Vitiligo என்றால் என்ன?
Vitiligo என்பது தோலில் ஏற்படுகின்ற ஒர் குறைபாட்டு நிலைமையாகும். எமது தோலின் நிறத்துக்குக் காரணமான பதார்த்தமாகிய மெலனினைச் சுரக்கும் கலங்கள் முற்றாக அழிக்கப்படுவதால் அந்த இடங்களில் வெள்ளை நிற மாற்றங்கள் ஏற்படுகின்றன.
தோலில் இந்த நிறமாற்றம் உருவாவதற்கான காரணம்
தோலில் இந்த நிறமாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் ஆய்வாளர்கள் இது தொடர்பில் வெவ்வேறு கொள்கைகளை உருவாக்கி உள்ளனர். இவற்றுள் உடலினுள் செல்கின்ற பிறபொருள்களை அழிப்பதற்காகத் தொழிற்படுகின்ற நீர்ப்பீடனத் தொகுதியானது தனது தோலின் நிறத்தை உருவாக்கம் மெலனினை சுரக்கும் கலங்களைப் பாதிப்படையச் செய்து அவற்றை அழிக்கின்றன என்ற கொள்கையே அதிக அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
எனவே சூரியக்கதிர் படுகின்ற உடல் மேற்பரப்புகளில் இவை வெண்ணிற புள்ளிகளாகக் காணப்படுகின்றன. அதாவது கை, கால், முழங்கால், முகம், சொண்டு, கண், காது என்பவற்றில் பொதுவாக ஏற்படுகின்றன.
ஆயினும் இந்த நிறமாற்றங்கள் எலி கடிப்பதனால் உருவாகின்றது என மக்களிடையே நிலவும் கருத்து தவறானதாகும். பாதிக்கப்படுபவர்கள் யார்? இன்றைய உலக மக்கள் தொகையில் 0.5 – 1 வீதமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுள் ஏறக்குறைய அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் 20 வயதுக்கு முன்னதாகப் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தக் குறைபாடானது எந்த வயதினருக்கும் ஏற்படலாம்.
ஆண், பெண் இருபாலாரும் சம விகிதத்திலேயே பாதிக்கப்படுகின்றனர். எனினும் கடும் நிறத்தோல் உள்ளவர்களில் இலகுவாக இனங்காணப்படுகின்றது. பொதுவாக இந்தக் குறைபாடானது வேறு சில நோய்களுடனும் தொடர்புடையதாக உள்ளது.
உதாரணம் – தைரொயிட் – அதிரீனல் ஓமோன் குறைபாடு குருதிச்சோகை. எனினும் இந்தக் குறைபாடு உள்ள பொரும்பாலானவர்களுக்கு மேற குறிப்பிட்ட நோய்கள் இருப்பதில்லை. அத்துடன் இது பரம்பரை பரம்பரையாகவும் கடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிறமாற்றம் பரவலடையக் கூடியதா?
உடலில் ஏற்படுகின்ற நிறமாற்றம் பரவலாகக் காணப்படுமிடத்து இவை உடலில் மேலும் பரவுவதற்கான சாத்தியம் அதிகமாகும். எனினும் இது குறிப்பிட்ட ஒருவருக்குக் கட்டாயம் பரவும் என எதிர்வுகூற முடியாது. சிலரில் இந்த நிறமாற்றம் விரைவாகவும் சிலரில் மிக மெதுவாகவும் பரவலடைவதுடன் சிலரில் மேலும் பரவலடையாமலும் இருக்கின்றது.
சிகிச்சை முறை
பொதுவாக இந்தத் தோல் நிறமாற்றம் மருத்துவ ரீதியாக ஒரு தீமையற்ற குறைபாட்டு நிலைமையாக இருப்பதோடு எதுவிதமான விலயையும் தருவதில்லை. இருந்தும் கூட இந்த நிறமாற்றம் உள்ளவர்கள் மனரீதியாக, மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இளவயதினர் தமது உடல் தோற்றத்தை நினைத்துக் கவலை அடைவதுடன், மனக்குழப்பத்துக்கும் ஆளாகின்றனர். எனவே இவற்றுக்குச் சிகிச்சை அளிப்பதன் முக்கிய நோக்கம் தோலின் தோற்றத்தை இயன்றளவு மெருகூட்டுவதாகும். இவற்றுக்கான சிகிச்சை முறை தொடர்ச்சியாகப் பல மாதங்களுக்குச் செய்ய வேண்டி ஏற்படுகின்றது.
மருந்து மூலமான சிகிச்சைக்குத் தோலில் பூசும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது மிகவும் இலகுவானதும் பாதுகாப்பானதுமான முறையாகும். ஆனால் இதனால் கிடைக்கும் பயன்மிகக் குறைவாகம். இதனை விட முக்கியமாக மன அழுத்தத்துக்கோ, மனக்குழப்பத்துக்கோ ஆளாகாமல் இருப்பதற்காக உளவளச் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. எனவே உடலில் இந்த நோய் நிறமாற்றத்தை அவதானிப்பவர்கள், தோல் வைத்திய நிபுணரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது பயனுள்ளதாகும்.
Dr. ஹஜந்தினி குமாரகுலசிங்கம்.
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.