இயற்கை மனிதனுக்கு வழங்கிய ஒர் அருட்கொடை தான் கனிவர்க்கங்கங்கள். அந்த வகையில் அண்மைக் காலமாக எமது பகுதிகளில் தெவோர வியாபாரிகளின் வியாபாரப் பொருள்களில் ஒன்றாக நாவல் பழம் காணப்படுகின்றது. நாவல்பழ சீசன் என்றால் பலரது வாய் நீல நிறமாகவே காணப்படுகின்றது. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழவகைகளைச் உண்பது சில காலகட்டங்களில் ஏற்படும் நோய்களைத் தடுக்க வல்லது என்று எம் வீடுகளில் வயதானவர்கள் கூறுவது மறுக்கப்பட முடியாத ஒன்றுதான். அந்த வகையில் வரும் சீசனுக்கு கிடைக்கப் பெறும் நாவல் பழத்தை மருத்துவப் பார்வையில் அணுகுவது காலத்தின் தேவையாகக் கொள்ளலாம்.
பொதுவாக பழங்கள் குறைந்தளவு கலோரிப் பெறுமானத்தையும் கொழுப்பையும் மற்றும் இலகுவான வெல்லத்தையும் கொண்டுள்ளதாலும், நார்ப்பொருள்களை உயிர்ச்சத்துக்களையும் தேவைக்கேற்ற வகையில் தன்னத்தே சேமித்து வைத்திருப்பதாலும் எமது உடல்நலத்தை பேணுவதில் பழவகைகள் முக்கிய பங்குவகிக்கின்றன.
தினமும் ஒரு பழத்தை உண்டுவந்தால் வைத்தியரை நாடவேண்டி ஏற்படாது என்று ஒரு புதுமொழி உண்டு. உண்மை தான். அவற்றில் காணப்படும் கரையத்தக்க நார்ப்பொருள்களான இன்னுலின் ( Innulin) பெக்ரின் ( Pectin) இலஜீனிக் அமிலம் ( Algenic acid) என்பவை எமது உடலின் கொலஸ்திரோல் அளவைக் குறைத்து உயர்குருதி அமுக்கங்களிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்றன. கரையாத நார்ப் பொருள்களான செலுலோசு ( Cellulose) அரைச் செலுநோசு ( Hemicelluose) போன்றவை பெருங்குடலில் நீரின் மீள அகத்துறிஞ்சலைக் குறைத்து மலச்சிக்கலிருந்து நிவாரணம் அளிக்கின்றது.
பழங்களில் அதிகமானளவு எதிர்ப்பு ஒக்சியேற்றங்களான ( Anti oxisants) Poly Phenotic Flavanoid, Vitaminc, Anthocyanin காணப்படுவதால் அவை இழையங்களின் ஒட்சியேற்றங்களைத் தடுத்து புற்றுநோய்களிலிருந்து பாதுகாப்புத் தருவதுடன், உடலின் நிர்ப்பீடன அளவையும் பேணுகின்றன. மரக்கறிகள் மற்றும் தானியங்களுடன் ஒப்பிடுகையில் பழங்கள் உயர்ந்தளவு Anti Oxidants பெறுமானத்தைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது நாம் குறிப்பாக நாவல்பழத்தைப் பற்றிப் பார்ப்போம். இதனுடைய தாவரவியற் பெயர் Syzgium Cumini ஆகும். இவை தெற்காசிய மற்றும் சில கிழக்காசிய நாடுகளில் பரவலாகக் காணப்படும். நாவல் பழத்தினுடைய போசனைக் கூறுகளையும் அவற்றின் போசனைப் பெறுமானத்தையும் நோக்கினால் ( 100 கிராமுக்கு )
சக்தி ( கலோலரி – 60kcal
காபோவைதரேட்டு – 14g
புரதம் –0.99g
கொழுப்பு – 0.23g
நார்பொருள்கள் – 0.6g
விற்றிமின் C – 11.5 mg
கல்சியம் – 11.65
இரும்பு – 1.41 mg
மக்கீசியம் – 35mg
பொஸ்பரஸ் – 15.6 mg
பொட்டாசியம் – 55mg
ஆகக் காணப்படுகின்றது. இவற்றினால் மருத்துவக் குணங்களைச் சற்று நோக்கினால், பிரதானமாக நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் நாவல்பழம் பெரும் பங்காற்றுகின்றது. என்று எம்மில் சிலர் அறிவர். தற்போது எமது பிராந்தியங்களில் தொற்றா நோய்கள் ( Non Communicable disease) அதிகரித்து வருவதனால் அதனால் ஏற்படும் சுகாதாரச் செலவுகளும் இழப்புகளும் அதிகரித்தே காணப்படுகின்றன. நாம் இயற்கையுடன் ஒன்றித்து நற்சுகாதாரத்தை பேணி வாழும் தருணங்களில் இவ்வாறான இழப்புக்களை பெருமளவில் குறைக்கலாம். இதற்கு உதாரணமாகவே மேற்கூறப்பட்ட நாவல் பழத்தையும் அது சார்ந்த நன்மைகளையும் நோக்கலாம்.
A.N.முகம்மது சன்பர்
4ஆம் வருட மருத்துவ மாணவன்
மருத்துவபீடம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.