மழைகாலம் தொடங்கி விட்டது. நோய்நொடிகளும் இலகுவில் குழந்தைகளை அணுகத் தொடங்கிவிடும். நாம் கவனமாக இருப்பதன் மூலம் அவற்றிலிருந்து குழந்தைகளாக் காப்பாற்றலாம். மழைகாலங்களில் ஏற்படக்கூடிய பொதுவான நோய்கள் பின்ருவன
- தடிமனும், சளிக்காய்ச்சலும்.
- தொண்டைமுனை அழற்ச்சி
- வயிற்றுளைவும் வயிற்றோட்டமும்
- சாதாரண வைரசு காய்ச்சல்
- டெங்கு காய்ச்சல்
- தோற்றுபுண்கள்
- நீர்சிரங்கு
- முட்டு வருத்தம் ( அஸ்துமா)
- விஷ ஜந்துக்களின் கடி
மழைகாலங்களில் காணப்படும் வெப்பநிலை மாற்றங்களும், அதிக ஈரப்பதனும் ஈரலிப்பான சூழலும் சுவாசத் தொகுதியை பாதிக்கக்கூடிய வைரசுக்களினதும், பக்றீறியாக்களும் வளர்ச்சிக்கு ஏதுவாகின்றது. சுவாசத் தொற்று ஒருவருக்கு ஏற்படுகையில் அது இருமும் போதும் தும்மும் போதும் காற்றின் மூலமாக இலகுவில் மற்றவருக்கு பரவிவிடும்.
நீர், உணவு, போன்றவற்றால் பரவக்கூடிய வயிற்றோட்டம் போன்ற நோய்களும் மழைகாலங்களில் அதிகளவில் நீர்மாசடைவதன் மூலம் பரவ கூடும். அதேபோல் வீட்டு சூழலில் நீர் தேங்குவதன் மூலம் நுளம்பு பெருக்கம் ஏற்பட்டு டெங்கு நோய் அதிகமாக பரவலாம்.
சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நீர் நிலைகளில் விளையாடுவது விருப்பமாகும். அதனால் தோல் ஈரலிப்பாக இருப்பதனால் நீர் சிரங்கும் தோற்றுபுண்களும் அதிகமாக ஏற்படலாம்.
இவற்றை விட தொற்றாநோயான முட்டு (இழைப்பு) வருத்தமும் குளிரான காலநிலை காரணமாகவும். தடிமன், சளிக்காய்ச்சல் என்பன இலகுவில் ஏற்படுவதாலும் அடிக்கடி ஏற்படலாம்.
எனவே நாம் எமது குழந்தைகளை இவ்வகையான நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம் எனப் பார்ப்போம். எளிமையான சில பாதுகாப்பு முறைகளால் அடிக்கடி ஏற்படும் பாதிப்பை உண்ணடாக்க கூடிய நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.
- ஒழுங்கான முறைப்படி சவர்க்காரம் கொண்டு கைகளைக் கழுவுதல் வேண்டும். குறிப்பாக உணவு சமைக்க முன்னரும், உட்கொள்ள முன்னரும், மலசல கூடத்திற்கு சென்ற பின்னரும் இருமல் தும்மலின் பின்னரும் இதை பின்பற்ற வேண்டும். அதைவிட பெரியவர்கள் வெளியே சென்று வீடு திரும்பியவுடன் கைகளைக் கழுவிய பின்னரே குழந்தைகளை தூக்கவும் பராமரிக்கவும் வேண்டும்.
- இருமும் போதும் தும்மும் போதும் திசுத்தாள்களை (Tissues) பாவிப்பதுடன் அவற்றைப் பாதுகாப்பாக குப்பைத் தொட்டியில் போடவேண்டும். கைக்குட்டை பாவிப்பதாயின் அதை கழுவிப் பாவிக்க வேண்டும்.
- இயன்றவரை குழந்தைகளை இருமல் தடிமல் உள்ளோர் பாராமரிப்பதை தவிர்க்க வேண்டும். அதை தவிர்க்க முடியாவிடின் வாயையையும் மூக்கையும் மூடக்கூடியவாறு முகமூடி (Mask) அல்லது கைக்குட்டையை பாவிக்கலாம்.
- வீட்டிலுள்ள ஒருவருக்கு தொற்றுநோய் ஒன்று ஏற்படின் அவர் பாவிக்கும் துவாய், சவர்க்காரம், பாத்திரங்களை மற்றோர் பாவிக்க கூடாது. குறிப்பாக குழந்தைகளுக்கு தனியான பொருட்களை வைத்துக்கொள்வது நல்லது.
- வீட்டை எப்போதும் துப்பரவாக வைத்திருக்க வேண்டும். மேசை , கதிரை, கட்டில், பாத்திரங்கள், என்பவற்றை துப்பரவாக வைத்திருப்பதுடன், வீட்டினுள்ளே தூசி, சிலந்திவலை போன்றன இல்லாதும் வைத்திருக்க வேண்டும்.
- வீட்டுச் சுழலில் நீர்தேங்கக்கூடிய சிரட்டைகள், யோகட் கோப்பைகள், வெற்று ரின்கள், போத்தல்கள், குரும்பைகள், ரயர்கள், போன்ற நுளம்பு பெருகக் கூடிய பொருட்களை அகற்றி சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும் நுளம்பு கடியிலிருந்து பாதுகாக்க நுளம்பு வலை போன்றவற்றை பாவித்து நுளம்புக் கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
- கொதித்தாறிய நீரைப் பருகுவதுடன், குளோரினிடப்பட்ட கிணற்று நீரையே பாவிக்க வேண்டும்.
- மழைகாலங்களில் ஈக்கள், அதிகமாக பரவுவதால் கழிவுகளை முறைப்படி அகற்ற வேண்டும். ஈமொய்க்காதவாறு உணவுப் பொருட்களைக் மூடிவைக்க வேண்டும்.
- குழந்தைகளின் மலசலங்களை மலசலகூடத்தில் இட்டு அகற்ற வேண்டும் அல்லது முறைப்படி அவற்றை குழியிட்டு புதைத்தோ எரித்தோ விடவேண்டும்.
- இயன்றவரை குழந்தைகளை சனநெருக்கடியான இடங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் நோயுற்றவர்கள் நோய் சுகமாகும் வரை பாடசாலைக்கோ, அல்லது வேலைக்கோ செல்வதை தவிர்ப்பதுடன் தகுந்த சிகிச்சையையும் பெறவேண்டும். இதன் மூலம் மற்றோருக்கும் நோய் பரவுவதைத் தடுக்கலாம்.
மேற்குறிப்பிட்ட சில எளிய பாதுகாப்பு முறைகளை விட குழந்தைகளைப் பொறுத்தவரையில், நோய் தொற்றுக்களுக்கு எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்குவதுடன் (குறிப்பாக நோயுற்ற வேளையில்) இயன்றவரை தாய்ப்பாலுட்டலை கைக்குழந்தைகளுக்கு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் தகுந்த காலங்களில் தடுப்பு மருந்து ஊசிகளை குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலமும் அவர்களை நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
மேற்குறிப்பிட்ட பல விடயங்கள் எம்மில் பலருக்கும் தெரியுமாயினும் அலட்சியம் காரணமாக அவற்றைப் பின்பற்றுவதில்லை. குழந்தைக்கு நோய் வந்த பின் நாம் எடுக்கும் அக்கறையைப் போல் அந்நோய் வராமல் பாதுகாக்க அக்கறை கொள்வதில்லை. குறைந்த பட்சம் நோய்பரவும் காலங்களிலாவது மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு முறைகளை பின்பற்றலாம் அல்லவா,,??
Dr.ந.ஸ்ரீசரவணபவானந்தன்.
குழந்தை நல வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை