பொதுவாக ஒவ்வொரு மனிதருடைய பிரச்சினைகளும் தனித்துவமானவையாகவே இருக்கும். அதுபோல் குடிப்பழக்கத்தை விட்டிருக்கும் அல்லது அதிலிருந்து முற்றாக விடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருடைய சவால்க ளும் தனித்துவம் வாய்ந்தவையே. எனவே ஒவ்வொருவருடைய தனித்துவங்களையும், அவர்களது விருப்பு வெறுப்புக்களையும் பொறுத்தே மதுவை நோக்கிக் கவர்ந்திழுக்கும் சவால்களை எப்படிச் சமாளிக்கலாம் எனத் தீர் மானிக்கலாம்.
இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, பொருத்த மான வழிமுறைகளை அடையாளங் கண்டு, அவற்றை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதற்கு மது அடிமையுடன் வேலை செய்யும் உளவளத் துணையாளர்கள் உதவி செய்வார்கள். ஆயினும் பின்வரும் சில பொதுவான வழிமுறைக ளைக் கடைப்பிடிப்பதனைப் பற்றிச் சிந்தித்தல் நன்மையானது.
- ஒருவருடைய மனஉறுதி மிகவும் பலமடையும் வரை அவர் தன்னுடன் சேர்ந்து குடித்த நண்பர்களைத் தனிப்படவோ அல்லது அவர்களது இடங்களிலோ சந்திப்பதனை நிறுத்திக் கொள்ளலாம்.
- அதுபோல் அவர் முன்பு குடித்த இடங்கள், குடிவகைகள் கிடைக்கிண்ற இடங்கள் போன்றவற்றை முடியுமானளவு முயற்சித்துத் தவிர்த்துக் கொள்ளலாம்.
- கைகளில் பணம் புழங்குவது ஒரு பிரச்சினையாக இருந்தால், அந்த வேளைகளில் மது அருந்தினால் என்ன? என மனம் அலைபாயுமாக இருந்தால், அந்தப் பணத்தைத் தற்காலிகமாக வீட்டிலுள்ள பொறுப்பான ஒருவரிடம் (மனைவி அல்லது வளர்ந்த பிள்ளை) ஒப்படைக்கலாம்.
- மீண்டும் மது அருந்தும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய சமூகமயமாதல் நிகழ்வுகளை, குறிப்பாக மது தாராளமாகப் பாவிக்கப் படுகின்ற செத்தவீடு, எட்டுச்செலவு, பூப்புனித நீராட்டு விழா வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற கொண்டாட்டங்களை, ஆரம்பத்திலே சில காலங்களுக்குத் தவிர்த்துக் கொள்ளலாம்.
- வேலை நேரம் தவிர்ந்த ஏனைய பொழுதுகளை தமது வீட்டாருடனும், மதுபாவிக்காத நண்பர்களுடனும் செலவழிக்கலாம்.
- வாழ்க்கையிலே பிடித்தமான ஒரு விட யத்தைத் தேர்ந்தெடுத்து, அதிலே ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம். புதிய விடயங்களைக் கற்றுக் கொள்வதற்கு வயது ஒரு தடையாக அமைய மாட்டாது. எந்த வயதிலும் எதையும் கற்றுக் கொள்ளலாம். ஆர்வம் மட்டுமே முக்கியமானது.
- மதுவிலிருந்து விலகி ஆரம்பிக்கும் புதியதொரு வாழ்க்கைக்கு ஆத்மீக நம்பிக்கைகள் சக்தி கொடுக்கும். அவற்றிலே ஏற்படுகின்ற பரிச்சயமும் ஈடுபாடும் பெரிதும் பயன் மிக்கன.
- சாந்த வழிமுறைகளில் ஈடுபடலாம். அவை மெல்ல மெல்ல ஒருவரிடம் இருக்கின்ற வேண்டத்தகாத குணவியல்புகளைக் குறை த்து, நல்ல இயல்புகளை வளர்த்துவிடும் ஆற்றலுடையன.
குடிக்கும் எண்ணத்தை சீற்றத்துடன் வரும் கடல் அலையுடன் ஒப்பிடலாம். அலை நம்மை நோக்கி வரும் போது சமாளிக்க முடியாத வேகத்துடன் வருவது போல் தோன்றினாலும் அது சிறிது நேரத்தில் வலுவிழந்து, சீற்றம் அடங்கிப் பின் சென்றுவிடும்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014