விந்தை மிகு விஞ்ஞானம் விண்ணைத் தொடும் தொழில்நுட்பம் என மிக வேகமாக முன்னேறி வரும் உலகில் மனிதனை ஆட்டிப்படைக்கும் தீவிரமான நோய்களும் பற்பல வடிவங்களில் மிக வீரியம் கொண்டு உருவெடுக்கின்றன. இருப்பினும் மருத்துவத் துறையானது புதிய பல கண்டுபிடிப்புக்களின் மூலம் இந்த நோய்களை வெற்றிகொள்ளும் வழிகளை வகுத்து மனிதனது ஆயுட் காலத்தை நீடித்து ஆரோக்கியமாக வாழ அளப்பரிய சேவை ஆற்றுகின்றது.
இருப்பினும் இன்று எம்மில் சிலர் பல உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகி அதனை வென்று மீண்டெழுவது எவ்வாறு எனத் தெரியாமல் தமது இறுதி நாள்களை நோக்கி மிக விரைவாகச் செல்ல தாங்களே வழிவகுக்கின்றனர். இதற்கான முதன்மைக் காரணம் மக்கள் மத்தியில் குறித்த நோய்கள் பற்றியும் அவற்றுக்குரிய சிகிச்சைகள் பற்றியும் போதிய விழிப்புணர்வின்மையே ஆகும்.
இவ்வாறான நோய்களில் ஒன்றுதான் பக்கவாதம். இது மூளையில் ஏற்படும் பாதிப்பினால் ஏற்படுகின்ற நோயாகும். அத்துடன் இது நீண்டகால இயலாமையைத் தோற்றுவித்து மனிதனை படுக்கையில் தள்ளும் நோயாகவும் விளங்குகிறது. இதனால் அவசர மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து புனர்வாழ்வும் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். உடனடி அவசர சிகிச்சை, சிகிச்சைக்குப் பின்னரான புனர்வாழ்வு என்பன நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவாறு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எம்மில் பலர் இதற்கான மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டாலும் அதன் பின்னரான புனர்வாழ்வு சேவையைத் தவறவிடுகின்றனர். இதனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் பக்கவாதத்தின் பின்னரான தமது பெறுமதி மிக்க வாழ்க்கை காலத்தை படுக்கையில் கழிப்பதுடன் தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
பாரிசவாதம் என்றால் என்ன?
உடலியக்கம், புலன்செயற்பாடு, தகவல் சேமிப்பு, நினைவாற்றல் என மனித உடலின் பொறிகளின் செயற்பாட்டு மையமாக மூளை விளங்குகின்றது. இந்த மூளைக்குத் தேவையான ஒட்சிசன் மற்றும் ஊட்டச்சத்துகள் குருதியின் மூலமே வழங்கப்படுகின்றது. மூளைக்கு குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை அல்லது கசிவு ஏற்படுவதால் மூளைக்கான குருதி விநியோகம் தடைப்படுகின்றது. இதனால் மூளையின்கலங்கள்செயலிழக்க நேரிடுகின்றது. இவ்வாறு மூளையின் பகுதிகள் பாதிக்கப்படுகூதால் பாதிக்கப்பட்ட மூளைப் பகுதியினால் செயற்படுத்தும் உடல் அங்கம் செயலற்று போகின்றது. அத்துடன் அந்தப் பகுதியால் செய்யப்படும் பிற செயற்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. இதனால் உடலின் ஒரு பகுதியின் செயற்பாடுகுள் இழக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். சிலரின் முகத்தசைகளின் செயற்பாடு இழக்கப்படலாம், சமனிலை குழப்பமடையலாம், பார்வை, பேச்சு, ஞாபகசக்தி என்பன குழப்பமடையலாம். குழப்பான மனநிலை அல்லது கதை பேச்சில் குழப்பத் தன்மை ஏற்படலாம். அத்துடன் அன்றாட செயற்பாடுகளை செய்வதில் இன்னும் சொல்லப்போனால் இயற்கை உபாதைகளை நிறைவேற்றுவதில் சிரமங்கள் ஏற்படலாம். இவ்வாறான அறிகுறிகளே பாரிசவாதத்தின் அடையாளங்கள்.
இவை காணப்படும் இடத்து உடனடியாக மருத்துவ சேவையை நாடவேண்டியது மிகவும் அவசியமாகும். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நோயாளியின் வாழ்க்கைக் காலத்தை குறைக்கின்றீர்கள்.
பக்கவாதம் ஏற்பட ஏதுவான காரணிகள்
வயது, பாரம்பரிய மாரடைப்பு ஏற்பட்டவர்களும் அதிகளவு பாரிசவதத்தால் பாதிக்கப்படலாம். அத்துடன் குருதி அழுத்தம் உடையவர்கள், நீரிழிவு உடையவர்கள் புகைத்தலும் மதுபாவனைப் பழக்கமும் உடையவர்கள் அதிகரித்த உடற்பருமன் உடையவர்கள் தவறான உணவுப்பழக்கம் உடையவர்கள், மன உளைச்சல், வாழ்கை முறை, உடற்பயிற்சியின்மை போன்றனவும் முதன்மைக் காரணிகளாகும்.
பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 100 வீதம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாவிடினும் மருத்துவ புனர்வாழ்வுச் செயற்பாடுகள் மூலம் பிறரில் தங்கியிருக் காமல் தமது அன்றாட செயற்பாடுகளை தாமே சுயமாக செயற்படக்கூடிய நிலைக்கு கொண்டுவரமுடியும் என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் புனர்வாழ்வு செயற்பாட்டில் மருத்துவ நிபுணர்கள், தாதியர், இயன்மருத்துவர், தொழில் சிகிச்சையாளர், பேச்சுமொழி சிகிச்சையாளர்கள், உளவளத்துறை சார்ந்தோர் என பன்முக ஆளுமையணியின் ஒன்றிணைந்த செயற்பாடு இன்றியமையாததாகும்.
பாரிசவாத நோயளார்களுக்கான இயன் மருத்துவ சிகிச்சை
பாரிசவாத நோயர்களின் புனர்வாழ்வில் இயன்மருத்துவ சிகிச்சைகளும் முக்கியமான பங்குவ கிக்கின்றன. பாரிசவாத்தினால் உடற்பாகங்களின் செயற்பாடுகள் குறைவடையலாம், அதனால் நோயாளி தனது உடற்பாகங்களை அசைக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. அல்லது அவர்களது அன்றாட செயற்பாடுகளை செய்ய முடியாத
நிலை ஏற்படுகின்றது. இதனால் அவர்களின் செயற்பாடு படிப்படியாகக் குறைவடைந்து அவர்கள் படுக்கைநிலைக்குத் தள்ளப்பட்டு அதனால் பல பாதிக்குள் ஏற்பட்டு அவர்கள் இயல்புநிலைக்கு திரும்பவது கேள்விக்கறியாகின்றது.
பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை இது போன்ற நிலையிலிருந்து மீட்டெடுப்பதே இயன்மருத்துவ சிகிச்சையினது முதன்மை நோக்கமாகும். மூளையின் இறந்த கலங்கள் புத்துயிர் பெறமுடியாதவை. இதனால் அவற்றை மீள புதிப்பிக்கமுடியாது. இருப்பினும் இறந்த கலங்களின் செயற்பாட்டை மற்றைய கலங்கள் ஆற்று வதற்கான ஊக்குவிப்பதே இயன்மருத்துவத்தின் முதன்மைப் பங்காகும்.
பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய இயன் மருத்துவ சிகிச்சையானது அவர்கள் உடனடி மருத்துவ சிகிச்சை பெறும் நேர்ததிலே ஆரம்பிக்கப்படவேண்டும். அதன்மூலமே அதிக பலனையும்முன்னேற்றத்தினையும் விரைவில் பெறலாம், இயன்மருத்துவ சிகிச்சையானது நோயாளியின் பாதிப்புக்கு ஏற்பவும் அவரது உடல் நிலைக்கு ஏற்பவும் வேறுபடும்.
பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டவரின் உடல் அவயவங்களின் அசைவுகள் அற்றுப் போவதால் அல்லது குறைவடைவதனால் அந்தப் பகுதிகளின் மூட்டுக்களிலும் தசைகளிலும் இறுக்கம் அல்லது தளர்வு வலி ஏற்படலாம். மற்றும் நோயாளி படுக்கையில் இருப்பதனால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்கைகால் வீக்கங்கள் ஏற்படலாம்.
இவ்வாறான பாதிப்புக்கள் நோயாளியின் படிப்படியான முன்னேற்றத்துக்கு ஒரு சவாலாகும். எனவே இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படாதிருப்பதற்காக இயன்மருத்துவத்தில் ஆரம்ப நிலைப் பயிற்சிகள் மற்றும் நோயாளியின் சரியான படுக்கைநிலைகள்அவற்றை எவ்வாறு மாற்றியமைத்தல் அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பவற்றுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.
பாரிசவாத நோயாளரின் முன்னேற்றம் சடுதியாக ஏற்படாது. அது மிகவும் சிறந்த முறையில் பயிற்சிகளை ஒழுங்காக செய்வதுடன் படிப்படியான முன்னேற்றத்தையே அவதானிக்கலாம். அத்துடன் மேற்கூறியவாறு நோயாளியின் முன்னேற்றத்துடன் பயிற்சிகள் வேறுபடும் இதனால் நோயாளிகள் இயன்மருத்துவ சிகிச்சையை ஆரம்பத்தில் பெற்றுக்கொண்டு மிகுதி தொடர்ச்சியான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதில்லை. இதனாலே அவர்களின் முன்னேற்றம் தடைப் பட்டு அவர்களது மிகுதி வாழ்க்கைக் காலத்தில் மிகவும் பரிதாபமான நிலைக்குட்படுகின்றனர். இதற்கான காரணம் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு இது பற்றி விழிப்புணர்வின்மையே.
எனவே பாரிசவாத நோயால் உங்களது உறவினரோ அல்லது அயலவரோ பாதிக்கபட்டால் மருத்துவ சேவையினைத் தொடர்ந்து இயன் மருத்துவ சிகிச்சையையும் பெற அவர்களுக்கு ஆலோசனை வழங்குங்கள் அவர்களது முன்னேற்றத்துக்கு வழிவகுத்துக் கொடுங்கள். பாரிசவாத்தினால் பாதிக்க்படப்டவர்கள் இந்த சமூகத்தில் எம்மைப் போல் இருக்க வேண்டியவர்கள் அவர்களின் பாதிவாழ்க்கைக் காலத்தை படுக்கையிலே வீணாக்காமல் அவர்களுக்கான புதிய பாதையை அமைக்க வேண்டியது எமது அனைவரதும் கடமையாகும்.
கனகசபாபதி கௌசிகா
இயன்மருத்துவர்,
யாழ். போதனா வைத்தியசாலை