பழங்கள் இனிப்புச் சுவையுடன் இருப்பதற்கு காரணம் அதில் காணப்படும் ப்ரக்ரோஸ், குளுக்கோஸ் போன்றன அடங்கியிருப்பதே. இது உடலுக்கு ஆற்றலையும் சக்தியையும் உடனடியாகவும் தரவல்லன.
இது போல் மாப்பொருளின் வடிவங்களான
சுக்குரோஸ் – வெள்ளைச் சீனி
மோல்டோஸ் – தானியங்கள்
லக்டோஸ் – பால்
போன்றன வகையில் காணப்படினும் இவை எமது குருதியில் ஈர்க்கப்படும் முன்பு செரிமானம் அடைய வேண்டும் அதன் பின்பு அவைஆற்றல் தரும் பொருளான மாறமுடியும். பொதுவாக மாப்பொருள்கள் ஜீரணமடையும் போது அமிலத்தன்மை வெளிப்படுகின்றன.
உதாரணம் வெள்ளைச் சீனியை உணவில் அதிகம் சேர்ப்பவர்குளுக்கு அஜீரணம் ஏற்படுவதை அவதானிக்கலாம். இவை சமிபாடு அடையும் போது உற்பத்தியாகும் அமிலங்கள் இரைப்பையின் உட்புறச்சுவர் படலங்கள் குடலின் உட்புறச்சுவர் படலங்களை அரித்து எரிச்சல் ஊட்டுகின்றன. இந்த வெல்லம் அமிலத்தன்மை ஆகியன எமது பற்களையும் சேதமடையச் செய்கின்றது.
எமது பற்கள் கற்கள் அல்ல அவைகளின் உள்ளே குருதி விநியோகம் போசனை பொருள்கள் ஊட்டச்சத்துக்கள் உட்புற பகுதியில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அத்துடன் குருதியில் வெல்ல அதிகரிப்பானது வெள்ளை அணுக்களின் போரிடும் வல்லமையை குறைக்கின்றன. எனவே நாம் சிறிதளவு வெல்லத்தை பயன்படுத்தினால் உடல் நலம் கெடுவதில்லை.
இவற்றை இயற்கையாக கிடைக்கும் உணவுகளில் பெறுவது ஆபத்து இல்லை. இந்த உண்மைகளை மனதில் கொண்டு உணவில் இனிப்பு வகைகளைச் சேர்ப்பதற்கு பதிலாக பழங்களை வாங்கி உண்பதனால் உங்கள் வளமான எதிர்காலத்துக்கு நீங்களே உதவி செய்தவர்களாகி விடுவீர்கள்.
பழங்கள் பற்றிய தகவல்கள் சில –
- இயற்கை உணவான பழங்கள் எமது உயிர்நீரைான நீராகாரம், அதிகம் உடையவை நினைவாற்றலை அதிகரிக்கத் தூண்டுகின்றன. நார்ச்சத்தை அதிகம் கொண்டிருக்கின்றன. அத்துடன் கொழுப்பற்ற உணவாகும்.
- பழங்களில் கவர்ந்திழுக்கும் நிறங்களுக்கு காரணமான Flavonoids ( ஃபிளேவனய்ட்கள்) எனும் சேர்மானங்கள் காணப்படுகின்றன. இவை புற்று நோய்களுக்கு எதிரான புற்றுநோயைக் குணமாக்கும் அல்லது குறைக்கும் உயிர்வலியற்ற எதிர்ப்பொருளாகச் செயல்படுபவை (Anti oxidants)
- பழங்களில் காணப்படும் நார்ப் பொருள் ஜீரணபாதையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. குடல்களில் உள்ள உணவுப் பொருள்களை வேகமாக நகர்த்துவதன் மூலம் மலச்சிக்கல் மற்றும் குடல் உட்சுவர்களில் ஏற்படும் கோளாறுகளைத் தவிர்க்கின்றது.
- நார்பொருளானது பழங்களில் காணப்படும் புரக்ரோஸ் எனும் வெல்லச்சத்தை எமது ஜீரணப்பாதையில் உட்கவரப்படுதலை தாமதப் படுத்துவதால் குருதியில் திடீர் வெல்ல அதிகரிப்பு ஏற்படாது ஒரே சீரான அளவில் வெல்ல மட்டத்தை பேணுவதற்கு உதவுகிறது.
- நார்ப்பொருள் மிகுந்த பழங்கள் குறிப்பாக மலக்குடல் சார்ந்த புற்றுநோய்கள் வராது தடுத்து தக்க பாதுகாப்பை அளிக்கின்றன.
- இதய நோய்களுக்கு பழங்கள் இதமானவை
- குளிர்ச்சியான உணவுகளில் பழங்களும் கீரையும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
- சமீபத்தில் கண்டுபிடிப்புகளின் படி அளவுக்கு மீறிய எடை உடையவர்கள் தங்கள் எடையை குறைத்துக் கொள்ள விரும்புவோர் களோயாயின், உப்புகள் குறைந்த கொழுப்பற்ற கொலஸ்ரோல் இல்லாத உணவாகக் காணப்படுவது பழங்கள், கொழுப்பு மலிந்த சிற்றுண்டிகளாக வெற்று கலோரிகளாக திணிக்கப்பட்ட உணவுகளை உண்பதை விட ஊட்டச்சத்துக்கள் அதிகமாகக் காணப்படும் பழங்கள் உள்ளெடுப்பது நல்லது.
- பழங்களில் உடல் நலத்துக்கு தேவையான விற்றமீன்கள், தாதுப் பொருள்கள், கனியுப்புகள், கேரட்டின் தேவையான அளவு காணப்படுகின்றன. ( உதாரணம் விற்றமின் “சி”, பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், கல்சியம்)
- உலர்விக்கப்பட்ட பழ்கள், உறைவிக்கப்பட்ட பழங்கள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட பழங்கள் போன்றவை பதனிடப்படும் போது சில விற்றமின்கள் அழிந்தாலும் பின்னரும் கூட எமக்குத் தேவையான அளவு விற்றமின்கள், கனியுப்புகள் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன.
- சாப்பிடுவதற்கு பின்பு பழம் சாப்பிடாமல் முன்பு சாப்பிடும் போது அதனுடைய பயன் அதிகம் நம்மைச் சேருகின்றது.
எஸ்.சுதாகரன்
தாதிய உத்தியோகத்தர்.
நீரிழிவு சிகிசசை நிலையம்
யாழ் போதனா வைத்தியசாலை