வாழ்க்கையில் சறுக்கி விழுவோர் பலர். இவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர். ஆனால் முதியோர் மத்தியில் அதாவது அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டோரில் பலர் விழுகின்றனர். ஆண்டு தோறும் முதியோர் விழும் நிகழ்வுகள் அதிகரித்துச் செல்கின்றது. இந்த அதிகரிப்பானது முதியோரின் தொகை அதிகரிப்பை கோடிட்டுக் காட்டுகின்றது.
சுமார் 10-20 விதமான விழுதல்களில் காயங்கள் ஏற்படுகின்றன. பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் காயங்களாக எலும்பு முறிவுகள், மூட்டு விலகல்கள், பெரிய தலைக் காயங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 65 வயதிற்கு மேற்பட்டோரிடம் காணப்படும் மூளைக் காயங்கள் பெரும்பாலும் விழுதலினால் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் ஒருவரை ஆரோக்கியமற்ற உடல் நிலைக்கு தள்ளிவிடுகின்றன. விழும் நோயாளர்களில் பெரும்பாலானோர் சுயமாக மீண்டும் எழ முடியாது தவிர்க்கின்றனர். இதனால் நீண்ட நேரம் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பின்னரே அவர்களால் உதவி பெறமுடிகின்றது. இந்த தாமதம் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
உடல் மெலிவானோர், கூடிய உயரமுடையோர் பாரிசவாதத்தால் பீடிக்கப்பட்டோர், எழும்பில் தாதுச் சத்தின் அடர்த்தி குறைவானோர் பொதுவாக விழுதலுக்கான ஏதுக்களாக உள்ளன. குறைவடைந்த தசைத் தொகுதி, புவியீர்ப்பில் ஏற்படும் மாற்றங்கள் பார்வைக் குறைபாடு, எதிர்தாக்கத்திற்கு எடுக்கும் அதிக நேரம் என்பன போன்ற வயது மாற்றங்கள் ஒருவர் விழுவதற்கு இட்டு செல்லும் இயற்கையான காரணிகளாகக் குறிப்பிடலாம். சில மருந்து வகைகளால் ஏற்படும் பக்க விளைவுகள், பல்வேறு வகையான மருந்து வகைகளை உரிய காரணமின்றி பாவித்தல், சூழல் இடையூறுகள், உதாரணமாக படிக்கட்டுக்கள், சமனற்ற நடைபாதைகள், பளபளப்பான நிலம், தடித்த தரை விரிப்புகள், மற்றும் பொருத்தமற்ற பாதணிகளை தெரிவு செய்தல் போன்றன நம்மால் தவிர்த்துக் கொள்ளக்கூடிய சில காரணிகள் ஆகும்.
விழுதலால் ஏற்படும் விளைவுகள்
விழுதலினால் ஒருவரின் சுயமரியாதைக்கு தாக்கம் ஏற்படுவதோடு, ஒரு தனி மனித சுதந்திரத்தையும் பாதிக்கின்றது. அத்துடன் விழுந்துவிடுவேன் என்ற பயத்தையும் நோக்கங்களைத் தாங்கும் சக்தியின் வீழ்ச்சியும், காலக்கிரமத்தில் எழுந்து நடமாடமுடியாத நிலையையும் பலவீனத்தையும் ஏற்படுத்தும். இவையனைத்தும் ஒருமனிதனை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதாக அமையும்.
சிகிச்சையும் விழுதலை தடுப்பதற்கான உத்திகளும்
விழுவது பற்றிய கல்வி, தேகப்பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், சூழலை மாற்றியமைத்தல் போன்றன வெற்றிகரமான புனரமைப்புக்குரிய தந்திரோபாயங்களாகும்.
புனர்நிர்மாணத்தின் பூரண அணுகுமுறை விழுந்த ஒரு நோயாளியின் நிலையை முன்னேற்றம். குறைவான அபிப்பிராயங்களையுடையோரை மதிப்பீடு செய்து அவர்களை வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். காலத்துக்கு காலம் நோயாளியின் மருந்துகளை மதிப்பீடு செய்தல் மிக முக்கியம்.
குளியலறை வெளிச்சத்தை எப்பொழுதும் எரிய விடுவது, படுக்கைக்கு அருகில் கழிப்பறை அமைத்தல், எப்பொழுதும் நோயாளியைக் கண்காணிக்கும் வகையில் அவரை அறைக்கு வெளியே படுக்க விடுதல், சக்கர நாற்காலியில் நோயாளி அமர்ந்திருக்கும் பொழுது பட்டியொன்றினால் அவரைச் சுற்றி பாதுகாத்தல், படுக்கையின் பக்கங்களை உயர்த்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகளால் நோயாளி விழுவதைத் தடுக்கலாம்.
பொதுவான பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றலாம்.
உதாரணமாக படுக்கையின் உயரத்தைக் குறைத்தல். நோயாளியின் அறையையும் சூழலையும் நீரின்றி வைத்திருத்தல். சக்கர நாற்காலியை எப்பொழுதும் பூட்டி வைத்திருத்தல், மேசை தொலைபேசி போன்றவற்றை நோயாளியின் கை்கெட்டிய தூரத்தில் எப்பொழுதும் வைத்திருத்தல் போன்றனவாகும்.
இடம் மாற்றம் செய்யும் பொழுது பொருத்தமான நடைமுறைகளைக் கையாழுதல், வீடுகளில் காணப்படும் ஆபத்தை விளைவிக்கும் ஏதுக்களை தவிர்த்தல், உதாரணமாக மேடு, பள்ளமான தரையை சமனாக்கல், படிகளுக்கு பதிலாக சரிவான தரையைப் பயன்படுத்தல், படிகட்டுக்களின் வெளி விளிம்பில் நிற மூட்டிய நாடாவை பதித்தல், நூல் தரை விதிப்புக்களை பயன்படுத்தல், நல்ல வெளிச்சத்தைப் பேணல், குளியலறைகளில் கைப்பிடிகளை அமைத்தல், கழிப்பறை இருக்கைகளை உயர்த்தி வைத்தல் போன்றன விழுதலை தடுக்கும் ஏனைய உத்திகளாகும்.
எனவே வயதானவர்களில் ஏற்படும் விழுதலும் அதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளும் மேற்கூறிய உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பெரும்பாலும் தவிர்த்துக் கொள்ளலாம்.
பொது வைத்தியநிபுணர். வா.சுஜநிதா
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.