பெண் கர்ப்பமானது முதற்கொண்டு தனது குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும் என்ற உணர்வும் முனைப்படையைத் தொடங்குகிறது. இதற்கேற்ப அந்தப் பெண் தனது உடலையும் தயார் செய்து கொள்கிறாள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதில் காணப்படும் உத்வேகமும் அவசரமும் குழந்தைக்குத் தாய்ப்பாலூட்ட வேண்டும் என்பதில் காணப்படுவதில்லை.
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம், அவற்றில் மிகவும் முக்கியமானது அனேகமான தாய்மார்கள் தமக்குப் பால் சுரப்பதில்லை. அல்லது அதன் சுரப்புக் குறைவாகக் காணப்படுகிறது எனக் காரணம் கூறுகின்றார்கள். இது கூடுதலாக அவர்களின் மனோநிலையுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். தனது குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும் என்ற உள்ளார்ந்த உணர்வு எழும் போது இயல்பாகவே தாய்ப்பாலின் சுரப்புக் கூடுகிறது.
இலங்கையில் தாய்மார் தாய்ப்பால் பற்றிய சிறந்த அறிவு நிறைந்தவர்களாக இருப்பினும் இது போன்ற நிலைமை ஏற்பட பாலூட்டலின் போது அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு இன்மையே காரணம். இலங்கையில் தற்போது பால்மாவின் விலை அதிகரித்துச் செல்கிறது. குழந்தைகளுக்கான செயற்கைப் பால்மாக்களின் விளம்பரமும் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் செயற்கைப் பால்மா வகைகளை நாடும் தாய்மாரின் எண்ணிக்கை கூடியிருப்பதாகும்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 2 மாதங்கள் நிறைவடையும் போது தாய்ப்பால் மட்டும் கொடுப்பவர் 33 வீதமாகவும், அதே நேரத்தில் 6 மாதங்களாகும் வரை தாய்ப்பால் கொடுப்பவர்கள் 6 – 7 வீதத்தால் குறைவடைவதாகும், வேறுவகைப் பால் மாவினை நாடுபவர்கள் 9.5 வீதமாக அதிகரிப்பதாகவும் மதிப்பிட்டப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விடயமாகும்.
குழந்தை மார்பகத்தில் பாலை உறிஞ்சும்போது தான் பால் சுரப்பதற்குரிய ஹோர்மோன் மூளையில் உருவாகும் வீதம் அதிகரிக்கப்படுகின்றது. எனவே, குழந்தையை அன்புடன் அரவணைத்து, ஆர்வத்துடனும் நல்ல மனநிலையுடனும் பாலூட்டும் போது இயற்கையாகவே பால் சுரப்பு அதிகரிக்கின்றது. மேலும், குழந்தைக்குப் பாலூட்டும் போது குழந்தையை முலைக்காம்புடன் சரியான முறையில் நிலைப்படுத்தாமையினால் முலைக்காம்பு மட்டும் உட்செல்கின்றது. அதனைச் சுற்றிக் காணப்படும் கருமை நிறமான பகுதியைக் குழந்தையின் வாய் மூடியிருப்பதில்லை. இதனால் குழந்தையின் வாய் மார்பகத்துடன் சரியான பொருத்தப்பாட்டை ஏற்படுத்தாது. இதனால் குழந்தையால் சரியான முறையில் பாலை உறிஞ்சமுடியாமல் போகிறது.
பாலூட்டும் தாய்மார் இதனைக் கருத்திலெடுத்து குழந்தையை மார்போடு சரியான முறையில் நிலைப்படுத்தல் வேண்டும். குழந்தை பால் குடிக்கும் போது அழுவதற்குக் காரணம் பால் போதாமை மட்டும் அல்ல தாயிடம் ஏற்படும் மாற்றத்தினாலுமாகும். தாய்ப்பால் ஊட்டும் தாய்மார் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்னால் என்னுடைய குழந்தைக்கு 6 மாத காலம் வரை பாலூட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையே அவர்களுக்கு வெற்றிகரமான பாலூட்டலுக்கு அடிப்படையாகும்.
குழந்தை நோயுற்ற வேளையிலும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தல் வேண்டும். தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் குழந்தைக்கு வேண்டிய நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கிறது. சில சமயங்களில் தாயின் முலைக்காம்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக முலைக்காம்புகளில் நோ, கட்டிகள், சீழ் வடிதல் போன்ற நிலைமைகளும், முலைக்காம்பு உள்நோக்கியும் காணப்படின் வைத்திய ஆலோசனை பெறவேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் தாய்மாரின் எண்ணிக்கை அதிகம். இவர்களுக்குத் தாய்ப்பால் ஊட்டப் போதிய நேரம் கிடைப்பதில்லை. இது ஒரு பொருத்தமற்ற கருத்தாகும். மனமுண்டானால் இடமுண்டு என்பார்கள். தற்போது வேலை செய்யும் தாய்மாருக்கு சம்பளத்துடன் கூடிய 84 நாள்கள் விடுமுறையும் தேவையைப் பொறுத்து மேலும் ஒரு 84 நாள்களுக்கு அரைச்சம்பளத்துடனும் விடுமுறை வழங்கப்படுகிறது. எனவே, இவர்கள் தாராளமாகக் குழந்தைக்குப் பாலூட்டலாம்.
தாய்ப்பாலை அறை வெப்பநிலையில் 4 மணித்தியாலம் வரையும், குளிர்சாதனப் பெட்டியினுள் 24 மணித்தியாலங்களும் பழுதாகாமல் வைத்துக்கொள்ளலாம். வேலைப்பளு கூடிய இன்றைய காலகட்டத்தில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு கணவனும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் உதவுதல் வேண்டும். தாய்ப்பாலை மாப்பாலுடன் (புட்டிப் பாலுடன்) ஒப்பிட்டு நோக்கும் போது தாய்ப்பாலின் மகத்துவத்தை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும்.
- இது குழந்தையின் போசாக்கை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள பால்.
- மனித உடல் வளர்ச்சிக்கும், மூளை விருத்திக்கும் அவசியமானது.
- இதில் புரதத்தின் அளவு குறைவாகவே (15%) காணப்படுவதனால் இலகுவில் சமிபாடடையக்கூடியது.
- அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் சகலதும் காணப்படுகின்றன.
- இதில் காணப்படும் புரதம் உடலினால் இலகுவாக உறிஞ்சப்படும்.
- கொழுப்பின் அளவு சீராக இருப்பதனால் மூளை வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.
- நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு தாய்ப்பாலின் மூலம் கிடைக்கின்றது. கிருமித்தொற்று இல்லாதது.
- மேலதிக செலவு அற்றது.
- எவ்வேளையிலும் கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன் ஏற்ற வெப்பநிலையும் காணப்படுகிறது.
- தாய், சேய் பாசப்பிணைப்பை மேம்படுத்துகிறது.
- போசாக்கிண்மையில் இருந்து மீட்சியளிக்கும்.
- புற்றுநோய் ஏற்படுவதற்குரிய தாக்கம் குறைவு.
- குழந்தைப்பருவத்தில் தாய்ப்பால் குடிப்பதால் பிற்காலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர்குருதி அமுக்கம் போன்ற நோய் நிலைமைகள் ஏற்படாது.
- தாயின் கர்ப்பப்பை, மற்றும் மார்பகப் புற்றுநோய் அபாயங்களைக் குறைக்கும். பிரசவத்தின் பின் பாலூட்டுவதால் கர்ப்பப்பை விரைவாகச் சுருங்கிவிடும் இதனால் குருதிப்போக்கும் குறைக்கப்படும்.
- கனிப்பொருள்கள் உரிய அளவில் உண்டு.
- நீரின் அளவு குழந்தைக்குப் போதுமானது.
- குறைமாதப் பிரசவக் குழந்தைகளுக்கும் ஏற்றவிதமான உணவாக அமையும்.
- குழந்தை பிறந்து முதல் சில நாள்களில் சுரக்கும் பாலில் காணப்படும் கொலஸ்ரம் குழந்தைக்கு அவசியமானது.
புட்டிப்பால்
- இது பசுக்கன்றின் போசாக்கிற்கு என உருவாக்கப்பட்டுள்ள பால்.
- கால்நடையின் ஆகாரமாக இருப்பதனால் மிருகத்திற்கு விருத்திக்குத் தேவையான விதமாகவே அமைந்துள்ளது.
- இதில் புரதம் 35% காணப்படுகின்றது.
- இதில் காணப்படும் புரதத்தை மனித உடல் ஏற்காததனால் அவற்றை உடலில் இருந்து வெளியேற்ற நடைபெறும் செயற்பாட்டினால் பாதிப்பு உண்டாகும்.
- இதில் உள்ள புரதம் உறிஞ்சப்படும் வீதம் குறைவு.
- கொழுப்பின் அளவு கூடுதலாகக் காணப்படுவதனால் பசுவின் விருத்திக்குச் சிறந்தது.
- எதிர்ப்புச் சக்தித் தன்மை இல்லாதிருப்பதுடன் கிருமித்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.
- மேலதிக செலவுண்டு.
- தேவையான வேளையில் தேவையான உஷ்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
- தாய் – சேய் பாசப்பிணைப்பு குறைவடையும்.
- போசாக்கின்மைக்கு ஆளாக்கும்.
- நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லும் நிலைமை ஏற்படும்.
- நீரிழிவு, உயர்குருதி அமுக்கம் பிற்காலத்தில் ஏற்படச் சந்தர்ப்பம் அதிகம்.
- கனிப்பொருள்கள் அதிகம்.
- நீர் சேர்க்கும் அளவைப் பொறுத்துப் பாலின் தரம் அமையும்.
- குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஆபத்தானது.
- கொலஸ்ரம் காணப்படாது.
மேற்குறிக்கப்பட்ட ஒப்பீட்டில் இருந்து தாய்ப்பாலின் மகத்துவத்தை நன்கு விளங்கிக் கொள்ளலாம். எனவே, இறைவனின் அரும்பெரும் கொடையான தாய்ப்பாலினைக் குழந்தைக்கு ஊட்டுவதற்கு தாய்மார் பின்னிற்றல் கூடாது.
கோ.நந்தகுமார்,
விரிவுரையாளர்,
தாதியர் பயிற்சிக் கல்லூரி,
யாழ்ப்பாணம்.