குழந்தைகளுக்கான மேலதிக உணவுகளைக் (உப உணவுகளை) கொடுக்க ஆரம்பித்தல் தொடக்கம் அவர்கள் வளரும்போது தொடர்நது உணவு வேளைகளில் உணவூட்டல் வரை பலரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். அதற்கு பிரதான காரணம், தவறான முறைகளில் மேலதிக உணவூட்டலை (complementary feeding) மேற்கொள்ளல் ஆகும். ஒரு சாதாரண தாயிடம் 7 – 8 மாதக் குழந்தைக்கு என்ன சாப்பாடு கொடுக்கிறீர்கள் எனக் கேட்டால் வரும் பதில் பிஸ்கட்களும் அல்லது வர்த்தக ரீதியிலான பக்கட்டில் அடைத்த தானியமா கலவைகளும் தான். இந்த உணவுகள் பின்னர் குழந்தையை சாதாரண குடும்ப உணவுகளுக்குப் பழக்கப்படுத்துவதற்குத் தடையாக அமைந்து விடும். பெற்றோராகிய எமக்கும் குழந்தைக்கு தகுந்த உணவுகளை சரியான முறையில் வழங்குவதற்குப் பொறுப்புகள் உண்டு. முன்னைய வாரங்களில் கூறப்பட்ட விடயங்களுக்கு மேலாக இந்த வாரத்திலும் பல விடயங்களை கீழ்வரும் வினாக்களுக்கான விடைகளிலிருந்து அறியலாம்.
- மேலதிக உணவூட்டலை குழந்தை ஆர்வத்துடன் உட்கொள்ளுவதற்குச் செய்யக்கூடியவை எவை?
- 8- 9 மாதங்கள் வரை தாய் அல்லது பராமரிப்பவர் குழந்தைக்கு உணவூட்ட வேண்டும். அதன் பின்னர் 9 மாதமளவில் குழந்தை தன் கையினால் பிடித்து உண்ணக்கூடிய உணவுகளை (finger foods) அறிமுகப்படுத்தலாம். உதாரணம் அவித்த கரட் துண்டு உருளைக்கிழங்குப் பொரியல் என்பன). ஒரு வயதின் பின்னர் குழந்தைகள் தாமாகவே உணவை அள்ளிச் சாப்பிட உற்சாகப்படுத்த வேண்டும். தேவைப்படும் போது பெரியவர்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம். இரண்டு வயதின் பின்னர் குடும்ப உணவுகளை குழந்தை தானாகவே உதவியின்றி உட்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
- குழந்தைகள் உட்கொள்வதைப் பழகுவதற்காக அமைதியுடனும், ஆறுதலாகவும் உணவூட்டல் வேண்டும். குழந்தைகளுக்கு பசியுள்ளபோதே அதை அவதானித்து உணவூட்டல் வேண்டும். எந்த வேளைகளில் வற்புறுத்தி உணவூட்டக் கூடாது.
- குழந்தைகளின் கைகள் சவர்க்காரம் கொண்டு, நன்றாக கழுவப்பட்டிருப்பின் அவர்கள் உணவைத் தொட்டு கையால் எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உணவில் விருப்பம் உண்டாகும்.
- உணவூட்டல் வேளைகளை குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அவர்களின் உடல் உள விருத்தியை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமாகவும் பயன்படுத்த வேண்டும். உணவூட்டலின் போது கதைகள் , பாட்டுகள் சொல்வதன் மூலம் குழந்தைகளின் மொழியாற்றல் அதிகரிக்கும். குழந்தைகளுடன் நேருக்கு நேர் பார்த்து அன்பாகவும் விருப்பத்துடனும் கதைக்க வேண்டும்.
- குழந்தைகள் உணவை விரும்பாவிட்டால் வேறு விதமான உற்சாகமூட்டும் முறைகளையும், வேறு விதமான உணவை வேறுவிதமான சுவையுடன் அல்லது வேறு விதமான தயாரிப்பு முறைப்படியும் கட்டமைப்புகளிலும் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
- உணவூட்டும் போது தனியான அமைதியான ஒரு இடத்தைத் தெரிவு செய்தல் வேண்டும். உணவூட்டும் போது இடையூறுகள் ஏற்படக் கூடாது. படிப்படியாக மற்றக்குழந்தைகளும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் உணவு உண்ணும் வேளைகளில் உணவூட்ட வேண்டும். அதனால் குழந்தைகளுக்கு மற்றவர் போல் ஆர்வத்துடன் உட்கொள்ளச் சந்தர்ப்பம் உண்டாகும்.
பாதுகாப்பான முறையில் உணவுவைத் தயாரிப்பதும் பேணுவதும் எப்படி?
எந்த வேளையிலும் சுகாதாரமான முறையில் உணவைத் தயாரித்து வழங்குவதற்காக பின்வருவற்றைச் செய்ய வேண்டும்.
- உணவு தயாரிக்க முன்னரும் உணவை குழந்தைக்கு வழங்க முன்னரும், கைகளை நன்றாக சவர்க்காரம் கொண்டு கழுவ வேண்டும். மிக முக்கியமாக குழந்தைகளின் கைகளைக் கழுவ வேண்டும்.
- எப்போதும் உணவைத் தயாரித்தவுடனயே பரிமாறுவது நல்லது. சமைத்த உணவுகளை நன்றாக மூடிவைக்க வேண்டும்.
- உணவைத் தயாரிப்பதற்கும் பரிமாறுவதற்கும் தூய்மையான உபகரணங்களையே பயன்படுத்த வேண்டும்.
- குழந்தைகளுக்கு உணவூட்டப் பயன்படுத்தும் பாத்திரங்களை வேறுதேவைகளுக்கு உபயோகிக்க கூடாது.
- நீராகாரங்களை வழங்குவதற்கு சூப்பிப் போத்தல்களைப் பயன்படுத்தக் கூடாது.
குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருக்கும் காலங்களில் வழமையாக வழங்கப்படும் உணவுகளைக் கொடுக்க முடியுமா?
அனேகமாக சந்தர்ப்பங்களில் குழந்தை ஒன்றுக்கு சளி, காய்ச்சல், வயிற்றோட்டம் ஏற்படுகையில் பெற்றோர் குழந்தைக்கு வழங்கும் வழமையான உணவுகளை நிறுத்தி விடுகிறார்கள். சில மூடநம்பிக்கைகளால் முட்டை, பால், பழங்கள் என்பவற்றை கொடுக்காமல் விட்டு விடுகிறார்கள். இது தவறு. நோய்வாய்பட்டிருக்கும் காலங்களிலும் வழமையான ஆகாரங்களை வழங்கினால் தான், குழந்தைக்குத் தேவையான போசணையைப் பெறமுடியும், அல்லாவிடில் குழந்தையின் நிறை குறைந்து, நோய் மாறிய பின்னர் குழந்தை இழந்த சக்தியை மீளப் பெற, மேலதிகமாக போசாக்கான உணவுகளை வழங்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு பசியின்மை காணப்படும். என்பதால் அதிகம் அருந்தாது. அதனால் சிறிதளவு உணவாக அதிக சக்தியுள்ள (மாஜரின்,பட்டர்,சீஸ்,முட்டை) உணவுகளை அடிக்கடி வழங்க வேண்டும். காய்ச்சல் உள்ள குழந்தைக்கு அல்லது வயிற்றோட்டம் உள்ள குழந்தைக்கு மேலதிகமாக நீராகரங்களும் வழங்கப்பட வேண்டும்.
Dr.ந.ஸ்ரீசரவணபவன்
குழந்தை வைத்திய நிபுணர்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்