புகையிலையின் பிறப்பிடம், அமெரிக்கா, 15 நூற்றாண்டில் புதுநாடுகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் கொலம்பசும் மாலுமிளும் அமெரிக்காவைச் சென்றடைந்த போது அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்கள் புகைப்படித்துக் கொண்டிருப்பதை ஆச்சரியத்துடனும் வியப்புடனும் அவதானித்தனர். எப்படி அதனைப் பயிர் செய்கின்றார்கள் என்பதையும் அறிந்தனர். பின்னர் ஸ்பெய்ன், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பரவி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகி 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முகாலாயப் பேரரசர் அவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்பட்டு, பின் ஐம்பது ஆண்டு காலத்துக்குள் உலகெங்கும் மிகவேகமாக பரவியது. இந்தப் புகையிலை சுறுசுறுப்பு, உற்சாகம், புத்துணர்ச்சி ஏற்படுத்தும் என கருதிசுருட்டு, பீடி, வாய்ப்புகையிலை, மூக்குத்தூள் போன்ற வடிவங்களில் மக்கள் புகையிலையை பாவிக்கத் தொடங்கினர். நடுத்தர வர்க்கத்தினருக்கும் உயர் வர்க்கத்தினருக்கும் சிகரெட் என்றால் ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பீடி. இது மலிவானது. பீடிக்கு சுற்றப்படுவது கருந்தும்பிமர இலைகள், சிகரெட்டுக்கு சுற்றப்படுவது வெண்ணிறமான தனிவகைக் காகிதம். புகையிலை தூளின் சேர்க்கையாய் மங்காததும் கிழிந்து போகாததும் மெல்லி யதுமானமிதமாக எரியும் தன்மை கொண்டதுமான காகிதம். மனித சமுதாயத்தில் பல்கி பெருகி சர்வசாதாரணமாக இருக்கும் இந்தப் புகைப்பழக்கம் எல்லோரையும் தன்வயமாக்கிப் பழக்கமான தொரு வழக்கமாகிவிட்டது. வாழ்க்கையில் எதை இழந்தாலும் தன் மீது மட்டும் பற்று இருக்குமாறு இந்தப் பழக்கம் மாற்றிவிடுகிறது.
பேராபத்தானது நிக்கோட்டின்
புகை குடிப்பவரிடம் எதற்காக குடிக்கிறீர்கள்? அதன் பயன் என்ன? என்று கேட்டால் சரியான பதில் கிடைப்பதில்லை எப்படியோ பழக்கமாகிவிட்டது, இப்பொழுது விட மனமில்லை, இன்பத்துக்காகவும் உற்சாகத்துக்காகவும் குடிக்கிறேன், கவலையை மறக்க குடிக்கிறேன், புண்பட்டமனதை புகைவிட்டு ஆற்றுகிறேன், கவிஞர்கள் தங்கள் கனவுலகுக்கு அழைத்து செல்வதற்கு உதவுகிறது என்கிறார்கள். தனிமையை விரும்பும் ஏகாங்கிகளின் ஏக்கத்தைப் போக்குவதற்கு உதவுகிறது என்கிறார்கள். நடுங்கும் குளிரை நயமாகப் போக்கும் வெப்பப்பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள், சில அறிஞர் பெருமக்கள் தங்கள் அறிவுச்சிக்கலுக்கு உதவுகிறது என்கிறார்கள். பசிக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பரதேசி கூட பக்கென்று ஒரு தம் அடித்து தன் பசியை ஆற்றிக்கொள்கிறான். இவை ஓரளவு உண்மையாக இருக்கலாம் எனினும் இவை தற்காலிகமானவை. காப்பி குடிப்பவன் முதலில் உற்சாகமும் பின்பு சோர்வும் அடைவதை போல் புகை குடிப்பவனுக்கும், புகையில் உள்ள நிகோடின் அவன் புகைக்கும் போது உற்சாகத்தையும் பின்பு சோர்வையும் உண்டாக்கிவிடுகிறது. நிகோடின் இருதயத்தை அதிவேகமாக துடிக்க வைத்துவிடுகிறது. அத்துடன் குருதிக் குழாய்களை குறுக்கி விடுவதால் குருதி அமுக்கம் அதிகரிக்கின்றது. அத்துடன் புகையிலையில் உள்ள காபன்மொனக்சைட் ஆனது குருதயில் உள்ள சிவப்பு அணுக்களுடன் சேர்ந்து விடுகிறது. இதனால் இருதயத்துக்குத் தேவையான ஒட்சிசன் அளவு போதாமையால் இருதயம் கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்
ஒருவர் சிகரெட் பிடிக்கும்போது நிகோட்டின் ஆனது ஒரு பகுதி காற்றுடன் கலந்து போகிறது. மூன்றில் ஒருபகுதி உடலினுள் சென்று விடுகிறது. விரைவாக குடிக்கும் போதும் சிகரெட் எரிந்து குறுகும் போதும் கூடிய அளவு நிகோடின் உடலினுள் செல்கிறது ஒரு பகுதி காற்றினில் செல்ல, மிகுதி நாங்கள் இருக்கும் கட்டடங்கள், சுவர்கள், தரை, தரைவிரிப்புக்கள், மேசை, நாற்காலிகள் போன்ற மரப்பொருட்கள் எமது உடைகள், தோல்பகுதியில் படிந்து விடுகின்றன. பின்பு இந்த நிகோட்டின் ஆனது காற்றில் இருக்கும் நைட்டஸ் அமிலத்துடன் கலந்து விடுகிறது. இதுஒருகொடிய நச்சுப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. வீட்டில் இருக்கும் ஏதும் அறியா குழந்தைகளும் இதனால் பாதிப்புடையகூடும். சாதாரண சிகரெட் புகையில் நிகோடின், பைரிடைன், அமொனியா, மெதிலமைன்பிரஸ்ஸிக் அசிட், கார்பன்மோனோசைட், சாஸ்பரிடட், ஹைட்ரஜன், கார்பாலிக் அசிட் இது போன்ற 19 வகையான நச்சுப் பொருள்கள் கலந்திருப்பது அறியப்பட்டுள்ளது. உணவுக்குழாய் முன் தொண்டைப்பகுதி, டான்சில் கோளங்கள் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கு புகையிலைசாறு கலந்த உமிழ்நீர் ஒரு காரணமாகிறது.
புகையிலையால் ஏற்படும் பாதிப்புக்கள் ஏராளமானவை
சுருக்கமாக புகையிலையின் பாதிப்புக்களை கூறுவதாயின் பணவிரயம், காலவிரயம் சக்திவிரயம், உதட்டைகருகச் செய்தல், கன்னத்தை கரைத்துகுழிவு செய்தல், பற்களின் நிறமாற்றம், ஈறுகளில் காவி படிதல், வாய் துர்நாற்றம், இதயநோய், சுவாசப்பை நோய், குருதி அழுத்தம், கண்பார்வை மங்குதல், உஸ்ணஇருமல், சீரணசக்தி குறையும், புற்றுநோய் ஏற்படும், நீர்சுரப்பிகள் சுருங்கும், தூக்கமின்மை, மூச்சு திணறல், சிறுகுடல்புண், ஆஸ்துமா, குருதிக் குழாய்கள் சுருங்கும், குருதி நாளங்களில் அழற்சி, நரம்புகள் உணர்ச்சி அற்றுப்போதல், கச்ரோகம், குறைபிரசவம், சிசு இறப்பு, உடலின் மென்மையான உறுப்புகள் பாதிக்கப்படுதல், நாவுருசி அகலும், பாரிசவாதம், சரீர வளர்ச்சி பாதிக்கப்படும், மலட்டுத்தன்மை , முதுகு கூன் ஏற்படல், பசியின்மை , இப்படி தொடர்ந்து எழுதிக் கொண்டே போகலாம்.
விடுபட என்ன வழி
இவற்றில் இருந்து ஒருவர் விடுபவதற்கு புகைபிடித்தல் பழக்கம் ஆரம்பமானவுடன் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். புகைத்தலை தவிர்த்தல், தண்ணீர் அல்லது சீனி சேர்க்காத பழரசங்களை அதிக அளவில் அருந்துதல், கிளர்ச்சியூட்டக்கூடிய எல்லா பானங்களையும் உணவுகளையும் தவிர்த்து சுத்தமான காற்று உள்ள இடத்தில் உடற்பயிற்சி செய்தல், உலாவப் போதல், உங்கள் புகைப் பழக்கத்துடன் சம்பந்தப்பட்ட இடங்கள், செயல்களைத் தவிர்த்தல், அதிகம் புகைகுடிப்பவராயின் படிப்படியாக குறைத்தல், மாற்றுப்பழக்கத்தை ஏற்படுத்த தல், (ஸ்வீங்கம்) வாயில் போட்டு நெடுநேரம் மெல்லுதல், புறமனதின் அறிவுறுத்தலி னால் மீட்சி கொள்ளுதல், மருத்துவ மனோவசிய முறைகளை நாடுதல் ஆகிய படிமுறைகளின் வாயிலாக புகைத்தலைத் தவிர்த்து இருப்போம்.
சு.சுதாகரன்.