எல்லாப் பழங்களிலும் மனிதனுக்குத் தேவையான கனியுப்புக்கள், விற்றமின்கள், தாதுப்பொருள்கள், நார்ப்பொருள்கள், மாப்பொருள்கள் சில அளவு வித்தியாசத்துடன் காணப்படுகின்றன. குடல் சுத்தமாக இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. இதனை வாழைப்பழம் செய்கின்றது. அத்துடன் குடற்புண்களையும் மாற்றவல்லது. தினமும் ஒரு பழமாவது குறைந்தது சாப்பிடுவதன்மூலம் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். இதனால் கொழுப்புச்சத்துக் கிடையாது. இருதய நோயாளிகள் சாப்பிடலாம்.
மாதுளம்பழம் சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் ஆறுமாதம் வரை பழுதடையாமல் வைத்திருக்கலாம். விற்றமின் C அதிக அளவில் உள்ள பழம் நெல்லிக்கனி (பெருநெல்லி) அதற்கு அடுத்த படியாக விற்றமின் C நிறைந்த பழம் கொய்யாப்பழம். விற்றமின் A அதிக அளவில் உள்ள பழம் மாம்பழம். அதற்கு அடுத்தபடியாக விற்றமின் A நிறைந்த பழம் பப்பாளிப்பழம்.
முதுமையை எதிர்க்கும் திறன் நெல்லிக்கனியில் இருக்கின்றது. இதில் இருக்கும் ஒருவகை அமிலம் உடலில் உயிர் அணுக்களின் சிதைவைத் தடுத்து நிறுத்துவதாக ரஷ்ய மருத்துவக் கழகத்தால் 1980இல் கண்டுஅறியப்பட்டது.
எலுமிச்சம்பழம் விற்றமின் C உட்படப் பலவிதமான கனியுப்புக்கள், விற்றமின்கள், தாதுப்பொருள்கள், அமிலங்கள் என்பன கொண்டுள்ளது. இதனை மருத்துவ மன்னன் என்றும் அழைப்பர். இதில் இருக்கும் சிற்றிக் அமிலம் நோய் கிருமிகளை அழிக்கக்கூடியது.
வியர்வை, துர்நாற்றம், அதிக பருமன் ஆனவர்கள் உடலில் உள்ள வியர்வை மணத்தை அகற்றுவற்கு எலுமிச்சம் பழத்தை வெட்டி உடல் முழுவதும் தேய்த்து 10-15 நிமிடங்களின்பின் குளிப்பதால் அடுத்து 24 மணித்தியாலங்களுக்கு வியர்வை, துர்நாற்றம் உங்களை அணுகாது. குடற்புண்கள் உள்ளவர்கள் இதனைப் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது.
ச.சுதாகரன்,
தாதிய உத்தியோகத்தர்,
யாழ் போதனா வைத்தியசாலை.