நோயுற்றவர்கள் நோய்காரணமாகவும், பல வசதிக்குறைவுகள் காரணமாகவும், உரிமைமீறல்கள் அல்லது அவர்களின் உரிமைகள் மதிக்கப்படாமை காரணமாகவும் அவமதிப்புக்கள் காரணமாகவும் ஆதரவின்மை, பாரமரிப்பு போதாமை போன்ற காரணங்களினாலும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளாகிவருகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கு வைத்தியசாலை மட்டங்களிலும், சமுதாய மட்டங்களிலும் பல பரந்துபட்ட நடவடிக்கைகள் தேவையாக இருக்கின்றது. இதன் மூலம் பல தவறான புரிந்துணர்வுகளையும் நிவர்த்தி செய்ய முடியும். நோயுற்றவர்களும் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு தம்மாலாக முயற்சிகளை எடுப்பதற்கு முயலவேண்டும்.
ஒருவர் தொழில்புரியும் இடத்தில் காணப்படும் அபாயநிலமை காரணமாக நோய்வாய்ப்பட்டால் அல்லது காயமுற்றால் அதற்கான நிவாரணத்தை தொழில் வழங்கனரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை இருக்கின்றது. அத்துடன் நிரந்தர தொழில் புரியும் காலத்திலே ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டால் அவர் 3 மாதகாலம் வரை சம்பளத்துடனான லீவு பெறும் உரிமை இருக்கின்றது.
மருத்துவக்குழுவோ அல்லது ஊடகத்துறையினரோ நோயுற்ற ஒருவரின் நோய்சம்பந்தமான தகவல்களை அம்பலப்படுத்தினால் அதுசம்பந்தமாக சட்டநடவடிக்கை எடுக்கும் உரிமை நோயுற்றவருக்கு இருக்கின்றது. வைத்திய நிலையங்களில் தாம் அவமதிப்பட்டதாக உணர்ந்தாலோ அல்லது தமது பராமரிப்பு முறை திருப்திகரமாக இல்லை என்று உணர்ந்தாலோ அது சம்பந்தமாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பது நோயுற்றவர்களின் உரிமையும் கடமையுமாகும்.
மருத்துவ ஆலோசனைக்கு எதிராக ஒருவர் வீடு செல்லும் சந்தர்ப்பங்களில்கூட நோய்நிரூபண அட்டையையும் வீட்டிலே பாவிப்பதற்கான மருந்துகளையும் தொடர்ந்து வைத்தியசாலைக்கு வரவேண்டிய திகதிகளையும் கேட்டு பெற்றுக்கொள்ளும் உரிமை நோயுற்றவருக்கு இருக்கின்றது. மனம் மாறி அல்லது நோய் கடுமையாகி மீண்டும் அவர் வைத்தியசாலைக்கு வந்து அனுமதிபெற விருப்பப்படின் எந்தவித மனச்சஞ்சலமும் இன்றி வைத்தியசாலைக்கு வந்து அனுமதிபெறும் உரிமை அவருக்கு இருக்கின்றது.
தரக்குறைவான மருந்துகள் வழங்கப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கடமையும் உரிமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. வைத்திய நிலையங்களில் தமக்கான அடிப்படை வசதிகளை கேட்டு பெற்றுக்கொள்ளும் உரிமையும் நோயுற்றவருக்கு இருக்கின்றது.
தொடர்ந்து மருந்தெடுக்கவேண்டிய தேவை உடயவர்கள் வைத்தியசாலை கிளினிக்கில் OPD ஊடாக தாமாகவே சென்று சேர்ந்துகொள்ளும் உரிமை இருக்கிறது. இதற்கு வேறு வைத்தியர்களின் சிபார்சு கடிதங்களோ அனுமதிக் கடிதங்களோ அவசியமில்லை.
எமது உரிமைகள் மீறப்படுவதாக நாம் உணரும்பொழுது அதுசம்பந்தமாக பேசுவதற்கு நாம் அச்சப்படவோ வெட்கப்படவோ வேண்டிய அவசியமில்லை. உரிமைகளை மறுப்பவன்தான் உண்மையிலேயே மனிதகுலத்தின் முன் வெட்கப்படவேண்டியவன். நோயுற்றவர்களின் உரிமைகள் பற்றி சிந்திப்பது முரண்பாடுகளை வளர்த்துக்கொள்வதற்காக அல்ல. இவை உண்மையிலேயே மருத்துவக் குழுவிற்கும் நோயுற்றவர்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்த உறுதுணையாக அமையும்.
தொடரும்….
சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ் போதனாவைத்திய சாலை