மருத்து உலகில் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அபிவிருத்தியானது மனிதனது ஆயுள் எதிர்பார்ப்பில் அதிகளவு நீட்சியினை ஏற்படுத்தியிருப்பினும் தற்காலத்தில் உயிர்க்கொல்லி நோய்களுடனான மனிதனது போராட்டங்கள் அதிகரித்து வரும் போக்கினையே காணக்கூடியதாகவுள்ளது. இத்தகைய உயிர்க்கொல்லி நோய்களில் புற்றுநோயானது முக்கியமான ஒன்றாக காணப்படுவதுடன், இந்நோய்த்தாக்கமானது உலகெங்கும் பல்வேறு வயதுப்பிரிவினரிடையே அதிகரித்துவரும் போக்கினை அவதானிக்கலாம்.
இலங்கை இதற்கு விதிவிலக்கானதல்ல. புற்றுநோயானது அண்மைக்கால வரலாற்றினைக்கொண்ட ஒரு நோயல்ல. இது கி.மு 2250 களில் காணப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் எகிப்திய பிரமிட்டுக்களிலிருந்து எடுக்கப்பட்ட மனித உடல்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து வெளியாகியுள்ளது. புற்றோய் எவ்வயது பிரிவினரையும் தாக்கலாம். எத்தகைய வாழ்க்கைத்தர நிலையிலுள்ளவர்களையும் தாக்கலாம். ஆயினும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வின்மையே இந்நோய்த்தாக்கத்திலான அதிகரித்துவரும் இறப்புக்களுக்குக் காரணமாக அமைகின்றது. இத்தகைய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது இன்றைய நிலையில் மிகவும் முக்கியமானது.
புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக அமையலாம். இக்காரணிகளை பௌதீக (Physical), இரசாயன (Chemical) உயிரியல் (Biological) மற்றும் பரம்பரை அலகு( Genetic) காரணிகள் என வகைப்படுத்துவர். பௌதீக காரணிகளில் சூரியக்கதிர்கள் மற்றும் UV கதிர்களிலான தாக்கம் முக்கியமானது. இரசாயன காரணிகளில் சிகரெட், பீடி, சுருட்டு முதலானவற்றிலுள்ள நச்சுப்பதார்த்தங்கள் மதுபானம், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை முதலானவை முக்கியமானவை உயிரியல் காரணிகளில் Human Papillomo virus, (HPV) வைரஸ்கள் மற்றும் எப்ஸ்டீன் பார் வைரஸ் ( Ebstain Bra Virus) எயிட்ஸ் வைரஸ் (HIV) போன்ற வைரஸ்களின் தாக்கம் முக்கியமானது. இவற்றில் HPV வைரஸானது கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்க்குக் காரணமாக அமைவதுடன் இவ்வைரவுசுக்கள் முறைகேடான பாலியல் தொடர்புகளினால் கடத்தப்படுகின்றன. புற்றுநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சில மனிதனால் கட்டுப்படுத்தக்கூடியனவாகவும். சில கட்டுப்படுத்த முடியாதனவாகவும் காணப்படுகின்றன. கட்டுப்படுத்தக்கூடிய சில காரணிகளாகப் பின்வருவனவற்றைக் கருதலாம்.
- புகைப்பிடித்தல் ( சிகரெட், பீடீ, சுருட்டு, புகையிலை)
- மதுபானம் அருந்துதல்
- முறைகேடான பாலியல் தொடர்புகள்
- வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு புகையிலை பாவனை
இவை மனிதனால் கட்டுப்படுத்த இயலுமான காரணிகளாக காணப்படுவதனால் இத்தகைய பழக்க வழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் இவை ஏற்படுத்தும் புற்றுநோய் தாக்கத்திலிருந்து எம்மைப்பாதுகாக்க முடியும். உதாரணமாக புகைப்பிடித்தலினால் மூக்கு, வாய்க்குழி, குரல்வளை தொண்டை, களம், நுரையீரல், ஈரல், சதையம், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, பெருங்குடல், சூலகம், கர்ப்பப்பைக்கழுத்து, எலும்பு மச்சை முதலான அவையவங்களல் புற்றுநோய்த்தாக்கம் ஏற்படலாம். மது பாவனையால் வாய், தொண்டை, குரல் வளை, களம், ஈரல், மலக்குடல் மற்றும் மார்பகம் முதலிய அவயவங்களில் புற்றுநோய்த்தாக்கம் ஏற்படலாம். வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு பாவனையால் வாய் மற்றும் கள பகுதிகளில் புற்றுநோய்த்தாக்கம் ஏற்படலாம்.
இலங்கையின் வடமாகாணத்தில் அதிகரித்து வரும் புற்றுநோய்த்தாக்கமானது முறையே வாய், தொண்டைக்குழி, மார்பகம், தைரொயிட் சுரப்பி, கர்ப்பப்பைகழுத்து, பெருங்குடல், நுரையீரல் முதலானவை தொடர்பாகக் காணப்படுகின்றது. ஆயினும் புற்றுநோய்க்கான ஆரம்பநிலையிலான அடையாளங்கள் பற்றி அவதானமாக இருக்குமிடத்து நோயினை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம. அதாவது வாய்ப்புற்று நோயைப்பொறுத்தவரையில் வாயில் ஏதேனும் அசாதாரண வளர்ச்சி காணப்படுமிடத்து அது எத்தகைய நோவினையும் ஏற்படுத்தாத பட்சத்திலும் வைத்திய ஆலோசனையினை உடனடியாக நாடுவது நோயினை ஆரம்ப நிலையிலே கட்டுப்படுத் வழிவகுக்கும். இதற்கு கண்ணாடியின் முன்நின்று வாயினை அடிக்கடி பசிசோதிப்பது அவசியமானது. இது போல மார்பகப்புற்றுநோயினை மார்பிலுள்ள கட்டிகள், முலைக்காம்பினூடாக நீர் வடிதல் ( Nipple discharge) குழி விழுங்குதல் (Dimpling) உள்ளிழுக்கப்பட்ட முலைக்காம்பு ( Retracted nipple) தோலில் ஏற்படும் மாற்றங்கள் முதலான அறிகுறிகளால் அடையாளப்படுத்தலாம். குறிப்பா 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான திரையிடலை ( Screening) இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு தடவையேனும் மமோகிராம் ( mammogram) முறைமூலம் மார்பகப்புற்றுநோயினை அறிகுறிகளே இல்லதா ஆரம்பநிலையில் கண்டுபிடிக்கலாம். ஆயினும் இலங்கையின் அரசவைத்தியசாலைகளில் எத்தகைய சேவைகள் புற்றுநோய்க்கான அறிகுறிகள் அல்லாத குறித்த வயதுப்பிரிவு சார் அனைத்துப் பெண்களுக்கும் இன்னமும் வழங்கப்பட முடியாத நிலை உள்ளதால் 20 வயதிற்கு மேற்பட்ட அனைத்துப்பெண்களும் மாதமொரு தடவையேனும் சுயமார்பகப்பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் நோயின் அறிகுறிகள் ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து பொருத்தமான சிகிச்சை மூலம் நோயைக்குணமாக்கலாம். இது போலவே கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயானது மாதவிலக்கு நின்ற பின்னான உதிரப்போக்கு, மாதவிலக்கின் போதான கடும் உதிரப்போக்கு மற்று துர்நாற்றமான திரவப்போக்கு முதலனா அறிகுறிகளால் அடையாளப்படுத்தப்படலாம். இப்புற்று நோய்க்கான திரையிடல் பரிசோதனை (Screening test) PAPsmear எனப்படும் இச்சேவையானது இலங்கையில் ஒருசில அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலேயே பெறப்படலாம். இதற்கு மாற்றீடான வேறு திரையிடல் பரிசோதனை முறைகள் மூலம் கர்ப்பப்பை கழுத்து புற்று நோயினை அடையானப்படுத்தும் முறையானது தெல்லிப்பளையில் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வருங்காலத்தில் குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும். மேலே கூறப்பட்டது போல ஏனைய புற்றுநோய்களுக்கு ஆரம்ப அறிகுறிகள் உள்ளன. களப்புற்று நோய்க்கு அறிகுறியாக உணவு விழுங்குவதில் சிரமங்கள் அமையலாம். குடல் மற்றும் குதப்புற்றுநோய்களுக்கு மலச்சிக்கல், மலத்துடன் இரத்தம் வெளியேறுதல். மலம் தார் போன்ற கரிய நிறத்துடன் காணப்படல், குருதிச்சோகை மற்றும் வயிற்றுவலி முதலானவை அறிகுறிகளாக அமையலாம் ஆயினும் பொதுவாக கூறுமிடத்து மேற்கூறிய அறிகுறிகள் தவிர்ந்து வேறு அறிகுறிகள் அதாவது பசியின்மை, காரணமற்ற உடல் எடை குறைவு, தொடர்ச்சியான காய்ச்சல், வீக்கங்கள் அல்லது கட்டிகள் தொடர்ச்சியான இருமல் சளியுடனான இரத்தப் போக்கு மற்று அதிகாலையில் ஏற்படும் தலைவலி முதலான அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்தால் வைத்திய ஆலோசனை பெறப்பட வேண்டும். ஏனெனில் இவையும் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக அமையலாம்.
தற்காலத்தில் அதிகரித்து வரும் புற்றுநோயானது ஒரு சாபக்கேடான வியாதியோ அல்லது சரும வியாதியோ அல்ல. ஆகவே புறிறுநோயிலிருந்து எம்மை பாதுகாப்பது எமது தலையாயக் கடமையாக அமைவதுடன் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு சமூகமாக எம்மாலியன்ற அனுசரனையை வழங்குவது இச் சமூகம் சார்பான ஒவ்வொருவருக்குரியதுமான அழைப்பாகும். நாம் எமது சமூகத்திடம் வேண்டிக்கொள்வது
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசரணை வழங்குவோம் (Support the fighters)
நோயுடன போராடி குணமானவர்களை மெச்சுவோம் ( Admire the survivers)
நோயினால் மரித்தவர்களைக் கனம் பண்ணுவோம் ( Honour the Taken)
வைத்தியகலாநிதி கிரிசாந்தி இராஜசூரியர்
புற்றுநோய்வைத்திய நிபுணர்
தெல்லிப்பழை