அசுத்தமான சூழலில், தூசுகளுடனும் நோய்களுடனுமான வாழ்க்கைப் போராட்டத்தை நிறுத்தி அமைதியான அழகான ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்திட யாருக்குத்தான் விருப்பமில்லை. அவ்வாறான சூழலை எவ்வாறு உருவாக்குவது எவ்வாறு பேணுவது என்பதில்தான் நாம் அக்கறையுடன் கருமங்கள் ஆற்றுவதில்லை.
- ஒரு நகரின் சுத்தம் யார் கைகளில் உள்ளது?
- எனது நாளாந்த செயற்பாடுகளை எனது நகரின் சுத்தத்திற்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் ஆற்றுகிறேனா?
- என்னால் தினமும் கிலோக்கணக்கில் உருவாக்கப்படும் குப்பைகள் தொன் கணக்கில் நகரின் குப்பையாக மாறிவிடும் என்பதை அறிவேனா?
- இது எனது நகரின் அழகிய சூழலை அலங்கோலமாக்கிவிடும் என்பதனையும் அறிவேனா?
- என்னால் உருவாக்கப்படும் குப்பைகளின் அளவைக் குறைத்திட முடியுமா?
- நகரின் அழகிய சூழலை மேம்படுத்திட என்னால் எங்ஙனம் பங்களிப்புச் செய்திடமுடியும்?
இவ்வாறான கேள்விகளுக்கான விடைகளை எமது வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க முற்பட்டாலொழிய சுற்றாடல் சுத்தத்தை, ஆரோக்கிய நன்னிலை நோக்கி உயர்த்திட முடியாது. எம்மால் உருவாக்கப்படும் திண்மக் கழிவுகளை தகுந்த முறையில் சேகரித்து இறுதியகற்றல் செய்வதன் மூலமே சுற்றாடல் சுகாதாரத்தினை பேணமுடியும். இதனை இலகுவாக நடைமுறைப்படுத்தக்கூடிய முறையை சொல்வதே ‘3R’ முறைமை ஆகும். குறைத்தல் (Reduce), மீள்பாவனை (Reuse). மீள்சுழற்சி (Recycle) என்பவையே இந்த மூன்று ‘R’களுமாகும். என்னால் உருவாக்கப்படும் கழிவுகளை, சிறந்த முறையில் நானே நடைமுறைப்படுத் தக்கூடிய வகையில் கையாள்வதை உறுதிசெய்வேன் என்ற எண்ணவோட்டம் ஒவ்வொருவரினதும் மனதில் ஏற்பட்டால் அதன்மூலம் நல்ல பயன்கிடைக்கும்.
குறைத்தல் (Reduce)
தேவையற்ற பொருள்களை வாங்கி, வீட்டில் மேலும் கழிவுகள் சேர்வதனை தவிர்த்தல். பாவனையின் போது அதிகளவு உக்காத கழிவுகளைத் தரக்கூடிய பொருள்களைத் தவிர்த்தல். நீடித்து உழைக்கக் கூடிய பொருள்களையும் மீள் பாவனைப்பொருள்களையும் பாவிக்கும் மனோநிலைக்கு முன்னுரிமையளித்தல். சந்தைக்கோ, கடைக்கோ செல்லும் போது மீள் பாவனைக்குரிய பைகளையே கொண்டு செல்வதனை பழக்கத்தில் கொண்டு வருதல் (துணிப்பை கள் அல்லது மட்டைப் பைகள்), நாளாந்த கொள்வனவின் போது, பொதியிடப்பட்ட பொருள்களை இயலுமானவரை வாங்குவதனை குறைத்துக் கொள்ளல், பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்ட பொருள்களை முற்றாகவே தவிர்த்தல், பிளாஸ்ரிக் தட்டுகள், றெஜி போம் போன்ற உக்கமுடியாத, ஆனால் சூழலில் சேர்த்து அதன் நல்லியல்பைக் கெடுக்கும்பொருள்களை பாவிப்பதனைத் தவிர்த்தல், விழாக்களின் போது பிளாஸ்ரிக்காலான ஒரு நாள் குவளைகளை (One day cups) பாவிப்பதனை தவிர்த்து மீள் பாவனைக்குட்படுத்தக் கூடிய குவளைகளை பாவிப்பதனை பழக்கப்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டபல செயன்முறைகளினூடாகவும் மீள் பாவனைச் செயன் முறைகளினாலும் எம்மால் அன்றாடம் உருவாக்கப்படும் கழிவுக என் அளவைக் குறைத்திடமுடியும்.
மீள் சுழற்சி(Recycle)
மீள் சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளான கண்ணாடி, பிளாஸ்ரிக், கடதாசி, இலத்திரனியல். உலோகக்கழிவுகளை வேறுவேறாகதாம் பிரித்து வெவ்வேறு கொள்கலன்களினுள் சேகரித்து மீள் சுழற்சிக்கு உதவிடமுடியும். விரைவானதும் வினைத்திறனானதுமான தரம் பிரித்தல் செயன்முறைக்கு பன்னாட்டு நிறக்குறியீட்டினை பின்பற்றிக் கொள்ளுதலே சிறப்பானதாகும்.
பிளாஸ்ரிக் பொலித்தீன் கழிவுகள் – செம்மஞ்சள் கொள்கலன்
கடதாசி கழிவுகள் – நீல நிறக் கொள்கலன்
உடைந்த கண்ணாடிக் கழிவுகள் – சிவப்பு நிற கொள்கலன்
உலோகக் கழிவுகள் – மண்ணிறக் கொள்கலன்
இலத்திரனியல் கழிவுகள் – கறுப்பு நிற கொள்கலன்
உக்கலடையக் கூடிய சேதனக்கழிவுகள் – பச்சை நிறக் கொள்கலன்
மேற்கூறியவாறு கழிவுகளை பொருத்தமான நிற கொள்கலன்களினுள் சேகரித்து மீள் சுழற்சிக்கு உதவிட முடியும். பாவித்த மின்குமிழ்கள் (குறிப்பாக CFL), பாவித்த மின் கலங்கள் என்பவற்றில் பார உலோகங்கள் உள்ளன. இப்பார உலோகங்கள் குடிநீரில் கலந்துவிடின், சிறுநீரக செயலிழப்புகள் சிறிது சிறிதாக ஏற்பட்டு எம் சமூகத்தை முடமாக்கிவிடும். எனவே இவை குறித்து சிறப்புக் கவனம் செலுத்தி, தகுந்த பாதுகாப்பான முறையில் இவற்றை சேகரித்து, இவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கே மீளவும் அனுப்பிவிட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை உள்ளுராட்சி மன்றங்கள் செயற்படுத்திட முன்வருதல் வேண்டும். இது விடயமாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவியினை உள் ளூராட்சி சபைகள் பெற்றிட முடியும்.
உக்கக்கூடிய கழிவுகளைக் கொண்டு கூட்டெரு – Composte தயாரித்திட முடியும். இது விளை நிலத்தின் காற்றோட்டம், ஈரலிப்பு, நுண்ணுயிர்களின் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்து அதன் வளத்தினை மேம்படுத்திடும். வீட்டுத் தோட்டச் செய்கையில் இதனை பயன்படுத்தும்போது தூய்மையான நஞ்சற்ற காய்கறி பழவகைகளை பெற்றிட முடிவதுடன் சுற்றாடல் சுகாதாரமும் மேம்படும். பொது இடங்களில் நிழல் பரப்பும் மரங்களிலிருந்து உதிரும் சருகுகளை வீணே கூட்டி எரிப்பதனை தவிர்த்து இவற்றினை Compost உர உற்பத்திக்கு உட்படுத்தினால் எம் பிரதேசத்தில் புற்றுநோய்த் தாக்கத்தினை முற்றுமுழுதாக் குறைத்திட முடியும்.
இவ்வாறான சிறு Compost மையங்களை, கோவில்கள், தேவாலயங்கள், பொதுநூலகங்களின் நந்தவனங்களில் அமைப்பதன்மூலம் அவற்றின் அழகை மேலும் மெருகூட்டிப் பராமரித்திட முடியும். திண்மக்கழிவுகளை அதாவது குப்பைகளை தகுந்த முறையில் சேகரித்து முகாமைத்துவம் செய்வதன் மூலம் அசிங்கமாக – அலங்கோலமாக
இருக்கும் சூழல் ஆச்சரியம் மிகுந்த விருப்பத்திற்குரிய இடமாக மாறி விடும் விந்தையைக் காணமுடியும்.
மருத்துவர் பொ.ஜெசிதரன்