குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியமிகப் பொதுவான தொற்று நோய்களாக சளிக்காய்ச்சலும், வயிற்றோட்டமும் அமைவதை பெரும்பாலான பெற்றோர் அவதானித்திருப்பார். அவர்களுக்கு தோன்றும் கேள்வி இதுதான், “ஏன் எனது குழந்தைக்கு அடிக்கடி சளிக்காய்ச்சல், வயிற்றோட்டம் ஏற்படுகின்றது?” உலக சுகாதார நிறுவனத்தினதும் (WHO) UNICEF இனது தகவலின் படி குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் 27 சதவீதமாக சுவாசத் தொற்று நோய்களும் (சளிக்காய்ச்சல்) 23 சதவீதமாக வயிற்றோட்ட நோய்களும் காணப்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1.8 மில்லியன் குழந்தைகள் நியூமோனியா எனப்படும் சளிக்காய்ச்சலினால் ஒவ்வொருவருடமும் உலகில் இறக்கின்றார்கள். ஏறத்தாழ 800, 000 குழந்தைகள் வயிற்றோட்டத்தால் ஒவ்வொருவருடமும் இறப்பதுடன் 1.7 பில்லியன் பேர் வயிற்றோட்டத்திற்காக சிகிச்சை பெறுகிறார்கள் இத்தகவல்களின் படி இவ்விரு நோய்களும் எவ்வளவு தாக்கத்தை குழந்தைகளின் வாழ்வில் உண்டாகின்றது என்பதை அறியலாம்.
சளிக்காய்ச்சலும், வயிற்றோட்டமும் ஏன் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகின்றது.
இவ்விரு நோய்களும் மிக இலகுவாக தொற்றக்கூடிய நோய்கள் ஆகும். மிகப் பிரதான காரணிகளாக வைரசு கிருமித் தொற்றுக்களே இவ்விரு நோய்க்கும் அமைகின்றது. எமது சுழலில் நூற்றுக் கணக்கான சுவாசத்தொகுதியையும் சமிபாட்டுத் தொகுதியையும் பாதிக்க கூடிய வைரசுக்கள் உள்ளன. அவை பொதுவாக காற்றினூடாக ஒருவர் இருமும் போதும், தும்மும்போதும் இல்லது தொடுகை மூலம் ஒருவரின் கையிலிருந்தோ, பொருட்களிலிருந்தோ உணவு, நீர், பானங்கள் அருந்தும் போதோ இலகுவில் தொற்றிவிடுகின்றன. ஒரு குழந்தைக்கு தொற்று ஏற்படுமாயின் ஒரு சில நாட்களிலேயே அக்கிருமி சுவாசத்தொகுதியிலோ அல்லது சமிபாட்டுத் தொகுதியிலோ பெருகி நோய்க்கான அறிகுறிகளைக் காண்பிக்கும். பெரியவர்களிலும் பார்க்க, குழந்தைகளுக்கு இந்நோய்களின் தாக்கம் அதிகமாக காணப்படுவது ஏனேனில் குழந்தைகளின் உடல் உறுப்புகள் முதிர்ச்சியடையாமல் இருப்பதுடன் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களாக இருப்பதும் ஆகும். மேலும் பிறந்த முதல் ஒரிரு வருடங்களுக்கு பிள்ளைகள் வீட்டிலே இருப்பார்கள் பின்னர் முன்பள்ளிக்கோ அல்லது பகல் பராமரிப்பு நிலையத்திற்கோ செல்கையில் வேறுவிதமான சூழலிற்கு முகம் கொடுப்பதுடன் நோயுற்ற மற்றைய குழந்தைகளுடன் சேர வேண்டி ஏற்படுகிறது. இதனால்தான் முன்பள்ளி சிறார்களுக்கு அடிக்கடி சளிக்காய்ச்சலும், வயிற்றோட்டமும் ஏற்படுகின்றது. சிலசமயங்களில் ஒரு பிள்ளைக்கு ஒரு வருடத்தில் 8 -10 தடவை சளிக்காய்ச்சலும், 3 -4 தடவைகள் வயிற்றுப்போக்கும் ஏற்படுகின்றது. எனினும் அதனால் பாரியளவில் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவை வைரசு கிருமித்தொற்றுக்கள் என்பதாலாகும்.
சளிக்காய்ச்சலும், வயிற்றோட்டமும் ஏற்படுகையில் எவ்வகையான பராமரிப்புக்களை வழங்கவேண்டும்.
பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் மேற்கூறிய நோய்கள் தாகாக மாற்றக்கூடியவை எனினும் காய்ச்சல் காணப்படும் வேளைகளில் சரியான அளவில் பரசிட்டமோல் எனப்படும் காய்ச்சலைக் குறைக்கும் மருந்தைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளை சௌகரியமாக இருப்பதுடன் உணவு உண்ணக் கூடியதாக இருக்கும். அதேபோல் காய்ச்சல் அல்லது வயிற்றோட்டம் உள்ள குழந்தைக்கு அதிகளவு நீராகாரங்களைக் கொடுத்தல் வேண்டும். இதன்மூலம் நீரிழிப்பை தடுக்க முடியும். அதே நேரம் குழந்தைக்கு சாதாரணமாக கொடுக்கும் உணவுகளைத் தொடர்ந்து வழங்க வேண்டியதுடன் குழந்தை உணவை அல்லது நீராகாதை்தை எடுக்கின்றதா என அவதானிக்க வேண்டும். முக்கியமாக குழந்தை சாதாரணமாக சிறுநீர் கழிக்கின்றதா என அவதானிக்க வேண்டும். காய்ச்சல், இருமல் அல்லது வயிற்றோட்டம் மூன்று நான்கு நாட்களின் பின்னரும் குறையாவிடின் அல்லது குழந்தை உணவருந்தாது அல்லது பால் குடிக்காது சோர்வடைந்தால் வைத்திய ஆலோசனை பெறுதல் வேண்டும். ஒரு போதும் வைத்திய ஆலோசணையின்றி அன்ரிபையோற்றிக் எனப்படும் மருந்துகளை மருந்துக்கடைகளில் பெற்று கொடுக்க கூடாது. சாதாரணமாக இந்நோய்கள் வைரசு தொற்றுக்கள் என்பதால் அன்ரிபயோந்நிக்குகள் தேவையில்லை. தேவையற்ற வகையில் அவற்றைப் பாவிக்கும் போது அவற்றிற்கு எதிர்ப்ப தன்மையை கிருமிகள் உண்டாக்கி அவற்றின் செயற்றின் இல்லாதுவிடுவதுடன் நோயைற்ற பக்க விளைவுகளும் உண்டாகலாம். முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைக்கு காய்ச்சல் வயிற்றோட்டம் சளி வந்துவிட்டது என பயந்து மனதை சோர்வடையாது தகுந்த வைத்திய ஆலோசனையைப் பெற்று திடமாக குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். அதேபோல் மற்றவர்களுக்கும் இக்கிருமித் தொற்றுக்கள் ஏற்படாதிருக்க சரியான நோய்த்தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
சளிக்காய்ச்சல், வயிற்றோட்டம் போன்றவை ஏற்படாது எவ்வாறு எம்மை பாதுகாத்துக் கொள்வது.
அனைவரும் தகுந்த நியம பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம், இந்நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும்.
நியமப் பாதுகாப்பு முறைகளில் மிகமிக முக்கியமானது. சரியான முறைகளில் கைகளைக் கழுவுவதாகும். சவர்க்காரமோ அல்லது வேறு சுத்தப்படுத்தும் திரவத்தையோ ( Detergents) பாவித்து நன்றாக கைகளை கழுவ வேண்டும். பின்வரும் சந்தர்ப்பங்களில் கைகளை முக்கியமாக கழுவ வேண்டும்.
1. உணவு அருந்த முன், உணவு சமைக்க அல்லது பரிமாரமுன்
2. மலசல கூடத்திற்கு சென்ற பின்னர்.
3. குழந்தைகளை தொடுவதற்கு அல்லது பராமரிக்க முன்னர்
4. இருமிய பின்னரும் தும்மிய பின்னரும்.
5. அழுக்கான அல்லது தொற்று ஏற்பட்ட இடங்களைத் தொட்ட பின்னர்.
6. குழந்தைகளுக்கு நப்பி (Nappy) மாற்றிய பின்னர்.
7. நோயுற்றவரை பராமரித்த பின்னர்.
கைகழுவுதல் போண்று இன்ணொரு முக்கியமான பாதுகாப்பு என்னவெனில் கைகுட்டையை, திசுதாளை (Tissue) அல்லது வாயையும் மூக்கையும் மறைக்க கூடிய முகமூடியை (Mask) சளிக்காய்ச்சல் உள்ளவர்கள் பாவிப்பதாகும். ஒரு வீட்டில் ஒருவரிற்கு நோய் ஏற்பட்டால் அவர் மேற்கூறியவற்றை எந்நேரமு் பாவித்தல் மற்றவர்களுக்கு சளிக்காய்ச்சல் (குறிப்பாக குழந்தைகளுக்கு) ஏற்படுவதை தடுக்க முடியும்.
மேற்கூறியவற்றை விட, நோயுற்றவர் தகுந்த சிகிச்சையை பெறுவதன் மூலமூம் குழந்தைகளுக்கு நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு தகுந்த போசக்கான உணவுகளை வழங்குவதன் மூலமும் குறிப்பாக தனித்தாய்பாலூட்டலை குறைந்தது 6 மாதமாவது வழங்குவதன் மூலமூம் சளிக்காய்சல், வயிற்றோட்டம் போன்ற நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.
Dr.ந.ஸ்ரீசரவணபவானந்தன்
குழந்தை வைத்திய நிபுணர்.
யாழ் போதனாவைத்தியசாலை.