சுடுநீரால் ஏற்படும் விபத்துக்கள் பொதுவாக சிறுவர்களை பாதிக்கின்றன. இதன் மூலம் சாதாரணமான தோல் காயம், கொப்புளங்கள் முதல் பாரதூரமான உயிர் ஆபத்துவரை ஏற்படலாம். சுடுநீரால் ஏற்படும் சாதாரண தோல் காயங்களுக்கு எமது வீடுகளிலேயே சிகிச்சை அளிக்க முடியும்.
இதற்கு முதலில் சுடுநீர்பட்ட இடத்தில் அணியப்பட்டுள்ள ஆடைகளை அகற்ற வேண்டும். அதன் பின்னர் சாதாரண ஓடும் குழாய் நீரினால் சுடுநீர்பட்ட இடத்தை 15 – 30 நிமிடங்களுக்கு நனைக்க வேண்டும்.
பின்னர் பாதிக்கப்பட்ட இடத்தை தொற்றற் Gauze Bandage துணியால் இலேசாக சுற்றிக்கட்டிவிடவும். இடையிடையே இந்த இடத்துக்கு கற்றாளை இலைச்சாற்றைத் தடவுதல் நல்லது. வலி உள்ளபோது பனடோல் போன்ற வலி நிவாரணியை உள்ளெடுக்க முடியும்.
24 மணித்தியாலங்களின் பின்னர் சுடுநீர்பட்ட இடத்தை மிகவும் கவனமாக சவர்க்காரம் இட்டு கழுவுங்கள். அதன் பின் கழுவிய இடத்தில் நீர்த்தன்மை இல்லாதவாறு துணி ஒன்றால் ஒற்றி எடுத்து உலர்வாக வைத்திருங்கள்.
Polymyxin B Sulfate அல்லது Bacitracin Cream இணை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம் காயத்தில் நுண்ணங்கிதொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும். உங்களுக்கு ஏற்பட்ட சுடுநீர் விபத்து அளவில் பெரியதாக இருந்தாலோ அல்லது முகம், கைகள், மூட்டுகள், பால் உறுப்புபோன்ற இடங்களில் ஏற்பட்டாலோ அல்லது சுவாசப் பாதைக்குள் சென்றிருந்தாலோ உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுங்கள்.
வைத்தியர் ஆர்.அன்ரு அருணன்
நீரிழிவு நிகிச்சை நிலையம்.
யாழ் போதனாவைத்தியசாலை