“அரிது அரிது மானிட ராய் பிறத்தல் அரிது” என்பது ஆன்றோர் வாக்கு. இத்தகைய பெறுதற்கரிய பிறவியிலே கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு காலப்பகுதியும் சுவாரசியமானது. அதிலும் முதுமைக் காலம் மிகவும் சுவாரசியமானது. பட்டாம்பூச்சியாய்சிற கடித்த பள்ளிப்பருவம், சுற்றித்திரிந்த கட்டிளமைப் பருவம், ஓடி ஓடி உழைத்த இளமைப்பருவம் ஆகியவற்றின் வரிசையில் உழைத்து இளைத்துப் போய் ஓய்வெடுக்கும் காலமே இந்தமுதுமைக்காலம் ஆகும்.
நோய்களின் இருப்பிடமாகும்
முதுமை மனிதன் முதுமை அடையும் போது என்புகள் தசைகள் வலு இழத்தல், நரம்புகளின் செயற்பாடுகள் குறைவடைதல், சமிபாடுமற்றும் ஏனைய அனுசேப தொழிற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களினால் உடல்ரீதியாக பலவீனம் அடைகின்றான். ஞாபக மறதி, கிரகித்தல்திறன் குறைவடைதல், கண் பார்வை குறைவடைதல், காது கேளாமை, அடிக்கடி விழுதல் போன்ற வற்றால் தன்னம்பிக்கை இழந்து உள்வியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின் றான். இதனால் சமுகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றான். முதுமைக்காலத்திலே தொற்றா நோய்களான சலரோகம், உயர் குருதி அழுத்கம், கொலஸ்ரோல், இதய நோய், பாரிசவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. முதுமையில் நோய் எதிர்ப்புச்சக்திகுறைவாக உள்ளதால் தொற்றுநோய்களாலும் அதிகமாகவே பாதிக்கப்படநேரிடுகிறது. இதனால் அடிக்கடி ஏற்படும்வைத்தியசாலை அனுமதிகள், போசனை குறைபாடுகள், தூக்கமின்மை என்பன மென்மேலும் அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றது.
ஒவ்வொரு முதுமையும் அனுபவப் பகிர்வே
வாழ்க்கையில் நிறைவு காண்கின்ற அனுபவம் நிறைந்த முதியவர்களிடம் வாழவேண்டிய இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளம் ஆகும். விஞ்ஞானம் பல்வேறு ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கின்ற விடயங்களை தங்கள் அனுபவம் மூலம் கண்டறிந்தவர்கள் எம் முன்னோர்கள். இவர்கள் மிகச்சிறந்த ஆசான்கள், விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள். குழந்தைகளுக்கு குட்டிக்கதைகள் சொல்லவும், நற்பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்து நல்வழிகாட்டியாகவும், முன் உதாரணமாகவும் திகழ்கின்றனர். அதிகளவு பிறப்பு வீதம், இறப்பு வீதம் என்ற நிலைமாறி தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் இறப்பு வீதம் குறைவடைந்து வருகிறது. இதனால் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. 2008ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி உலகளாவியரீதியில் 60வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்60 கோடியைத் தாண்டியுள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டளவில் இத்தொகை இருமடங்காகும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது எம்மவரிடையே கூட்டுக்குடும்ப வாழ்க்கை அரிதாகிவிட்டது. பிள்ளைகள் திருமணமாகி தனிக்குடும்ப வாழ்க்கையையே நாடுகின்றனர். இயந்திரமான வாழ்க்கை, மேலைநாட்டுக் கலாசாரத்தின் தாக்கம், வெளிநாட்டு மோகம் என்பன பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான விரிசலை அதிகரிக்கின்றது. வெளிநாடு சென்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றதும் மனைவி, பிள்ளைகளை தன்னோடு அழைக்கையில் பெற்றெடுத்ததாய், தந்தையரை அழைக்க மறப்பதேனோ? இதுஒருபுறம் இருக்கவேலைக்குச் செல்லும் இளைஞர்கள் வீட்டில் இருக்கும் தன்வயதானதாய், தந்தையரிடம் சிறிது நேரம் ஒதுக்கி ஆறுதல் வார்த்தை கூடப் பேசுவதில்லை என்பது கசப்பான உண்மையே. வீட்டில் தனிமையில் இருந்து பிள்ளைகளின் அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்கித் தவிக்கும் முதியவர்களுக்கு இறுதியில் எஞ்சுவது தனிமையும், வெறுமையுமே. எத்தனையோ பிள்ளைகள் இருந்தும் இறுதிக்காலத்தில் தன்னைப் பராமரிக்க ஒரு பிள்ளை இல்லையே என ஏங்கித்தவிக்கும் பெற்றமனங் கள்தான் எத்தனை எத்தனை!! அன்பு இல்லாத பிள்ளை, அரவணைக்காத உறவுகள், ஆபத்துக்கு உதவாத சுற்றத தார் என்று அலைக்கழிக்கப்பட்டு இறுதியில் ஆதரவற்றவர் என்ற அடைமொழியோடு அடைக்கலமாகின்றனர். முதி யோர் இல்லங்களில். நாடளாவிய ரீதியில் ஊருக்கு ஊர் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன.
வீட்டுக்குப் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்
மேற்படி புதுக்கவிதை சொல்லமுடியாத பல உண்மைகளை மிக அழகாக சித்தரிக்கிறது. இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகின்றனர். முன்செய்யின் பின்விளையும் என்பதற்கமைய இன்று எமது பெற்றோரை நாம் முதியோர் இல்லங்களில் சேர்த்தால் நாளை எமது பிள்ளைகள் எம்மை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவர், முதியோர் இல்லங்கள் நீடித்து இருப்பதற்கான காரணம்புரிகிறதா? முதியோர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில்கொண்டு முதியோர்களுக்கான தனியான தினமும், சிறப்பு திட்டங்களும் 1990 ஆம் ஆண்டில் ஐ.நா சபையினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஆண்டுதோறும் ஒக்டோபர் முதலாம் திகதி பன்னாட்டு முதியோர் தினமாக கொண்டாடப்பட்டுவருகின்றது. இருப்பினும் பெரும்பான்மையான பெற்றோர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது பிள்ளைகளின் அன்பையும், அரவணைப்பையுமே ஆகும். பிள்ளைகளின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து பாசத்தையும் நேசத்தையும் ஊட்டி வளர்த்த அந்த பெற்றமனம் அன்புக்காக ஏங்கித்தவிக்கையில் நாம் பாரமுகமாய் இருப்பதேனோ?
முதியோர்களும் குழந்தைகளே!!
பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்துகொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்படமாட்டார்கள் என்பதற்கு எவ்வளவே உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆதரவற்ற முதியோருக்கு தூய உள்ளத்தோடு தொண்டு செய்தல் கடவுளின் பணி என்கிறார் அன்னை திரேசா. எம்மை குழந்தைகள் போல் வளர்த்த எமது பெற்றோரை குழந்தைகள் போல் பராமரிக்க வேண்டியது எம் ஒவ்வொருவரின்தும் தலையாய கடமை ஆகும்.
போசாக்கான இலகுவில் சமிபாடடையக்கூடிய பொருத்தமான உணவுகளை வழங்குதல், ஒழுங்கான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தல், சிறந்த பொழுதுபோக்கு வசதிகளை செய்து கொடுத்தல் என்பன முக்கியமாகும். உடற்பயிற்சி செய்வதுக்கு ஊக்குவித்தல் நல்லது. இவர்களுக்கு நடைபயிற்சி (Walking) மிகவும் பொருத்தமானது. இதன் மூலம் புத்துணர்வும், உற்சாகமும் கிடைக்கும். அடிக்கடி விழுதல் முதியவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாகும். இது அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது. இதனைத் தடுக்கும் முகமாக தரைகளை உராய்வானதாக அமைத்தல், படுக்கையின் உயரத்தைக் குறைத்தல், படுக்கை அறைக்கு அருகில் கழிப்பறைகளை அமைத்தல், கழிவறை மின்குமிழை எப்போதும் ஒளிரவிடுதல், ஊன்றுகோல் ஒன்றின் உதவியுடன் நடக்கச் செய்தல் போன்ற மாற்றங்களை நடைமுறைப்படுத்தலாம். ஆன்மிகச் செயற்பாடுகளில் ஈடுபட உதவுதல், சிநேகிதர்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தல், அவர்களைத்தனிமைப்படுத்தாது குடும்பத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் பங்குபெறச்செய்தல், அவர்களின் கருத்துக்களை செவிமடுத்தல், உணர்வுகளை எம்மோடு பகிர்ந்துகொள்ள இடமளித்தல் போன்ற செயற்பாடுகளினால் நாங்கள் மகிழ்ச்சியடைவதோடு வளர்ந்த அந்த குழந்தைகளையும் மகிழ்வித்து, திருப்தியடைய செய்து மிகச்சிறந்த எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம்.
மருத்துவர் அருண்சிந்தியா செல்வராஜா
நீரிழிவு சிகிச்சைநிலையம்
யாழ். போதனாவைத்தியசாலை