எமது கைவிரல்களினதும் கால் விரல்களினதும் நுனியைப் பாதுகாப்பது நகங்களாகும். இது மட்டுமன்றி உடல் கடிக்கும் போது சொறிவதற்கும் கைவிரல் நகங்களையே பயன்படுத்துகின்றோம்.
உங்கள் விரல் நகங்களை எப்போதாவது நீங்கள் நோக்கிய துண்டா? அவை தடிப்பாக இறுக்கமாக காணப்படுகின்றனவா? அல்லது நிறத்தில் வடிவத்தில் வித்தியாசம் உள்ளனவா என ஒரு நிமிடம் அவதானியுங்கள்.
நகத்தில் வரும் பாதிப்புகளுக்கு மிகப் பொதுவான மூலகாரணிகளாக அமைவது பங்கசு கிருமித் தொற்றும், சொறாசிஸ் ( Psoriasis) எனப்படும் ஒரு வகைத்தோல் நோயுமே ஆகும்.
நகங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள காலங்களில் மட்டுமன்றி ஆரோக்கியமாக உள்ள போதும் கூட அதேயளவு கவனத்துடன் சுத்தமாக வைத்திருத்தல் இன்றியமையாததாகும்.
நகங்களை ஆரோக்கியமாகப் பேணும் முறைகள்
- தோல்களை மிருதுவாக்கும் க்ரீம் ( Cream) ஐ கைகளுக்கும், கால்களுக்கும் பூசுதல் வேண்டும். இதன்போது நகங்களுக்கும், நக வளைவுகளுக்கும் நன்கு பூசி அழுத்துதல் வேண்டும்.
- வீடுகளில் புற்கள் பிடுங்கும் போதும் கடும் குளிர் பதார்த்தங்களைக் கையாளும் போதும் கையுறை அணிதல் வேண்டும்.
- நீண்ட நேரம் நீருக்குள் அல்லது இரசாயனப் பதார்த்தங்களுடன் விரல்கள் தொடுகையுடன் இருக்கும் சந்தர்ப்பங்களில் கையுறை , காலுறை அணிதல் வேண்டும்.
- கிழமைக்கு ஒருதடவை கை நகங்களையும், மாதத்திற்கு ஒரு தடவை கால் நகங்களைம் வெட்டுதல் வேண்டும் அப்போது பின்வரும் விடயங்களை கவனிக்கவும்.
- குளித்து முடித்தபின் வெட்டுதல் சிறந்தது. அப்போதுதான் உங்கள் நகம் மென்மையாகி, வெட்டுவதற்கு இலகுவானதாக இருக்கும்.
- நகங்களை விரல் நுனியுடன் ஒட்ட வெட்டுதல் கூடாது
- நகம் வெட்டும் உபகரணத்தை மட்டுமே பயன்படுத்தவும் கத்தி/ சவர அலகினால் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
- கால்களில் நகத்தை குறுக்காக நேரோ வெட்டுதல் வேண்டும். இரு மூலைகளிலும் நகம் விரல் தசையை விட நீளமாக இருத்தல் வேண்டும்.
- குழந்தைகளுக்கு நகங்களை வெட்டும்போது மிக அவதானமாக இருத்தல் வேண்டும்.
- நகங்களை வாயினால் கடிக்கவோ பிய்த்து இழுக்கவோ வேண்டாம். இதனால் நகத்தை சுற்றி தசைகளிலும், வாயிலும், பற்றீரியாக் கிருமித் தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.
தாக்கத்திலிருந்து நகத்தை பாதுகாக்க.
- காலைச் சுத்தமாகவும், உலர்த்தியும் வைத்திருக்கவும், ஏனெனில் ஈரலிப்பான சூழலிலேயே பங்கசுத் தொற்றுக்கள் இலகுவில் ஏற்படும்.
- சுத்தமான உலர்ந்த காலுறைகளை அணிதல் வேண்டும். ஒரு நாளைக்கு ஒன்று என உபயோகியுங்கள். ( Socks) ஈரலிப்பானால் உடனே காலுறையை ( Socks) மாற்றுங்கள்.
- கால்விரல்களைக் காற்றோட்டமான சூழலில் வைத்திருங்கள்.
நகங்களில் பிரச்சினை ஏற்பட்டு நீங்கள் வைத்தியரை நாடும் போது கீழ்வரும் வினாக்களுக்கான விடைகளை ஆயத்தப்படுத்திச் செல்லுங்கள்.
- எவ்வளவு காலமாக இந்தப் பிரச்சினை ஏற்படுகின்றது?
- நகம் ஏதாவது தாக்கத்துக்கு காயங்களுக்கு உள்ளானதா?
- இதேமாதிரி முன்பும் நகப்பிரச்சினை ஏற்பட்டதா? அப்படி ஏற்பட்டிருப்பின் எவ்வாறு குணப்படுத்தப்பட்டது?
- வீட்டில் ஏதாவது மருத்துவ முறைகள் கையாளப்பட்டதா? என்ன முறைகள் கையாளப்பட்டது?
- அதனால் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா?
- வேறு ஏதாவது காரணிகள் உங்கள் நகப் பிரச்சினையை கூட்டுகின்றனவா? அல்லது குறைக்கின்றதா?
- வேறு நோய்கள் உள்ளதா? வேறு மருந்துகள் பாவிக்கின்றீர்களா? மருந்துகள் ஒவ்வாமை உள்ளதா? கர்ப்பமாக இருக்கின்றீர்களா?
நகங்களில் நேரடியாக ஏற்படும் தாக்கங்கள் மட்டுமன்றி உடற்றொகுதிகளில் ஏற்படும் நோய்களாலும் நகமாற்றங்கள் ( நிறமாற்றம், தடிப்படைதல், உருமாற்றம்) ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்திருத்தல் நன்று. நகங்களில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதை அவதானித்தால் உடனே வைத்தியரை நாடுங்கள்
Dr.T.அபர்ணா
நீரிழிவு சிகிச்சை நிலையம்
யாழ் போதனா வைத்தியசாலை.