மூச்சிழுப்பு என்பது, உயிர் சுருதியுடனான விசில் ஊதுவது போன்ற சுவாசத் சத்தமாகும். சுவாசத் தொகுதியின் சிறு சுவாசக் குழாய்களின் சுருக்கத்தால் மூச்சிழுப்பு ஏற்படுகின்றது. இது ஒரு பொதுவான சுவாசத் தொகுதி சம்பந்தப்பட்ட அறிகுறியாகும். இருபத்தைந்து தொடக்கம் முப்பது சதவீதமான ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் எப்போதாவது ஒரு முறை மூச்சிழுப்பால் அவதிப்பட்டிருக்கலாம். அதேபோல் ஆறுவயதிற்குட்பட்டசிறார்களில் அரைவாசி பேருக்கு ஒரு தடவையாவது மூச்சிழுப்பு ஏற்பட்டலாம்.
மூச்சிழுப்புக்கான காரணங்கள் எவை?
1. மூச்சிழுப்புக்கான மிகப் பொதுவான காரணியாக சுவாசத் தொகுதியில் ஏற்படும் கிருமித் தொற்றுக்களே அமைகின்றன. அவற்றிலும் வைரசு கிருமித் தொற்றுக்களே பொதுவானவை. குழந்தையோன்றுக்கு மெல்லிய காய்ச்சலுடன், இருமல், மூச்சிழுப்பு என்பன ஏற்பட பொதுவாக வைரசுக்களே காரணமாகும். சில சமயங்களில், காய்ச்சல் மாறிய பின்னரும் இருமல் மூச்சிழுப்பு சில நாட்களுக்கு நீடிக்கலாம். இதை வைரசினால் தூண்டப்படும் (Viral Induced wheezing) என அழைப்பார். இதை விட, சில சமயங்களில் கடுங்காய்ச்சலுடன் கூடிய நியூமோனியா போன்ற பக்ரீறீயா தொற்றுக்களின் போதும் மூச்சிழப்பு ஏற்படலாம்
2. மூச்சிழுப்பு ஏற்படுவதற்கான அடுத்த பிரதான காரணியாக அஸ்துமா (Asthma) எனப்படும் முட்டுவருத்தம் அமைகின்றது. ஒரு பிள்ளைக்கு அடிக்கடி இருமலும், மூச்சிழுப்பும் ஏற்படும் போது அக்குழந்தைக்கு அஸ்துமா உள்ளதா என தீர்மானிக்க வேண்டும்.
3. சிலவேளைகளில், சிலவகையான உணவுகளுக்கு, மருந்துகளுக்கு அல்லது இரசாயனப் பதார்தங்களுக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படும்போது மூச்சிழுப்பு ஏற்படலாம்.
4. வீட்டினுள்ளே காணப்படும் சமையலறைப் புகை, சிகரட் புகை, தூசி போண்றவற்றால் காற்று மாசடைவதால் சிறுவர்களுக்கு மூச்சிழுப்பு, இருமல் என்பன ஏற்படலாம்.
5. சிறுபிள்ளைகள் பிறபொருட்களை வாயில் வைத்துக் கடிக்கும் போதோ அல்லது உட்கொள்ளும் போதோ புறையேறி பிறபொருட்கள் (Foreign body) சுவாசப் பாதையை அடைப்பினும் மூச்சிழுப்பும் மூச்சுத் திணறலும் ஏற்படலாம்.
6. அரிதாக சுவாசக் குழாய்களில் ஏற்படும் பிறவிக் குறைபாடுகளினால், குழந்தைக்கு பிறந்ததிலிருந்தே மூச்சிழுப்பு ஏற்படலாம்.
மூச்சிழுப்பு உள்ளபோது நாம் அவதானிக்க வேண்டியவை எவை?
பொதுவாக அவதானிக்க வேண்டியது எதுவெனில் குழந்தையொன்றின் ஆரோக்கிய நிலையாகும். ஒரு குழந்தையானது பாலருந்தாது, உணவு உட்கொள்ளாது சோர்வடைந்து, மூச்சுவிடுவதில் சிரமப்படின் அது ஆபத்தானது அச்சந்தர்ப்பத்தில் உடனடி வைத்திய சிகிச்சை தேவையாகும்.
மேலும் மூச்சிழுப்பு ஏற்படும் போது அது ஏன் ஏற்பட்டுள்ளது எனவும் அவதானிக்க வேண்டும். உதாரணமாக திடீரென ஒரு குழந்தைக்கு இருமலும் மூச்சுதிணறலும், மூச்சிழுப்பும் ஏற்படுமாயின் அது எதையோ விழுங்கியதால் புரையேறியுள்ளதா எனப் பார்க்க வேண்டும் அவ்வாறே தோலில் கடியுடனான தடுப்பங்கள் ஏற்பட்டு மூச்சிழுப்பு ஏற்படுமாயின் ஏதோவொன்றிற்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதா என பார்க்கவேண்டும். காய்ச்சலுடன் இருமல், மூச்சிழுப்பு, மூச்சுவிட சிரமப்படல் ஏற்படும்போது கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது என அனுமானிக்கலாம்
மூச்சிழுப்பு உள்ளபோது என்ன செய்ய வேண்டும்?
மேலே குறிப்பிட்டவை போன்ற ஆபத்தான அறிகுறிகள் காணப்படுகையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். சிலசமயங்களில் பிறபொருட்களை விழுங்கி புறையேறியதால் மூச்சிழுப்பு ஏற்பட்டிருக்குமாயின் அதற்கான முதலதவியை செய்யலாம்.
அஸ்துமாவினால் மூச்சிழுப்பு ஏற்படுமாயின் வைத்திய ஆலோசனைப்படி அதற்கான மருந்துகளைப் பாவிக்கலாம். உதாரணமாக அடிக்கடி முட்டு வருபவர்களுக்கு ஏற்கனவே தரப்பட்ட உள்ளிழக்கும் மருந்து பம்பிகளை (Inhalers) சரிவ பாவிக்க வேண்டும்.
ஒவ்வாமையினால் மூச்சிழப்பு ஏற்பட்டிருப்பின் ஒவ்வாமைக்கான காரணியை கண்டறிந்து தவர்ப்பதுடன் (உதாரணம் சில மருந்துவகைகள்) உடனடியாக வைத்திய சிகிச்சையைப் பெறவேண்டும்.
சுவாசக்கருமித் தொற்றுக்களினால் மூச்சிழுப்பு ஏற்பட்டிருக்கையில் குழந்தையின் ஆரோக்கிய நிலையை அவதானிப்பதுடன், தகுந்த சிகிச்சை பெறவேண்டும்.
மூச்சுழுப்பு ஏற்படாமல் எவ்வாறு தவிர்க்கலாம்?
முதலில் மூச்சிழுப்பிற்கான காரணியைக் கண்டறிந்து அதனைத் தவிர்க்க வேண்டும். கிருமித் தொற்றுக்களால் மூச்சிழுப்பு ஏற்படுமாயின், சுவாசத் தொற்றுக்கள் ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு பரவாமலிருப்பதற்கான நியம பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். முக்கியமாக தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையை அல்லது திசுத்தாளை பயன்படுத்துவதுடன், நன்றாக கைகளை கழுவுதலும் வேண்டும். அதேபோல் ஒவ்வாமைக்கான காரணிகளை எதிர்காலங்களில் தவிர்த்தல் வேண்டும். சிறுபிள்ளைகள் பிறபொருட்களை உட்கொண்டு புரையேறிவிடாமல் பெற்றோர் அவதானத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக சின்னஞ்சிறு பாகங்களைக் கொண்ட விளையாட்டுப் பொருட்களை சிறுபிள்ளைகளுக்கு விளையாட கொடுக்க கூடாது.
அஸ்துமா நோயுள்ள பிள்ளைகளுக்கு அது ஏற்படுவதற்கான காரணிகளை கண்டறிந்து இயன்றவரை அவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும். உதாரணமாக சிகரட்புகை, சமையலறை புகை, தூசி என்பவை. அதேபோல் குழந்தை உறங்கும் அறையில் தூசி இன்றி படுக்கை விருப்புக்கள் மெத்தை, ஆடைகள் தூய்மையாக இருத்தல் வேண்டும். வீட்டினுள்ளே செல்லப் பிராணிகளை விடக்கூடாது. ஒவ்வாமை உண்டுபண்ணக்கூடிய பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும் மூச்சிழுப்பு மீண்டும், மீண்டும் வராமலிருக்க பாவிக்கும் உள்ளிழுக்கும் மருந்துப் பம்பிகளை சரிவர பாவித்தல் வேண்டும். வைத்திய ஆலோசனைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்.
இறுதியாக மூச்சிழுப்பு என்பது சுவாசம் சம்பந்தப்பட்ட ஒரு அறிகுறியாக அமைவதுடன் அதற்கான பல காரணங்கள் உண்டு என அறியலாம். அக்காரணிகளைத் தவிர்ப்பதன் மூலம் மூச்சிழுப்பு பிள்ளைகளுக்கு ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் மூச்சிழுப்பு உள்ளபோது ஆப்திற்குரிய மற்றைய அறிகுறிகளை அவதானித்து உடனடிச் சிகிச்சையை பெறவும் வேண்டும்.
Dr.ந.ஸ்ரீசரவணபவானந்தன்.
குழந்தை நல வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை