யாழ் நகரில் அண்மைக் காலமாக மரங்கள் வெட்டப்படும் வீதம் அதிகரித்து வருகின்றது. வீதியகலிப்பு, புதிதாக நடைபெறும் கட்டட வேலைகள் போன்றவற்றாலும், தற்போது நடைபெற்று வரும் புகையிர பாதை அமைப்பு நடவடிக்கையாலும் மக்களுக்கு தாவரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு போதாமையாலும், மற்றும் பல்வேறு காரணங்களாலும் பல பயன்தரு மரங்கள் வெட்டியழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் சூழல் தாக்கங்களைக் குறைப்பதற்கும், தடுப்பற்கும் பல்வேறு மட்டங்களிலும் மரம் நாட்டும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இம் மரம் நாட்டும் நடவடிக்கைகள் இன்னும் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும், அநாவசியமாக மரங்கள் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் பொதுவாக மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகின்றது. பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் எமது சுற்றாடலில் மரங்களின் எண்ணிக்கை குறையுமாயின்
- சூழல் வெப்பநிலை அதிகரித்தல்
- மழை வீழ்ச்சி குறைவடைதல்
- நிலத்தடி நீர் குறைவடைதல்
- நிலத்தடி நீர் குறைவடைவதுடன் உப்பாக மாறுதல்
- சூழல் அசுத்தமடைதல்
போன்ற பாரிய தாக்கங்கள் ஏற்படும் என அஞ்சப்படுகின்றது.