தாய்ப்பால் குழந்தைகளுக்கான நிறையுணவாகும். ஒரு தாயினால் தனது பிள்ளைக்கு வழங்கக் கூடிய மிக சிறந்த அன்பளிப்பும் தாய்ப்பாலே. குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதங்கள் வரையான குழந்தையின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் தேவையான அனைத்து போசணைகளையும் தாய்ப்பால் வழங்குகின்றது.
தாய்ப்பாலூட்டுவதால் உங்கள் குழந்தை பெறும் நன்மைகள்
- உயர்ந்த போசணைச் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
மாப்பொருள், புரதம், கொழுப்பு, விற்றமின்கள், கனியுப்புக்கள், நீர், அயன்கள் என்பவற்றை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அளவிலும் எளிதில் சமிபாடடையக் கூடிய நிலையிலும் கொண்டுள்ளது. 6 மாத காலம் வரையான வயதை உடைய பிள்ளைகளுக்கு தேவையான அளவு நீரை தாய்ப்பால் கொண்டுள்ளதால் மேலதிகமாக நீரை வழங்கவேண்டிய அவசியமில்லை. - குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது.
தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான பாதுகாப்பு காரணிகளை (Protective Fuetors) அடங்கியுள்ளன. இதனால் சிறந்த முறையில் தாய்ப்பாலூட்டும் பிள்ளைக்கு கிருமித்தொற்றுதல் ஏற்படும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே உள்ளன. சிறந்த முறையில் தாய்பாலூட்டுமத் பிள்ளைகளில் வயிற்றோட்டத்தினால் இறக்கும் சந்தர்ப்பம் 14.2 தடவைகளாலும், சுவாச நோய்களினால் இறக்கும் சந்தர்ப்பம் 3.6 தடவைகளாலும் குறைவாக உள்ளது. - அத்துடன் தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான பல வளர்ச்சிக் காரணிகளும், நொதியங்கள், ஓமோன்கள் என்பனவும் காணப்படுகின்றன.
- தாப்பால் வழங்கப்படும் பிள்ளைகளுக்கு ஒவ்வாமைம தாக்கங்கள், காதில் ஏற்படும் தொற்றுக்கள், பல் சம்பந்தமான நோய்கள் (Orthodontic problem) என்பன ஏற்படும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே உள்ளன. அத்துடன் குழந்தைக்கு பிற்காலத்தில் ஏற்படக் கூடிய சலரோகம், உயர் குருதி அமுக்கம், இதய நோய்கள், உடல் பருமனடைதல், குருதிப் புற்றுநோய் (lymphoma) ஆகிய நோய்கள் ஏற்படுதவற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே உள்ளது.
- உளவிருத்திக்கு உதவுகின்றது
தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் தாயுடன் சிறந்த பிணைப்பில் உள்ளனர். குறை மாதத்தில் பிறந்த பிள்ளைகளில் ( Preterm babies) சிறந்த முறையில் தாய்ப்பாலூட்டுடப்படும் பிள்ளைகளின் புத்திக் கூர்மை தாய்பால் தவிர மற்றைய பால் செயற்கையான பால் குடிக்கும் பிள்ளைகளின் புத்திக் கூர்மையை விட அதிகமாக உள்ளது என்று ஆய்வுகளினூடாக நிருபிக்கப்பட்டுள்ளது.
தாய்ப்பாலூட்டுவதனால் தாய்மாரும் அனுகூலங்களை பெற்றுக்கொள்கினறனர். அவையாவன.
- குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலூட்டுதல் தாய்மாரின் கருப்பை பழைய நிலையை அடைவதற்கும் அதனால் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதையும் பெருமளவில் தடுக்கின்றது.
- முழுதாக தாய்பாலூட்டும் தாயொருவரின் கர்ப்பம் தரிக்கும் தன்மை 6 மாத காலத்திற்கு இயற்கையாகவே தற்காலிகமாக தடுக்கப்படுகின்றது. இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சனத்தொகையை கட்டுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது.
- மிகவும் சுலபமானதாகவும் நேரத்தை மீதப்படுத்த கூடியதுமான தாய்ப்பாலூட்டல் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக மற்றும் சூலக புற்று நோய்க்கான சந்தர்ப்பங்களையும் குறைக்கின்றது. அத்துடன் தாய்மாரின் உடற்கட்டமைப்பையும் பேண உதவுகின்றது.
தாய்பாலூட்டும் முறை
பல தாய்மார்கள் வெற்றிகரமாக தமது பிள்ளைகளுக்கு தாய்பாலூட்டுகின்ற போதிலும் சில தாய்மார்கள் தாய்ப்பாலூட்டுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். முக்கியமாக முதன்முறையாக கர்ப்பம் தரிப்போர் மார்பங்களில் குறைபாடு உள்ள தாய்மார் தாய்ப்பாலூட்டுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
- தாய் தனக்கும் பிள்ளைக்கும் வசதியான நிலையில் இருந்தவாறோ அல்லது படுத்திருந்த நிலையிலோ தாய்ப்பாலூட்டலாம். தாயின் முதுகுப் பகுதிக்கு போதுமானளவு ஆதாரம் (Support) வழங்க வேண்டும்.
- குழந்தையின் முழு உடலும் தாயை நோக்கிய வாறு இருத்தல் வேண்டும். குழந்தையின் தலை கழுத்து என்பன உடலுடன் ஒரே நேர்கோட்டில் இருக்கக் கூடியவறு குழந்தையை நிலைப்படுத்தல் வேண்டும். தாயுடன் மிக நெருக்கமாக குழந்தையை வைத்திருப்பதற்காக குழந்தையின் உடலிருந்து மிகையான உடைகளை அகற்றி விடவும்.
- குழந்தையும் தாயும் சரியாக நிலைப்படுத்தப்பட்ட பின்னர் குழந்தையின் வாயருகிலுள்ள கன்னப்பகுதியில் முலைக்காம்பினால் தீண்டும் போது குழந்தை வாயை நன்கு அகலத் திறக்கும். (Rooting reflex)
- குழந்தை வாயினை நன்கு திறந்ததும் முலைக்காம்பும், அதனைச் சூழவுள்ள கருமையான பகுதியும் குழந்தையின் வாயினுள் இருக்கத்தக்கவாறு பிடித்தல் வேண்டும்.
- தற்போது உங்கள் குழந்தை சரியான முறையில் பாலூட்டப்படும்.
உங்கள் குழந்தைக்கு சரியான முறையில் பாலூட்டப்படுகின்றதா என்பதை அறிந்து கொள்ளக்கூடிய வழிகள்.
- பால்குடிக்கும் போது குழந்தையின் வாய் அகலத்திறந்து இருக்கும்.
- குழந்தையின் நாடி மார்பகத்தை தொட்டவாறு இருக்கும்.
- குழந்தையின் கீழுதடு வெளிநோக்கியிருக்கும்.
- முலைக்காம்பை சுற்றியுள்ள கருமை நிறமான பகுதியில் பெரும்பகுதி குழந்தையின் வாயினுள் இருக்கும்.
- குழந்தையின் கன்னப்பகுதி பாலினால் நிறைந்திருக்கும்.
- குழந்தை பாலினை உறிஞ்சுவதும் நிறுத்துவதும் ஒரு சீரான இடைவெளியில் இருக்கும்.
- குழந்தை பாலை விழுங்கும் சத்தம் தாய்க்கும் கேட்க கூடியதாகவும் இருக்கலாம்.
- குழந்தை அமைதியாகவும் தளர்வாகவும் இருக்கும்
- தாயின் முலைக்காம்பில் வலி உணரப்படாது இருக்கும்.
குழந்தை பிறந்தவுடன் முதலாவதாக சுரக்கப்படும் தாய்ப்பாலில் அதிகளவான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடிய பிறபொருளெதிரிகள் காணப்படுவதால் உங்கள் குழந்தை பிறந்து 30 நிமிடங்களுக்குள் தாய்பாலை கட்டாயம் வழங்குங்கள்.