இன்று எம்மிடையே பல்வேறுபட்ட தொற்றுநோய்கள் மிக வேகமாகப் பரவி வருகின்றன. இத் தொற்றுநோய்கள் பெருமளவில் பக்ரீரியா ( Bacteria) , வைரஸ் , பங்கஸ் என்ற நுண் உயிர்களால் ஏற்படுகின்றன. நெருப்புக்காய்ச்சலும் ஒரு வகை பக்ரீரியாவால் ஏற்படுகின்ற தொற்று நோயாகும். இந்த நோயை ஏற்படுத்துகின்ற பக்ரீரியாவின் பெயர் Salmonella typhi. சில சந்தர்ப்பங்களில் மேற்குறிப்பிட்ட பக்ரீரியாவாலும் நெருப்புக் காய்ச்சல் ஏற்படுகின்றது. நெருப்புக் காய்ச்சலை உருவாக்கக் கூடிய நோய்க் கிருமிகள் மனித உடலில் மட்டும் பெருகக்கூடிய இயல்புகள் கொண்டுள்ளன. இந்த நோய்கிருமி மனித உடலில் பெருக்கமடைந்து நோயை உருவாக்குகின்றது.
இந்த நோய்கிருமி பல முறைகளில் மனித உடலுள்போகக் கூடிய வழிகள் இருப்பினும் இவை பிரதானமாக நோய்க்கிருமியின் தொற்றுக்கு உட்பட்ட நீர், உணவு என்பவற்றுடன் சேர்ந்து மனிதனின் சமிபாட்டுகத் தொகுதியை சென்றடைந்து, அங்கிருந்து நிணநீர்க் கணுக்களுக்குச் சென்று பின்னர் குருதிச் சுற்றோட்டத்தை வந்தடைகின்றன. இவ்வாறு தொற்றுக்கு உட்பட்ட மனிதனில் சமிபாட்டுத் தொகுதியில் குருதிச் சுற்றோட்டத்தை அடைய இந்த நோய்க்கிருமிக்கு 10 – 14 நாள்கள் எடுக்கும். நோய்க் கிருமிகள் குருதிச் சுற்றோட்டத்தை அடைந்த பின்னர் மனிதனில் நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே மனிதனுக்கு தொற்று ஏற்பட்டு 10 நாள்களின் பின்னரே நோய் அறிகுறிள் ஏற்படுகின்றன.
இந்நோய்க்கான முக்கிய அறிகுறிகள் விட்டு விட்டுக் காயும் உயர் காய்ச்சல், தலைவலி, வயிற்றுநோ, வாந்தி, தொடக்க காலங்களில் மலச்சிக்கல், பின்னர் வயிற்றோட்டம், நிணநீர்கணுக்கள் வீக்கம் (றோஸ்) Rose நிற புள்ளிகள் உடலின் மேற்பகுதியில் ஏற்படுதல் என்பனவாகும்.
இந்த நோய் சாதாரணமாக 2 – 3 கிழமைகள் வரை நீடிக்கலாம். இந்த நோய் சிலருக்கு மருத்துவ உதவியின்றி தானாகவே குணமாகின்ற போதிலும் பெரும்பாலானவர்கள் மருத்துவ உதவிகளால் சுகப்படுத்தப்படுகின்றனர். பலர் மருத்துவ உதவியின்றி இந்த நோயின் தீவிர சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடலாம். எனவே இந்த நோய்க்குரிய அறிகுறிகள் இருப்பவர்கள் நோயின் தொடக்கத்திலே மருத்துவ உதவியை நாடுவதன் மூலம் நோயின் சிக்கல்களையும் இறப்பையும் தவிர்த்துக்கொள்ளலாம்.
இந்த நோயின் சிக்கல்கள் (Complication) பெரும்பாலும் இரண்டு வாரங்களின் பின்னரே ஏற்படுகின்றன. இந்த நோயின் தாக்கத்தால் சிறுகுடல் சேதமடைதல், சிறுகுடலில் இருந்து பெருமளவு இரத்தப் பெருக்கு, செப்ரிக் சொக் ( Septicshocik) எனப்படும் குருதி அமுக்கம் குறைவடைதல், DIC எனப்படும் இரத்தப்பெருக்கு போன்ற பலவகை சிக்கல்கள் ஏற்பட்டு இறப்பு ஏற்படும். இந்த நோய் ஏற்பட்டு குணமானவர்களில் 10 வீதமானவர்கள் எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லாமல் அவர்களின் மலத்துடன் இந்த நோய்க்கான கிருமியைத் தொடர்ந்து வெளியேற்றலாம். இதன் மூலம் அடுத்தவர்களுக்கு இவர்கள் இந்நோயை ஏற்படுத்துகின்றார்கள் இவர்கள் நோய்க்காவிகள் என்று அழைக்கப்படுவர். இந்த நோய்க்காவிகளின் பித்தப்பையில் நோய்க்கிருமிகள் பல மாதங்கள் வரை இருந்து சிறிது சிறிதாக மலத்துடன் வெளியேற்றப்படுகின்றன.
இந்த நோயைக் கண்டுபிடிக்க பலவகை சோதனைகள் செய்யப்பட்ட போதிலும், பிரதானமாக Blood culture என்ற பரிசோதனை முக்கியமாகப் பயன்படுகின்றது. மருத்துவர்களால் நோய் அறிகுறிகளின் அடிப்படையிலோ அல்லது பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலோ மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த நோய்க்கு பொதுவாக வழங்கப்படுகின்ற ( Antibiotic இன் பெயர்சிப் ரோபுளெக்சசிக் Ciprofloxacin) என்ற மருந்தாகும். இது நோயாளியின் நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாத்திரைகளாகவோ அல்லது ஊசி மருந்தாகவோ வழங்கப்படுகின்றது. இந்த மருந்துகள் மொத்தமாக 7 – 10 நாள்கள் வரை வழங்கப்படும். சில வேளைகளில் அதிதீவிர நோய்கள் 3rd generation Cephalosporin என்ற ஊசி மருந்துகளாலும் சுகமாக்கப்படுகின்றன. இந்த நோய்க்கு உட்பட்டவர்கள் நோய்க்காலங்களில் லேசான ஆகாரங்கள் உண்ணுதல் ( Light diets ) முக்கியமாகும். சோறு போன்ற உணவுகள் நோயின் தீவிரத்தை கூட்டக்கூடியவை.
இந்த நோய் ஏற்படமுன் கவனமாக இருப்பதன் மூலம் தவிர்த்துக்கொள்ளலாம். இந்த நோயைத் தடுக்கும் வழிமுறைகள் , முறையாகவும் சுத்தமாகவும் வீடுகளில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அருந்துதல், வீடுகளில் உணவைச்சரியாக மூடி வைத்தல், சுத்தமாகப் பரிமாறுதல், போன்றவையாகும். இதன் மூலம் இந்த நோய் ஏற்படுவதை குறைக்க முடியும். இதேபோன்று வீடுகளில் கொதித்தாறிய நீரைப் பருகவேண்டும். சகல வீடுகளிலும்சரியான மலசலகூட வசதிகள் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுதும் உணவு அருந்தும் முன்பும், மலம் கழித்த பின்னரும் சவர்க்காரம் கொண்டு கைகளை நன்கு கழுவவேண்டும். இயலுமானவரை கடைகளில் உண்ணும் பழக்கங்களைத் தவிர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும். சகல உணவுக் கடைகளிலும் முறையாகவும் சுத்தமாகவும் உணவு தயாரிக்கப்படுகின்றனவா? அவை சரியான முறையில் பாதுகாக்கப்படுகின்றனவா? என்பதை சுகாதார சேவையாளர்கள் உறுதிப்படுத்துவதன் மூலமும் இந்த நோயைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
இந்த நோய் வேகமாகப் பரவிவரும் காலங்களில் நோயைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தடுப்பு மருந்துகள் மாத்திரைகள் மூலமாகவும், ஊசி மூலமாகவும் வழங்கப்படலாம். எனினும் எமது சமூகத்தில் இந்தத் தடுப்பு மருந்துகள் மிகவும் குறைவாகவே பாவிக்கப்படுகின்றன.
எனவே நாம் மேற்குறிப்பிட்ட தடுப்புமுறைகளைக் கவனத்தில் கொண்டு இயலுமானவரை இத்தொற்று நோயில் இருந்து எம்மைப் பாதுகாத்து நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற நோயற்ற வாழ்வை வாழ்வோம்.
Dr.பி.யோண்சன் M.D(Medicine)
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்