மனித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது. ஆதிகாலம் தொட்டு மனிதர்கள் தேடி அலைவது மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான். மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் என்னென்ன இருக்கவேண்டும் என்று எம்மிடம் ஒரு நீண்டபட்டியலே இருக்கின்றது. மகிழ்ச்சி என்றால் என்ன என்பது பற்றி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். பேராசிரியர் லோட் ரிச்சாட் லேயாட் மகிழ்ச்சி என்பதைப் பற்றி கூறும் போது “மகிழ்ச்சி என்பது உங்கள் எதிர்பார்ப்பையும் உங்களுக்கு கிடைப்பதையும் சமன் செய்வதாகும். ஒன்று நீங்கள் விரும்புவது எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது கிடைப்பவை எல்லாவற்றையும் விரும்ப வேண்டும்” என கூறுகின்றார்.
மகிழ்ச்சி எதிலுள்ளது
மகிழ்ச்சி என்பது ஆடம்பரவாழ்க்கை , பட்டம், பணம், பதவியில் தான் உள்ளதாக எம்மில் பலர் எண்ணுகின்றோம். இதனால் மகிழ்ச்சியை தேடி வெளியில் அலைகின்றோம். உண்மையில் மகிழ்ச்சி என்பது எமது அகத்தில்தான் உள்ளது. பிறக்கும்போது அனைத்து மனிதர் களும் மகிழ்ச்சியாகவே பிறக்கின்றனர். ஆனால், மனிதன் வளர்ச்சியடையும் போது, மகிழ்ச்சியானது பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களால் மகிழ்ச்சி இல்லாது போகின்றது. எமது மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள நாமே முயற்சி செய்யவேண்டும். மனித வாழ்வின் நிலையான மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு உடல், மூளை, இதயத்தின் ஆரோக்கியம் மிகவும் அவசியமாகின்றது. இந்த மூன்றில் ஒன்று ஆரோக்கியமற்றதாக இருந்தால் மனிதன் உண்மையான மகிழ்ச்சியை அடையமுடியாது. உடல், மூளை, இதயத்தின் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணுவது என்பதை நோக்குவோம். உடல் ஆரோக்கியமானது தொடர்ச்சி யான உடற்பயிற்சியிலும் போசாக்கான உணவிலும் தங்கியுள்ளது. உடற்பயிற்சிஎன்னும் போது உடலை கடினமாக வருத்தி உடற்பயிற்சி நிலையங்களில் விலை உயர்ந்த உபகரணங்களைப் பயன்படுத்தி செய்ய வேண்டியது அவசியமில்லை . தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சிசெய்தல், ஈருருளி ஓடுதல், வீட்டுத்தோட்டம் அமைத்தல், குழுக்களாக விளையாடுதல், பூச்செடிகளுக்கு நீர் இறைத்தல் இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக உடல் ஆரோக்கியத்தைப் பேணமுடியும்.
மகிழ்ச்சியான வாழ்வுக்கு தேவையான உணவுகள்
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவும் சுவையுள்ளது மட்டுமன்றி, போசாக்கு மிக்கதாகவும் இருக்கவேண்டும். தினமும் உணவில் மரக்கறி, பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் தானியங்களை உணவாக எடுத்துக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் 3 லீற்றர் சுத்தமான தண்ணீர் அருந்துங்கள். மற்றும் கொழுப்புணவுகள், சீனி உணவுகளை தவிருங்கள். இவற்றின் ஊடாக நோய்கள் இன்றி உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தலாம். அடுத்து மூளையின் ஆரோக்கியத்தைப்பற்றி நோக்குவோம்.
மூளை ஆரோக்கியம்
மூளை ஆரோக்கியமானது மனிதனின் மனநிலையுடன் தொடர்புபட்டது. மூளை என் ஆராக்கியத்தை ஏற்படுத்த தொடர்ந்து வாசித்தல், கற்றல், கற்றதை மற்றவர்கள்ளுக்கு கற்பித்தல் போன்ற செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும். வாசித்தலானது படங்கள் மூலமாக கற்பதைக்காட்டிலும் .பன்மடங்கு மேலானது. இதனாலேயே “வாசிப்பதால் மனிதன் – முழுமையடைகின்றான்’ என எமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அத்துடன் நம் கற்றலை மற்றவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மை கிடைப்பது மட்டுமன்றி, பல புதிய தேடலுக்கும் எமது அறிவு விரிவாக்கத்துக்கும்வழிவகுக்கும். இந்த முறையின் ஆரோக்கியமானது புத்தாக்க படைப்புக்கும், புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கவும் தூண்டுகோலாக அமையும். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக மூளையின் ஆரோக்கியத்தை பேணமுடியும்.
இதய ஆரோக்கியம்
அடுத்ததாக இதய ஆரோக்கியத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பதை நோக்குவோம். இதய ஆரோக்கியம் என்பது மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், அன்பு செலுத்துவதிலும் தங்கியுள்ளது. மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக நாம் உழைக்கும் போது நம் இதயம் வலுப்படுத்தப்படுகின்றது. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு, கருணை வைக்க வேண்டும். அத்துடன் சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒரு தாய்பிள்ளைகள்போல பழகவேண்டும். நான் மட்டும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாது சமூகத்தையும், சமூகத்தில் உள்ளவர்களையும் முன்னேற்றுவதற் கான உதவிகளை செய்ய வேண்டும். யோகா, தியானம், இறைவழிபாடு ஊடாக மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். இவ்வாறான நல்ல சிந்தனை, செயற்பாடு ஊடாக இதய ஆரோக்கியத் தைப் பேண முடியும். மகிழ்ச்சியை ஏற்படுத்த மேற்கூறிய வழி முறைகளை எவ்வாறு செயற்படுத்தலாம் என உங்களுக்கு ஒரு கேள்வி எழுந்திருக்கும். இதனையே பலவித ஆராய்ச்சிகள் ஊடாக மேலைநாட்டவர்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கான வழிமுறைகள் எனக் கூறியுள்ளனர். இவர்கள் கூறிய அனைத்தையும் வைத்துக்கொண்டு எமது வாழ்க்கையை கப்பல் பயணமொன்றுடன் ஒப்பிடலாம். எமது கப்பலின் மாலுமிகள் நாங்களே! அதாவது பலரது அறிவுரைகள் இருந் தாலம் நம் வாழ்வில் சில முக்கிய தீர்மா னங்களை நாமே எடுக்கவேண்டும். எமது வாழ்வில் ஏற்படும் தோல்விகளுக்கு நாமே முழுப்பொறுப்பாளிகள் ஆவோம். கப்பலை எங்கு செலுத்த வேண்டும் என்பதை முன்னரே திட்டமிட்டு இருக்க வேண்டும். அதாவது நம் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்கும் போதே நமது குறிக்கோள் என்ன என்பதை தீர்மானித்திருக்க வேண்டும்.
அடுத்த கப்பல் பணத்துக்குத் தேவையான நீர், உணவு, எரிபொருள் போன்ற முக்கியமானவற்றை ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேபோல நமது குறிக்கோளை அடைய தேவையான வற்றை முன்பே ஆயத்தப்படுத்தி வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் திட்டமிட்டபடி எம்குறிக்கோளை நோக்கிச் செல்லமுடியும். எம் கப்பல் பயணத்தை தனியாக தொடர் இயலாது. ஆகவே நாம் எமக்குத் தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதாவது எமது குறிக்கோளை தனியாக அடைந்துவிடமுடியாது. அதனால் மற்றவர்களிடம் இருந்து உதவியைப்பெற்று, நாம் நன்மை அடைவது மட்டுமன்றி அவர்களையும் நன்மையடையச் செய்ய வேண்டும். கப்பலை செலுத்தும் போது மற்றவர் கூறும் கருத்துக்களை தெளிவாக செவி மடுத்து எமது கருத்துக்களைக் கூற வேண்டும். அதாவது ஒருவர் ஒருவர் கூறிய கருத்துக்களை தெளிவாகவிளங்கிய பின்னரே எமது கருத்துக்களைக் கூற வேண்டும். இதன் மூலம் எம்மிடையே ஆரோக்கியமான தொடர்பாடல் வளரும். குழுக்களாக இணைந்து செயற்பட்டால் மட்டுமே கப்பல் பயணத்தை தொடரமுடியும். அதாவது இறுதியாக கப்பற்பாதையில் உள்ள சுறாக்களின் நடமாட்டம், கடற்கொள் ளையர்களின் பிரச்சினை, காலநிலை மாற்றம் போன்ற சவால்களை குழுவாக இயங்குவதன் மூலமே வெற்றிகொள்ள முடியும்.
ஆகவே முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப்போல வாழ்க்கையில் நன்மையும், தீமையும், வெற்றியும் தோல்வியும் கலந்துதான் இருக்கும். வாழ்க்கை முழுவதும் எப்போதும் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என எண்ணாது தோல்வியையும் வெற்றிக்கான படிக்கற்களாக்கி முன்னேறிச் செல்லுங்கள். அதாவது ஒரு செயலை செய்யும் போது ஒன்றில் வெற்றியடைவோம். இல்லாது போனால் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்வோம். கடந்த காலத்தை எம்மால் மாற்றமுடியாது. ஆனால், எதிர்காலம் எம்கையில். இதனால் எதிர்காலத்தை கடந்தகால அனுபவங்களைக் கொண்டு ஆக்கபூர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற முடியும். மகிழ்ச்சியாக இருப்பவர்கள் அதிகம் வெற்றி பெறுகின்றார்கள். மகிழ்ச்சியாக இயங்குங்கள் வெற்றி என்றும் உங்களிடத்தில்.
K.கெளசிகா,
மருத்துவர் S.குமரன்