உணவு பழுதடைதல் என்பது சாதாரண மனிதனால் உட்கொள்ளமுடியாத தொரு அளவுக்கு அது பௌதிக, இரசாயன மாற்றங்கள் அடைந்து காணப்படுதல் ஆகும்.
நுண்ணங்கிகளின் தாக்கம் காரணமாகவும், ஒட்சியேற்றத் தாக்கங்களின் மூலமாகவும், உணவில் காணப்படும் நொதியத்தாக்கங்கள் காரணமாகவும், உணவைச் சரியான முறையில் பாதுகாக்காமை போன்ற பல காரணங்களாலும் உணவு பழுதடைகின்றது. உணவுக்கே உரித்தான அகக்காரணிகள், உணவு காணப்படும் சூழலில் நிலவும் சூழற்காரணிகள் போன்றன உணவு பழுதடைதலைப் பாதிக்கும் காரணிகள் ஆகும்.
அகக் காரணிகள் என்பது உணவின் தன்மையைப் பொறுத்து இவை PH ஈரப்பதன், போசாக்கின் அளவு, உயிரியல் கட்டமைப்பு, உணவில் இயற்கையாக காணப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் ஆகும் PH வீச்சுகளிலும் வெவ்வெறு வகையான நுண்ணங்கிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. எலும்மிச்சம்பழம் (PH – 1.8 – 2) தோடம்பழம் ( PH – 3.6- 4.3) வாழைப்பழம் ( PH – 4.5 -4.7) போன்றவை மதுவங்களாலும் இழையுரு பங்கசுக்களாலும் பழுதடைபவை. ஈரப்பதன், நுண்ணங்கிகளின் வளர்ச்சிக்கும் பெருக்கத்துக்கும் வேண்டப்படும் அடிப்படையான காரணியாகும். ஈரலிப்புத்தன்மை கூடிய உணவுகள் விரைவில் பழு தடையும். இறைச்சி மீன் போன்றவை பக்றீரியாக்களால் பழுதடையும், ஈரலிப்பைக் குறைவாகக் கொண்ட மால்மா, மா போன்ற மிக மிக குறைந்த ஈரலிப்புடைய உணவுப் பொருள்கள் இலகுவில் பக்றீரியாக்களால் அல்லது பூஞ்சணங்களால் பழுதடையமாட்டா. போசாக்கின் அளவு கூடிய உணவுகள், விரைவில் பழுதடைகின்றன அதற்குக் காரணம் நீர், நைதரசன், விற்றமின், கனியுப்புக்கள் போன்றவை, நுண்ணங்கிகளின் வளர்ச்சிக்கும் பெருக்கத்திற்கும் உதவுகின்றன.
உயிரியல் கட்டமைப்பானது உணவு பழுதடைதலில் முக்கிய பங்கு செலுத்துகின்றது. இயல்பாகவே பழங்களில் காணப்படும் வெளித்தோல் சேதமாவது, முட்டை ஒடு சிதைவடைதல், பூச்சி, புழுத்தாக்கம் போன்ற செயற்கைக் காரணிகளினால் உணவில் இயற்றைகையாக அமைந்த உயிரியல் கட்டமைப்பு சிதைக்கப்படுகின்றது. இதனால் உணவுக்கான பாதுகாப்பு இழக்கப்படுகின்றது.
உயிரியல் கட்டமைப்பு சிதைக்கப்படுவதனால்உணவு பழுதடைகின்றது. உணவுப் பதார்த்தங்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட வெப்பநிலை, ஈரப்பதன், வாயுக்கள் தயாரிக்கப்பட்ட வீதம், சேர்க்கப்பட் இரசாயனங்கள் போன்றவை உணவு பழுதடைதலை ஏற்படுத்தும் சூழற்காரணிகளாக அமைகின்றன.
நடுத்தர வெப்பநிலை உள்ள உணவு விரைவில் பழுதடைய வாய்ப்புள்ளது. மற்றும் உயர் சாரீரப்பதன் உள்ள இடங்களில் நீர் கிடைக்கும் அளவு அதிகரிக்கின்றது. இப்படியான இடங்களில் உலர் உணவுப் பொருள்கள்களைச் சேமித்து வைக்கும்போது ஈரலிப்பை உணவு உறிஞ்சுவதன் மூலம் உணவு பழுதடைகின்றது.
ஆகையால் உணவைப் பாதுகாப்பதற்கு பொருத்தமான உணவுவகைகளுக்கு ஏற்ப குளிரூட்டல், உலர் பாதுகாப்பு, வெப்பப் பாதுகாப்பு, பாச்சர் பாகம் போன்றவற்றை பயன்படுத்திப் பாதுகாப்போம்.
க.நிரோபிகா
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ் போதனா வைத்தியசாலை.