நீரிழிவு உள்ளவர்கள் உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவுவகைகள் உண்மையிலே அனைவருக்குமே பொருத்தமான தெரிவாக அமைந்துள்ளன. இந்த உணவு வகைகள் சுவை நிறைந்தனவாக சமையல் செய்து உண்பது மனதுக்கும் உடலுக்கும் புத்தூக்கத்தை கொடுத்து மனிதனின் ஆரோக்கியத்தை வளர்க்க உறுதுணையாக அமையும்.
சுவையாக எவற்றை உண்ண முடியும்?
முட்டை, பால், கோழி இறைச்சி, மீன், இறால், தயிர், மோர் போன்றவை அதிக புரதத்தையும் விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்களையும் கொண்டவை. இவற்றை உங்களுக்கு பிடித்த சுவையானவடிவத்தில் தயார்செய்து உண்ணமுடியும். சமையலின் பொழுது வாசனைத் திரவியங்கள் போதியளவு உறைப்பு, புளி, மஞ்சள், இஞ்சி, சீரகவகைகள், வெந்தயம், மல்லி போன்றவற்றை வேண்டியளவில் சேர்த்துக்கொள்ளமுடியும். இவை உடல் நலத்துக்கு நன்மை பயப்பவையாக அமைவதுடன் உணவின் சுவையையும் அதிகரிக்க உதவுகின்றன. மரக்கறி வகைகளை தெரிவு செய்யும்போது வெவ்வேறு வர்ணங்களில் மாறிமாறி தெரிவு செய்யவேண்டும். அப்பொழுது தான் எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் எமக்குக் கிடைக்கும். பூசணி, கரட், பீற்றூட், முள்ளங்கி உட்பட்ட அனைத்து வகையான மரக்கறி வகைகளையும் பயன்படுத்த முடியும். நீரிழிவு நிலை உள்ளவர்கள் பழவகைகளை உண்ணமுடியாது என்ற ஒரு தப்பபிப்பிராயம் நிலவுகின்றது.
இது முற்றிலும் தவறானது. அன்னாசி, விளாம்பழம், பப்பாசிப்பழம், கொய்யாப்பழம், ஜம்புபழம், வாழைப்பழம், வத்தகப்பழம், தோடம்பழம், மாதுளம்பழம், நாவற்பழம் போன்ற பழவகைகள் சுவையும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்தவை. இவற்றை போதிய அளவில் உண்ணமுடியும். பழங்கள் உண்ணும் பொழுது குளுக்கோஸின் அளவுசற்று அதிகரித்தாலும் கூட இவற்றை உண்ணுவதால் ஏற்படும் அனுகூலங்கள் பல மடங்கு அதிகமாகும். பழச்சாறுகளில் வெல்லத்தின் செறிவு அதிகமாகும். நார்த்தன்மை குறைவாகவும் இருப்பதுடன் பசியை கட்டுப்படுத்தும் வீதமும் குறைவாக இருக்கின்றது. எனவே பழங்களை பழச்சாறாக மாற்றி குடிப்பதிலும் பார்க்க பழங்காளக உண்பது சிறந்ததாகும். கச்சான் கடலை மரமுந்திரிகைகளும், பொட்டுக்கடலை போன்றவை உடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும்.
எனவே இவற்றை இடைநேரத்தில் தேநீருடன் உண்ண முடியும். புரதச்சத்து அதிகமுள்ள பயறு, உளுந்து, சோயா, கெளப்பி, பருப்பு வகைககள் போன்றவற்றை சுவைபட போதிய அளவில் சமைத்து உண்ணமுடியும்.
உணவு முறையில் எத்தகைய மாற்றங்களை செய்ய முடியும்?
மாப்பொருள் செறிவு அதிகமுள்ள அரிசி, கோதுமை, ஆட்டாமா, குரக் கன் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யும் உணவு வகைகளை குறைத்துக்கொள்வது நல்லது. காரணம் சமிபாட்டையும் பொழுது அதிகளவு குளுக்கோசு உண்டாகின்றது. ஒப்பீட்டளவில் தீட்டாத அரிசிமா, குறைவாக தீட்டப்பட்ட குத்தரிசி, உளுத்தம்மா, பயற்றம்மா போன்றவற்றில் செய்யப் படும் உணவு வகைகள் வெள்ளை நிற அரிசி வகைகள், வெள்ளை நிறமாவகைகளில் செய்யப்படும் உணவு வகைகளிலும் பார்க்கச் சிறந்தவையாகும். மாப்பொருள் அதிகமுள்ள உணவு வகைகளை உண்ணும் பொழுது உணவுக் கோப்பையில் அரைப்பங்கு இலை வகைகள், மரக்கறி வகைகளால் நிறைத்திருப்பது அவசியமாகும். உணவிலே சீனி, சக்கரை, பனங்கட்டி, குளுக்கோசு போன்றவற்றை தவிர்த்து அவற்றுக்குப் பதிலாக தேவை ஏற்படின் இனிப்புச் சுவையுள்ள இனிப்பூட்டிகளை பயன்படுத் துவது நல்லது. இந்த இனிப்புச்சுவை யுடைய இனிப்பூட்டிகள் உடல் நிறையையோ அல்லது குருதிக்குளோசின் அளவையோ அதிகரிக்கமாட்டாது. எண்ணெய் பட்டர், கொழுப்பு என்பன அதிகமுள்ள பொரித்த உணவு வகைகளுக்குப் பதிலாக “பேக்” செய்யப்பட்ட உணவுவகைகளை தெரிவு செய்வது நல்லது. உப்பை முற்றாக தவிர்த்திட வேண்டும் என்ற அவசிய மும் இல்லை. அளவான உப்பு சேர்த்துசுவையாக சமையல் செய்ய முடியும். உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பதப்படுத் தப்பட்ட உணவுவகைகளை தவிர்த்து விடுவது நன்மை பயக்கும் அளவுக்கு அதிகமான உப்பு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.அளவுக்கு அதிகமான உப்பு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
உணவு முறை சம்பந்தமான சில தகவல்கள்
அதிகளவு பழவகைகளையும், மரக்கறி வகைகளையும் உண்பது எம்மை மாரடைப்பு, உயர்குருதி அமுக்கம், பாரிசவாதம், நிறை அதிகரிப்பு, கொழுப்பு அதிகரிப்பு போன்ற நோய் நிலைகளிலிருந்து பாதுகாக்கும். வீட்டின் அன்றாட பாவனைக்கு சிறிய உணவுக் கோப்பைகளையும் சிறிய தேநீர் பேணிகளையும் பயன்படுத்துவோம். இதுநாம் மேலதிகமாக உண்பதைத் தவிர்க்க உதவும். சோறு, பிட்டு போன்றவற்றை பரிமாறுவதற்கு சிறிய கரண்டிகளையும், மரக்கறிகளை பரிமாறுவதற்கு பெரிய கரண்டிகளையும் பயன்படுத்துவோம். உணவை ஆறுதலாக சுவைத்து இரசித்து உண்ணும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரே வகையான உணவில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருக்காது. எனவே நாம் உண்ணும் உணவின் வகைகளை மாற்றிக்கொள்வது பயன்தரும். உள்ளூரிலே உற்பத்தியாகும் இயற்கையான உணவு வகைகளை தெரிவு செய்வது பல வழிகளில் லும் நன்மை பயக்கும்.
பொது மருத்துவநிபுணர்
சி.சிவன்சுதன்