நீரிழிவு நோயாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்பன தொடர்பில் மருத்துவருக்கும் நோயாளர்களுக்கும் இடையில் நடைபெறும் கதையாடல்போன்று இந்தக் கட்டுரை நகர்கிறது.
மெற்போமின் மருத்து தொடர்பில் மருத்துவ ஆலோசனை அவசியம்
கேள்வி: எனது வயது 56 ஆகும். நான் மெற்போமின் மருந்தை (500மி.கி.) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த கடந்த 5 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றேன். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குருதிப் பரிசோதனைகளின் படி எனது நீரிழிவு நோய்க் கட்டுப்பாடானது சிறந்த முறையில் உள்ளதாக மருத்துவர் கூறியிருந்தார். எனது உறவினர்கள் சிலர் மெற்போமின் பயன்படுத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்படுமெனக் கூறுகின்றனர். இதுபற்றி விளக்கிக் கூறவும்?
பதில்: இது மிகவும் அவசியமானதொரு வினாவாகும். எமது மக்களிடையே நீரிழிவு நோய் தொடர்பான பலபிழையான எண்ணக்கருக்கள் உள்ளன. அவற்றில் இது மிக முக்கியமானதொன்றாகும். உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதற்படியாக பாவிக்கின்ற (First line) நீரிழி வைக்கட்டுப்படுத்தும் மருந்து மெற்போமினே ஆகும். இந்த மருந்தானது நீரிழிவு நோயைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்துவதோடு அதனால் ஏற்படுகின்ற நீண்ட காலப் பிரச்சினைகளையும் குறைக்கின்றதென்பதை பல ஆய்வுகள் காட்டியிருக்கின்றன. இந்த மருந்தானது நீரிழிவு நோய் கட்டுப்பாடின்றிப் போகும் போது ஏற்படுகின்ற சிறுநீரகப் பாதிப்பை உண்மையில் குறைக்கின்றது. நீரிழிவு நோயாளியொருவருக்கு குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை குருதிப் பரிசோதனை (Serum Creatinine) மேற்கொண்டு சிறுநீரகப் பாதிப்பு உள்ளதா இல்லையா எனக் கண்டறிப்படுவது வழமையாகும். இவ்வாறு சிறுநீரகப் பாதிப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கும்போது மாத்திரமே மருத்துவரானவர் மெற்போமின் மருந்தை குறைக்கவோ நிறுத்தவோ வேண்டியேற்படுகின்றது. எனவே மெற்போமின்பற்றிய தவறான அபிப்பிராயத்தை நீக்குவது மிகவும் அவசியமானதொன்றாகும்.
பெற்றோருக்கு நீரிழிவு இருந்தால் பிள்ளைகளுக்கும் அது வரலாம்
கேள்வி: எனது மகனின் வயது 16 ஆகும். அவரது உடல் நிறையானது கூடுதலாக இருப்பதோடு கழுத்துப்பகுதியிலும் கறுப்பு நிறமான படைபோன்று இருக்கிறது. எனக்கும் எனது கணவருக்கும் நீரிழிவு நோய் உள்ளது இது தொடர்பில் ஆலோசனை கூறவும்.
பதில்: கழுத்துப்பகுதியில் கறுப்பு நிறமான படையானது காணப்படுவதை Acanthosis nigricans என்று கூறுவார்கள். இது உடலின் இன்சுலினுக்கு எதிர்ப்புநிலை (Insulin resistance) ஏற்படுவதன் அறிகுறியாகும். தவறான உணவு மற்றும் அப்பியாசமற்ற வாழ்க்கை முறை என்பவற்றால் உடற்பருமன் அதிகரித்துச் செல்லும்போது இவ்வாறான நிலமை ஏற்படுவது வழமையாகும். இவ்வாறு ஏற்படுபவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் குருதி அழுத்தம், கொலஸ்திரோல் என்பன அதிகரிக்கும் நிலையும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்கும்போது குழந்தைகளுக்கு அது ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகும். எனவே உங்கள் மகனானவர் இன்று முதல் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பவற்றை மேற்கொண்டு உடற்பருமனைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும். இதைவிட வைத்திய ஆலோசனையைப் பெற்று மேலதிக பரிசோதனைகளை (குருதியில்லுள்ள குளுக்கோஸின் அளவு, குருதி அழுத்தம், கொழுப்பின் அளவு ஹோர்மோன்கள்) மேற்கொள்வதும் அவசியமானதாகும்.
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயால் ஏற்படும் பிரச்சினைகள் எவை?
கேள்வி: எனது வயது 36 ஆகும். எனக்கு நீரிழிவு, கொலஸ்திரோல் என்பன உள்ளன. எனது நீரிழிவானது கட்டுப்பாடற்று இருப்பதாக மருத்துவர் கூறுகின்றார். எனக்கு சில காலமாக தாம்பத்திய உறவில் பிரச்சினை இருக்கின்றது. எனது ஆண்குறி விறைப்படைவது குறைவாக இருப்பதை சிலகாலமாக உணர்ந்து வருகின்றேன். இதுபற்றி விளக்கம் தரவும்?
பதில்: நீரிழிவு நோயானது கட்டுப்பாடற்றுச் செல்லும்போது உடலின் பல அங்கங்கள் சிறிது சிறிதாக செயலிழக்க நேரிடுகின்றன. உடலின் பெரிய குருதிக் குழாய்களில் ஏற்படுகின்ற மாரடைப்பு பக்கவாதம் போன்றவையும் சிறிய குருதிக் குழாய்களில் ஏற்படுகின்ற கண்பார்வை குறைதல், சிறு நீரக செயலிழப்பு நரம்புகள் பாதிப்பு போன்றவையும் இதற்கு உதாரகாரணங்கள் இருக்கின்றன. நீரிழிவு நோயானது கட்டுப்பாடின்றி இருக்கும் போது இந்தப் பிரச்சினையானது ஏற்படுகின்றது. இதேபோல கொலஸ்திரோல், குருதியமுக்கம் அதிகரிப்பு உள்ளவர்களுக்கும் இது ஏற்படுகின்றது. அதிகரித்த மது புகை போதைப்பாவனையும் இதற்குக் காரணமாக அமைகின்றது. சில வகையான ஹோர்மோன் குறைபாடுகளும் உளவியல் தாக்கங்களும் சில மருந்து வகைகளும் கூட இதற்குக் காரணமாக அமைகின்றன. எனவே உங்களுடைய நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியமாகும். உங்களின் பிரச்சினைக்கு பலவகையான சிகிச்சை முறைகள் உள்ளபடியால் தயக்கமின்றி உங்கள் குடும்ப மருத்துவரை சந்தித்து தகுந்த ஆலோசனைகளையும் சிகிச்சை வழிமுறைகளையும் பெற்றுக்கொள்ளவும்.
குளிசைகள் மூலம் கட்டுப்படாத சந்தப்பங்களில் இன்சுலின் மருத்து அவசியம்
கேள்வி: எனது வயது 60 ஆகும். எனக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டு 15 வருடங்கள் ஆகின்றன. நான் மூன்று வகையான குளிசைகளை நீரிழிவுநோய்க்காக எடுத்து வருகின்றேன். மெற்போமின், கிளிக் கிளசயிட் மற்றும் சிற்றகிளிப்ரின். நான் சிறந்த முறையில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்பவற்றை செய்து வருகின்றேன். எனினும் சிறிது காலமாக நீரிழிவுநோயானது கட்டுப்பாடற்று இருப்பதாக மருத்துவர் கூறுகின்றார். இன்சுலின் மருந்தை ஆரம்பிப்பதுதான் நல்லதென எனது குடும்பமருத்துவர் கூறுகின்றார். எனக்கோ இதனை ஆரம்பிக்க சிறிது தயக்கமாக உள்ளது. இது பற்றி ஆலோசனை வழங்கவும்?
பதில்: உங்களைப் போன்ற நீரிழிவு வகை -2 (type2 Dia beres) நோயாளரிலும் சிறிது காலத்தின் பின்னர் குளிசை நிலை (Oral hypogly Caemic failure) ஏற்படுகின்றது. அதாவது உங்களைப்போன்ற நீரிழிவு வகை2 நோயாளரிலும் காலப்போக்கில் இன்சுலின் அளவானது படிப்படியாகக் குறைவடைய நேரிடுகின்றது. எனவே அந்தச் சந்தர்ப்பத்தில் குளிசைகள் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியாமற்போய்விடுகின்றது. எனவே உங்கள் குடும்ப மருத்துவர் கூறியதைப்போன்று இன்சுலின் மருந்தை ஆரம்பிப்பதே சிறந்ததாகும். இப்போது பல வகையான இன்சுலின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இருமுறை பயன்படுத்தும் இன்சுலின் மருந்தை உங்களுக்கு மருத்துவரானவர் பரிந்துரை செய்வார். இன்சுலின் ஆரம்பித்த பின்னர் மெற்போமின் தவிர்ந்த மற்றைய நீரிழிவு நோய்க்கான குளிசைகளை நிறுத்த வேண்டியிருக்கும். இது தொடர்பான மேலதிக விளக்கங்களையும் ஆலோசனைகளையும் உங்கள் குடும்பமருத்துவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
எனவே ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைக் கடைப்பிடித்து மருந்துகளைக் கிரமமாக உள்ளெடுத்து உங்கள் நீரிழிவைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதல் மிகவும் அவசியமாகும். உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையேற்படின் மருந்துகளை அதிகரிக்கவோ, மாற்றவோ வேண்டி ஏற்படலாம். நீங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சில வேளைகளில் இன்சுலின் என்ற ஊசி மருந்தையும் பயன்படுத்த வேண்டி நேரிடலாம். கர்ப்பம் தரித்த பின்னர் நீரிழிவுக்கான குளிசைகளைப் பயன்படுத்த முடியாது. தேவையெற்படின் வைத்திய ஆலோச னைக்கேற்ப மெற்போமின் மருந்தை மட்டுமே தொடரமுடியும். எனினும் அநேகமான சந்தர்ப்பங்களின் இன்சுலின் மூலமே நீரிழிவு நோயைக்கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.
மருத்துவர். M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ்போதனா வைத்தியசாலை.