இன்றைய யுகத்திலே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்படுவோர் பலர். நீரிழிவு நோயானது பரம்பரைக் காரணிகளாலும், உணவுப் பழக்கங்களினாலும் ஏற்பட்டாலும் அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். மேலும் நீரிழிவு கட்டுப்பாடில்லாமல் காணப்படின் குருதியின் வெல்லமட்டம் கூடி அவை நரம்புக்கலங்களின் கவசங்களைப் பாதிப்பதாலும், கலங்களுக்குத் தேவையான குளுக்கோசு கிடைப்பது குறைவதாலும் நரம்பு சம்பந்தமான பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுகின்றது. அந்த வகையிலே நீண்ட காலமாக நீரிழிவு நோய் உடையவர்களது சாதாரண முறைப்பாடு கால் பாதங்கள் விறைக்கின்றன, காலில் காயங்கள் ஏற்படுவது தெரிவதில்லை, வயிறு பொருமளாக உள்ளது போன்றவையாகும். இவையெல்லாம் நரம்புப் பாதிப்பாலேயே ஏற்படுகின்றன. எமது உடலில் நரம்புகள் மின்னிணைப்பு கேபிள்கள் போல மூளையிலிருந்து சமிக்ஞைகளைக் கடத்துகின்றன. இந்த நரம்புக் கணத்தாக்கம் தொடர்ச்சியான தன்மையாக இடம்பெறுகின்றது. இதன் மூலமே நோ, வலி, உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. நீரிழிவு நிலையில் இந்த நரம்புகள் தாமாகவே அன்றி உயர் வெல்லமட்ட உறுத்துதலாலேயே பாதிப்பை எதிர் நோக்குகின்றன. நரம்புக்குக் குருதியை வழங்கும் சிறுகுருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாலும் இந்த நிலை ஏற்படலாம். இதனால் கணத்தாக்கம் தடைப்பட்டு சரியான உணர்திறனை வெளிப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றது.
இந்த நரம்புப் பாதிப்பானது பின்வருமாறு வெளிக்காட்டப்படலாம். சுற்றயல் நரம்பப்பாதிப்பு அறிகுறியாக தொடுதலை அல்லது தூண்டுதலை உணரும் தன்மை குறைவடைதல், ஊசியால் குத்துவது போன்ற அல்லது கால்கள் பாரமாக இருப்பது போன்ற உணர்வு. அடிப்பாதங்கள் எரிவது போன்ற உணர்வு என்பன ஏற்படுவதுடன் தசை நார்கள் பாதிப்படைந்து அவற்றின் தோற்றத்திலிருந்து மாறுபடும் மேலும் தன்னாட்சி நரம்புத் தொகுதி பாதிக்கப்படுவதால் குருதியில் வெல்ல மட்டம் குறைவதால் ஏற்படும் அறிகுறிகளைக் கூட அறிய முடியாத நிலை ஏற்படலாம்.
தலைச்சுற்று, கூடிய நேரம் நிற்க முடியாமை, உடல் நிலை மாறும் போது குருதியமுக்கம் குறைவடைதல், குடல் நரம்பு விநியோகம் பாதிப்பதால் வயிற்றோட்டம், குமட்டல், வாந்தி, சலத்தை முழுமையாகக் கழிக்க முடியாமல் இருத்தல், உணவு உட்கொள்ளும் போது வியர்த்தல் மற்றும் மலட்டுதன்மைக்கு காரணிகளின் ஒன்றான ஆண்குறி விறைப்படைதலில் தாமதம் போன்ற பாதிப்புக்களைக் காணலாம்.
இதனைத் தடுப்பதற்காக அல்லது இதனால் ஏற்படும் பாதிப்புக்களின் தீவிரத் தன்மையைக் குறைப்பதற்காக சில செயற்பாடுகளைச் செய்யலாம். அந்த வகையில் குருதியில் வெல்லமட்டத்தைச் சரியாகப் பேணும் வகையில் சரியான மருத்துவ ஆலோசனை (கிளினிக்) பெறல், பாதிப்புக்களின் அறிகுறிகள் சிறிய அளவில் வெளிப்படுத்தப்படும் போதே அவற்றைச் சரி செய்யலாம். சில விற்றமின் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் போது ஓரளவு குறைக்கலாம். மேலும் கால், பாதங்கள் விறைப்பதனால் உணர்திறன் குறைவடைந்து காயம் ஏற்படக்கூடிய வாய்ப்பைத் தவிர்க்க பாதங்களுக்கு மிருதுவான முழுமையாக மூடக்கூடிய காற்றோட்ட வசதியுடைய குதிக்காலில் பூட்டி வைக்கக் கூடிய பாதணிகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
ஒரிடத்திலிருந்து எழும்பும் போது அல்லது படுக்கையிலிருந்து எழும்போது சிறிது நேரம் எழுந்து இருந்த பின்னர் உடல் நிலையை மாற்றலாம். பாதங்களுக்குக் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இரவில் பாதங்களைக் கழுவி ஈரமில்லாது துடைத்து சரியாக கவனிக்க வேண்டும். சாப்பிடும்போது வியர்த்தல், சத்தி, குமட்டல், போன்றவற்றுக்கு மருத்துவ ஆலோசனையுடன் சிறிதளவு உணவை இடைவெளியில் உட்கொள்ள வேண்டும். சலப்பையிலிருந்து சலம் முழுமையாக செளியேறாவிடின் வயிற்றில் கீழ்நோக்கிய திசையில் சிறி அமுக்கம் பிரயோகிக்கலாம். ஆண் குறி விறைப்படைதலைத் தூண்ட செயற்கை முறையான பல பொறிமுறைகள் உள்ளன. வைத்திய ஆலோசனையுடன் அவற்றை பிரயோகிக்கலாம். தம்பதியினருக்கான உளவள ஆலோசனைகளையும் பெறலாம். நீரிழிவின் பாதிப்பைக் குறைத்து தீவிரமடையாமல் எம்மை நாம் கவனித்து நலமோடு வாழ்வோம்.
பத்மராசா பத்மநிருபன்.
தாதிய உத்தியோகத்தர்
யாழ் போதனா வைத்தியசாலை