுலபமான நடை, தோட்டம் செய்தல், தூசி தட்டுதல், உடைகளை சலவை செய்தல், யோகா, பந்து வீசுதல் போன்றன.
இடைப்பட்ட மட்ட (3) உடற்பயிற்சிகள்
வேகமாக நடத்தல், படிகளில் ஏறுதல், நடனம் என்பன
கடினமான (6) உடற்பயிற்சிகள்
ஓடுதல், சைக்கிளோட்டம், கூடைப்பந்து
நீங்கள் ஒரு தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்புகின்றீர்கள் எனில், உங்கள் வைத்தியர் அல்லது தேர்ச்சி பெற்ற உடற்பயிற்சி அல்லது போசனை ஆலோசகரிடம் ஆலோசனை பெறுதல் அவசியம்.
ஜே.ஆர். ஷங்கர் லம்பேர்ட்