கேள்வி:- 27 வயதான எனது மகளின் நிறையானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. அவரது தற்போதைய நிறை 92Kg ஆகும். அவரது உயரம் 5அடி 4அங்குலம் ஆகும். அவரது மாத சுகவீனமும் ஒழுங்கற்று இருக்கின்றது. இவர் மிக விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றார். எமது குடும்ப வைத்தியரின் ஆலோசனைப்படி சில குருதிப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம். அப்பரிசோதனைகளின் படி சலரோகநோய் ஏற்படும் ஆரம்ப நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தார். எனது மகளின் உடல் நிலை பற்றி விளக்கிக் கூறவும். இதனால் இவருடைய திருமண வாழ்வில் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
பதில்:- உங்களுடைய மகளின் உடல் நிறையானது மிகவும் அதிக மாகவுள்ளது. ஒருவரின் உடல் நிறையானது அவரது உயரத்திற் கேற்ப இருத்தல் அவசியமாகும். இதனை உடற்திணிவுச் சுட்டெண் (Body Mass Index – BMI) மூலம் கணித்துக் கொள்ள முடியும். கணிப்பீட்டின்படி உங்கள் மகளின் BMI ஆனது மிகவும் அதிகமாக உள்ளது. (35.9) சாதாரணமாக ஒருவரின் BMI ஆனது 18.5- 23 இனுள் இருத்தல் அவசியமாகும். ஒருவரின் உடற்பருமன் அதிகரித்துச் செல்லும்போது பல வகையான பிரச்சினைகளும் நோய்களும் ஏற்படுகின்றன. இளம்பெண்களில் அவர்களது சூலகங்களில் (Ovaries) சிறு கட்டிகள் போன்ற நோய் (Poly Cystic Ovarian Syndrome) ஏற்படும் போது உடற்பருமன் அதிகரிப்பதோடு மாதவிடாய் ஒழுங்கீனங்களும் ஏற்படுகின்றது. இவர்களது முகத்தில் பருக்கள் ஏற்படுவதோடு, தேவையற்ற விதத்தில் ஆண்களைப் போன்று உரோம வளர்ச்சியும் ஏற்பட நேரிடுகின்றது.
உடற்பருமனுக்கான காரணங்கள்
தவறான உணவுப் பழக்க வழக்கங்களும், தேக அப்பியாசமற்ற வாழ்க்கை முறையும் (Sedentary Life Style) இவ்வாறான உடற்பருமன் அதிகரிப்புக்கு பிரதானமான காரணங்களாகும். இதே போல தைரொயிட் சுரப்பிக்குறைபாடு போன்ற சிலஹோர்மோன் பிரச்சினைகளும் இவ்வாறான உடல் நிலை அதிகரிப்புக்கு காரணமாக அமையலாம். உங்களுடைய மகள் போன்று திருமணம் செய்யவிருக்கின்ற இளம் பெண்களின் உடல்பருமன் அதிகரிக்கும் போது பலவகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் சக்கரம் ஒழுங்கற்றுச் சென்று சிறிது சிறிதாக குறைவடைய நேரிடுகின்றது. இவ்வாறு செல்லும் போது கர்ப்பம் தரிக்கும் சாத்தியக் கூறும் குறைவடைய நேரிடுகின்றது. உங்களுடைய மகளின் குருதிப்பரிசோதனை முடிவுகளின்படி அவர் நீரிழிவுக்கு முந்திய நிலையில் (Pre diabetes stage) இருக்கின்றார். இவர் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து உடல் நிறையைக் குறைக்காது விடின் இன்னமும் சில வருடங்களில் முற்றுமுழுதான நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு மிக அதிகமாகும். இவருக்கு குருதியில் கொழுப்பின் (கொலஸ் திரோல்) அளவு அதிகரித்தல் மற்றும் உயர் குருதி அமுக்கம் (High Blood Pressure) என்பனவும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். எனவே இவர் உடனடியாக வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது மிகவும் அவசியமாகும்.
மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் சில
ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தல் இன்றியமையாததாகும். இனிப்பான சீனி சேர்ந்த உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். அதே போல மாச்சத்து அதிகமுள்ள உணவுகளையும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளையும் குறைவாக உள்ளெடுத்தல் வேண்டும். இவரது உடற்பருமனை குறைப்பதற்கு ஏற்ற விதத்தில் நாளொன்றுக்கு எடுக்க வேண்டிய கலோரிப்பெறுமானத்தை கணித்து உணவை உள்ளெடுக்கவேண்டும். இதனை வைத்திய ஆலோசனைப்படி அறிந்துகொள்ள முடியும்.
ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது 45 நிமிடங்களாவது உடல் வியர்க்கும் வரையில் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். வேகமாக ஓடுதல், சைக்கிளோட்டுதல் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் அப்பியாசம் செய்தல் என்பன இதற்கு உதாரணங்களாகும்.
நீரிழிவுக்கு முந்திய நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு வைத்தியரின் சிபாரிசின்படி மெற்போமின்மருந்தினைப் பயன்படுத்த வேண்டும். இதனால் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு கட்டுப்படுவதோடு, பசியின் அளவும் குறைவடைந்து உடற்பருமனும் குறைவடைகின்றது.
உடல் நிலை பற்றிய பூரணமான பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமாகும். சில வகையான குருதிப் பரிசோதனைகளுக்கு (உதாரணம் – கொலஸ்திரோல், தைரொயிட் மற்றும் வேறு ஹோர்மோன்கள்) உட்பட வேண்டியிருக்கும்.
இவரது மாதவிடாயினை ஒழுங்குபடுத்துவதற்கும் உடற்பருமனைக் குறைப்பது அவசியமாகும். வைத்திய ஆலோசனைப்படி குருதி, ஹோர்மோன் மற்றும் ஸ்கான் (கர்ப்பப்பை, சூலகங்கள்) பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப் பிரச்சினைக்கு தேவையான மருந்துகளையும் நிபுணத்துவமான வைத்தியரின் ஆலோசனைப்படி பெற்றுக் கொள்ள முடியும்.
இறுதியாக உங்கள் மகளானவர் இன்று முதல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதற்கு உறுதி பூணுதல் வேண்டும். அவ்வாறு வாழ்ந்து உடற்பருமனைக் குறைத்துக் கொள்ளும் போது அவருக்கு இருக்கின்ற பல வகையான பிரச்சினைகளிலிருந்து விடுபடக்கூடியதாக இருக்கும். இன்னமும் 6 மாத காலத்தில் திருமணம் செய்யவிருப்பதால் துரிதமாக வைத்திய ஆலோசனையைப் பெற்று உடல் நிறையைக் குறைத்து, குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தி, மாதவிடாய் சக்கரத்தை ஒழுங்காக்கிக் கொள்வது இன்றியமையாததாகும். இதன் மூலம் பல நீண்ட காலப் பிரச்சினைகளை, குறிப்பாக கர்ப்பம் தரிக்காத நிலைமையை (Subfertility ) தவிர்த்துக் கொள்ள முடியும்..
நீரிழிவு நோயாளிகளுக்கான கவனக் குவிவு
நீரிழிவு நோய், கண், மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கும். இந்த நோய் உள்ளோர்க்கு ஏனையவர்களைவிடவும் பார்வைக் கோளாறு ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமாக விழித்திரையின் குருதி நாளங்களைப் பாதிக்கும். விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை கண் மருத்துவர்களினால் மட்டுமே பரிசோதித்து கண்டறிய முடியும். மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகங்களிலும் இதே மாறுதல்கள் ஏற்படுவதால் இந்தப் பரிசோதனை மூலம் இவற்றின் தன்மைகளையும் அறிந்து கொள்ள முடியும்.
நீரிழிவு நோயினால் ஏற்படும் விழித்திரைப் பாதிப்பு, நோயின் தீவிரம் மற்றும் எவ்வளவு காலம் சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற விடயங்கள் சார்ந்து அமைந்திருக்கும். பல வருடங்கள் நோய் உள்ளவர்களில் 70 – 80 சதவீதமானவர்களுக்கு விழித்திரைப் பாதிப்பு ஏற்படும். நீரிழிவு நோயாளிகளுக்குப் பார்வையிழக்கும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக 25 மடங்கு அதிகமாகக் காணப்படும். குறைந்த பார்வை அல்லது பார்வையிழப்பு ஏற்படும் வரை எந்தவித அறிகுறிகளும் தெரியாது.
விழித்திரைப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து கதிரியக்கச் சிகிச்சையளிப்பதன் மூலம் கணிசமான அளவில் பார்வையிழப்பைத் தடுக்க முடியும். லேசர் சிகிச்சை மூலம் இருக்கும் பார்வையைப் பாதுகாக்க முடியும், மாறாக இழந்த பார்வையைத் திரும்பப்பெற முடியாது. விழித்திரைப்பாதிப்பினால் ஏற்படும் பார்வையிழப்பைத் தடுக்க நீரிழிவு நோயாளிகள் அனைவருமே 12 மாதங்களுக்கு ஒருமுறையேனும் தங்கள் கண்களை கண் மருத்துவரிடம் அவசியம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். விழித்திரை பாதிக்கப்பட்டிருந்தால் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண் பார்வையை முற்றிலும் இழந்து போகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மருத்துவர் M.அரவிந்தன்
நீரிழிவு, அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ்போதனா வைத்தியசாலை.