நோய்த்தடுப்புக்கும் நோய் குணமாக்கலுக்கும் உரிய சாதனமாக இயற்கை விளங்குகிறது
காற்று
ஐம்பூதங்களுள் இயற்கையின் தனித்துவக் கூறாக நித்தமும் உயிர்நிலை வருடுகின்ற சுத்தமான காற்று பலவிதநோய்களையும் குணப்படுத்துகிறது. நுரையீரலைப் பாதுகாத்துக்கொள்கிறது. ஆம், பருவ காலத்துக்கு ஏற்ப காற்றுப் பலமாக வீசத் தொடங்கும் சந்தர்ப்பங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் ளின் எண்ணிக்கை குறைவடைகின்றமை இதற்குத் தக்க சான்றாக அமைந்துள்ளது.
இயற்கையான காற்றை நாம் நிறைவாக சுவாத்தியம் செய்ய வேண்டும். அவற்றைத் தடுத்து நிறுத்தி கதவடைப்புச் செய்து விடக்கூடாது. உண்மையில் நாங்கள் அனைவருமே பூட்டிய அறையினுள் செயற்கை மின்விசிறி தருகின்ற ஆபத்தான அசுத்தக்காற்றை சுவாசித்து அந்தரிக்கிறோம். நோயை இரு கரம் கூப்பித் தொழுது அழைத்திருக்கிறோம். இத்தகு செயற்காரியங்களில் இருந்து நாம் விடுபட முயற்சிக்க வேண்டும். ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் ஒவ்வாத வாழ்க்கை முறையில் இருந்து ஒதுங்கியிருப்போம்.
இயற்கையை பேணுவோம்
பூமியில் உள்ள மரங்கள் அழிக்கப்படும் போது அசுத்தக் காற்று எங்கும் நிரம்பலடைகிறது. அசுத்தக் காற்று எமது சுவாசப்பைகளில் நிறைந்து நோய் நிலைகளை தருகிறது. ஆக இங்கு நாம் ஆற்றவேண்டிய காரியங்கள் பல உள்ளன. குறிப்பாக, நாம் சுவாசிக்கும் காற்றை தூய்மைப்படுத்திக் கொள்ள இயற்கையை பாதுகாக்க வேண்டும். அங்கத்துவம் பெறுகின்ற பச்சையங்களான மரங்களை அழிவிலிருந்து பாதுகாக்கவேண்டும். மரங்களை சிந்தனையின்றி வெட்டிச் சாய்க்கும் போது, அதற்குரித்தான பரிகாரமாக ஒரு தொகை மரங்களை நடுகை செய்ய முயற்சிப்போம். எமது சுகத்தையும் சுற்றாடலையும் காத்திருக்கின்ற, சூழலிலுள்ள அசுத்தக் காற்றை வடிகட்டி சுத்திகரிக்கின்ற, சுவாசக்காற்றான ஓட்சிசனை தருகின்ற, நிழலையும் குளிர்ச்சியையும் மழை வீழ்ச்சியையும் தன்னிறைவாகக் கொடுக்கின்ற, நோய்த்தாக் கங்களிலிருந்து மனிதங்களை காப்பாற்றுகின்ற தாய் மண்ணைப் பேணிப் பாதுகாத்திருப்போம்.
உடல், உள, சமூக, ஆன்மிக நன்னிலையைக் காத்திருக்கும் ‘மரம்’ என்ற மருத்துவச் சுடரை தாய் தேசமெங்கும் ஏற்றி வைப்போம். அச்சுடர்களின் ஒளியில் மிளிர்ந்து ஆரோக்கிய வாழ்வியலில் நாமும் பங்காற்றுவோம்.
இரசனை உணர்வும் இயற்கை உணவும்
இயற்கையை இரசனை கொள்வோம். நற் பழக்க வழக்கமாய் அதனைக் கைக்கொண்டு பல நோய்களை குணப்படுத்துவோம். இத்தகு பழக்க வழக்கம் மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும். மனதில் ஏற்பட்ட காயங்கள் பலவற்றையும் மாற்றிவிடும். அதுவிதமே கலப்படமற்ற இயற்கையான உணவுவகைகள் நோயைத்தடுக்கவும், நோயைத் தீர்க்கவும் வல்லவை. குறிப்பாக, “ஊர்க்கோழி முட்டை, இளநீர், இயற்கையான உணவை உண்ணும் பசுவினுடைய பால், மோர், பச்சையிலையை உண்ணும் ஆட்டின் பால், இயற்கை உரமிட்டு மருந்து தெளிக்காமல் வளர்க்கப்பட்ட மரக்கறி வகைகள், ஊர்க்கோழி இறைச்சி, இயற்கையாக வளரும் அகத்தி, சண்டி, முருங்கை, தவசி முருங்கை போன்றவற்றின் இலை வகைகள், வாழைப்பொத்தி, தானாகப் பழுத்த பழவகைகள், கடலிலே பிடித்த உடன் மீன்வகைகள், இறால், தேசிக்காய், சுண்டங்கத்தரி” என அத்தனை இனிமையான இயற்கையான இலகுவில் கிடைக்கக்கூடிய உணவு வகைகளை அதிகம் பயன்கொள்வோம். மாறாக நவீனத்தின் அழிவாயுதமான சத்துமாப் பேணிகளையும், இரசாயன உணவு வகைகளையும் புறக்கணிப்போம்.
ஆகாய முதல்வன்
சூரிய பகவான் சக்தியை மட்டுமே கொடுக்காது பல நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து எமைப் பாதுகாத்து வருகின்றான். அன்றாட பாவனைப்பொருள்களான தலையணை, பாய், மெத்தை போன்றவற்றைசூரிய வெயிலில் காயவிடுவதன் மூலம் பல ஆபத்தான கிருமிகளை இயற்கையான முறையிலேயே அழித்துவிடமுடியும். இயற்கையாகப்பொழியும் மழைநீரைச் சேகரித்து அருந்திவருவது உடல் ஆரோக் கியத்துக்கு இன்றியமையாதது மட்டுமன்றி, புற்றுநோய்கள் மற்றும் சிறுநீரக நோய்களிலிருந்தும் எமைப் பாதுகாக்கிறது.
சுத்தம் சுகம் தரும்
இயற்கையை இறைவனாகச் சித்தரித்து வழிபடும் வழக்கம் எம்மிடையே தொன்றுதொட்டே இருந்துவருகின்ற மரபாக காணப்படுகிறது. இத்தகு சிறப்புடைய இயற்கை என்ற இறைவன் மருத்துவத்திலே நிபுணத்துவம் கொண்டிருப்பதால் அந்த இறைவனைவைத்தீஸ்வரன் என்ற நாமகரணம் சூட்டி அழைக்கிறோம். சில நோய்க் காரணிகளின் அழிவுக்கும், நோய் குணமாதலுக்கும் இயற்கையான நடைமுறைகள் மட்டும் போதாமல் போகலாம். அந்தச் சந்தர்பங்களில் மட்டுமே செயற்கை என்ற ஆயுதங்களை ஏந்துவோம். மொத்தத்தில் அவற்றைச் சாதுரியமாகப் பயன்படுத்த முயல்வோம். இயற்கையின் கவனிப்பில் என்றுமாய் சுகம் பெறுவோம்.
சி.சிவன்சுதன்
பொது மருத்துவ நிபுணர்,
போதனா மருத்துவமனை,
யாழ்ப்பாணம்.