சுன்னாகம் மண்ணிலும் அதன் நிலத்தடி நீரிலும் கலந்துபோயிருக்கும் பெருமளவிலான எண்ணெய்ப் படிவுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கும் இந்த மண்ணைத் தூய்மைப் படுத்துவதற்கும் இனி என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திப்பது பயனுடையதாக இருக்கும்.
முதலாவதாக எண்ணெய்க்கலப்பு நடந்திருக்கும் பகுதிகள் தெளிவாக இனம் காணப்பட்டு அந்தப்பகுதி மக்களுக்கு மாற்று குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படுவது நல்லது. அத்துடன் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் நிலத்தடி நீரை குடிப்பதற்கோ சமையலுக்குப் பாவிப்பதைத் தவிர்த்துவிடவேண்டும். இதற்கு மேலதிகமாக புதிதாக சுற்றாடலிலோ அல்லது நிலத்தடி நீரிலோ எண்ணெய்க்கலப்பு நடத்துகொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொண்ணப்பட்டு, சுற்றாடல் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வது முக்கியமானதொன்றாகும். சுன்னாகம் மின் உற்பத்தி நிலையப் பகுதியின் மண்ணிலே எங்காவது எண்ணெய் செறிவு மிக அதிகமாகக் காணப்பட்டால் அந்தப்பகுதி மண்ணை அகழ்ந்து எடுத்து அப்புறப்படுத்துவதன் மூலம் புதிதாக எண்ணெய் நிலத்தடி நீரைச் சென்றடைவதைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தப் பிரதேச மக்களுக்கு வேறு பகுதிகளில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வந்து விநியோகிப்பதை விட எண்ணெய்க் கலப்பு இடம்பெற்றுள்ள பகுதி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து அதனைச் சுத்திகரித்து மக்களுக்கு விநியோகித்தால் அந்தப் பகுதி மக்களின் குடிதண்ணீர் தேவை பூர்த்தி அடைவதுடன் நிலத்தடி நீரிலே கலந்து போயிருக்கும் எண்ணெய்ப் படிவங்களும் படிப்படியாக அகற்றப்படுவதற்கு வசதியாக அமையும். அத்துடன் தொடர்ச்சியாக உறிஞ்சி எடுக்கும் பகுதியை நோக்கி நிலத்தடி எண்ணெய் படிவங்கள் நகரும். இது நிலத்தடி எண்ணெய்ப படிவங்கள் அகற்றப்படுவதை இலகுவாக்கும். கடல் நீருடன் கலந்திருக்கும் எண்ணெய்களை அகற்றுவதற்கு சில பக்றீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நிலத்தடி நீரில் கலந்துபோயிருக்கும் எண்ணெய்களை அகற்றுவதற்கு இந்த முறையைப் பயன்படுத்த முடியாது.
இந்தப்பிரதேச மக்களுக்குப் புதிதாக ஏதாவது சுகாதாரப்பிரச்சினைகள் ஏற்படுகின்றனவா என்று மருத்துவக் குழுக்கள் வழிப்புடன் இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அத்துடன் இந்தப் பிரதேசத்து மக்களிடையே அவர்களின் ஆரோக்கிய நிலை சம்பந்தமான ஆய்வுகளும், மருத்துவக் குழுக்களினால் ஆரம்பிக்கப்படவேண்டிய நிலை எழுந்திருக்கிறது. ஏதாவது சுகாதாரப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டால் அது சம்பந்தமான நடவடிக்கைகளும் ஆய்வுகளும் விரிவு படுத்தப்படவேண்டும். இந்தப் பகுதி நிலத்தடிநீரை விலங்குகளோ அல்லது பறவைகளோ அருந்த விடுவதற்கு முன்னர் அந்த நீரை சிறிதளவு நேரம் ஒரு பாத்திரத்திலோ அல்லது வாளியிலொ வைத்திருக்கும் பொழுது எண்ணெய்க் கலப்பின் பெரும்பகுதி நீரின் மேற்பரப்புக்கு வந்து சேரும். அதன்பின்னர் அந்த மேற்படலத்தை அகற்றியபின் அதனை பறவைகளும் விலங்குகளும் அருந்த விடலாம். இதன் மூலம் கோழி, ஆடு, மாடு போன்றவை இந்த எண்ணெய் கலப்பினால் தாக்கப்படும் வீதத்தைக் குறைத்துக்கொள்ளலாம். இவற்றிலே எண்ணெய்த் தாக்கம் ஏற்பட்டால் அவற்றிலிருந்து பெறப்படும் முட்டை, இறைச்சி, என்பவற்றின் தரத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
இந்தப் பிரதேசத்திலே விளையும் விவசாய உற்பத்திப் பொருள்களான மரக்கறி வகைகள், பழ வகைகள், தேங்காய் என்பவற்றிலே கழிவு எண்ணெயில் காணப்படும் ஏதாவது இரசாயனப் பதார்த்தங்கள் செறிவடைந்திருக்கின்றனவா என்பதைக் கண்டறிய ஆய்வுகள் ஆரம்பிக்கப்படுவது அவசியமாகும். இந்த விவசாய விளை பொருள்களை மனிதர்கள் பாவிப்பது பாதுகாப்பானதுதானா என்பதைக் கண்டறியும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
நிலத்தடி நீருடன் கலந்துபோயிருக்கும் எண்ணெய், இயற்கையான நிலத்தடி நீரோட்டத்தால் கழுவப்பட்டு கடலைச் சென்றடைய நீண்டகாலம் எடுக்கும். அதுவரை காத்திருக்க முடியாது. அவ்வாறு காத்திருப்போமாயின் அது பல சூழல் பாதிப்புகளையும், சுகாதாரப் பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும். எனவே பலமுனைகளில் பல்துறைசார் விற்பன்னர்களின் வழிகாட்டலில் பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டி இருக்கின்றது. எண்ணெய்ச் செறிவு கூடிய பிரதேசங்களின் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுவதன் மூலம் நிலத்தடிநீர் தூய்மையாகும் வேகத்தை விரைவு படுத்த முடியும்.
ஒருதுறையினர் இன்னொருதுறையினர் மீது குற்றம் காண்பதை விடுத்து இனி என்ன செய்ய வேண்டும் என்பதையே பிரதான குறிக்கோளாகக் கொண்டு ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு செயற்படுவோமாக இருந்தால் இந்த எண்ணெய்க்கலப்பால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்து அல்லது தவிர்த்து இந்த நிலையை வெற்றிகரமாகக் கையாள முடியும். அத்துடன் எதிர்காலத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் தடுத்துக்கொள்ளவும் முடியும்.
சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்.
யாழ். போதனா வைத்தியசாலை.