ஒருவர் படிப்படியாக மதுவுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் பொழுது அவர் தனது வாழ்க் கையில் பல்வேறு பருவங்களைக் கடந்து செல்வதனைக் காணலாம்.
ஆரம்பப்பருவம்
இந்தப் பருவத்திலே ஒருவர் போதையில் உள்ள நாட்டம் காரணமாக, தனக்கு விரும்பிய அளவு போதை ஏற்படுகின்ற வரையில் குடிப்பார்கள். காலஞ் செல்லச்செல்ல, ஒரேயளவின தான போதை ஏற்படுவதற்கு முன்பு குடித்ததைவிட அதிகளவில் குடிக்கவேண்டிய தேவை ஏற்படும்.
மிக அதிகளவில் குடிப்பவர்கள் சிலரில் மது உள்ளெடுத்த நிலையில் நடந்த சம்பவங்களை ஞாபகத்தில் கொண்டு வருவது கஷ்டமாக இருக்கும். குடியில் ஏற்படும் நாட்டம் காரணமாக மனமோ அடுத்து எங்கே
குடிக்கலாம்? எப்படிக் குடிக்கலாம்? என்பது பற்றிய சிந்தனையிலேயே இருக்கும்.
இடைப்பருவம்
இந்தப் பருவத்தில் இருக்கும் ஒருவர் தான் குடியை நிறுத்த வேண்டும் என்று இடைக்கிடையே விரும்பினாலும், அவரால் தான் குடிக்கும் அளவைக் குறைக்க முடியாமலும், குடிக்கும் நேரம் அல்லது சூழல் இரண்டையும் கட்டுப்படுத்த முடியாமலும் இருக்கும்.
அதனால் அவர் தான் குடிப்பதற்காகப் பல காரணங்களை முன்வைப்பார். சிலர் தமது தொடர்ச்சியான குடிக்கு தமது குடும்பத்தினரை, வேலையை, அல்லது வாழ்க்கைச் சூழ்நிலையைக் காரணம் காட்டுவார்கள். அத்துடன் இந்தப் பருவத்தில் ஒருவரில் அடிக்கடி கோபம் ஏற்படுதல், சண்டை பிடித்தல் போன்ற குணவியல்பு மாற்றங்களும் ஏற்படும்.
வேறு சிலர் தற்காலிகமாக ஒரு சமாளிப்புக்காகவோ, வற்புறுத்தலுக்காகவோ அல்லது கோயில் திருவிழா காரணமாகவோ தமது குடியைச் சிறிது காலம் நிறுத்தினாலும், அதனைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாமல் மறுபடியும் அதிகமாகக் குடிக்கின்றமையையும் காணலாம்.
இறுதிப்பருவம்
இந்தத் தீவிரமான பருவத்திலே இருப்பவர்கள் தொடர்ச்சியாகவும் மிக அதிக அளவுகளிலும் குடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் உள்ளெடுக்கும் மதுவின் அளவு குறைகின்ற பொழுது அவர்களில் விடுபடல் அறிகுறிகள் ஏற்படும்.
இந்நிலையில் உள்ளோர் தமது தொழில்களை இழந்து, அதிகளவு பொருளாதாரப் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டுக் கொள்வதனால் தாம் தொடர்ந்து குடிப்பதற்காகக் கடன் வாங்குதல், பொய் பேசுதல், திருடுதல், பிச்சை எடுத்தல் போன்ற பல்வேறு நடத்தைகளில் ஈடுபடுவார்கள்.
அவர்கள் தமது சுயகெளரவத்தை இழந்து, நண்பர்கள் உறவினர்களால் கைவிடப்பட்டு, கடைசியில் குடித்தால்தான் செயற்பட முடியும், குடித்தால்தான் உயிர்வாழ முடியும் என்கின்ற ஒரு நிலையில் அலைந்து திரிபவர்களாக மாறிவிடுவர்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014