நாம் எல்லோருமே நாய் என்றால் நன்றியுள்ள பிராணி, வீட்டின் காவல்காரன் என்றெல்லாம் சிறு வயதில் கற்றுக்கொண்டுள்ளோம். எமக்கும் நாய்க்கும் இடையேயான அறிமுக வார்த்தைகள் மேற்கண்டவாறே அமைந்தன. ஆனால் காலமாற்றத்தில்நாய் என்ற விலங்கின் மீதான எமது புரிதல்களும் மாற்றங்கண்டுள்ளது என்றே கூறலாம்.
செல்லப் பிராணி
வீட்டின் செல்லப்பிராணிகளான நாய்கள் சரியான வளர்ப்பு முறையின்றி இருக்கின்றன.அவற்றின் எஜமானர்கள் கட்டாக் காலிகளாக வீதியோரங்களில் அவற்றை விட்டுவிடுகின்றனர். இதன் விளைவாக அவை பலருடைய வாழ்வின் அழிவுக்கு வித்திடும் எமனாகவும் மாறிவிட்டன. இன்று இடம்பெறுகின்ற கணிசமானளவு வீதி விபத்துக்களுக்கு தெருவோரத்து நாய்களே காரணமாகிவிட்டன. இவை தவிர கட்டாக்காலிகளாகத்திரியும் விலங்குகள் நீர்வெறுப்புநோய் (ரேபிஸ்) எனப்படும் உயிர்கொல்லிநோய் பரப்பும் காவிகளாகவும் மாறிவிட்டன.
நீர்வெறுப்பு நோய்த் தொற்று
உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வருடந்தோறும் 60 ஆயிரம் மக்கள் ரேபிஸ் நோயினால் உலகெங்கும் உயிரிழக்கின்றனர் எனவும் அவற்றில் 95 வீதத்துக்கும் மேலானவை ஆசிய மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களில் நிகழ் வதாகவும் கூறுகிறது. இவற்றில் 95 வீத மானவை நாய் கடியினால் ஏற்பட்டதாக இனங்காணப்பட்டுள்ளது.
மேலும் விசர் நாய்க்கடி தொடர்பான சிகிச்சைக்காகவும், அதன் தடுப்பு நடவடிக்கைளுக்கெனவும் பல மில்லியன்கணக்கிலான நிதி ஆண்டு தோறும் சுகாதார அமைச்சினால் செலவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாம் அனைவரும் ”2030” ஆம் ஆண்டு ரேபிஸ் இல்லாத இலங்கை” என்னும் சுகாதார அமைச்சின்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவதற்கு முன்வர வேண்டும்.
நோய்த் தடுப்பு
தற்போது நாட்டில் விசர் நாய்க்கடி நோய் நிலமை ஏற்படுவதைத் தடுப்பதற்கு பல் வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவற்றுள் குறிப்பாக, அனைத்து வயதிலுள்ள நாய்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படுகிறது. வீட்டு வளர்ப்பு நாய்களுக்கேன 6வாரங்கள், மூன்று மாதம் பின்னர் வருடந்தோறும் என தொடர்ச்சியாகத் தடுப்பு மருந்து வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் சமுதாய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றது.
இது தவிர பெண் நாய்களுக்கென கருத்தடை சத்திரசிகிச்சை முறையும் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கட்டாக்காலி நாய்களின் உருவாக்கத்துக்கு நாங்களே காரணமாக இருக்கின்றோம். வீட்டில் அதிகளவான நாய்க் குட்டிகள் உள்ள போது அவற்றைப் பராமரிக்கும் வசதி இன்மை காரணமாக வீதிகள், கோயில்கள் பொலிஸ்நிலையங்கள், உணவுக் கடைகள் போன்ற பொது இடங்களில் கொண்டு சென்று விட்டுவரும் முறைமை நம்மி டையே இன்றும் பிரபலமாக இருந்துவருகிறது. இவ்வாறு கைவிடப்படும் சிறுகுட்டிகள் உணவுச்சண்டையின் போது வளர்ந்த நாய்களால் காயங்களுக்கு உள்ளாகின்றன. இதன்போது
அவை “ரேபிஸ்” தொற்றுக்குள்ளாகின்றன. மேலும் இவ்வாறான நாய்களே வீதி விபத்துக்களுக்கு வழிவகுப்பதோடு வீதியால் பயணப்படுவோரையும்நோய்த் தொற்றுக்குள்ளாக்குகின்றன. இந்த நிலமையை சீர்செய்வதற்கு பெண்நாய்க்குட்டியைக் கருத்தடைச் சிகிச்சைக்கு உள்ளாக்குவதன் மூலம் மிக இலகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
மேலும் உங்களிடம் மேலதிகமாக நாய்க் குட்டிகள் இருக்கும் போது அவற்றை வளர்க்கவும், வாங்கவும் விரும்புகின்ற உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசாக வழங்குங்கள். இதன் மூலம் நீங்கள் சமுதாயப் பொறுப்புடைய வர்களாக மாறுகின்றீர்கள் அதேபோன்று வீதியோரக் குப்பைமேடுகளே கட்டாக்காலி நாய்களின் போர்பூமியாகக் காணப்படுகின்றன. எனவே இவ்வாறான குப்பைமேடுகளை இல்லாதொழிக்கும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் குறித்து கரிசனை கொள்ளுதல் விசர்நாய்க்கடி தொற்றைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்குப் பேருதவியாக அமையும்.
பாதுகாப்பு நடைமுறை
விசர்நாய்க்கடிக்கு ஆளான பின்னரும் விசர்நாய்க்கடித் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு நாம் தெரிந்திருக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
அவை குறித்து அறிந்துகொள்ளுதல் நன்று.
- காயம் ஏற்பட்ட பகுதி சவர்க்காரம் மற்றும் நீரினால் 3 தொடக்கம் 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக நன்றாகக் கழுவப்படவேண்டும்.
- காயத்தை மிக இறுக்கமாகக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
- உடனடியாக மருத்துவமனைக் குச் சென்று Antibiotics மற்றும் Tetonus toroid எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் காயத்தின் தன்மை கடித்த நாயின் நிலை என்பவற்றினைத் தெரியப்படுத்தி நாய்க் கடிக்குப் பின்னரான சிகிச்சையைப் பொருத்தமான முறையில் பெற்றுச் சிகிச்சையை முழுமைப்படுத்த வேண்டும்.
பங்களிப்பு
எனவே நோய் நிலை ஏற்பட முன்னர் அதனைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ரேபிஸ் இல்லாத இலங்கையை 2030ம் ஆண்டளவில் உருவாக்கும் சுகாதார அமைச்சின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
முற்றாகத் தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தக் கூடிய இந்த நோய் நிலைக்காகச் செலவுசெய்யப்படும்நிதியைக் கட்டுப்படுத்தவும் அனைவரும் ஒன்றிணைந்து எமது ஆக்க பூர்வமான பங்களிப்பை வழங்குவோம். நாய் எமக்குத் தோழன் தான் என்ற சிறுவயதுக்கருத்தியலை என்றும் மாறாது நிலை நிறுத்துவோம்.
தா.சுந்தரம்
நீரிழிவு சிகிச்சைநிலையம்,
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்