தற்போதைய சூழ்நிலையில் குருதி, இனப்பெருக்கத் தொகுதி மற்றும் ஊசிகள் மூலம் கடத்தப்படும் நோய்களின் தாக்கத்துக்குட்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இந்த நோய்கள் கடத்தப்படும் முறைகள், நோய் அறிகுறிகள், நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி பொது மக்களுக்குத் தெளிபடுத்த வேண்டியது அவசியமாகும்.
2005 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின்படி உலக சனத்தொகையில் 15 – 49 வயதுக்குட்பட்டவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 448 மில்லியன் பேர் புதிதாக இனப்பெருக்கத் தொகுதியினால் கடத்தப்படும் நோய்களின் தொற்றுக்கு ஆளாகின்றனர். இலங்கையில் இனப்பெருக்கத் தொகுதியூடாகக் கடத்தப்படும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றது.
உலக சனத்தொகையில் ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் பேர் ஈரல் அழற்சி வைரசின் தொற்றுக்கு இலக்காவதோடு, ஒவ்வொரு ஆண்டும் 600,000 பேர் கொப்பரைரிஸ் B ( Hepatitis B) வைரசினால் ஏற்படுத்தப்படும் ஈரழற்சி நோயினால் இறக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 150 மில்லியன் பேர் கெப்பரைரிஸ் C ( Hepatitis C) வைரசின் தொற்றுக்கு இலக்காவதோடு ஒவ்வொரு ஆண்டும் 350000 பேர் Hepatitis C வைரசினால் ஏற்படுத்தப்படும் ஈரல் நோய்களினால் இறக்கின்றனர்.
நோய்கள் கடத்தும் முறைகள்
இனப்பெருக்கத்தொகுதி மூலம் கடத்தப்படும் நோய்கள் பிரதானமாக உடலுறவின்போதே ஒருவரிலிருந்து மற்றையவருக்கு கடத்தப்படுகிறது. அவற்றுள் HIV மற்றும் சிபிலிஸ் வைரசுக்கள் இழையப் பரிமாற்றம், குருதிப் பரிமாற்றம் மூலமாகவும் பிறப்பின் போதோ கருவுற்றிருக்கும் போதோ தாயிலிருந்து குழந்தைக்குக் கடத்தப்படுகின்றது.
Hepatitis B வைரசானது நோய்த் தொற்றுடைய குருதி வேறொருவருடைய குருதியை அடைவதன் மூலமும், வியர்வை, கண்ணீர், உமிழ்நீர், சுக்கிலப் பாய்பொருள், யோனிவழி சுரப்புக்கள், மாதவிடாய் குருதி, தாய்ப் பால் மூலமாகவும், தொற்றுடையவருக்கு பயன்படுத்திய ஊசி, சத்திர சிகிச்சை உபகரணங்கள், பாதுகாப்பற்ற குருதிப்பரிமாற்றம், பச்சை குத்துதல், மகப்பேற்றின் போது தாயிலிருந்து குழந்தைக்கும் , பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமும் கடத்தப்படுகின்றது.
கெபபரைரிஸ் C ( Hepatitis C) வைரசானது நோய்த் தொற்றுடைய குருதி வேறோருவருடைய குருதியில் கலப்பதன் மூலமும், பாதுகாப்பற்ற குருதிப் பரிமாற்றம் மற்றும் தடுப்பூசி ஏற்றும் முறை, ஊசி மூலமான போதைவஸ்துப் பாவனை, மகப்பேற்றின் போது தொற்றுடைய தாயிலிருந்து குழந்தைக்கு, பாதுகாப்பற்ற உடலுறவு மூலமாகவும் கடத்தப்படுகிறது.
நோய் அறிகுறிகள்
இனப்பெருக்கத் தொகுதியினால் கடத்தப்படும் நோய்களுக்குரிய அறிகுறிகள்
- சிறுநீர் கழிக்கும்போது நோவு / எரிவு ஏற்படுதல்
- அடிவயிற்றில் வலி ஏற்படுதல்
- ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் வெளியேறுதல்
- உடலுறவின் போதான வலி
- விதையில் வலி ஏற்படும்
- அசாதாரணமான மாதவிடாய் குருதிப்பெருக்கு
- இனப்பெருக்க உறுப்பு மற்றும் மலவாசலில் அரிப்பு ஏற்படல்
ஈரலழற்சி நோய்க்கான அறிகுறிகள்
- உணவின் மீதான நாட்டம் குறைதல்
- களைப்பு
- இலேசான காய்ச்சல்
- தசை மற்றும் மூட்டுவலி
- வாந்தி அல்லது வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
- வயிற்றுவலி
நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
இனப்பெருக்கத் தொகுதியினூடாக கடத்தப்படும் நோய்களுக்கான தடுப்பு முறைகள்
- பாதுகாப்பான உடலுறவைப் பேணுதல் – தொற்றற்ற துணையுடன் உடலுறவைப் பேணுதல்
- உடலுறவின் போது ஆண், பெண் உறைகளை ( Condoms) உபயோகித்தல்.
- தடுப்பூசிகளை உபயோகித்தல், தடுப்பூ மூலம் பெ்பரைிஸ் B ( Hepatitis B) வைரசினாலான தொற்றைத் தடுக்க முடியும்.
- நோயறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமல்லாது, நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமுள்ளவர்களும் மருத்துவ ஆலோசனையை நாடுதல் வேண்டும்.
- வினைத்திறனான மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் வகையில் சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல்.
- நோயுள்ளவர்களுக்கு ஆதரவு மற்றும் உளவளத்துணை ஆலோசனைகளை வழங்குதல்
கெப்பரைரிஸ் (Hepatitis) வைரசினால் கடத்தப்படும் நோய்களுக்கான தடுப்பு முறைகள்
- Hepatitis வைரசினால் ஏற்படும் தொற்றுக்கள் சம்பந்தமான பூரண அறிவையும், விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்துதல்
- ஈரல் அழற்சி வைரசிற்கு எதிரான தடுப்பூசிகளை ஏற்றுதல்
- பாதுகாப்பான முறையில் ஊசி ஏற்றுதல்
- பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளுதல் மற்றும் உடலுறவு கொள்ளும் போது பாதுகாப்பு பொறிமுறைகளைப் ( Condoms) பயன்படுத்துதல்
- ஊசி மூலமான போதைவஸ்து பாவனையைத் தடுத்தல்
- பாதுகாப்பான குருதிப்பரிமாற்றம் பற்றிக் கவனம் செலுத்துதல்
- ஆரம்பத்திலேயே நோய்தொற்றினை இனங்கண்டு சிகிச்சை வழங்குதல்
- நோய்த்தொற்று உடையவர்களிலிருந்து மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்
செல்வி ஜெ.ஜெனனி
செல்வி. கே. பவித்திரா
செல்வன்.எம்.ஆர்.முனாஸ்
மருத்துவபீட மாணவர்கள்