எமது உணவில் அதிகளவு மரக்கறி வகைகளையும் பழங்களையும் சேர்ப்போமானால் தொற்றா நோய்களின் தாக்கத்தினையும் அவற்றுக்கான மருந்துப்பாவனையையும் பிற்போடலாம். ஆரம்ப காலத்தில் எம் மூதாதையர்கள் எவ்வாறு இவ்வறிவைப் பெற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை. தாவர உணவுடன் இணைந்ததாக தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருந்ததன் காரணமாகத்தான் எண்பதிலும் எழிலுடன் இருந்தார்கள். அவர்கள் தம் வாழ்வில் வாழ்க்கை முறையாகக் கடைப்பிடித்துக் காட்டியதைத்தான். நீண்ட காலத்தின் பின்பாக இன்றைய விஞ்ஞானம் ஆரோக்கியமாக வாழும் முறையாக வகுத்துச் செல்கின்றது.
வயது வந்தவர்கள் ஒவ்வொரு நாளும் ஆகக்குறைந்தது இருநூற்றி நாற்பது கிராம் அளவுடைய மரக்கறி வகைகளையும், நூற்றியறுபது கிராம் அளவுடைய பழங்களையும் ( மொத்தமாக 400 கிராம்) உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பரிந்துரை செய்யப்படுகின்றது. அதாவது வயது வந்த ஒருவர் ஒரு நாளைக்குக் கால் கிலோ கிராம் மரக்கறி எத்தனை குடும்ப அங்கத்தவர்களுக்குப் பரிமாறப்படுகின்றது என்று எண்ணிப்பாருங்கள்.
அந்த வகையில் இப்போது எமது உணவுப் பழக்க வழக்கம் தவறானதாகவே அமைந்துள்ளது. இந்தப் பந்தியை வாசித்த பின்னர் உங்கள் சமையலறையில கறிச்சட்டியினுள் அகப்பையையும் சோற்றுப் பானையினுள் கரண்டியையும் (மாப்பொருள் மற்றும் காபோவைதரேற்றுக்களை குறைவாக எடுத்தலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்) வைப்பீகளானால் ஆரோக்கியத்தை நோக்கி நீங்களும் முதலடி எடுத்து வைத்துள்ளீகள் என்றுதான் அர்த்தம். நாங்கள் மரக்கறிகளையும் பழங்களையும் அதிகளவில் எமது உணவில் எடுத்து வருவோமானால் எமது ஆரோக்கியம் என்பது எமது கைகளிலேயே அன்றி மருந்தகங்களில் அல்ல என்று அடித்துக் கூறுகின்றார்கள் உணவியல் ஆய்வாளர்கள்.
160 கிராம் பழங்கள் எனும்போது ஒரு நாளைக்கு 1 தொடக்கம் 2 நடுத்தர அளவிலான பழங்கள் ( வாழைப்பழம், மாம்பழம், தோடம்பழம்) அல்லது 1 தொடக்கம் ஒன்றரை கப் வெட்டிய பழங்களையோ, பழக்கலவையோ அல்லது 1 தொடக்கம் ஒன்றரை கப் அளவுஐடயதான பழச்சாறு அல்லது 4 தொடக்கம் 6 மேசைக்கரண்டி அளவுடைய உலர்ந்த பழங்களையோ எடுத்தல் வேண்டும்.
இருவகையான இலவகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது சிறப்பு.
இவை எவ்வாறு உடலைப் பாதுகாக்கின்றன?
இவ்வாறு அதிகளவு விற்றமின்கள், கனியுப்புக்கள், நார்ப்பொருள்கள் ( நார்ச்சத்துக்கள்) எதிர் ஒட்சியேற்றிகள் போன்ற சத்துக்களையும் குறைந்த கலோரிகளையும் தன்னத்தே கொண்டுள்ளன. இவற்றின் போசணைப் பெறுமதிகளை முழுமையாகப் பயன்படுத்திட வேண்டுமானால் புதியனவாக வாங்கியவற்றையே உணவில் சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.
இவற்றை அதிகமாக உணவில் சேர்க்கும் சேர்க்கும் போது நீரிழிவு, கொலஸ்ரோல், உயர் குருதியமுக்கம். மாரடைப்பு, பாரிசவாதம் புற்றுநோய்கள் மற்றும் வயதாகும் தன்மை என்பன குறைவடைந்து புத்துணர்வும், உற்சாகமும் நோயற்ற இளமைத்தோற்றமும் கிடைக்கப்பெறும். வெவ்வேறு வகையானதும் (பலவகை) வெவ்வேறு சுவையானதுமான மரக்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக் கொளவதனால் வெவ்வேறுபட்ட நுண்போசணைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். ஒன்றில்லாத போசணைச் சத்து மற்றையதனால் பதிலீடும் செய்யப்படும். இலங்கையில் வருடம் முழுவதும் இவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருப்பதும் நாம் பெற்ற வரப்பிரசாதமே.
உடல் வளர்ச்சிக்கும், உடலபை் பேணி பாதுகாப்பதற்கும், நோய் எதிர்ப்புச் சக்தி செயற்பாடுகளுக்கும், நல்ல ஆரோக்கியத்தைப் பேணிடவும் இவை உதவுகின்றன. பல்வகைப்பாடுடைய சுவைகளைக் கொண்டிருப்பதனால் நாவுக்கினியவையாகிய உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. உணவில் விரும்பமின்மையைப் போக்கி உணவில் விருப்பத்தை தூண்டுகின்றன. குறிப்பாக குழந்தைகளிலும் முதியவர்களிலும் உணவு நாட்டத்தை அதிகரிக்கின்றன.
குறைந்தளவு கலோரிப் பெறுமானத்தைக் கொண்டிருப்பதானாலும் இவற்றுடன் அதிகளவு மாமிச உணவுகளை எடுப்பினும் கூட உடல் நிறை அதிகரிப்பை கட்டுப்படுத்தி உயரத்திற்கு ஏற்ப நிறையைப் பேணிட உதவுகின்றன. இவற்றில் இருவகையான நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் கரைய முடியாத இழை போன்ற நார்ச்சத்துக்களும் என்பதாக வகை பரிக்கப்படுகின்றன. கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளெடுக்கப்பட்ட கொழுப்புக் கூறுகளை சூழந்து ஒரு உறை போன்று அமைந்து விடும். கரைய முடியதா நார்ச்சத்துக்கள் உணவினை அகத்துறிஞ்சும் சிறு குடலிலுள்ள சடைமுளைகளுக்கும், சமிபாடடைந்த உணவுக் கூறுகளுக்கும் இடையில் கொழுப்புணவுகளின் அகத்துறிஞ்சலைக் குறிக்கும். இதன் மூலம் உடல் நிறை அதிகரித்தல் (Obesity) எனும் அபாயம் குறையும், உடல்நிறை அதிகம் உள்ளவர்களுக்கே தொற்றா நோய்களின் தாக்கங்களும் அதிகமாக காணப்படுகின்றது.
மேலும் இவை சமிபாட்டுத் தொகுதி சோம்பலின்றி சுறுசுறுப்பாக இயங்கிட உதவுகின்றன. இதன் காரணமாக மலச்சிக்கல் தவிர்க்கப்பட்டு தினமும் இரு வேளைகள் இலகுவாக மலங்கழிக்கக் கூடியதாக இருப்பதுடன் உணவின் மூலம் உடலினுள் சேரும் அனைத்து நச்சுப் பொருள்களும், புற்றுநோய்க்காரணிகளும் உடலிலிருந்து உடனுக்குடன் அகற்றப்படுவதனால் புற்றுநோய் உட்பட குணமாக்க முடியாத குடல் நோய்கள் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைந்து போகும்.