மதுப் பழக்கத்தினை உடைய ஒருவர். அவருக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தற்பொழுது மதுவிலே தங்கிநிற்கும் ஒரு நிலைக்குவந்திருக்கலாம். இந்த நிலையையே மதுவுக்கு அடிமையாகிப்போன ஒரு நிலை என அழைக்கின்றோம்.
மதுவுக்கு அடிமையாகிப் போனவர்கள் தமது வழமையான விருப்பு வெறுப்புகள் குணாதிசயங்களிலிருந்து மாறுபட்டு மதுவுடன் தொடர்புடைய வெவ்வேறு இயல்புகளை வெளிக்காட்டுவார்கள்.
ஒருவரில் கடந்த ஒரு வருட காலத்தில் கீழ்வரும் இயல்புகளில் மூன்றோ அல்லது அதற்கு மேலோ இருக்கும் எனில் அவர் மதுவுக்கு அடிமையாயிருக்கிறார் என்ற முடிவுக்கு வரலாம்.
மதுவின் மீது அதீத விருப்பம்
அநேகமான வேளைகளில் மதுவை உள்ளெடுக்க வேண்டும் என்ற அவாவும், தவிப்பும் ஏற்படுதல்.
உள்ளெடுக்கும் மதுவின் அளவில் படிப்படியான அதிகரிப்பு
ஆரம்பத்தில் குறைந்த அளவு மதுவுடன் ஏற்பட்ட போதையானது, காலம் செல்லச் செல்ல மிகவும் அதிகரித்த அளவுகளில் மதுவை உள்ளெடுக்கும் பொழுதே ஏற்படுகின்ற நிலை.
மது தொடர்பான சுயகட்டுப்பாட்டை இழத்தல்
மதுவை அருந்துவதா இல்லையா என முடிவெடுப்பதிலும், உள்ளெடுக்கும் மதுவின் அளவைத் தீர்மானிப்பதிலும் அல்லது போதும் என்று நிறுத்துவதிலும் தனது கட்டுப்பாட்டை இழந்திருத்தல்.
விடுபடல் அறிகுறிகள் ஏற்படல்
மதுவினுடைய அளவு உடலிலே குறைந்து கொண்டு போகும்போது, அதன் காரணமாக ஒருவருடைய உடலிலும் மனதிலும் விடுபடல் அறிகுறிகள் தோன்றுகின்றன. அநேகமா னோர் அவ்வாறான விடுபடல் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே மீண்டும் மீண்டும், சிலவேளைகளில் அதிகாலை நேரத்திலிருந்து மதுவை உள்ளெடுத்துக் கொண்டிருப்பர்.
மதுமட்டுமே வாழ்வாயிருத்தல்
மது அருந்துவதைத் தவிர்ந்த தமது வாழ்க்கையின் ஏனைய சந்தோஷங்களையும், பொழுது போக்குகளையும் புறக்கணித்தல்.
துர்ப்பாவனை
மதுவினால் தனக்குப் பலவிதமான பிரச்சினைகள் வருகின்றன என்பதைத் தெரிந்த பின்னரும் தொடர்ச்சியாக மதுவைப் பாவித்தல்.
பழைய குடிக்குத்திரும்புதல்
ஒருவர் குடியைச் சிறிது காலத்திற்கு விட் டிருந்தாலும், அதனை மீண்டும் ஆரம்பிக்கும் பொழுது திரும்பவும் பழைய மாதிரியே. பழைய அளவிலேயே குடிக்கத் தொடங்குதல்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014