திருமணமாகிய தம்பதியினரின் இனிமையான இல்லற வாழ்க்கையின் கனவாக குழந்தைச் செல்வம் அமைகிறது. தம்பதியினர் தகுந்த முறையான உடலுறவில் ஈடுபட்டும் ஒரு வருடத்தில் குழந்தை தங்குவதில் தாமதம் ஏற்படின் அதற்கான காரணம் கண்டறியப்படல் வேண்டும். எனினும் சிலர் ஒரு வருடம் காத்திருக்காது முன்னரே காரணம் கண்டறியப்படல் வேண்டும் என்பது அவசியமாகிறது. உதாரணமாக கணவன் 40 வயதுக்கு அல்லது மனைவி 35 வயதுக்கு மேற்பட்டவர்களாயின் அல்லது அவர்களுக்கு ஏதேனும் தொற்றாநோய்கள் (நீரிழிவு, இதயநோய், மூட்டுவாதம்) காணப்படின் கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
கர்ப்பம் தரிக்காதமைக்கு பெண்கள் மட்டும் காரணமல்ல
உரிய காலத்தில் கர்ப்பம் தரிக்காமைக்கான காரணங்களைப் பார்க்கும்போது கணவன், மனைவி இருவரையும் சார்ந்ததாக அமைகின்றன. பொதுவாக பெண்கள் (தனியே) 30 வீதமான ஆண்கள் (தனியே) 30 வீதமான இருவரும் ஒன்றாக 40 வீதமான காரணங் களை கொண்டிருக்கின்றனர். பெண்களில் காணப்படுகின்ற காரணங்களைப் பார்க்கும் போது ஓமோன்களின் சீரற்ற தன்மை முக்கியகாரணியாக அமைகிறது. உதாரணமாக தைரொட் ஓமோன் குறைவாக, கூடவாக காணப்படல், புரோலக்ரின் ஓமோன் கூட வாக சுரக்கப்படல், கபச்சுரப்பியின் சுரப்புக்கள் குறைதல் என்பவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம். சூலகத்தில் ஏற்படுகின்ற நீர்த்தன்மையான கட்டிகள் இதில் முக்கி யமாக அமைகிறது. பொதுவாக அதிகரித்த உடல் நிறை, அதீத உரோம வளர்ச்சிகள் (முகம், வயிறு, நெஞ்சு போன்ற பகுதிகளில்), முகப்பருக்கள், மாதவி டாயின்சீரற்றதன்மை என்பவற்றை கொண்டிருப்பார்கள். அடுத்து கருப்பையின் அமைப்பில் காணப்படுகின்ற மாறுபட்ட தன்மை மற்றும் கருப்பையில் தசைக்கட்டிகள் காணப்படல் (Fibroids) என்பவற்றைக் கூறலாம். ஏற்கனவே காணப்படுகின்ற தொற்றாநோய்களின் கட்டுப்பாடற்ற தன்மையும் மிக முக்கியமான காரணமாகிறது. நிறமூர்த்தங்களில் ஏற்படுகின்ற மாற்றமும் குறைந்த அளவிலான காரணமாகிறது. கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினையேற்படுவதற்கு ஆண்களில் உள்ள குறைபாடுகளும் காரணமாக அமைகின்றன. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் அல்லது தொழிற்பாடு குறைவாக இருத்தல், அதிகளவிலான குடிப்பழக்கம், புகைப்பழக்கம், மருந்துகளின் பழக்கம் (Drug abusers) நிற
மூர்த்தங்களின் மாற்றம் (Kilnefelter Syndrome), சில வகையான தொற்றாநோய்களின் பாதக விளைவுகள் (நீரிழிவு) என்பவற்றைக் குறிப்பிடலாம். ஏனைய காரணிகளாக விதைகளில் ஏற்படும் கிருமித்தொற்று (Orchitis), விதைகளில் ஏற்படுகின்ற தாக்கம் (Trauma Torsion) என்பவற்றைக் கூறலாம்.
மருத்துவரின் அறிவுரை மிகவும் அவசியமானது
எனவே கர்ப்பம் தங்குவதில் தாமதம் ஏறபடும் போது பெண்களில் தனியே, ஆண்களில் தனியே காரணம் கூறாது சரியான பரிசோதனைகளை மேற்கொண்டு காரணங்களைக் கண்டறிய வேண்டும். எனவே கணவன், மனைவி இருவருமே உரிய வைத்தியரை (மகப்பேற்று வைத்திய நிபுணர், அகஞ்சுரக்கும் தொகுதியியல் வைத்திய நிபுணர்) நாட வேண்டும். வைத்தியரிடம் முழுமையாக தமது பிரச்சினை களையும் கருத்துக்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். குறிப்பாக மாதவிடாய் பற்றிய விபரம், தொற்றா நோய்களின் தன்மை, ஏனைய மருந்துப் பாவனைகள், உடலுறவில் ஏற்படுகின்ற பிரச்சினை, புகைப்பிடித்தல், மதுப்பாவனை, உடல் நிறை அதிகரிப்பு உட்பட பல விடயங்களை வைத்தியரிடம் கூற வேண்டும். முழுமையான விபரங்களை, எடுத்த பின்னர் கணவன் மனைவியை பரிசோதித்து பார்த்த பின்னரே, அவர்களுக்குரிய பிரச்சினைகளை கண்டறிந்து உரிய விளக்கங்களைத் தருவதோடு,
சிலவகையான பரிசோதனைகளையும் மேற்கொள்வார்கள். குறிப்பாக பெண்களின் குருதியில் ஓமோன்களின் தன்மையை அளவிடல், வயிற்றினை பரிசோதித்தல் (Ultrasound scan) மற்றும் ஆண்களின் விந்துக்களின் தன்மையை பரிசோதித்தல், குருதியில் ஓமோன்களின் தன்மையை அளவிடல் என்பவற்றை கூறலாம். அதன் பின்னர் ஓமோன்களின் தன்மைகளில் மாறுபட்ட தன்மை இருப்பின் அதற்கு சிகிச்சை அளிப்பார். தேவை ஏற்படின் மேலதிக பரிசோதனைகள் செய்யவேண்டும். உதாரணமாக, பெண்களில் “டை” பரிசோதனை (Lap and dye) சூலகங்களின் நீர்கட்டிகளை சத்திர சிகிச்சை மூலம் குறைத்தல் போன்றவற்றை கூறலாம். ஆண்களின் விந்துக்களின் தன்மையில் குறைபாடுகள் இருந்தால் சிலவகை யான சிகிச்சைகளை பெறவேண்டும்.
பேணப்பட வேண்டியவை
மேலும் கர்ப்பத்திற்காக காத்திருக்கும் தம்பதியினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியம். தமது உடல் நிறையைகட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு சரியான உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி என்பன அவசியமாகும். அவர்களுக்கு ஏதாவது தொற்று நோய்கள் காணப்படின் அவற்றினை உரிய மருத்துவப் பாவனைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், மாதவிடாய் சம்பந்தமாக கவனம் செலுத்த வேண்டும், சரியான நேரத்தில் உடலுறவு கொள்ள வேண்டும், வைத்தியரை நாடுகின்றபோது அவர்களின் அறிவுரைகளை பின்பற்றவேண்டும், வைத்திய சிகிச்சை பெறுகின்ற போது ஏனைய குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும், தம்பதியினர் எவ்வித மானமனஅழுத்தமுமின்றி இருக்கவேண்டும். வைத்தியரின் ஆலோசனைகளை பின்பற்றும் போது கர்ப்பமாவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. ஓமோன்களால் குறைபாடுகள் காணப்படுகின்ற போது உரிய சிகிச்சையைப் பெறவேண்டும். அடுத்து, ஆண்களின் விந்தினை எடுத்து கருப்பையினுள் செலுத்துதல் (Intra uterine insemination IUI). இதனை மேற்கொள்ளும் போது அதிகபட்சம் 6 தடவை கர்ப்பம் தரிக்காத விடத்து அடுத்த கட்ட முயற்சிக்கு செல்லவேண்டும். ஐ.யு.ஐ. சிகிச் சையினை யாழ்ப்பாணத்தில் செய்து கொள்ள முடியும். கருப்பைக்கு வெளியே கருக்கட்ட செய்து கருப்பையினுள் செலுத்தும் (Invitro fertilization) முறையினை செய்யலாம். இவற்றினாலும் பயன் கிடைக்கவில்லை எனில் குழந்தையை உரிய முறையில் தத்தெடுத்து வளர்க்கலாம். மேற்குறிப்பிட்ட பல வழிமுறைகள் காணப்படுகின்ற போது பெண்கள் ஏன் தற்கொலைக்கு முயற்சிக்கின்றார்கள்? குழந்தையில்லை என நினைத்து ஏன் விரக்தி அடைகின்றார்கள்? இதற்கு முக்கிய காரணம் குழந்தை இல்லை என்ற காரணத்தினால் அவர்கள் மிகவும் தனிமைப்படுத்தப்படுகின்றார்கள், சமுதாயத்தில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள், குடும்ப விழாக்களில் பங்குபற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது, வேலை செய்யும் இடங்களிலும் அவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள், குடும்ப வாழ்க்கையில் பற்று குறைவடைகின்றது, கணவன் மனைவிக்கிடையில் உடலுறவு நாட்டம் குறைகின்றது. இறுதியில் கணவன் மனைவி இருவரும் தம்மிடையே பிளவு ஏற்பட்டுப் பிரிகின்றனர். சிலர் இன்னொரு வாழ்க்கையைத் தேடிச் செல்கின்றனர். எனவே திருமணமாகி கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படின் பல நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் இருக்கின்றன. கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் இருந்த தாமதத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார்கள். இது போன்று இனி மேலும் நடைபெறாமல் தவிர்க்கவேண்டும். குழந்தைப்பேறின்மைக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் சம்பந்தமான போதிய விளக்கம் ஏற்படுவது மிக அவசியமாகும். குழந்தைக் பேறின்மை தாமதமாக போவதனால் ஏற்கனவே மன அழுத்தத்திற்கு உள்ளாகித் தவிக்கின்ற தம்பதியினரை, குறிப்பாக பெண்களை மன அழுத்தத்தில் இருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு உதவுவது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சகலரினதும் கடமையாகும்.
மருத்துவர் : வி.கஜேந்தினி.