தூக்கம் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாததும், தவிர்க்கமுடியாததும் அத்துடன் ஒரு இயற்கையான நிகழ்வும் ஆகும். இது நலமான வாழ்வுக்கும் சுகமான ஆரோக்கியத்துக்கும் அவசியம். ஒருவர் எத்தனை மணிநேரம் படுக்கையிற்படுத்து இருக்கிறார் என்பது முக்கியம் அல்ல. எவ்வளவு நேரம் நன்றாகத் தூங்குகிறார் என்பது தான் முக்கியம். ஆழ்ந்த தூக்கத்தின் பயன்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்.
1. பகலில் அதிகவேலை செய்த தசைகள் நரம்புகளுக்கு ஒய்வை அளிக்கிறது.
2. உடலில் அதிக சக்தியை சேமிக்க உதவுகிறது.
3. இரவு நேர உடல் வளர்ச்சி (சுரப்பு நீர்) Growth Hormone அதிகம் சுரப்பதாற் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
4. பல்வேறு நோய்களால் ஏற்படும் கலங்கள் மற்றும் திசுக்கள் மற்றும் இழையங்களில் ஏற்படும் பாதிப்புக்களைப் பழுது நீக்க உதவுகிறது.
5. எமது முகத்தசைகளுக்கும், தோலுக்கும் ஒய்வளித்துத் தோலினைச் சுருங்காதவாறு வைத்திருக்கிறது.
6. எமது உடலின் முழுமையான களைப்பைக் குறைக்கின்றது. அத்துடன் பகலில் உடலாலும், மனதாலும் இழக்கும் சக்தியை இரவில் தூக்கத்தில் மீளவும் பெறுவதற்கு உதவுகிறது.
7. பிறக்கும் புதிய நாளின் சோதனைகள், கடமைகளை எதிர்கொள்ள, உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.
8. எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து உடலைப் பாதுகாப்பதுடன், இருதயநோய்கள், உயர்குருதி அமுக்கம் போன்ற நோய்கள் ஏற்படுவதைக் குறைப்பதற்கும் அவை ஏற்படின் அவற்றை வேகமாக குணப்படுத்துவதற்கும் ஆழ்ந்த தூக்கம் உதவுகின்றது.
9. மன அழுத்தம் மற்றும் உளம் சார்ந்த நோய்களைக் குணப்படுத்த ஆழ்ந்த தூக்கம் மிக இன்றியமையாதது.
இது போன்ற பல நன்மைகளை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து மனிதன் பெறுகின்றான். தூக்கம் ஒரு மர்ம மாளிகையைப் போன்றது. அதன் வாசல்களைத் திறந்து அதனுள் மறைந்து இருக்கும் இரகசியங்களை விஞ்ஞானிகள் இன்றும் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றார்கள். எனினும் தூக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளமுடிய வில்லை. ஆய்வுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை என்று கூடக் கூறலாம்.
ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதற்குச் சில வழிகள்
1. அவரவர் வசதிக்கேற்ப முதலில் தூங்கும் இடத்தைத் தூக்கம் வருவதற்கு ஏற்றதான சூழ்நிலையை ஏற்படுத்துகின்ற மாதிரி அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக் முயலுங்கள். பாய் முதற்கொண்டு பெற்சீற் தலையணைக் கவர்வரை அடிக்கடி சுத்தம் செய்து மாற்றிக் கொள்ளுங்கள்.
2. கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற எலக்ரோனிப் பொருள்களை படுக்கை அறையில் வைத்திருப்பதை தவிருங்கள். இவற்றில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் உங்கள் தூக்கத்தை கலைக்கலாம்.
3. நன்றாக தூங்குவதற்குத் தினமும் செய்யும் உடற்பயிற்சி உதவும், காலை நேர உடற்பயிற்சி நல்லது. அத்துடன் தூங்கப் போவதற்கு முன்பு செய்யும் லேசான உடற்பயிற்சி தூக்கத்தை வரவழைக்கும்.
4. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் தூங்கப் போகும் பழக்கம் வேண்டும். நேரத்தை மாற்றி மாற்றிக் கண்ட நேரத்தில் தூங்குவது தூக்கத்தைக் கெடுக்கும்.
5. தூக்கத்தைக் கெடுக்கக்கூடிய மது, கோப்பி, கோலா பானங்கள், சிகரட் போன்றவற்றைத் தூங்கப்போகும் நேரத்தில் பாவிப்பதைத் தவிருங்கள்.
6. வயிறு காலியாக இருந்தாலுமு் தூக்கம் வராது. மிதமான இரவு உணவு காரமற்ற எண்ணெய் அற்ற உணவு சிறந்தது.
7. படுக்கபோகும் முன்பு ஒரு கோப்பை பால் அருந்துவது நல்லது. பாலில் தூக்கத்தைத் தூண்டும் பொருள் “டிரிப்டோபான்” இருக்கிறது. எனினும் ஆஸ்துமா, சுவாசக்குழாய் அழற்சி, கொலஸ்ரோல் சம்பந்தமான நோயுள்ளவர்கள் வைத்திய ஆலோசனையுடன் அருந்தலாம்.
8. உங்களுக்கு நீரிழிவு, உயர்குருதி அமுக்கம் கொலஸ்ரோல் போன்ற நோய்கள் இருப்பினும் அவற்றைக் கட்டுப்பாட்டிலும் சீராக வைத்திருப்பதன் மூலமும் மருந்து உணவுகளை ஒழுங்காக எடுப்பதன் மூலமும் நல்ல தூக்கத்தைப் பெறமுடியும்.
9. மன அழுத்தம், உளம் சார்ந்த நோய்கள், பாதிப்புகள் இருப்பின் அதற்குரிய மருந்துகளைச் சீராக எடுத்தலும் வைத்திய ஆலோசனையை சீராகப்பெறுதலும், வைத்தியரிடம் உங்களுக்கு இருக்கும் பாதிப்புகளை ஒளிவுமறைவு இன்றிக் கூறுவதன்மூலம் சரியான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
10. படுக்கபோவதற்கு முன்பு வெது வெதுப்பான தண்ணீரிற் குளித்தல், மெல்லிய இசையை ரசித்தபடி படுப்பது, புத்தகங்கள் படிப்பது, தியானம், மூச்சுப் பயிற்சிகளைச் செய்யலாம்.
11. கதவு, யன்னல்களில் ஊடாக வரும் இயற்கையான புத்தம் புதிய காற்றுக்கு எதுவும் இணையாகாது. எனவே உங்கள் படுக்கை அறைக்கு முடியுமானால் இயற்கையான காற்று கிடைக்கக் கூடியதாகச் செய்யுங்கள். அத்துடன் குறைவான வெப்பத்தை உமிழும் மின்விளக்குகளைப் பொருத்துங்கள். இவை குளிர்ச்சியாக இருப்பதோடு இயற்கை வெளிச்சத்தை ஒத்ததாக இருக்கும்.
12. உங்கள் படுக்கை அறையின் படுக்கை விரிப்புகள், பெற்சீற், கதவு ஜன்னற் சீலைகள், மற்றும் படுக்கை அறையின் சுவர் போன்றவற்றின் நிறமானது உங்கள் கண்களுக்கும் மனதிற்கும் இதமளிக்கக்கூடிய அடர்த்தி குறைந்த நீலம், வயலட், பச்சை போன்ற மெல்லிய நிறங்களாக இருப்பது நல்லது.
13. தூங்கும்போது தலைக்கு வைத்திருக்கும் தலையணையானது தலை மற்றும் கழுத்தினைச் சரியாத் தாங்கக் கூடியதாக மெல்லிய கச்சிதமான 4 அங்குலத்திற்கு (உயரம்) மேறபடாத தலையணையைத் தேவைப்படின் உபயோகியுங்கள். மற்றும் இறுக்கம் இல்லாத உடைகளை அணிதல் அண்டும் பொருள்களை (திறப்பு, பேஸ்) அணிந்திருக்கும் உடையில் வைத்திருத்தல் உறுத்தல் ஏற்படும் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
14. உங்கள் படுக்கை அறியில் கொசு, ஈ, கரப்பான் பூச்சி, எறும்பு, மூட்டைப்பூச்சி போன்றவற்றிற்கு மருந்து தெளிப்பதன் மூலம் இவற்றின் உறுத்தல்களை தவிர்க்கலாம். தேவைப்படின் நுளம்பு வலை பாவிக்கலாம்.
15. ஒளி உமிழும் மணி அடிக்கும் சுவர்க்கடிகாரம், சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒலி, மாசு அறை, புகை, தூசு ஆகியன உட் செல்லுவதைக் குறைக்கக்கூடியதாகப் படுக்கை அறை அமைதல் நல்லது.
16. குறட்டை விடுபவர்கள் ஆழ்ந்த தூக்கத்துக்குச் செல்வது சிரமமாதலால் குறட்டையைக் குறைப்பதற்குரிய வழிமுறைகளைக் கையாளவேண்டும். உதாரணம் அதீத பருமன் உடையவர்கள் இடது புறம் அல்லது பக்கவாட்டில் படுத்தல் வேண்டும். மல்லாந்து படுத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
ச.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்
யாழ் போதனா வைத்தியசாலை