நோய் நொடியற்ற ஆரோக் கியமான சுகவாழ்விற்கு உடற்பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது. நேரமின்றி தொழில் புரியும் மனிதன் உடற்பயிற்சியின் பயன்கள் பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ அக்கறை கொள்வதில்லை. ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி இன்றியமையாதது என்பதனாலேயே உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பாடசாலைகளிலும் தொழில் நிறுவனங்களிலும் வலியுறுத்தப்படுகின்றது.
உடற்பயிற்சியினை வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகக் கொண்டு வருவதற்காக பாடசாலைகளில் சிறுவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வேறுபல விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் இதில் பங்குபற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கான மிக முக்கிய காரணம் விளையாட்டுக்களில் ஈடுபட முன்னராக குறிப்பிட்ட விளையாட்டிற்காக அவர்களது உடல் நிலையை சரிவர தயார் செய்து கொள்ளாமையும் மற்றும் விளையாட்டுக்களின் போது ஏற்படுகின்ற விளையாட்டு உபாதைகளும் ஆகும்.
விளையாட்டுக்களின் போது மீண்டும் மீண்டும் உபாதை ஏற்படுவதினால் அவற்றை எவ்வாறு குணப்படுத்தலாம் அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படாமல் எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி விளையாட்டு வீரர்களிற்கும் அவர்களை பயிற்றுவிப்பவர்களுக்கும் விழிப்புணர்வு செய்வது மிகவும் அவசியமாகும். விளையாட்டுக்களின் போது ஏற்படும் பெரும்பாலான உபாதைகள் தவிர்க்கப்பட கூடியவை ஆகும். எனினும் மைதானத்தில் பந்து மோதுதல் அல்லது வீரர்களுடன் மோதுதல் என்பன தவிர்க்கப்பட முடியாதவையாகும். இவை தவிர்ந்த ஏனைய உபாதைகள் பெரும்பாலும் தவிர்க்கப்படக் கூடியவையாகும்.
விளையாட்டின் போது ஏற்படும் பாதிப்புக்கள்
பொதுவாக விளையாட்டுக்களின் போது ஏற்படும் பாதிப்புக்களை அதன் தன்மையைப் பொறுத்து 2 வகையாக பிரிக்கலாம்.
உடனடியாகக் குணப்படுத்தக் கூடியவை.
சிறிது காலத்தின் பின் குணப்படுத்தக் கூடியவை. எலும்பு முறிவு, தசைக்கிழிவு, மூட்டு விலகல் என்பன அநேகமான விளையாட்டு வீரர்களுக்கு தசை மற்றும் தசை நார்களிலே பாதிப்பு ஏற்படுகின்றன. அவையாவன. தசைசுளுக்கு – (Muscle Strain)
தசைநார் சுளுக்கு – (Ligament Sprain)
தசைப்பிடிப்பு – (Muscle Cramp)
தசைநார் கிழிவு – (Tendon Rupture)
எமது உடலிலே தசைகளும் தசைநார்களும் குறித்தளவு விசையினை தாங்குவதற்கு ஏற்றால்போல் மட்டுமே இசைவாக்கம் அடைந்துள்ளன. எனினும் தேவை ஏற்படும் போது சரியான உடற்பயிற்சிகளை பெறுவதன் மூலம் அதனை அதிகரித்துக் கொள்ளலாம்.
உதாரணமாக சரியான முறையில் பயிற்சி பெறாத ஒருவர் திடீரென விளையாட்டில் ஈடுபடும் போது அவரது தசைகள் அதற்கு ஏற்ற வாறு இசைபாக்கம் அடையாத காரணத்தால் அவருக்கு உபாதைகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாறான உபாதைகளுடன் தொடர்ந்து விளையாடும் போது அவற்றை நிரந்தரமாக குணப்படுத்துவது பற்றிய பூரணமான அறிவின்மையால் வீரர்கள், சிறுவர்கள் விளையாடுவதைத் தவிர்க்கின்றனர்.
உபாதையால் அதிகமாக பாதிக்கப்படும் பாகங்கள்
இவ்வாறான உபாதைகள் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் அதாவது முழங்கால், தொடைப்பகுதி, தோள்மூட்டு, கணுக்கால் மூட்டு போன்ற பகுதிகளில் அதிகமாக ஏற்படுகின்றன.
சடுதியாக ஏற்படும் உபாதைகளினால் தாங்க முடியாத வலி, உபாதைக்கு உட்பட்டு உடல் பாகங்களை அசைக்கமுடியாத நிலை மற்றும் வீக்கம் என்பன உடனடி விளைவாக ஏற்படு கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உபாதையின் வகையினை பொறுத்து அதற்குரிய முதலுதவி உடனடியாக வழங்கப்பட வேண்டும். நீண்ட கால தொடர்ச்சியான பயிற்சி மூலம் ஏற்படும் உபாதைகள் களைப்புத்தன்மையையும் பயிற்சிகளின் போது வலியையும் தோற்றுவிக்கும். இத்தகைய பாதிப்புக்களில் இருந்து வழமைக்கு திரும்பி மீண்டும் அதே பயிற்சிகளில் அல்லது விளையாட்டுக்களில் ஈடுபட்டு அவர்களது திறமையை வினைத்திறனாக வெளிக்காட்ட முடியும் என்பது எம்மில் பலருக்கு தெரியாது. இத்தகைய வீரர்களின் படிப்படியான முன்னேற்றத்தில் இயன்மருத்துவ சிகிச்சை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
உபாதைக்கான காரணங்கள் சில
பயிற்சிகளின்போது அல்லது விளையாட்டுக்களின் போது உபாதைகள் ஏற்பட ஏதுவான காரணிகளாவன,
1. தசைநார்களின் இறுக்கம்.
2. தசைகள் பலவீனமாக இருத்தல்.
3. போதியளவு பயிற்சியின்மை அல்லது குறித்த விளையாட்டிற்கு தேவையான தசைகள் நன்றாக பயிற்றுவிக்கப்பட்டாமை.
விளையாட்டில் ஈடுபடுவதற்கு முன்னர் உடலை வலுப்படுத்தும் (Warm up) பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் அப்போதுதான் குறிப்பிட்ட தசைகளுக்குரிய குருதி ஓட்டம் கூட்டப்பட்டு அவற்றின் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கும். அவ்வாறே பயிற்சியின் பின்னரும் தளர்வுப் பயிற்சியில் (Cool down) ஈடுபடுதல் அவசியமாகின்றது. குறிப்பிட்ட காலத்திற்கு விளையாடாமல் இருந்து பின்னர் திடீரென்று விளையாடத் தொடங்குவதும் உபாதைகள் ஏற்படக் காரணமாகின்றன.
எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக கடுமையான பயிற்சிகளில் ஈடுபடாமல் இலகுவான பயிற்சிகளில் ஆரம்பித்துப் படிப்படியாக அதிகரித்துச் செல்ல வேண்டும்.
தசைகள், உடல் சோர்வடைந்த நிலையில் பயிற்சிகளோ அல்லது விளையாட்டுக்களிலோ ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். சாதாரணமாக ஒரு தொடர்பயிற்சி செயற்பாட்டிற்கு உட்பட்ட தசைநார்கள் மீண்டும் வழமைக்கு திரும்ப பொதுவாக 48 மணித்தியாலங்கள் தேவைப்படும். குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முன்பு மீண்டும் தொடர் பயிற்சியை ஆரம்பிப்பதும் வலி ஏற்படுமிடத்து பயிற்சியை நிறுத்தாது தொடர்வதும் கூடியளவு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இவை பற்றிய போதியளவு விழிப்புணர்வு இன்மையும் இத் தகைய பாதிப்புக்களுக்கு காரணமாக அமைகின்றது.
பயிற்சிகள் அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஏற்படும் உபாதைகளினால் அனேகமாக காயப்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்படுகின்றது இந்த வீக்கமானது அவயவங்களில் உள்ள முழுமையான அசைவுகளை தடுப்பதையும், காயங்கள் குணமடைவதை தாமதப்படுத்தவதிலும் பங்கேற்கிறது. ஆகவே இவ் வீக்கத்தை கட்டுப்படுத்துவது விளை யாட்டு உபாதை சிகிச்சையின் முதலாவது நோக்கமாக அமைகின்றது. இதற்காக PRICE எனும் சிகிச்சை முறை வழக்கத்தில் உள்ளது. ஏற்பட்ட பகுதி மேலும் காயம் அடையாமல் பாதுகாத்தல். இதற்கு காயம் ஏற்பட்ட பகு தியை மட்டை வைத்துக்கட்டி அசைவுகள் ஏற்படுவதை தடுத்தல், ஓய்வளித்தல் உபாதைக்குட்பட்ட பகுதியை ஓய்வாக வைத்திருத்தல். பனிக்கட்டி ஒத்தடம் அளித்தல், மெதுவான அழுத்தத்தை அளித்தல்.
உபாதைக்குட்பட்ட பின்னர் மீண்டும் விளையாட்டில் வினைத்திறனுடன் பங்கேற்க அல்லது குறித்த ஒரு விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கு இயன்மருத்துவ சிகிச்சையும் அதனை தொடர்ந்து வழங்கப்படும் உடல்வலுவைப் பேணும் ( Fitness Training) பயிற்சிகளும் விளையாட்டின் வகைக்கேற்ப உடல் வலுவை விருத்தி செய்யும் பயிற்சிகளும் அவசியமாகின்றன.
இயன் மருத்துவச் சிகிச்சையின் பங்களிப்பு
விளையாட்டு உபாதைகளில் இயன்மருத்துவமானது பின்வரும் வழிகளில் உதவியளிக்கின்றது.
- வலி/ வீக்கத்தை கட்டுப்படுத்தல்.
- காயமடைந்த உடல் இழையங் களை வேகமாகக் குணமடையச் செய்தல்.
- ஏற்கனவே ஏற்பட்ட உபாதையானது மீண்டும் மீண்டும் ஏற்படு வதை தடுக்க வழி செய்கின்றது./li>
இயன்மருத்துவச் சிகிச்சையானது உபாதைகளின் தன்மைக்கேற்ப வேறுபடுகின்றது. பொதுவான சிகிச்சை முறைகளான,
- பனிக்கட்டி பயன்பாடு, வலி, வீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.
- வலியைக் குறைக்கவும் தசை அல்லது மூட்டுக்களின் இறுக்கத்தைக் குறைக்கவும் காயமடைந்துள்ள கலங்களுக்கு அதிக கருதி ஓட்டத்தை வழங்குவதன் மூலம் வேகமாகக் குணமடைய உதவும்.
- வலியை கட்டுப்படுத்த உதவும். காயமடைந்த கலங்களிற்காக குருதி ஓட் டத்தை வழங்கி குணமடைவதை வேகமாக்கும்.
- தசைகளிற்கான நீட்டற் பயிற்சிகள்
- தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள்
- கல்வியூட்டல்
தொடர்ச்சியான உபாதை தவிர்க்கப்படல் அவசியம்
உபாதைகளிலிருந்து பூரணமாக குணமடைந்த பின்னர் மீண்டும் உபாதைகள் ஏற்படாமல் பாதுகாத்தல் மிக அவசியமாகின்றது. இதற்காகவே உடல் வலுவூட்டும் மற்றும் தசைகளை விருத்தி செய்யும் பயிற்சிகளும் மிகமிக அவசியமாகின்றது.
விளையாட்டின் வகைக்கு ஏற்றவாறு இந்தப் பயிற்சி முறைகள் மற்றும் பயிற்சியின் தன்மை வேறுபடும். உதாரணமாக கால்பந்து வீரரொருவர் பெறும் பயிற்சிக்கும் பூப்பந்து வீரர் பெறும் பயிற்சிக்கும் அல்லது ஒரு பாரம்தூக்கும் வீரர் பெறும் பயிற்சிக்கும் இடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன.
எனவே உங்களது விளையாட்டில் நீங்கள் தலை சிறந்து விளங்க உங்களது தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கு உபாதைகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் முறையான பயிற்றுவிப்பாளரை அல்லது இயன்மருத்துவரை நாடி ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் பெற்று ஒரு பூரண விளையாட்டு வீரராக நீங்களும் மாறுங்கள்.
பிரியந்தி கிரிதரன்
இயன்மருத்துவப் பிரிவு
யாழ். போதனா வைத்தியசாலை