நீங்கள் தினமும் எத்தனை சந்தர்ப்பங்களில் உங்கள் கைகளைக் கழுவுகின்றீர்கள்? இதோசில பயன்தரும் குறிப்புக்கள்.
கைகழுவுவதால் தடிமன், இன்புளுவென்சா, ஈரழற்சி A, கிருமிகளால் உண்டாகும் வயிற்றோட்டம், புறொன்கியோலைற்றிஸ் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கலாம்.
கைகழுவ வேண்டிய சில சந்தர்ப்பங்கள் :
- உணவைத் தயாரிக்க முன்பு: இறைச்சி, கோழி போன்றவற்றைச் சுத்தம் செய்தபின்பு, சாப்பிட முன்பும் பின்பும்
- கழிப்பறையைப்பாவித்த பின்பு, சுகாதாரத் துவாய்களை மாற்றிய பின்பு
- காயங்களுக்கு மருந்திட முன்பும் பின்பும்
- நோயாளிகளைக் கவனிக்க முன்பும் பின்பும்.
- வைத்தியசாலைக்குச் சென்று வந்த பின்பு
- கண்வில்லைகளை அணிய முன்பு, மூக்கைச் சீறியபின்பு கைகளில் இருமியிருந்தால் அல்லது தும்மியிருந்தால் அதன்பின்பு
- குப்பை கூழங்கள், மண், அழுக்கு நிறைந்த இடங்களைக் கையாண்ட பின்பு
- வளர்ப்புப் பிராணிகளுடன் விளையாடிய பின்பு.
எவ்வாறு கழுவுவது?
- கைகளைச் சவர்க்காரம் போட்டு ஒடும் நீரில் மூன்று முறை கழுவுங்கள்.
- பின்பு சவர்க்காரத்தினைக் குறைந்த பட்சம் 20 செக்கன்களுக்குக் கைகளில் தேயுங்கள்.
- அப்போது விரல் இடுக்குகள், நகங்களைச் சுற்றிய விரலின் நுனிப்பகுதி, உள்ளங்கை இறைகள் மற்றும் கையின் மேற்புறம் என்பவற்றைக் குறிப்பாகத் தேயுங்கள். பின் நன்றாகக் கைகளைக் கழுவுங்கள்
- கைகளைச்சுத்தமான துணி ஒன்றினால் துடையுங்கள்.
குறிப்பு- நீங்கள் பாவிப்பது கிருமி கொல்லி சேர்ந்த சவர்க்காரமாக இருக்கவேண்டியதில்லை. நீங்கள் கைகளைத் தேய்ப்பதில் செலவிடும் நேரமே முக்கியமானது.
டாக்டர். திருமதி.பிரதிபனா செல்வகரன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
யாழ். போதனா வைத்தியசாலை.