மனிதன் இன்றி மரங்கள் இருக்கும்
மரங்கள் இன்றி மனிதன் இல்லை.
மரங்களைப் பாருங்கள். நமக்காகவே தம்மை அர்ப்பணித்துப் பிறருக்கு முழுவதும் பயன்படும் வாழ்க்கை உடையனவனாக விளங்குகின்றன.
மரங்கள் சுற்றுப்புறச் சூழலில் நல்ல தட்ப வெப்பநிலையைப் பேணுவதுடன் காற்றில் உள்ள கரியமில வாயுவை உள்இழுத்து காற்று நஞ்சாகாமல் தடுத்துவிடுகின்றன. நன்றாக வளர்ந்த மரம் ஒன்று (வேம்பு, புங்கை) பத்து குளிர்சாதனங்களால் ஏற்படும் வெப்பத் தணிப்பைக் காட்டிலும் கூடியவெப்பத்தைத் தணித்துவிடும். வேளாண்மைத் தொழில் உருவாகுவதற்கு முன்பே மனித இனத்தை மரங்களே காய், கனி, கிழங்குகள், விதைகள் கொடுத்து ஊட்டி வளர்த்தன. மரங்களில் இருந்து பெறும் பயன்களை எழுத்தில் எழுதி முற்றுப்பெற வைக்கமுடியாது
தற்போது கிராமங்களை விட நகர்ப்புறத்தில் இருமடங்குக்கு மேல் தூசி படிகின்றது. துசிகளின் தோழன் புகை இவை இரண்டும் மனிதனுக்குப் பகை மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையில் காரீயம், பாதரசமும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையில் குளோரோ புளோரோ காபன் மற்றும் புற்று நோய்களுக்குக் காரணமான பொன்சோனபரின் போன்ற நச்சுப் பொருள்களும் மனித இனத்துக்கு ஊறு விளைவிக்கின்றன.
இந்தத்துசிகளையும், புகையையும் மரங்களால் கட்டுப்படுத்துவதுடன் காற்றையும் அதிகரிக்கமுடியும். கிராமங்கள் வீதியோரங்களில், தொழிற்சாலைகளில் மரங்களை நடுவதால் 70 வீதம் தூசிப் புகைகளின் பாதிப்பைத் தடுத்துவிடும். மனிதனின் செவிப்புலன், உடலியல் ஆளுமைகளைப் பாதிக்கக்கூடிய ஒலியின் கடுமை நகர்ப்புறங்களில் 60-80 டெசிபெல்களுக்கிடையில் காணப்படும்.
இதனால் மனிதனுக்கு எரிச்சல், தலைவலி, தூக்கம் கலைதல், சிந்திக்கும் ஆற்றல் குறைதல் போன்றன ஏற்படும். வீதி ஒரங்களில் மரங்களை நடுவதால் இந்த ஒலி அலைகளின் கடுமையை 20-30 டெசிபெல் வரை குறைந்து விடலாம். சூரிய ஒளியின் கடுமை மென்மை அடைவதுடன் ஏற்படும் பாதிப்புக்களையும் குறைக்கலாம். மரங்களைநடுவோம் மக்கள் நலனைப் பேணுவாம்!
ச.சுதாகரன்
நீரிழிவு சிகிக்சைநிலையம்,
யாழ் போதனா வைத்தியசாலை.