சிறார்கள் எப்போதும் சுறுசுறுப்பானவர்கள். எதையும் ஆராயும் குணம் கொண்டவர்கள். வேகமாக செயற்பட விளைபவர்கள். அவர்களின் இயக்கம் பெரியோர்களைப் போன்று ஒருங்கமைக்கப்பட்டதல்ல. இவை சிறுவர்களின் கண்களில் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படக் காரணமாகின்றன.
கண்களில் காயங்கள் ஏற்பட்டுவிட்டால் அவர்களின் ஒத்துழைப்புடன் கண்களைப் பரிசோதித்தல் மிகவும் சிரமமானது. கண்களுக்கு உரிய முறையில் மருந்திடவும் அவர்கள் அனுமதிப்பதில்லை. கண்ணில் ஏற்படும் வலிகாரணமாக கண்ணைக் கசக்க முற்படுவதால் காயங்கள் அதிகரிக்கலாம். காயங்களால் ஏற்படும் தற்காலிக பார்வை இழப்புகளும் சிறார்களின் மூளையில் நிரந்தர பார்வை விருத்தி குறைபாட்டை ( Amblyopia ) ஏற்படுத்தலாம். எனவே சிறுவர்களின் கண் விபத்துகளைத் தடுத்தல் மிகவும் இன்றியமையாதது.
இலகுவான சில படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சிறார்களின் கண் விபத்துகளை வீட்டிலும் வெளியிலும் தடுக்கலாம்.
1. கண் இடர்கள் ஏற்படக்கூடிய முறைகளை விளங்கிக்கொள்ளுதல்.
2. ஆபத்துக்களை கண்டறிதலும் அகற்றுதலும்.
3. சிறுவர்களை வீடுகளிலும் விளையாடும் போதும் கவனமாகக் கண்காணித்தல்.
இவை பற்றி வரிவாகப் பார்ப்போம்.
விளையாட்டுப் பொருள்களின் தவறான பாவனை கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும். மிகவும் மலிவான தரமற்ற குறைபாடுடைய விளையாட்டு பொருள்களைத் தவிர்க்கவும். சிறார்களின் வயதுக்கு உகந்த விளையாட்டுப் பொருள்களை மட்டும் வழங்கவும்.
விளையாட்டு பொருள்களில் உள்ள எல்லா எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் அவற்றைச் சிறுவர்களுக்கு வழங்குவதற்கு முன்னர் வாசிக்கவும்.
கூரான கடினமான முனைகளை ஆபத்தான விளிம்புகளை, கடினமான வெளிநீட்டங்களைக் கொண்ட விளையாட்டுப் பொருள்கைளைத் தவிருங்கள். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மென்மையான விளையாட்டுப் பொருள்களை ( Soft toys) கொடுப்பது விரும்பத்தக்கது.
பறக்கின்ற விளையாட்டுப் பொருள்களும், அதிவேகமாக பொருள்களை வீசும் விளையாட்டுத் துப்பாக்கி போன்ற உபகரணங்களும் எல்லாச் சிறுவர்களின் கண்களுக்கும் ஆபத்தானவை. குறிப்பாக ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.
சிறுவர்கள் விளையாடும் போது உரிய கண்காணிப்பு அவசியம். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை பற்றி சிறுவர்களுக்கு சொல்லித்தரவும் வேறுபட்ட விளையாட்டுகளுக்குரிய தனித்துவமான கண்பாதுகாப்பு உபகரணங்கள் ( உதாரணம் Goggles, Safety glasses, Helmets போன்றவை) கடைகளில் கிடைக்கும் இவற்றை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. கட்டிலில் இருந்து விடுதல், வீட்டுத் தளபாடங்களில் மோதுதல், படிகளில் விழுதல், விளையாட்டுப் பொருள்களுடன் விழுதல் என்பன கண் காயங்களுக்கு முக்கிய காரணமாகும். மாடிப் படிகளில் பாதுகாப்பு கதவுகளை அமைக்கலாம் போதியளவு வெளிச்சமும் பாதுகாப்புக் கைப்பிடிகளும் படிகளுக்கு அவசியம்.
கூரான முனைகளைக் கொண்ட தளபாடங்கள் மற்றும் அலங்காரப் பொருள்களை அவற்றின் விளிம்புகளையும், முனைகளையும் துணி மற்றும் மென்மையான இறப்பரினால் கவசமிடலாம் அல்லது மறைக்கலாம்.
வீட்டின் சமையலறை, களஞ்சியசாலை, குளியலறை போன்றவற்றில் உள்ள கூரிய உபகரணங்கள், மரவேலை மற்றும் இரும்பு வேலை செய்யும் ஆயுதங்கள், மின்சார உபகரணங்கள் என்பவற்றை எப்போதும் அவற்றுக்குரிய பெடகங்களில் அல்லது இலாச்சிகளில் வைத்துப் பூட்ட வேண்டும். இதன் மூலம் சிறார்களின் கைகளுக்கு அவை செல்வதைத் தடுக்க முடியும்.
வாசனைத் திரவியங்கள் ( Perfumes & Sprays) அழகுசாதனப் பொருள்கள், மலசலகூடங்களில் பயன்படுத்தும் அழுக்கு நீக்கிகள், தொற்று நீக்கிகள், சமயலறையில் பயன்படுத்தும் பல்வேறுபட்ட இரசாயனப் பொருள்கள் கண்களுக்கு மிகவும் ஆபத்தானவை. இவை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் பேணப்படுதல் வேண்டும்.
இவை போன்று வர்ணப் பூச்சுக்கள், கிருமிநாசினிகள், உரங்கள், பசைகள் (Glues) போன்றனவும் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்படுதல் அவசியம்.
சுடுநீர், சூடான உணவுகள், சூடான எண்ணெய் போன்றன கவனமின்றி வைக்கப்படும்போது குழந்தைகளின் கண்களில் விசிறப்பட போதிய வாய்ப்புகள் உள்ளன.
சிறார்களை வீட்டின் திருத்தவேளைகள், தூசிதட்டுதல், தோட்ட வேலைகள், கிருமிநாசினிகள் விசிறுதல் போன்றவற்றின் போது தூர இருக்கச் செய்யுங்கள்.
வீட்டுத் தோட்டத்தில் உள்ள முள்மரங்கள், பதிவான கிளைகள் என்பன சிறார்கள் அவற்றிடையே விளையாடும்போது கண்களில் காயத்தை ஏற்படுத்தலாம். இவை பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பங்கசுத் தொற்றுக்கு வழிவகுக்கும். பதிவான கிளைகளையும், முள்மரங்களையும் வெட்டி வீட்டுத் தோட்டத்தை சுத்தமாக பேணுங்கள்.
பண்டிகைக் காலங்களில் வாணவேடிக்கைகளால் ஏற்படும் கண்காயங்கள் பண்டிகையின் மகிழ்ச்சியை இல்லாது செய்துவிடும். ஒரு போதும் சிறார்களை வாண வேடிக்கைகளைப் பற்றவைக்க அனுமதிக்க வேண்டாம்.
பெரியவர்கள் வாணவேடிக்கைகளைப் பற்றவைக்கும் போது சிறார்களை தொலைவில் வைத்திருங்கள். தரமற்ற, உற்பத்திக்குறைபாடுடைய போதிய பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காத வாணவேடிக்கைப் பொருள்கள் சந்தையில் தாரளமாகக் கிடைக்கின்றன. இவை சிறார்களுக்கு மட்டுமன்றி பெரியவர்களின் கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கண் ஆபத்துக்களின் போதான முதலுதவிகள்
உரிய நேரத்தில் வழங்கப்படும் சரியான முதலுதவிகள் கண்களில் ஏற்படும் நிரநை்தரப் பாதிப்பை தடுக்கும் அல்லது குறைக்கும்.
கண்காயங்கள் தீங்கற்றவை என்று தவறாக எடைபோட வேண்டாம். சந்தேகம் இருப்பின் கண்வைத்தியரை உடனடியாக நாடவும். கண்ணில் இரசாயனப் பொருள்கள் பட்டால் மிகவும் ஆபத்தானது. உடனடியாக சுத்தமான நீரால் கண்ணை குறைந்தது 15 நிமிடமாவது கழுவுங்கள், தண்ணிரால் கழுவும்போது கண்ணை நன்றாக திறந்து வைத்திருங்கள். பின் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லவும். கண்ணில் ஏதாவது தூசு அல்லது துணிக்கைகள் விழுந்தால் கண்ணை கசக்க வேண்டாம். அது கண்காயத்தை அதிகரிக்கும். கண்ணை சுத்தமான நீரால் கழுவலாம். அகற்ற முடியாவிடின் மருத்துவ உதவி தேவை.
கண்ணில் பலமாக அடிபட்டால் அல்லது கூரிய பொருள்களால் குத்தப்பட்டால் கண்களைக் கழுவவேண்டாம். கண்ணுக்குள் இருக்கும் பொருளை அகற்ற முற்பட வேண்டாம். எந்தவிதமான கண் மருந்துகளையும் பாவிக்க வேண்டாம். வைத்தியசாலைக்கு விரயுங்கள். வருமுன் காப்போம்.
Dr.மு..ஞானரூபன்
தேசிய கண் வைத்தியசாலை
கொழும்பு